Ads 468x60px

Tuesday, September 1, 2015

விண்மீன் கூட விழிநோக்கும்!

கண்ணே மணியே என்றேதான்
          காதல் மொழியில் கொஞ்சாமல்
                 கண்கள் காட்டும் நயனமதைக்
                       கடந்து செல்லும் கள்வனவன்!

வண்டாயத் தினமும் வந்தேதான்
           வண்ணக் கனவில் குடியேறி
                    வாவா என்றே அழைத்தென்னை
                               மடியில் மயங்கச் செய்திடுவான்!

உண்ண மறுக்கும் உணர்வளித்தே
          உடும்பாய் என்னைப் பிடித்திருப்பான்
                   உடலின் சுமையாய் உடைமாறும்
                              உயிரின் சுகமாய்க் கனவாடும்!

விண்மீன் கூட விழிநோக்கி
          மெல்ல மின்னிக் கதைகேட்கும்
                        மேகம் வந்து மெதுவாக
                                மேனி தழுவும் என்னென்பேன்?

 தவழ்ந்து வந்த வெண்ணிலவும்
               சாடை பேசி நின்றிருக்கும்!
                      சரிகைப் பட்டுச் சேலையிலே
                               சாய்ந்து றங்க இடங்கேட்கும்!

 அவையை நோக்கும் மக்களென
             அச்சம் கொண்ட விண்மீன்கள்
                       அசைய மறந்த மரக்கிளையில்
                                   ஆந்தை போன்றே விழித்திருக்கும்!

தவிக்கும் நெஞ்ச ஆசைகளை
           தாளில் எழுத முடிந்திடுமோ?
                   தத்தி நட ந்தே பழகுமிந்த
                           சாள ரத்துப் பைங்கிளியும்!

சுவையை எண்ணி மனமேங்கும்
            தூய தமிழின் கவியோங்கும்!
                      தொடரும் இனிமை நினைவெல்லாம்
                                சுழலும் பசுமைக் கொடியன்றோ?
    27 comments:

 1. பன்னிரு சீர்விருத்தப் பா!.கண்டு விக்கித்தேன்!
  என்னவெனச் சொல்வேன் எழில்!

  சிந்தை மயங்கிடச் செயலிழந்து நிற்கின்றேன்!..
  தமிழ் தாவி வந்து உங்களுடன் ஊஞ்சலாடுகிறது!
  அத்தனை இனிமை! வாழ்த்துக்கள் தோழி!

  த ம 1

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. இதில் விக்கித்து நிற்க எல்லாம் ஏதுமில்லை. தாங்களும் எழுதக்கூடிய வடிவம் தான் நான் எழுதியிருப்பது. ஆதலால் இன்னும் நல்லா எழுதுப்பா அப்படி சொல்லுங்க இல்ல உரிமையோட திட்டினாக்கூட கேட்பேனே ஹஹ.

   Delete
 2. அட பன்னிரு சீர் விருத்தமா அசத்திட்டீங்கம்மா.மேலும் அசத்த வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. எங்கே எனக்கு வெண்பா?
   அப்புறம் நான் அழுவேன். ஹஹ
   நன்றிப்பா.

   Delete
 3. வணக்கம் அக்கா!! அருமை அருமை!! நன்றி!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. நன்றி! நன்றி!

   Delete
 4. //சாள ரத்துப் பைங்கிளியும்!// அருமை.
  எனக்கு இது பன்னிரு சீர் விருத்தம் என்பதெல்லாம் தெரியாது;ஆனால் பன்னீர் தெளித்தது போல் இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. பன்னீர் தெளித்து வரவேற்ற வாழ்த்திது ஐயா.
   நன்றிங்க ஐயா.

   Delete
 5. பசுமைக் கொடியாய் படரும் பன்னிரு சீர் விருத்தப் பாவை வருத்தமில்லாமல் படித்து ரசித்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. விருத்தம் படிக்க வருத்தமாகுமோ?

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தும் மனம் தானே அனைவரும் விரும்புவது அது போதும் தோழி.
   நன்றிங்க தோழி.

   Delete
  2. வாழ்த்துக்கள். விருத்தங்கள் தங்களை விருப்பி விளையாடும்
   சந்தங்கள் தங்களுக்கு சொந்தமாகிப் போனதனால்
   உங்களை யான் வாழ்த்துக்கள் தோழி
   என வாழ்த்துதல் மட்டுமே முடிந்தது

   Delete
 7. பன்னிரு சீர் விருத்தம் என்ற கவிதையின் கட்டமைப்பு எனக்கு தெரியாது. நான் கல்லூரியில் படிக்கும்போது முதல் வருடம் பக்தி இலக்கியமும் இரண்டாம் வருடம் காதல் இலக்கியமும் பாடங்களாக இருந்தன. இரண்டும் எனக்கு ஒன்று போலவே தெரியும். பக்தியில் இறைவனை மானே தேனே என்பார்கள். காதலில் தங்கள் துணையை அப்படி அழைப்பார்கள். தலைவிக்கு ஒரு தோழி கட்டாயம் இருக்க வேண்டும்.
  உங்கள் கவிதையைப் படிக்கும் போது அந்த இலக்கியங்கள் நினைவுக்கு வருகின்றன.
  த ம 4

  ReplyDelete
  Replies
  1. ஆன்மீகத்திலும் மனம் ஒன்றிவிடும் அதுபோல காதல் வந்தாலும் மனம் அதிலேயே லயித்து விடுமே ஆதலால் இரண்டும் எனக்கும் ஒன்றாகத்தான் தெரிகிறது .
   நன்றிங்க.

   Delete
 8. விண்மீன் கூட விழிநோக்கி
  மெல்ல மின்னிக் கதைகேட்கும்
  மேகம் வந்து மெதுவாக
  மேனி தழுவும் என்னென்பேன் ?

  கவிதை போலவே.... கவிதையின் அமைப்பே அழகு சகோ வாழ்த்துகள்

  குறிப்பு - தமிழ் மணம் என்று இனிமேல் எழுத மாட்டேன் ஆனால் கருத்துரையோடு விழுந்து கொண்டே இருக்கும் 80தை அறியத்தருகிறேன் கபடுதல் தட்டச்சு செய்வதால் கடந்த மாதம் கரண்ட் பில் கூடுதலாகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. நானும் இப்படித்தான் சகோ. எங்கு கருத்திட்டாலும் தமிழ்மண ஓட்டும் போட்டுவிடுவேன் ஆனால் எங்கும் சொல்வதில்லை.
   நன்றிங்க சகோ.

   Delete
 9. தூய தமிழின் கவி ஓங்கிக் கொண்டே இருக்கட்டும்
  அருமை நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 10. ஆஹா ..அருமை ! அருமை ! என்னுடைய தோழிகளின் புலமையை
  எண்ணி மகிழ்கின்றேன் வாழ்த்துக்கள் என் அன்புத் தோழியே !த.ம 7

  ReplyDelete
  Replies
  1. வருகையும் அன்பின் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete
 11. அன்புள்ள சகோதரி,


  விண்மீன் கூட விழிநோக்கும்
  விருத்தப்பா பாடி மகிழ்ந்தது
  விருந்தப்பா தமிழ்த் தாய்க்கு...!
  விரும்பும் தாயே தன்மகவை...!

  நன்றி.
  த.ம. 8

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete

 12. வணக்கம்!

  பன்னிரு சீர்விருத்தம்! பைந்தமிழ்த் தென்றலே!
  என்னிரு கண்களுள் ஏறியது! - பன்னரும்
  கற்பனை மேவிக் கவிபேசும்! பொற்றமிழே
  நற்றுணை என்றும் நமக்கு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா!
   தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 13. ரசித்தோம் ரசித்தோம் மிகவுமே! வேறு ஒன்றும் சொல்லிட வார்த்தைகள் இல்லை. பள்ளியிலும், கல்லூரியிலும் கற்றதே. தமிழ் இனிக்கின்றது..சகோதரி..

  கீதா: நான் பள்ளி, கல்லூரியில் கவிதைகள் பல புனைந்ததுண்டு. பின்னர் அப்படியே அது உறைந்துவிட்டது. பின்னர் சூழல் மாறிட....எல்லாம் மறந்து...மீண்டும் இப்போதுதான் தங்களைப் போன்றோரின் கவிதைகள் வாசித்து புதுப்பித்துக் கொள்கின்றோம்...அருமை தோழி சசி...

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ! மற்றும் தோழி கீதா அவர்களே தங்கள் வருகையும் வாழ்த்துமே எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருக்கிறது.
   இருவருக்கும் எனது நன்றி.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி