Ads 468x60px

Thursday, October 1, 2015

வளமான வாழ்வு இனி பெண்ணினத்தால் மட்டுமே!

       
           நாம் கடந்து வந்த பாதைகளைச் சற்றேனும் திரும்பிப்பார்க்க வைக்கிறது.  இன்றையக் காலப்பெண்களின் நிலை அப்படியென்ன முன்னேற்றம் கண்டு விட்டது பெண்ணினம்?

          பலதுறைப்பணிகளில் ஏன் நாடாள்வதும் பெண்ணினம் என்று பெருமை பேசும் பெண்களில் இன்னும் எத்தனை சதவீதம் பேர் முன்னேற்றம் காணாது அல்லது முன்னேற முயற்சியே செய்யாது இருப்பவர்கள் என்று ஆய்வுசெய்தால் அதில் வருத்தமே மிஞ்சும் முழுக்க முழுக்க இன்று பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா?

            பெண் என்பவள் அன்னையாகவும் தெய்வமாகவும் போற்றப்படும் இந்த புனித பூமியில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நிகழ்கின்றன.  எப்போதும் ஒருவரை சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டிருப்பதும் அது காலங்காலமாக தொடர்ந்து கற்பிக்கப்பட்டும் வருகிறது.  ஆணுக்குகட்டுப்பட்டு நடப்பதும் பணிவிடை செய்வதுமாக உருவாக்கிய இயந்திரமாக பெண்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள்.  பெண்களை அடிமைப்படுத்துவதையே பண்பாடு கலாச்சார வழக்கம் என்று பெருமை பேசுவோரும் சமூகத்தில் பரவலாக இருக்கின்றனர்.

          காலச் சூழ்நிலையாலும் சமூக மாற்றத்தினாலும் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிய நாம் பெண்களின் வாழ்வில் உருவாக்க வேண்டிய மாற்றங்களை முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ள தவறிவிட்டோம்.  மறுத்து விட்டோம் மாறாக அவர்களே நமது முன்னோர்களும் இப்படித்தானே இருந்தார்கள் என்று தங்களைத் தானே சமாதானப்படுத்தியும் வாழப் பழகி விட்டார்கள்.

           ஆறறிவுக்கு கீழுள்ள உயிரினங்கள் கூட தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள முயற்சி செய்தாக வேண்டிய இன்றைய சூழலில் சிந்தனை என்னும் ஆறாம் அறிவு படைத்த மனித இனமோ அச்சமடையச்செய்வதையும் அடிமைப்படுத்துவதையும் செய்து விட்டு பேச்சளவில் மட்டும் ஆங்காங்கே முழக்கங்களை ஏற்படுத்தி விளம்பரங்களைத் தேட மட்டும்  பயன்படுத்துகின்றனரே ஒழிய விழிப்புணர்வையோ வேற்றுமைகளையோ களைய வழிமுறைகளை ஏற்படுத்தாது வீராவேசம் பேசுகின்றனர்.  இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தம்முடைய முன்னேற்றம் குறித்தோ வாழ்க்கை முறை குறித்தோ பெண்களே எவ்வித முயற்சியும் இன்றி இருப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது.

  வீரத்திற்கு திருமிகு ஜான்சி ராணியும் உயிர்மொழியாம் உலகை ஆளும் உண்மை மொழியாம் தமிழால் நல்லற வாழ்விற்கு நன்னூல்களைத் தந்த ஞானத்தாய் ஔவையாரும் அன்றிலிருந்து இன்றுவரை கால சூழ்நிலைகளில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்தி வாழ்ந்து வழி காட்டுபவர்களும் இவர்களே.  பெருமையை தன்னகத்தே கொண்டவர்கள் பேரத்திற்கு அடிமையாகி வர்த்தகமாகி வீண் ஆரவாரங்களாய் நிகழ்வுகளை நினைவு படுத்துகிறது நீர்த்துப்போன ஊடக ஒளிப்பரப்புகள்.

           தன்னிலையை உயர்த்த தான் சிந்தித்தாலொழிய முடியாது என்ற தன்னம்பிக்கை பெண்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.  அன்பு, கருணை, தயவு, பொறுமை, இயற்கை, அன்னை என்று சொல்லில் உள்ள உண்மையை உணர்த்தும் விதமாக உணரும் விதமாக செயலாக்க வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.  ஆடு என்றால் வெட்டப்படுவதற்கு வளர்க்கப்படுவதுபோல பெண்கள் என்றாலே திருமணம் என்ற ஒன்றிற்காக மட்டும் என்ற கருத்தை மாற்ற வேண்டும்.  கருகொண்டு உருதந்து கண்ணாய் இருந்து காத்து களம் சேர்த்து காரியங்களால் காவியங்களாக்கப்ட வேண்டியவர்கள் ஆக்கத்திற்கு அடித்தளமாய் அர்ப்பணித்து வாழவும் ஆற்றலுடையவர்களை ஊக்கம் தந்து உற்சாகப்படுத்த வேண்டும் உறவுகளால் உரிமை கொள்ளச் செய்ய வேண்டும்.  ஒடுங்கி வாழ்பவர்களை ஓங்கி உயர்ந்து வாழச் செய்ய வழிகளை சொல்லோடு மட்டும் அல்லாது செயல் வழியும் பங்கு கொள்ள உறுதுணை புரிய வேண்டும்.

            சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
             நிறை காக்குங் காப்பே தலை. குறள்-97.

          பெண்களை காவல் வைத்து காக்கும் காப்பு முறையால் என்ன பயன் உண்டாக்க முடியும்? தங்களைத ;தாங்களே காத்துக் கொள்ளும் நிறை என்னும் பண்பே சிறந்த காப்பாகும் ஆசான் திருவள்ளுவர் கூறிய இந்த அருள்வழியை வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டும்.

இன்று குழந்தைகள் நிலை:
           ஆலமரத்தடியில் தொட்டில் கட்டி அழகாய் தாலாட்டு கேட்டு உறங்கும் குழந்தைப்பருவமா இன்றைய சமூகத்திற்கு கிடைத்திருக்கிறது.  யாருமற்ற தனி அறையில் காசுக்காக அமர்த்திய ஆயாவின் கண்டும் காணாத பார்வையில் வளரும் குழந்தைகளுக்கு அன்பென்றால் என்ன என்பதையும் இன்று ஊடங்கள் தான் திரையில் படமாக காட்டுகின்றன.

          இப்படியான நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வளரும் பெண் குழந்தைகளுக்கு முறையான வழிகாட்டல் வேண்டும்.  தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் பெற்ற அன்னையே சொல்லி வளர்க்க வேண்டும்.  முறையான கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.  தன்னைத்தான் உணர வைக்க வேண்டும்.  வெட்கம் அச்சம் என்று ஒடுக்கும் பேச்சு வழக்கிலிருந்து வெளியில் கொண்டு வரவேண்டும். தன்னம்பிக்கையும் தைரியமும் நேர் வழி நடத்தலையும் ஆண் பெண் பாகுபாடற்ற நிலையையும் சிறு வயதிலிருந்தே சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் நாளை வேறு ஒரு குடுபத்திற்கு செல்ல வேண்டியவள் தானே என்று வேற்றுமை பாராட்டாமல் வளர்க்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் மன ரீதியாக உள ரீதியாக உடல் ரீதியாக என அறிவுறுத்தல்களும் வழி காட்டுதல்களும் பக்குவப்படுத்துவதும் பரிணாமம் பெற வேண்டும். நமது எண்ணங்களே சொல்லாகவும் சொற்களே செயல்களாகவும் வளர் மாற்றம் அடையும் வண்ணம் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டிய முயற்சிகளை ஒவ்வொருவரும் தமது குடும்பத்தில் இருந்து ஏற்படுத்த வேண்டும் மற்றவர்களுக்கு அதுவே ஒரு வாழ்க்கைப் பாடமாய் அமைந்து சமூக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ காரணியாக அமையும்.

          ஒன்றுபட்டு வாழும் ஒற்றுமை உணர்வையும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாழ்வியல் மொழியின் வழி வாழ்ந்து பார்க்கச் செய்து வாழ்க்கை வாழ்வாதார வழிகளை அறியச் செய்வதோடு அதுவே சமதர்ம சமநீதி கொண்ட தத்துவ வாழ்வு பெற்று தரும் என்ற பேருண்மையை பெற்றுத்தர பாடுபட வேண்டும்.

       சாதித்துக் கொண்டு சாதனையாளர்களாய் வாழ்கிறார்கள் என்ற பெருமை நிலையை அறிந்து உத்தமர்களின் உள மொழிகளை ஏற்று நிலை தடுமாற்றங்களை களைந்து நீதி தேவதைகளாய் நிமிரச் செய்திட வேண்டும்.

         தனக்கான துறையை தாமே தேர்வு செய்து அதில் தம் முழுத்திறமையையும் செலுத்தி முன்னேற வழிவகை காண வேண்டும்.  ஒருவீட்டில் பெண்ணுக்கு கல்வி கிடைத்தால் தான் அந்த வீடு முன்னேற முடியும் என்ற நிலையில் கல்வியைத்தாண்டி சுயதொழில் சுயமுன்னேற்றம் போன்ற சிந்தனைகள் பெண்களிடையே வளர வேண்டும்.

          தமக்கான துணையை தாமே தேடும் அளவிற்கு சிந்திக்க தெரிந்த பெண்கள் தம் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்ளவும் பொருளாதார நிலையில் தம்மைத் தாமே உயர்த்திக்கொள்ளவும் வேண்டும்.  வீண் அரட்டை, வெட்டிப்பேச்சு, தொலைக்காட்சி இது ஒன்றே பெண்களுக்கான உலகமல்ல என்பதை உணர வேண்டும்.  தம் குழந்தைகளுக்கும் நற்பண்புகளை குறிப்பாக உதவும் மனப்பான்மை, சுயநலமற்றதன்மை, பணிவு, பண்பாடு, அர்பணித்தல் குறித்த புரிதலைத் தரவேண்டும்.

"நீஎதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" என்ற விவேகானந்தரின் எழுச்சி ஒவ்வொருவருக்குக்குள்ளும் ஏற்படுத்துதல் வேண்டும்.

       அகந்தையை ஒழித்து தன்னாலும் சுயமாக வாழ முடியும் தன்னாலும் பிறருக்கு உதவ முடியும் ஆணும் பெண்ணும சரிசமம் போன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளரும் தலைமுறைக்கும் புகட்ட வேண்டும்.

          வீடும் நாடும் முன்னேற பெண்களே காரணம் என்றநிலை உருவாக வேண்டும்.  களவு கொலை கற்பழிப்பில்லா சமூகம் உருவாக வேண்டும்.  ஒவ்வொரு பெண்ணும் மாபெரும் மகத்தான சக்தி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. 

என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.

16 comments:

 1. வளமான வாழ்வு இனி பெண்ணினத்தால் மட்டுமே!
  உண்மை
  வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
 2. வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!!!!

  ReplyDelete
 3. நல்லதொரு அலசல் பதிவு சகோ

  //தம்மைத் தாமே உயர்த்திக்கொள்ளவும் வேண்டும். வீண் அரட்டை, வெட்டிப்பேச்சு, தொலைக்காட்சி இது ஒன்றே பெண்களுக்கான உலகமல்ல என்பதை உணர வேண்டும்//

  அருமையான சவுக்கடிகள் சகோ போட்டியில் வெற்றி பெற எமது வாழ்த்துகள்
  எனது கட்டுரைக்கு வாக்கு மட்டும் அளித்தால் போதுமா ? சகோ

  ReplyDelete
 4. நூற்றுக்கு நூறு உண்மை
  சொல்லிச் சென்றவிதம் மிக மிக அருமை
  பரிசு பெற நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 5. பெண்கள் இனியாவது முன்னேற்றம் கண்டிடாரோ?

  மிக அருமையான கட்டுரை சசிகலா!
  போட்டியில் வெற்றி பெற உளமார வாழ்த்துகிறேன்!

  ReplyDelete
 6. மிக அருமையான கருத்துள்ள கட்டூரை! கூறிய விசயங்கள் உண்மை! வெற்றி பெற நல் வாழ்த்துக்கள் நன்றி!

  எனது மூன்று கட்டூரைக்கு காண வாங்க சகோ!

  ReplyDelete
 7. பெண்களை சமூகம் நடத்தும் விதத்தையும், பெண்கள் சமூகத்தில் எப்படி நடக்கிறார்கள் என்பதையும் தெளிவாக சொல்லியிருப்பது அருமை.
  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ!
  த ம 6

  ReplyDelete
 8. அருமையான தொகுப்பு, பெண்கள் சமூகத்தில் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதை அழகாக,,,
  சொல்லியிருக்கும் விதம் அருமை,
  போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அருமை
  வெற்றி பெற வாழ்த்துகள்
  த ம 7

  ReplyDelete
 10. அலசி ஆராய்ந்த விதம் அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.
  பௌத்த நல்லிணக்க சிந்தனைகளைக் காண எனது முதல் வலைப்பூவிற்கு அழைக்கிறேன். http://ponnibuddha.blogspot.com/2015/10/blog-post.html

  ReplyDelete
 11. நன்றி...

  நம் தளத்தில் இணைத்தாகி விட்டது...

  இணைப்பு : http://bloggersmeet2015.blogspot.com/p/contest-articles.html

  புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
  அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
  http://dindiguldhanabalan.blogspot.com

  ReplyDelete
 12. வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
 13. நமது விழா அழைப்பிதழை உங்கள் தளத்தில் பகிர உரிமையோடு அழைக்கிறேன்

  ReplyDelete
 14. பெண் முன்னேற்றம் அவர்கள் கையில்தான் உள்ளது. கட்டுரை அருமையாக அமைந்துள்ளது. குழந்தைகள் நிலையையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.

  ReplyDelete
 15. அருமையான அலசல். வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 16. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி