Ads 468x60px

Friday, October 30, 2015

மீட்டும் மகிழ்வதனைத் தேக்க! கவிதை உருகொண்டு கனவைத் தினமுண்டு
       காதல் உணர்வோங்கிக் கொல்ல!
தவிப்பை நீகண்டும் தாளம் புதிதென்று
     தாவித் தன்னுள்ளே  செல்ல!

வரவைத் தினம்தேடி வாடும்இளநெஞ்சை
    வதைக்கும் உன்மௌனம் கண்டு!
மரபில் புதையுண்டு மலரும் பூச்செண்டில்
    மையல் கொண்டாட்ட முண்டு!

மின்னல் கீற்றாகி மீண்டும் எனைத்தாக்கி
    மீட்டும் மகிழ்வதனைத் தேக்க!
சின்னக் குழந்தையெனச் சீற்றம் தனைமறந்து
     சிரித்தே மகிழ்தாடி நோக்க!

இனிக்கும் நினைவேந்தி இயல்பின் கரம்பற்றி
     என்னை இழுத்தோடி நாளும்!
தனிமைச் சுகமென்ற தாகம் தனைத்தீர்க்கச்
      சாலை தினந்தேடி நீளும்!

தொடரும் பயணத்தில் துரத்தித் தோளமர்ந்தே
     சூட்டும் வேதனைகள் கோடி!
உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
   உந்தும் உணர்வலைகள் தேடி!   
இன்னும் வாசிக்க... " மீட்டும் மகிழ்வதனைத் தேக்க!"

Friday, October 23, 2015

பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ!


கனவினிலே வந்தவனும் உலவுகின்ற மென்மை
    களவதனைக் கற்றேதான் கொலுவிருக்கும் பெண்மை!
தனைமறந்தே தளிர்க்கொடியாள் தள்ளாடும் போதும்
     சந்தமுடன் சேதிசொல்ல வந்துவிடும் தூதும்!
கணைதொடுத்தே காத்திருக்கும் காதலதின் வேகம்
    கண்ணசைவில் கதைபலவும் பேசுகின்ற மோகம்!
 இணையாகி உலவிடவே துடித்திருக்கும் நெஞ்சும்!
     இன்னமென்ன செய்திடுவான் என்றேங்கிக் கொஞ்சும்!


பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ எண்ணிப்
    புத்தாடை தான்பூண்டு குதித்தாடும் கன்னி!
பாக்களிலே பழரசத்தைப் பருகிடவே மொண்டு
    பகலிரவில் தமிழுடனே உலவுகின்ற வண்டு!
 நோக்குமவன் பார்வையினை மௌனமுடன் கண்டு
    நோயதுவும் தான்சுமந்து மயங்கும்பூச் செண்டும்
சீக்கிரமே வந்திடுமோ வசந்தமதும் கண்ணா?
    சேர்ந்திருக்கும் நன்நாளும் கண்டிடுவாய் மன்னா!
இன்னும் வாசிக்க... " பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ!"

Thursday, October 22, 2015

கண்ணே கனியமுதே வாடி!


கண்ணே கனியமுதே வாடி-உன்னைக்
காணவந்தேன் ஓடி -அந்த
கண்ணாடி வளையலை நானும்
போட்டுவிடத் தாண்டி. (ஆண்)

கல்யாணத் தேதியுந்தான் சொல்லி
கள்ளத்தனம் செய்வீரோ கிள்ளி
கண்ணாடி வளவியுந்தான் சொல்லும்
காண்போரைத் துணைக்கழைத்துக்கொள்ளும்.(பெண்)

கதிரவனும் வலுவிழந்த நேரம்
அந்த வாசப்படி ஓரம் _ வந்து
வாஞ்சையோடு வஞ்சியுனை
வரித்துக் கொள்ள நிற்பேன்.(ஆண்)

கருக்கலிலே வந்து நின்னா என்ன?
காவலுக்கும் ஆளிருக்கே உள்ள
கண்ணால சேதி சொல்லி மெல்ல
பின்னால தள்ளி நில்லேன் நான் வல்ல.(பெண்)

தேனைப் போல மானைப் போல
என்று சொல்ல மாட்டேன்
உன் கண்ணைக் கூட கயல்விழியாள்
என்றே எண்ண மாட்டேன்.(ஆண்)

அப்போ
தேனே மானே கொஞ்சத்தெரியாத மச்சான்
எனைத் தேம்பி யழவைச்சதே மிச்சம்.(பெண்)

இல்லை இல்லை கோச்சுக்காதாம்மா
அப்படி எல்லாம் நான் சொல்வேனா
உன் முன்னாடி அதுங்க எல்லாம்
தூசு தானே போம்மா.(ஆண்)

அங்க இங்க தொட்டுப் பேச வேணா
அடுக்களையில் கைகலப்பும் வேணா
ஆச வார்த்த பேசத்தெரியள ஆமா
அதுக்கு ஏனோ இங்க வந்தீக மாமா.(பெண்)

உன்னழகுக் கிங்கு ஏதும்
ஈடு இல்லை யேம்மா.
உன்னைப் போல ஒருவரை நான்
கண்டதில்லை யேம்மா.(ஆண்)

கேலிப் பேச்சு இங்க வேணா மாமா
கிண்டலுந்தான் செய்வதும் தான் ஏனோ?(பெண்)

ஆச தீரப் பேசவேண்டும்
அருகினிலே வாம்மா
உன்னை எண்ணி ஏங்குவதை
காண்பதில்லை ஏம்மா? (ஆண்)

ஆணாக எழுதியிருப்பது பதிவர் இனியா பெண்ணாக எழுதியிருப்பது தென்றல்.
இன்னும் வாசிக்க... "கண்ணே கனியமுதே வாடி!"

Tuesday, October 20, 2015

ஜோடிக்கிளிகள்!


வெள்ளரிக்கா தோட்டத்துல
வேலியில்ல காவலுக்கும்
வெரசாத்தான் வாருமய்யா
விடியும் வரை பேசிடுவோம்.

மஞ்சள் மணக்குதடி
மரிக்கொழுந்து வாசக்காரி
வெள்ள மனத்தவளே
விரைந்தோடி வாரேன் புள்ள.

கத்தரிக்கா தோட்டத்துல
கணக்கெடுக்க ஆளுமில்ல
கண்ணழகா வாருமய்யா.
கதை கதையா பேசிடுவோம்.

முத்துப்பல் பேச்சுக்காரி
மூக்கு நீண்ட சின்னதாயி
அச்சு வெல்லமா இனிக்கும்
அத்த மக ரத்தினமே 
அணைச்சுக்க வாரேன் புள்ள.

அறுவடைக்கும் நாளிருக்கு
அதுக்குள்ள ஒளிஞ்சிருப்போம்
ஆசையோட வாருமய்யா
அரைநாழி பேசிடுவோம்.

ஒய்யாரக் கொண்டக்காரி
ஒடிசான தேகக்காரி
ஓடித்தான் வாரேன் நானும்
ஒரு முத்தம் தாயேன் புள்ள.

அடிக்கரும்பு இனிப்பாட்டம்
அழகாக பேசும் மச்சான்
அடுத்தெங்கே போயிடுவோம்
அதையும் அங்கே சொல்லுமய்யா.

காடுகர தோப்பெங்கும்
கைகோர்த்து போவோம்புள்ள
கண்ணசைவில் நூறு கதை
கலந்து பேசி வாழ்வோம் புள்ள.


 சென்ற பதிவில் மதுரைத்தமிழன் கேட்டபடி இந்தப்பதிவை பெண் எழுதுவதாக நானும் ஆண் எழுதுவதாக இளமதியும் எழுதியிருக்கிறோம். தோழி இனியாவைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. தொடர்பு கொண்டதும் அடுத்து இந்தமாதிரிப் பகிர்வுத் தொடரும்.. இளமதிக்கும் மதுரைத்தமிழனுக்கும் எனது நன்றி.
இன்னும் வாசிக்க... "ஜோடிக்கிளிகள்!"

பொன்னழகே பூவழகே!


சின்னவிழிச் சித்திரமே! செவ்வந்திப் பூச்சரமே!
இன்னமுதத் தேன்குடமே! ஈடில்லாப் பேரழகே!
என்னுயிரே! பூந்தமிழே! ஈந்திடுவாய் முத்தங்கள்!
பொன்னழகே பூவழகே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
புவித்துயரைத் தான்மறந்து கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

அன்னைமடி தொட்டிலடி! அற்புதமே! ஆருயிரே!
சன்னலிலே வான்நோக்கும் சின்னவளே! தேன்சிட்டே!
கன்னமது கற்கண்டுக் காவியமே! கண்ணழகே!
அன்னநடை நாட்டியமே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!
அற்புதமே! பொற்பதமே! கண்ணுறங்கு! கண்ணுறங்கு!

படம் உதவி இணையம்


இன்னும் வாசிக்க... "பொன்னழகே பூவழகே!"

Monday, October 19, 2015

வாழ்வின் விளிம்பில் வாசிப்பு அனுபவம்.கதை என்றதும் நமக்கு ஒரு ஊர்ல ஒரு ராஜாவாம்... இப்படிச் சொல்பவர்களும் உண்டு.
பாட்டி வடை சுட்ட கதையையே சொல்பவர்களும் உண்டு.
இப்படி கதைசொல்லும் முகங்கள் மாறினாலும் கதாப்பாத்திரங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் கதைகளைத்தான் நான் அதிகம் கேட்டிருக்கிறேன். மேலும் சுருங்கச் சொல்லிப் போவதே(கவிதை) என் வழக்கம் என்பதாலும் கதைகளின் பக்கம் அவ்வளவாக நான் நேரம் செலவிட்டதில்லை.
அன்பின் பரிசாக புதுக்கோட்டை பதிவர்சந்திப்பில் திரு.ஜி.எம்.பி என்றழைக்கப்படும் ஜ.எம்.பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் கொடுத்த சிறுகதைத் தொகுப்பை பேருந்து பயணத்திலேயே வாசிக்க ஆரம்பித்து இருளத்தொடங்கும் வரை வாசித்து அதற்கு மேல் அடடா என்று எடுத்து வைக்க மனமில்லாமல் எடுத்தும் வைத்து விட்டேன்.
அதன் பிறகு இன்று தான் கதை பற்றிய விமர்சனம் அல்ல. என் வாசிப்பின் அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
முதல் கதையாக வரும் தலைப்பே கதையை உணர்த்தும் விதமாக வைத்திருக்கிறார். வாழ்வின் விளிம்பில் அதுவே நூலின் தலைப்பும். வாழும் நாட்களை எல்லாம் ஒரு சேர நினைத்துப் பார்த்து தவித்து ஏங்கும்
மனநிலையை உடனிருந்து பார்ப்பது போன்ற உணர்வைத்தரும் அவர் எழுத்து நடை. உண்மையில் வாழ்நாள் முழுவதும் ஏதோ மயக்கத்திலேயே இருந்துவிட்டோம் என்பதை அதன் விளம்பில் தான் உணர்கிறோம் என்பதை சொல்லிச்செல்லும் கதை.
 கேள்விகளே பதிலாய்... என்ன தான் நவீன வளர்ச்சிகளை அடைந்தாலும் இந்த சாமியார் பூஜை இப்படியான கண்மூடித்தனமான விஷயங்களில் இருந்து மக்கள் தங்களை விடுவித்துக்கொள்ள விரும்புவதில்லை அல்லது அப்படியொரு போர்வையைத் தேடிக்கொள்கிறார்கள் என்று சொல்லும் படியாக செல்லும் கதை ஓட்டம்.
 ஏறிவந்த ஏணி நடுத்தர குடும்பத்தில் ஒரு தலைவனின் மனநிலையை படம்பிடித்துக்காட்டியிருக்கிறார் அதோடு நல்ல ஒரு வழிகாட்டுதலையும் கதையின் வழி சொல்லிச்செல்கிறார். " நிலையான வருமானம் இல்லாதவனுக்குப் பணம் கொடுப்பதை விட நிலையான வருமானத்துக்கு வழி செய்வது சிறந்தது என்பதை" .
 கண்டதும் காதல் அடுத்தென்ன என்று யோசிக்குமுன்னே திருமணம் என்றாகிவிட்ட இன்றைய காதல் திருமணங்களும் அதனால் எழும் பிரச்சனை மட்டும் விவாகரத்து குறித்தும் சிந்திக்க வைக்கும் கதை. மனசாட்சி.
அனுபவி ராஜா அனுபவி கதையைப் படித்தால் நிச்சயம் வாழ்வில் இப்படியும் ஒரு கோணம் இருப்பதை உணர முடியும்.
 வாழ்க்கை ஒரு சக்கரம ;தான் என்பதை அழகான தலைப்போடு அவர் சொல்லிச்செல்லும் விதமும் வெகு சுவார்யஸ்ம்.
.இப்படியும் ஒரு கதை ...என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு இது தான் வாழ்க்கை என்று சலித்துக்கொண்டு உடன்வாழாமல் தலையைச் சீவியெடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்றவனின் ஆவேசம் அனைவருக்குள்ளும் ஊடுறுவத்தவரவில்லை.
 எங்கோ ஏதோ தவறு என்று ஒவ்வொருவரும் விலக நினைத்தால் இல்லற வாழ்க்கை இல்லாமலே போய்விடும் என்பதை எங்கே தவறு என்று தெரிகிறதா? என்று கேட்டு சிந்திக்க வைக்கிறார்.
  விபரீத ஆசைகளின் விளைவாக எழும் விபரீத உறவுகள் கடைசியில் என்னவாகும்....?
"சௌத்வி கா சாந்த் ஹோ"  என்ற கதையை படிக்கும் போது நம்மையும் அறியாமல் இந்த ஜோசியம் மீதெல்லாம் நம்பிக்கை வந்துவிடும் போல.
கல்யாணத்தைப் பண்ணிப்பார் வீட்டைக் கட்டிப்பார் என்பார்கள் லட்சுமி கல்யாண வைபோகம்  இந்த கதையை படித்து முடிக்கும் வரை படபட வென அடடா திருமணம் நடந்துவிடுமா? என்று எண்ணத் தோன்றிவிடுகிறது.
பயம் என்று வந்துவிட்டாலே ஒன்றும் புரியாது இதில் இரவு நேரத்தில் பயமென்றால் சொல்லவா வேண்டும்!
அடுத்தவருக்கு பாரமாக இருக்கிறவர்களுக்கு ஆசா பாசாங்கள் இருக்க வேண்டுமா என்ன? என்ற கேள்வியை படிப்பவர் மனதில் எழச்செய்கிறது பார்வையும் மௌனமும்.
விளம்புகளில் தொடரும் கதை சற்று வித்தியாசமாகவே இருக்கிறது. பெண்ணின் மனஇயல்புகளை படம்பிடித்துக் காட்டியிருக்கிறார்.
வயதாகிக்கொண்டே போனால் என்ன மனசு என்றும் இளமையாகத்தானே இருக்கிறது என்பதை கண்டவனெல்லாம் கதையில் கண்டேன்.
நதிமூலம் ரிஷிமூலம் படித்தவுடன் இப்படியும் நடக்குமா? என்று நினைத்தேன்.

"எல்லாச் சூழல்களிலும் எனக்கு உறுதுணையாக நிற்கும் மனைவி மற்றும் மக்களுக்கு இச்சிறுகதைத் தொகுப்பு சமர்ப்பணம் "என்று ஐயா எழுதியிருப்பது வெறும் எழுத்தல்ல என்பதை அன்று பதிவர் சந்திப்பில் அவரது மனைவி மற்றும் மகனைக் கண்ட போது தெரிந்துகொண்டேன்.
நினைத்ததை அப்படியே வெளிப்படுத்தும் திறன் அனைவருக்கும் அமைவதில்லை. அது ஐயாவிடம் இயற்கையாக அமைந்திருக்கிறது. அதுவே அவர் பலம் பலவீனம். 
ஒரு கோப்பை தேநீரை எடுத்தவுடன் ரசித்து ருசித்து பருகி முடிக்க வேண்டும். இடையில் எந்தத் தடங்கலும் இல்லாமல் அப்படியாக இருந்தது இந்த சிறுகதைத்தொகுப்பின் வாசிப்பு அனுபவம். இதுபோன்ற கதைகளை  இன்னும் நிறைய எழுதி வாசகர்களை வசியப்படுத்த வேண்டும் இந்த இளைஞர் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நன்றிங்க ஐயா.


 நூல் தலைப்பு : வாழ்வின் விளம்பில்
ஆசிரியர் : ஜி.எம். பாலசுப்ரமணியம்
பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம்
தி.நகர் சென்னை-17.
இன்னும் வாசிக்க... "வாழ்வின் விளிம்பில் வாசிப்பு அனுபவம்."

Sunday, October 18, 2015

சிரிச்சிப் பேச மறந்தவரே...

ஆண் பெண் உரையாடலைப் போல படிக்கவும் 
சின்னவரே என்னவரே
சிரிச்சிப் பேச மறந்தவரே...

சின்னவிழிப் பாா்வையில
சிறையெடுக்கும் என்னவளே
சிரிச்சிகிட்டு நிற்பதென்ன?
அணைக்கவாடி சின்னபுள்ள?


ஏ..மச்சான் இந்நேரம்
எனப்பிடிக்கும் பய நோயும்..
கிளியுறங்கும் கீத்துறங்கும்
கீதையென்ன இந்நேரம்...?

கெரங்கடிக்கும் உன்னெனப்பு...
கிறுக்காட்டம் சுத்துரேன்டி
கிட்ட வாடி வௌக்கந்தாறேன்.

மறந்தே தான் போனேன் மச்சான்
வௌக்கு வச்சி நேரமாச்சி...
வீதியில என்ன பேச்சி....

அடி போடி வௌக்கெண்ண.....

அட... ஆமா மச்சான் அத வாங்கத்தான்
நானும் வந்தேன்.படம் உதவி இணையம்.
இன்னும் வாசிக்க... "சிரிச்சிப் பேச மறந்தவரே..."

Thursday, October 15, 2015

சுமையா! சுமைதாங்கியா?


எண்ணிய தெழுதுகிறேன்
 எனக்கென எழுதவில்லை
 எல்லோரும் இதிலுண்டு!

ஆறு ஓடினாலும்
தாகம் தீர்ந்திடவே
 அள்ளிப் பருகிடுவார்.

 அறிவென்ற ஊற்றுக்கண்
சுரப்பதை அறியாமல்
 எள்ளி நகைக்கின்றார்


 ஆணாய் இருந்துவிட்டால்
 எவளுக்கு எழுதுகின்றாய்
 பெண் எழுதும் திறன்கொண்டால்
 எவனைப் பாடுகிறாய்.

 எழுத்தாளர் குடும்பத்தில்,
 எத்தனை வேதனைகள்.
 எழுத மனம் வைத்தே
 எழுத்தும் இவர் கணக்கில்,
 பொதுவுடைமை காண்பதில்லை!

 அவரவர் மனம்போலே,
 ஆயிரம் சந்தேகம்.
 பண்பாடும்  மொழிவாழ்வும்,
 காக்கும் கைகளுக்கு,
 விலங்கிடும் உறவாலே,
 மனம் பட்ட மரமாக,
 எழுதும் எழுத்துக்கள்,
 அவர்துயர் துடைத்துவிடும்!

 காவியம் படைப்பதற்கும்,
 சரித்திரம் சொல்வதற்கும்,
 அவர்துயர் துடைப்பதற்கும்,
 அசிங்கங்கள் அழிப்பதற்கும்,
 பொழுதுகள் போவதற்கும்,
 நாமெழுத வேண்டும்!
 நமக்கொரு இதயமுணடு,
 நினைக்க நாதியில்லை.
 மேடையில் புகழ்வார்கள்,

 எழுதுகோல் பிடிப்பவர்கள்,
  சிரிக்கவும் முடியவில்லை,
 அழவும் வழியில்லை,
 எண்ணமே பாலையாக,
 கனவுகள் வாழ்க்கையாக,
 எத்தனைநாள் ஓடுவது,
 என்னநாம் செய்குவதோ?

யாருக்காய் எழுதுவது,
 உலகுக்கா  ஊருக்கா,
 உறவுக்கா, உண்மைக்கா,
 அன்புக்கா, பண்புக்கா,
 இயற்கைக்கா, காலத்துக்கா,
 காதலுக்கா, பிரிவுக்கா,
 பிறப்புக்கா; இறப்புக்கா!
 யாருக்காய் எழுதாமலிருப்பது?
 எழுத்தாளனென்ன?
 சுமையா! சுமைதாங்கியா?

 மீள் பதிவு
இன்னும் வாசிக்க... " சுமையா! சுமைதாங்கியா?"

எங்குமே தமிழைப் பாடி! இனிமையே காண வேண்டும்!


மங்கள நாதம் போலே
      மனத்தினில் மகிழ்ச்சி வேண்டும்!
செங்கதிர் ஒளியாய் எங்கும்
      சிறப்புறும் மேன்மை வேண்டும்!
எங்குமே தமிழைப் பாடி
      இனிமையே காண வேண்டும்!
தங்கிடும் வசந்தம் நாளும்
       தழைத்திட வழிகள் செய்வோம்!

வித்தென என்னுள் ஓங்கும்
      வியத்தகு தமிழே போற்றி!
சொத்தென ஆனாய்! வாழ்வின்
      சொர்க்கமும் கண்டேன் உன்னில்
முத்தினைக் காக்கும் சிப்பி
      முத்தமிழ்ப் புலமை வேண்டும்!
நித்தமும் நிறைவைப் பெற்று
       நேர்த்தியாய் தமிழைக் காப்போம்!

நலமது செழிக்க நாளும்
       நன்மொழிப் பாக்கள் மீட்டு!
களமதில் சேர்ந்த நெல்லாய்க்
        களிப்புற உறவைக் கூட்டு!
உலகினில் உள்ளோர் எல்லாம்
     ஒன்றெனச் சட்டம் தீட்டு!
நிலமகள் மகிழ்வாய் ஏந்த
       நிறைந்திடும் இன்பம் ஏற்போம்!
இன்னும் வாசிக்க... "எங்குமே தமிழைப் பாடி! இனிமையே காண வேண்டும்!"

Thursday, October 8, 2015

என்னவனைக் காணாமல்...!


வாசலெங்கும் தோரணமிட்டு
வாத்தியங்கள் முழங்கக்கேட்டு
வாசல் வந்தே நானும் நிக்க
வண்டாட்டம் கண்ணிரன்டு_பூச்
செண்டோட வந்து நிக்க
வாயடைத்து நானும் நின்னேன் 
வந்தவறக் காணலையே.

மூச்சிழுத்து முனகி முனகி
முன்னும் பின்னும் ஓடிப்பிடித்து
ஓர் அணி ஜெய்க்கும் 
கபடியாட்டம் அங்கும் காணலையே.

கிட்டிப்புள் தட்டிவிட
புள் போகும் திசைநோக்கி
புயலென ஓடும் கூட்டம் (அங்கும் காணலையே)

வழுக்கு மர உச்சிதனில்
பரிசொன்னு காத்திருக்க
உசுருக்குள் புகுந்தவனை
உச்சி மரத்தில் தேடிப்பார்த்தேன் (அங்கும் காணலையே)

இரு பிரிவாய் சேர்திழுக்க
ஒரு புறமாய் வந்துசேரும்
பலம் சொல்லும் கயிறாட்டம் (அங்கும் காணலையே)

கண்கட்டி சுத்திவிட்டே
காலாட்டம் போடக்கண்டு
கதைத்திருந்த ஒரு கூட்டம்
சிரித்தடங்கும் வேளையிலே
சிறந்திடுமே உறியாட்டம் (அங்கும் காணலையே)

பருவப் பெண்கள்
பல்லாங்குழி ஆட்டமாட
தூண்டிலென விழி வீச
துரத்திடுதே ஒரு கூட்டம்  (அங்கும் காணலையே)

கண்களிரண்டை கட்டிவிட்டு
தொட்டிடவே தொடர்ந்து வந்து
தூரத்தே விலகி ஓடும் கண்ணாமூச்சி . (அங்கும் காணலையே)

ஆலமர விழுதில் தொங்கி
ஆட்டமாடும் ஊஞ்சலாட்டம்  (அங்கும் காணலையே)

தத்தித் தத்தி நடந்து வந்து
தாவி குதித்தே முன்னே வரும்
சாக்கு பையாட்டம்  (அங்கும் காணலையே)

நிலா வெளிச்சம் நீண்டிருக்க
பச்சைக் குதிரை தாண்டிஆட
பார்த்திருக்கும் கூட்டமிங்கே . (அங்கும் காணலையே)

வட்டமான கூட்டத்திலே
தந்திரமாய் நுழைந்திடவே
தாளத்தோடு பாட்டிசைக்கும்
ஆடு புலி ஆட்டம் பாரு  (அங்கும் காணலையே)

வெட்டவெளி மைதானத்தில்
பட்டமிட்டு பார்த்து மகிழும்
கூட்டமுண்டு  (அங்கும் காணலையே)
 
எங்கு தேடியும் காணாமல்
ஏங்கிப் போய் நானும் வந்தேன்
என் வீட்டுத்திண்ணையிலே
மடிக்கணினி பார்த்து நிக்கான்
மன்னவன என்ன சொல்ல?
 
மீள்பதிவு
இன்னும் வாசிக்க... "என்னவனைக் காணாமல்...! "

Saturday, October 3, 2015

வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! பரிசு ரூ.10,000


செய்ய வேண்டியது என்ன?
http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள் என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

உங்கள் கருத்து, ஏற்கெனவே இலக்கிய அனுபவம் மிக்க நடுவர் குழு தேர்வு செய்து தந்திருக்கும் முடிவுகளோடு ஒத்துப் போகுமானால் உங்களுக்குப் பரிசு உண்டு!
விமர்சனம் எழுத வேண்டியதில்லை. மதிப்பிட்டு முடிவுகளைச் சொன்னால் போதும்! (எல்லாப் படைப்புகளையும் பற்றி முழுமையாக விமர்சனம் எழுதும் போட்டியை விழாவுக்குப்பின் விதிமுறை அறிவிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே நல்ல படைப்புகளைப் படித்து வைத்துக் கொள்ளலாம் பின்னால் உதவும்.)

நமது தேர்தல்களின் போது, பத்திரிகைகள் நடத்தும் கருத்துக் கணிப்புப் போலவே வைத்துக்கொள்ளலாம். சரியான முடிவுகளுடன் ஒப்பிட்டு அதே முடிவை எடுத்து கருத்துச் சொன்னவர்க்கே முதல்பரிசு ரூ.5,000, அடுத்தடுத்து நெருக்கமான முடிவுகளைச் சொன்னவர் முறையே இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2000 என மொத்தப் பரிசுத் தொகை ரூ.10,000 விழாவில் வழங்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்டோர் சரியான முடிவுகளை எழுதியிருந்தால், பரிசுத் தொகை பகிர்ந்து வழங்கப்படும். 

போட்டிக்கான விதிமுறைகள் –
(1) யார் வேண்டுமானாலும் இந்த “விமரிசனக் கருத்துப் போட்டி“யில் கலந்துகொள்ளலாம். மின்னஞ்சல் (E.Mail), மண்ணஞ்சல் (Postal Address)இரண்டு முகவரிகள் மட்டும் தந்தால் போதும். அதை வெளியிட மாட்டோம். உங்கள் முடிவுகளையும் வெளியிட மாட்டோம் கலந்துகொள்பவர் பெயர்ப் பட்டியல் மட்டும் இதே தளத்திலர் தனிப் பெட்டியில் வரிசைப்படுத்தி வெளியிடப்படும். முடிவு அறிவிக்கப்படும் போது கலந்து கொள்வோர் விருப்பப் படி இரண்டில் ஒரு முகவரி மட்டும் வெளியிடப்படும். அதனை முன்கூட்டியே தெரிவிக்கவேண்டும்

(2)     ஒருவர் ஒரு முடிவை மட்டுமே அனுப்பலாம். ( ஐந்து போட்டிகளிலும் மூனறு பரிசுக்குரியவர் என்று முடிவுசெய்யப்பட்ட (1) போட்டி வகை , (2) வரிசை எண், (3) பெயர் (4) படைப்புத் தலைப்புகளை  இதே வரிசையில் தெரிவித்து     பதினைந்து பரிசுக்கும் ( 5x3=15)  தமது முடிவை மின்னஞ்சல் செய்தால் போதுமானது.  இதற்கான விளக்கம் விசாரணை எதுவும் தேவையில்லை. 

(3)     ஒருமுறை அனுப்பிய முடிவை மாற்ற இயலாது. 

(4)     வரும் 9ஆம் தேதி இரவு இந்திய நேரம் 11.59வரை அனுப்பலாம்.

   (5) மறுநாள் (10-10-2015) காலையே போட்டிகளின் நடுவர் முடிவுகள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து இந்தப் போட்டியின் முடிவுகளும் அறிவிக்கப்படும். செய்தித்தாளிலும் பார்த்துக் கொள்ளலாம். 

(6)     இரண்டு முடிவுகளுக்குமான ரொக்கப் பரிசுகள் நமது விழாவில் வழங்கப்படும்.

(7)     விழாவுக்கு வர இயலாதவர்களுக்கு, பரிசுக் கேடயங்களை (15+3) அஞ்சலில் அனுப்ப இயலாது. விழாவுக்கு வரும் யாரிடம் வழங்கலாம் எனும் விவரத்தை முன்னரே தெரிவிக்க வேண்டும்.

(8)     வெளிநாட்டில் வாழ்வோர் இந்திய நாட்டில் உள்ள தம்உறவினரின் அஞ்சல் முகவரியைத் தருதல் வேண்டும். மின்னஞ்சல் முகவரி மற்றும் மண்ணஞ்சல்முகவரி இல்லாத அனாமதேயப் பங்கேற்பை ஏற்பதற்கில்லை.

(9)     மற்ற பொது நடைமுறைகளில் போட்டி அமைப்பாளர் மற்றும் விழாக்குழுவின் முடிவே இறுதியானது.

(10) போட்டியாளர் தவறான முகவரி தந்திருப்பதாகத் தெரியவந்தால், முடிவு திரும்பப் பெறப்படும்.
-----------------------------
நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
இதனைப் பார்க்கும் நமது வலைப்பதிவர்கள், குறிப்பாகப் போட்டியாளர்கள் அனைவரும் மற்றும் நண்பர்களும் 
தத்தம் வலைப்பக்கங்களில் இதனைப் பகிர்ந்தும் தொடர்புள்ள செய்தித்தாள் ஊடகங்களில் வெளியிடச் செய்தும் பலரும் இப்போட்டியில் பங்கேற்க உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம் 
--விழாக்குழு--

பி.கு.
இ்ந்தப் போட்டிக்கான தொகையை மட்டுமின்றி விழாச் செலவுக்கும் மனமுவந்து தருவதாகச் சொல்லி,விழாஅரங்கில் தவிர வேறெங்கும் தன்பெயரை வெளிப்படுத்தக் கூடாது என்றும் கேட்டுக்கொண்ட ”அந்த“ நல்ல உள்ளத்திற்கு நன்றி.
 நன்றி
நா.முத்துநிலவன்.
புதுக்கோட்டை விழாக்குழுவினர்.
இன்னும் வாசிக்க... "வாசகர்க்கான விமரிசனப் போட்டி! யாவரும் கலந்துகொள்ளலாம்! பரிசு ரூ.10,000"

Friday, October 2, 2015

வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக!

அழைப்பிதழ் கண்டதுமே மனம் மகிழ்வில் கூத்தாடுகிறது. என்ன நண்பர்களே சகோதர சகோதரிகளே விழாவிற்கு புறப்பட தயாராகிவிட்டீர்களா? இதோ நானும் உங்களுடன் அனைவரும் வருக! வருக!
கட்டுரை கவிதையென வலைஉலகை கலக்கிக்கொண்டிருக்கும் நண்பர்களின் முகம் காண விரைந்திடுக...
 

இன்னும் வாசிக்க... "வலைப்பதிவர் திருவிழா அழைப்பிதழ் அனைவரும் வருக!"

Thursday, October 1, 2015

வளமான வாழ்வு இனி பெண்ணினத்தால் மட்டுமே!

       
           நாம் கடந்து வந்த பாதைகளைச் சற்றேனும் திரும்பிப்பார்க்க வைக்கிறது.  இன்றையக் காலப்பெண்களின் நிலை அப்படியென்ன முன்னேற்றம் கண்டு விட்டது பெண்ணினம்?

          பலதுறைப்பணிகளில் ஏன் நாடாள்வதும் பெண்ணினம் என்று பெருமை பேசும் பெண்களில் இன்னும் எத்தனை சதவீதம் பேர் முன்னேற்றம் காணாது அல்லது முன்னேற முயற்சியே செய்யாது இருப்பவர்கள் என்று ஆய்வுசெய்தால் அதில் வருத்தமே மிஞ்சும் முழுக்க முழுக்க இன்று பெண்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதா?

            பெண் என்பவள் அன்னையாகவும் தெய்வமாகவும் போற்றப்படும் இந்த புனித பூமியில் தான் பெண்களுக்கு எதிரான கொடுமைகளும் நிகழ்கின்றன.  எப்போதும் ஒருவரை சார்ந்தே வாழ வேண்டிய சூழ்நிலையில் வளர்க்கப்பட்டிருப்பதும் அது காலங்காலமாக தொடர்ந்து கற்பிக்கப்பட்டும் வருகிறது.  ஆணுக்குகட்டுப்பட்டு நடப்பதும் பணிவிடை செய்வதுமாக உருவாக்கிய இயந்திரமாக பெண்கள் சித்தரிக்கப்படுகின்றார்கள்.  பெண்களை அடிமைப்படுத்துவதையே பண்பாடு கலாச்சார வழக்கம் என்று பெருமை பேசுவோரும் சமூகத்தில் பரவலாக இருக்கின்றனர்.

          காலச் சூழ்நிலையாலும் சமூக மாற்றத்தினாலும் பல்வேறு மாற்றங்களை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிய நாம் பெண்களின் வாழ்வில் உருவாக்க வேண்டிய மாற்றங்களை முன்னேற்றங்களை ஏற்றுக் கொள்ள தவறிவிட்டோம்.  மறுத்து விட்டோம் மாறாக அவர்களே நமது முன்னோர்களும் இப்படித்தானே இருந்தார்கள் என்று தங்களைத் தானே சமாதானப்படுத்தியும் வாழப் பழகி விட்டார்கள்.

           ஆறறிவுக்கு கீழுள்ள உயிரினங்கள் கூட தங்களைத் தாங்களே காத்துக் கொள்ள முயற்சி செய்தாக வேண்டிய இன்றைய சூழலில் சிந்தனை என்னும் ஆறாம் அறிவு படைத்த மனித இனமோ அச்சமடையச்செய்வதையும் அடிமைப்படுத்துவதையும் செய்து விட்டு பேச்சளவில் மட்டும் ஆங்காங்கே முழக்கங்களை ஏற்படுத்தி விளம்பரங்களைத் தேட மட்டும்  பயன்படுத்துகின்றனரே ஒழிய விழிப்புணர்வையோ வேற்றுமைகளையோ களைய வழிமுறைகளை ஏற்படுத்தாது வீராவேசம் பேசுகின்றனர்.  இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் தம்முடைய முன்னேற்றம் குறித்தோ வாழ்க்கை முறை குறித்தோ பெண்களே எவ்வித முயற்சியும் இன்றி இருப்பது தான் வேடிக்கையாக இருக்கின்றது.

  வீரத்திற்கு திருமிகு ஜான்சி ராணியும் உயிர்மொழியாம் உலகை ஆளும் உண்மை மொழியாம் தமிழால் நல்லற வாழ்விற்கு நன்னூல்களைத் தந்த ஞானத்தாய் ஔவையாரும் அன்றிலிருந்து இன்றுவரை கால சூழ்நிலைகளில் தங்களைத் தாங்களே நிலைநிறுத்தி வாழ்ந்து வழி காட்டுபவர்களும் இவர்களே.  பெருமையை தன்னகத்தே கொண்டவர்கள் பேரத்திற்கு அடிமையாகி வர்த்தகமாகி வீண் ஆரவாரங்களாய் நிகழ்வுகளை நினைவு படுத்துகிறது நீர்த்துப்போன ஊடக ஒளிப்பரப்புகள்.

           தன்னிலையை உயர்த்த தான் சிந்தித்தாலொழிய முடியாது என்ற தன்னம்பிக்கை பெண்களிடையே ஏற்படுத்தப்பட வேண்டும்.  அன்பு, கருணை, தயவு, பொறுமை, இயற்கை, அன்னை என்று சொல்லில் உள்ள உண்மையை உணர்த்தும் விதமாக உணரும் விதமாக செயலாக்க வழிமுறைகள் உருவாக்க வேண்டும்.  ஆடு என்றால் வெட்டப்படுவதற்கு வளர்க்கப்படுவதுபோல பெண்கள் என்றாலே திருமணம் என்ற ஒன்றிற்காக மட்டும் என்ற கருத்தை மாற்ற வேண்டும்.  கருகொண்டு உருதந்து கண்ணாய் இருந்து காத்து களம் சேர்த்து காரியங்களால் காவியங்களாக்கப்ட வேண்டியவர்கள் ஆக்கத்திற்கு அடித்தளமாய் அர்ப்பணித்து வாழவும் ஆற்றலுடையவர்களை ஊக்கம் தந்து உற்சாகப்படுத்த வேண்டும் உறவுகளால் உரிமை கொள்ளச் செய்ய வேண்டும்.  ஒடுங்கி வாழ்பவர்களை ஓங்கி உயர்ந்து வாழச் செய்ய வழிகளை சொல்லோடு மட்டும் அல்லாது செயல் வழியும் பங்கு கொள்ள உறுதுணை புரிய வேண்டும்.

            சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும்? மகளிர்
             நிறை காக்குங் காப்பே தலை. குறள்-97.

          பெண்களை காவல் வைத்து காக்கும் காப்பு முறையால் என்ன பயன் உண்டாக்க முடியும்? தங்களைத ;தாங்களே காத்துக் கொள்ளும் நிறை என்னும் பண்பே சிறந்த காப்பாகும் ஆசான் திருவள்ளுவர் கூறிய இந்த அருள்வழியை வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டும்.

இன்று குழந்தைகள் நிலை:
           ஆலமரத்தடியில் தொட்டில் கட்டி அழகாய் தாலாட்டு கேட்டு உறங்கும் குழந்தைப்பருவமா இன்றைய சமூகத்திற்கு கிடைத்திருக்கிறது.  யாருமற்ற தனி அறையில் காசுக்காக அமர்த்திய ஆயாவின் கண்டும் காணாத பார்வையில் வளரும் குழந்தைகளுக்கு அன்பென்றால் என்ன என்பதையும் இன்று ஊடங்கள் தான் திரையில் படமாக காட்டுகின்றன.

          இப்படியான நிலையில் பாதுகாப்பற்ற சூழலில் வளரும் பெண் குழந்தைகளுக்கு முறையான வழிகாட்டல் வேண்டும்.  தன்னைத்தான் பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகளையும் பெற்ற அன்னையே சொல்லி வளர்க்க வேண்டும்.  முறையான கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.  தன்னைத்தான் உணர வைக்க வேண்டும்.  வெட்கம் அச்சம் என்று ஒடுக்கும் பேச்சு வழக்கிலிருந்து வெளியில் கொண்டு வரவேண்டும். தன்னம்பிக்கையும் தைரியமும் நேர் வழி நடத்தலையும் ஆண் பெண் பாகுபாடற்ற நிலையையும் சிறு வயதிலிருந்தே சொல்லிச் சொல்லி வளர்க்க வேண்டும். அதிலும் பெண் குழந்தைகள் என்றால் நாளை வேறு ஒரு குடுபத்திற்கு செல்ல வேண்டியவள் தானே என்று வேற்றுமை பாராட்டாமல் வளர்க்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் ஏற்படும் வாழ்வியல் மாற்றங்கள் மன ரீதியாக உள ரீதியாக உடல் ரீதியாக என அறிவுறுத்தல்களும் வழி காட்டுதல்களும் பக்குவப்படுத்துவதும் பரிணாமம் பெற வேண்டும். நமது எண்ணங்களே சொல்லாகவும் சொற்களே செயல்களாகவும் வளர் மாற்றம் அடையும் வண்ணம் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டிய முயற்சிகளை ஒவ்வொருவரும் தமது குடும்பத்தில் இருந்து ஏற்படுத்த வேண்டும் மற்றவர்களுக்கு அதுவே ஒரு வாழ்க்கைப் பாடமாய் அமைந்து சமூக அளவில் பெரும் மாற்றங்கள் நிகழ காரணியாக அமையும்.

          ஒன்றுபட்டு வாழும் ஒற்றுமை உணர்வையும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற வாழ்வியல் மொழியின் வழி வாழ்ந்து பார்க்கச் செய்து வாழ்க்கை வாழ்வாதார வழிகளை அறியச் செய்வதோடு அதுவே சமதர்ம சமநீதி கொண்ட தத்துவ வாழ்வு பெற்று தரும் என்ற பேருண்மையை பெற்றுத்தர பாடுபட வேண்டும்.

       சாதித்துக் கொண்டு சாதனையாளர்களாய் வாழ்கிறார்கள் என்ற பெருமை நிலையை அறிந்து உத்தமர்களின் உள மொழிகளை ஏற்று நிலை தடுமாற்றங்களை களைந்து நீதி தேவதைகளாய் நிமிரச் செய்திட வேண்டும்.

         தனக்கான துறையை தாமே தேர்வு செய்து அதில் தம் முழுத்திறமையையும் செலுத்தி முன்னேற வழிவகை காண வேண்டும்.  ஒருவீட்டில் பெண்ணுக்கு கல்வி கிடைத்தால் தான் அந்த வீடு முன்னேற முடியும் என்ற நிலையில் கல்வியைத்தாண்டி சுயதொழில் சுயமுன்னேற்றம் போன்ற சிந்தனைகள் பெண்களிடையே வளர வேண்டும்.

          தமக்கான துணையை தாமே தேடும் அளவிற்கு சிந்திக்க தெரிந்த பெண்கள் தம் தேவையை தாமே பூர்த்தி செய்து கொள்ளவும் பொருளாதார நிலையில் தம்மைத் தாமே உயர்த்திக்கொள்ளவும் வேண்டும்.  வீண் அரட்டை, வெட்டிப்பேச்சு, தொலைக்காட்சி இது ஒன்றே பெண்களுக்கான உலகமல்ல என்பதை உணர வேண்டும்.  தம் குழந்தைகளுக்கும் நற்பண்புகளை குறிப்பாக உதவும் மனப்பான்மை, சுயநலமற்றதன்மை, பணிவு, பண்பாடு, அர்பணித்தல் குறித்த புரிதலைத் தரவேண்டும்.

"நீஎதுவாக நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய்" என்ற விவேகானந்தரின் எழுச்சி ஒவ்வொருவருக்குக்குள்ளும் ஏற்படுத்துதல் வேண்டும்.

       அகந்தையை ஒழித்து தன்னாலும் சுயமாக வாழ முடியும் தன்னாலும் பிறருக்கு உதவ முடியும் ஆணும் பெண்ணும சரிசமம் போன்ற ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை வளரும் தலைமுறைக்கும் புகட்ட வேண்டும்.

          வீடும் நாடும் முன்னேற பெண்களே காரணம் என்றநிலை உருவாக வேண்டும்.  களவு கொலை கற்பழிப்பில்லா சமூகம் உருவாக வேண்டும்.  ஒவ்வொரு பெண்ணும் மாபெரும் மகத்தான சக்தி என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(3) பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டிக்காக எழுதப்பட்டது. 

என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.
இன்னும் வாசிக்க... "வளமான வாழ்வு இனி பெண்ணினத்தால் மட்டுமே!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி