Ads 468x60px

Saturday, September 26, 2015

இருவிழா அழைப்பிதழ்! இனித்திடும் நிகழ்வுகள்!


சின்னச் சிட்டாய் ராசாத்தி
நீயும் சீவி முடிச்சி வாயேன்டி..
வண்ண வண்ண மாக்கோலம்
வாச மல்லிப் பூவழகும்..
அவை நிறைந்த தமிழ்ப்பூக்கள்
ஆடல் பாடல் கலைகளுடன்
அழகாய் மிளிரும் கம்பன் விழா...
காணக் கண்கோடி வேண்டிடுமடி கட்டழகே
கண்கள் நிலைத்து நிற்குமடி  காவியமே!

அருமைத் தொண்டர் பாரதிதாசன்
ஆற்றும் பணிகோடி தமிழிற்கே!
பெருமை கூறும் கம்பன்விழாவில்
பெண்ணிவள் வணங்கி வாழ்த்துகிறேன்!

ஆண்டிற்கு ஒரு முறை எதாவது விழா ஏற்பாடு செய்வதென்றாலே என்ன பாடுபடுவோம் நாம் ஆனால் இங்கு பாருங்க கம்பன் விழா (பதினான்காம் ஆண்டு) அழைப்பிதழையே ஆச்சரியமாகக் காணும் படி வடிவமைத்து ஆடல் பாடல் பாட்டரங்கம் பட்டிமன்றம் இப்படி இன்னும் பல அசத்தல் நிகழ்வுகளை அயராது உற்சாகமுடன் ஏற்பாடு செய்து இரண்டு நாள் விழாவாக கொண்டாடும் எங்கள் ஆசானை நேரில் கண்டு வணங்கி  பாவலர் பட்டம் பெற நினைத்தேன். செல்ல இயலவில்லை அந்த வாட்டத்தைப் போக்கிய அற்புதமான நம் பதிவர் சந்திப்பு விழாவிற்காக காத்திருக்கிறேன்.கவிமழையில் நனைந்திருக்க
கட்டுரைகள் முகந்துடைக்கும்
ஆர்வமுடன் வலைதனிலே
அவரவர் பங்கீட்டை
அழகுடனே ஒன்றாக்கி
அன்புடனே முகங்காண
அனைவருமே வந்திடுவீர்..
புத்தம் புதுச் சோலையென
பூத்திருக்கும் புதுக்கோட்டைக்கே...

அனைவரும் கம்பன் விழாவினைக் கண்டு களித்து அப்படியே புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கும் மறக்காம வந்துடுங்க அதுக்கு முன்னாடி பதிவர் கையேட்டிற்கு உண்டான தகவல்களை கொடுத்திட்டிங்களா? இன்னும் நண்பர்களுக்கும் தகவல் சொல்லி கொடுக்கச்சொல்லுங்க அவங்களுக்கு நேரமில்லையா நீங்களே நண்பர்கள் உறவினர் தகவல்களை கொடுத்துடுங்க. அதுக்காக வலையில்லாதவங்க தகவல்களைக் கொடுக்காதிங்க சரியா?


இன்னும் வாசிக்க... "இருவிழா அழைப்பிதழ்! இனித்திடும் நிகழ்வுகள்!"

Monday, September 21, 2015

இளைஞனே நீஏந்திடவே வெற்றிக்கனி!


கற்றுத் தெளிவைப் பெற்றிடுக
       கடமை உணர்ந்தே நடந்திடுக!
வெற்றி இலக்கை எதிர்நோக்கி
        வேங்கை போலே விரைந்திடுக!
சுற்றுச் சூழல் காத்திடுக
        சோலைப் பூவாய்ச் சிரித்திடுக!
சுற்றம் சூழ வாழ்ந்திடுக
           சுடரும் தமிழைப் போற்றிடுக!

நாளும் வேண்டும் நம்பிக்கை
           நமக்கும் அதுவே தும்பிக்கை!
காளை போலே நடைபோடு
          கண்ணி யத்தின் துணையோடு!
காலைத் தென்றல் காற்றாகும்
           கனிகள் கொண்ட சுவையாகும்!
சோலை யுற்ற எழிலாகும்
          தூய தொண்டின் பெருநலமே!

ஆண வத்தை அகற்றிடுக
       ஆற்றல் தன்னை வளர்த்திடுக!
ஆணும் பெண்ணும் சமமென்றே
       அன்பாய் இணைந்து செயல்படுக!
தூணாய் நின்றே உயர்ந்திடுக
        துன்பம் துரத்தி வென்றிடுக!
கேணி நீரின் ஊற்றாகக்
        கேளிர்க் கெல்லாம் உதவிடுக!

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.

வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை.
 
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.
இன்னும் வாசிக்க... "இளைஞனே நீஏந்திடவே வெற்றிக்கனி! "

Saturday, September 19, 2015

அன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு!


அக்கினித் தீயில் உழன்றும் ஆதவன் வழிமாறவில்லை!
அமாவாசை அணிந்தும் நிலவதுவும் நிலையாய் நின்றபடி!

ஆண்டவன் படைப்பென்று பறவை மிருகங்களும் மாறாதிருக்க!
ஆசைக் கனவேந்தி மாறும் மானுடம் அழிவை அணிந்து!

இன்றவர் சுமையேந்தி என்னாளும் கண்ணீர் கடல் மீனாய்!
இறப்பும் பிறப்பும் மட்டுமே உண்மை பிறயாவும் இப்புவிதனில்!

ஈகையாய் நாம் கொண்டு கொடுக்கும் கடன் விடையறியாமலே!
ஈரமிலா இதயமணிந்தோர் இசைபாட்டதுவும் துன்பமேந்தியே!

உள்ளத்தால் உயர்ந்தவரென்றே உறவுகளின் நம்பிக்கையாய்!
உணர்வதோ பாலைக்கானல் நீர்கண்ட மானாய்!

ஊடலும் கூடலும் பொய்யணிந்து பயணம் செய்தபடி!
ஊனமாயுறவும் பகையேந்திய மனமும் பண்பதை இழந்தே!

எண்ணமும் வாழ்வும் அலைந்தோடும் மேகமாய் சிதறிப்போக!
எங்கேபோய் தேடுவது நிம்மதியெனும் மெய் நீர் ஊற்றதனை?

ஏர்பூட்டிய மாடாய் ஏனிந்த சுமை வாழ்வோ யாவுமிருந்தும்?
ஏறாத மலையேறி ஆடாத ஆட்டமாடும் ஆசை அழிவணிந்து!

ஐந்தில் கற்றதை வாழ்விலணிந்து வாழ்ந்திருப்பின் துன்பமது!
ஐயமின்றி அழிந்திருக்கும் ஐம்பதிலும் தீமையணிந்தே நாம்நமை!

ஒருநாளும் அழியாத தீமைக்கு ஒப்புக் கொடுத்ததினால்!
ஒவ்வாத பாதையில் ஒழுகும் நீர்குடமாய்த் தத்தித் தடுமாறியே!

ஓரினம் காரணமென்றாயினது மனிதகுலமன்றி வேறில்லை!
ஓங்கிவளர்ந்த தீமையிடம் நன்மையது தோற்று நிற்பதற்கு!

ஔடதம் அன்பென்ற அறம்மறந்ததைப் புறம் தள்ளியதாலின்று!
அஃதே கதியென்றாகி தினம்தீமையின் புத்திரராய் ஜனனம்முதல்!
இஃதே வாழ்வெனில் பதரேநாம் மெய்யணியின் நன்மை நாடிவரும்!

இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை.
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.
இன்னும் வாசிக்க... "அன்போடு அறமேந்தி காப்பாய் பண்பாடு!"

Friday, September 18, 2015

நடைபோடு! நல்லாரின் துணையோடு!
ஆடை குறையுது!
ஆணவம் பெருகுது
அம்மா சொல்வதைக் கேளு!
இல்லையே வருமே கேடு!

ஆளும் வளர்ந்திட்ட அறிவோ வளரல
அப்பாவின் ஏக்கத்தப் பாரு!
ஐயோ உனைத்தூற்றுமே ஊரு!

வணங்கிடத் தெரியல
வார்த்தையில் தெளிவில!
வளர்க்கணும் ஆற்றலை நீயும்!
வளத்தினை வழங்கிட நாளும்!

முன்னேறி நடைபோடு!
முன்னோரின் துணையோடு!
நல்லறிவை நாடிச் செல்வாய்!
வெல்லறிவைச் சூடிக்கொள்வாய்!

திருந்தி நீயும் வாழ்ந்திடத்தான்
தினம்தினம் படிப்பாய் திருக்குறளே!
அகமும் புறமும் தெளிவாகும்!
அதுவே வாழ்வை நெறியாக்கும்!

கொட்டும் மழையைக் கொஞ்சம் நேசி
கொடுக்கும் வள்ளல் பண்பை வாசி...
இயற்கையோடு இணைந்த வாழ்வே
இன்பம் தங்கும் சோலை!
இன்பத் தமிழை என்றும் காத்தால்
ஏற்பாய் புகழின் மாலை!இப்படைப்பு ‘வலைப்பதிவர் திருவிழா – 2015’ மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் ‘மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் – 2015’க்காகவே எழுதப்பட்டது.
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை.
என்னுடைய சொந்தப்படைப்பு என்றும் இதற்கு முன் வேறெங்கும் வெளியானதல்ல என்றும் முடிவு வெளியாகும்வரை வெறெங்கும் வெளிவராது என்றும் உறுதியளிக்கிறேன் - அ. சசிகலா.  


படம் உதவிக்கு தோழி இளமதிக்கும் இணைத்திற்கும் நன்றி. 


இன்னும் வாசிக்க... "நடைபோடு! நல்லாரின் துணையோடு! "

Sunday, September 13, 2015

உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

 
“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
ஐந்துவகைப் போட்டிகள்! – வகைக்கு மூன்று பரிசுகள்!
முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2,000
ஒவ்வொரு பரிசுடனும்
“தமிழ்க்களஞ்சியம்“ இணையம் வழங்கும்
மதிப்புமிகு வெற்றிக் கேடயம்!
இவ்வாறாக   ஐந்து போட்டிகளுக்குமான
மொத்தப் பரிசுத் தொகை ரூ.50,000!
------------------------------------
வகை-(1) கணினியில் தமிழ்வளர்ச்சி- கட்டுரைப் போட்டி-கணினியில் தமிழ்வளர்ச்சி குறித்த ஆதாரத் தகவல்கள், ஆக்கபூர்வ யோசனைகள்  -ஏ4 பக்க அளவில் 4பக்கம்.  இலக்கிய நயமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(2)   சுற்றுச்சூழல் விழிப்புணர்வு - கட்டுரைப் போட்டி -சுற்றுச்சூழல் அறியாமை தரும் ஆபத்து, விழிப்புணர்வுக்கு ஆக்கபூர்வ யோசனைகள் - ஏ4 பக்க அளவில் 4பக்கம் பொருத்தமான தலைப்பும் தருதல் வேண்டும்
வகை-(3)    பெண்கள் முன்னேற்றம் - கட்டுரைப் போட்டி -பெண்களை சமூகம் நடத்தும் விதம், பெண் முன்னேற்றம் குறித்த யோசனைகள், - ஏ4 பக்க அளவில் 4பக்கம், தலைப்பும் பொருத்தமாகத் தருதல் வேண்டும் 
வகை-(4)    புதுக்கவிதைப் போட்டி- முன்னேறிய உலகில் பண்பாட்டின் தேவை குறித்த புதுக்கவிதை - 25வரி அழகியல் மிளிரும் தலைப்போடு
வகை-(5)    மரபுக்கவிதைப் போட்டி-  இளைய சமூகத்திற்கு நம்பிக்கை யூட்டும் வீறார்ந்த எளிய-மரபுக் கவிதை 24வரி.அழகொளிரும் தலைப்போடு

போட்டி விதிகள்
(1)   படைப்பு தமது சொந்தப் படைப்பே எனும் உறுதிமொழி தரவேண்டும்.
(2)    இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது என்னும் உறுதிமொழியும் இணைக்கப்ட வேண்டும்.
(3)   “இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது“ என்னும் உறுதி மொழியுடன் தமது தளத்தில் வெளியிட்டு, அந்த இணைப்பை  மட்டுமே மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும்.
(4)   வலைத்தமிழ் வளர்ச்சியே போட்டியின் நோக்கம் என்பதால் வலைப்பக்கம் இல்லாதவர் இப்போட்டிகளில் கலந்து கொள்ள இயலாது. இதற்காகவே புதிதாக வலைப்பக்கம் தொடங்கியும் போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டி முடியும் வரை அந்த வலைப் பக்கம் செயல்பாட்டில் இருத்தல் வேண்டும்.
(5)    படைப்பு வந்துசேர இறுதிநாள்30-9-2015 (இந்திய நேரம் இரவு11.59க்குள்)
(6)   11-10-2015 புதுக்கோட்டையில் நடக்கும் வலைப்பதிவர் திருவிழா-2015 இல் தமிழ்நாடு அரசின் தமிழ்இணையக் கல்விக் கழகத்தினர் (TAMIL NADU VIRTUVAL UNIVERSITY-http://www.tamilvu.org/ ) வழங்கும் உரிய பரிசுத்தொகையுடன் பெருமைமிகு வெற்றிக் கேடயமும் சான்றோரால் வழங்கப்படும்.
(7)   உலகின் எந்த நாட்டிலிருந்தும் அவரவர் வலைப்பக்கம் வழியாக எத்தனை போட்டிகளில் வேண்டுமானாலும், (ஒவ்வொரு தலைப்பிலும் எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்பி) பங்கேற்கலாம். அனைத்துவகைத் தொடர்பிற்கும் மின்னஞ்சல் மட்டுமே. அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் bloggersmeet2015@gmail.com
(8)   தளத்தில் படைப்புகளை போட்டிவகைக் குறிப்புடன் வெளியிட்டுவிட்டு, போட்டிக்கு அந்த இணைப்பை அனுப்பும்போது,  பதிவரின் பெயர், வயது, புகைப்படம், மின்னஞ்சல், செல்பேசி எண், வெளிநாட்டில் வாழ்வோர்- இந்தியத் தொடர்பு முகவரியுடன் கூடிய அஞ்சல் முகவரி, வலைப்பதிவர் திருவிழாவில் வெளியிடப்படவுள்ள கையேட்டிற்கு உரிய விவரங்கள் தரப்பட்டுவிட்டதையும் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். இவ் விவரங்கள் இன்றி வரும் அனாமதேயப் படைப்புகளை ஏற்பதற்கில்லை. வலைப்பக்க முகவரி தவிர, மற்றுமுள்ள விவரங்களை வெளியிட வேணடாம் எனில் அதனைக் குறிப்பிட வேண்டும்.
(9)   வெற்றிபெறுவோர் நேரில் வர இயலாத நிலையில், உரிய முன் அனுமதியுடன் தம் பிரதிநிதி ஒருவரை அனுப்பி, தொகை மற்றும் வெற்றிக் கேடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இவற்றை அஞ்சலில் அனுப்புதல் இயலாது.
(10) மற்ற பொது நடைமுறைகளில் போட்டி நடுவர்களின் முடிவே இறுதியாகும்.
-----------------------------------------------------------------
அன்பான வேண்டுகோள் ஐந்து -
(1)   போட்டி விவரங்கள் அடங்கிய இந்தப் பதிவை, நம் தமிழ் வலைநண்பர்கள் தமது வலைப்பக்கத்தில் எடுத்து மறுபதிவு இட்டு, இந்த இணைப்பையும் தந்து போட்டியில் அதிகபட்சப் பதிவர்கள் பங்கேற்க உதவ வேண்டுகிறோம்.
(2)   விழாவில் வெளியிடவுள்ள “தமிழ்வலைப்பதிவர் கையேடு-2015விவரத்தை உங்கள் முகநூல் நண்பர்களிடம் தெரிவித்து, அவர்களை வலைப்பக்கம் தொடங்கி எழுதுமாறு ஒரு வேண்டுகோள் விடுக்கவும் வேண்டுகிறோம்.
(3)   அப்புறமென்ன? போட்டியில் கலந்துகொண்டு கலக்குங்கள்... அப்படியே (11-10-2015 ஞாயிறு) புதுக்கோட்டை வர ஏற்பாடுகளையும் செய்துவிடுங்கள்!
(4) எல்லாவற்றுக்கும் விழாக்குழுவின் இந்த வலைப்பக்கம் தினமும் வாருங்கள்-  -http://bloggersmeet2015.blogspot.com
(5)உங்கள் மின்-நண்பர்களுக்கு தொகுப்பு மின்னஞ்சல் வழியாகவும், முகநூல்,சுட்டுரை, கூகுள்+ வழியாகவும் நமது விழாப் பற்றிய மேற்கண்ட வலைப்பக்கத்தை அன்பு கூர்ந்து இணைப்புத் தந்து அறிமுகப்படுத்துங்கள். இணையத் தமிழால் இணைவோம்
இன்னும் வாசிக்க... " உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!"

Thursday, September 10, 2015

புதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க!

உறவுகள் அனைவருக்கும் எனது வணக்கம். நம்ம வீட்டில் ஒரு பிறந்த நாள் விழா அல்லது ஏதேனும் ஒரு விழா செய்வதாக இருந்தாலே எத்தனை இடையூறுகளை சந்திக்க நேரிடும் அப்படியிருக்க  நம் வலையுலகில் ஒரு நிகழ்வை சிறப்பாக செய்து முடிப்பதென்பது அத்தனை எளிதான செயல் அல்ல. விழா நடத்த ஏற்பாடுகள் அனைவரையும் ஒருங்கிணைப்பது இது போன்ற செயல்களுக்கு ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் நேரமும் நேர்த்தியும் காண போவோம் வாங்க! வாங்க!

சித்தன்ன வாசல் ஓவியம்
பார்க்கப் போறேன்...
சிறப்பான பதிவர்களையும்
சந்திக்கப் போறேன்..
ம் அவ்வளவு தானா?
என்ன அவசரம் இன்னும் இருக்கே
அருங்காட்சியகம் இருக்கு அங்கே
அகழிகள் பலகொண்ட
மலைக்கோட்டையும் உண்டங்கே...
மயில்கள் நிறைந்த
விராலி மலை உண்டு..
இசைபாடும் தூண்கள் உண்டு..

தனி மனிதரின் அறிவுப்புதையல்
ஞானாலயா நூலகம்.
முந்தி வரும் உறவை நோக்கி
முன்னேற்பாடுகள் நடக்குது பாரு!
அதென்ன விழா ஏற்பாடு?
 அதென்ன அப்படி கேட்டுட்டிங்க?
புதுப்புதுப் சிந்தனைகள்
புதுமைகளைப் படைக்கும் முயற்சி
விழாக்குழுவினர் முயற்சியே
அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
1)    நிதி விளம்பரக் குழு
(2)    கவிதை-கண்காட்சிக் குழு
(3)    உணவுக் குழு
(4)    வலைப்பதிவர் கையேட்டுக் குழு
(5)    பங்கேற்போர் பட்டியல் தயாரிப்புக்குழு
(6)    விழா அன்று வருவோர் பதிவுக்குழு
(7)    நூல்-குறும்பட வெளியீட்டுக் குழு
(8)    மேடை நிர்வாகக் குழு
(9)    தங்குமிடம் வாகன உதவிக் குழு
(10)நேரலை ஒளிபரப்புக் குழு
(11)அழைப்பிதழ் தயாரித்து அனுப்பும் குழு
(12)நினைவுப்பரிசுக் குழு
(13)விருதுகள் கேடயம் தயாரிப்புக் குழு
(14)தொடர்பு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு
  குழுவே இத்தன இருந்தா ஒவ்வொரு குழுவிலும் எத்தனை! எத்தனை! பதிவர்களின் பங்கிருக்கும்
திருமிகு - 
1.     முத்துநிலவன் நா.
2.     கருப்பையா பொன்.
3.     கீதா மு.
4.     கஸ்தூரிரெங்கன் எஸ்.
5.     ஜெயலட்சுமி இரா.
6.     செல்வக்குமார் மீரா.
7.     பன்னீர்செல்வன் ராசி.
8.     வைகறை
9.     மைதிலி சோ.
10. பாண்டியன் அ.
11. செல்வா புதுகை
12. ஸ்ரீமலையப்பன்
13. சுந்தர் மகா.
14. மாலதி கா.
15. ரேவதி த.
16. நீலா  ஆர்.
17. ஸ்டாலின் சரவணன் வை.மா.
18. சுரேஷ்மான்யா
19. தூயன்
20. சிவாமேகலைவன்
21. செல்லத்துரை  மா.
22. இளங்கோ ச.
23. அண்டனூர் சுரா.
24. மீனாட்சி சுந்தரம் இ.
25. முனைவர் துரைக்குமரன் சு.
26. முனைவர் ரவி
27. முனைவர் மாதவன் சு.
28. கருணைச் செல்வி து.
29. திருப்பதி கு.ம.
30. குருநாதசுந்தரம் சி.
31. கருப்பையா எஸ்.ஏ.
32. மதியழகன்  சு.
33. ராமநாதன் ரமா.
34. ஈழபாரதி
35. சோலச்சி
36. பசீர்அலி எஸ்.டி.
37. முத்துப்பாண்டியன் ப.
38. அந்தோணி பி.
39. கார்த்தி ப.
40. நண்பாகார்த்தி
41. பாலாஜி
42. புனிதா
43. மல்லிகா மு.
44. சூர்யா சுரேஷ்
45. பாபு ராஜேந்திரன் சு.
46. வள்ளியப்பன் கோ.
47. பாலசுப்பிரமணிய பாரதி ச.
48. சுதந்திர ராஜன் ச.
49. புதுகைப் புதல்வன்
50. நாகநாதன் மா.
51. ஜலீல் முகமது மு.
   இவர்களின் பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே போகும் என்பதில் ஐயமில்லை. 

விழாக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுகளும். என்ன இவர்கள் அனைவரையும் ஒன்றாகத் திரட்டி விழாக்குழுவினர் புகைப்படம் எடுக்கத்தான் ஒரு நாள் ஆகும் போல...

சரி சரி சீக்கிரம் கிளம்புங்க நாமும் இவர்களைச் சந்திக்கப் போவோம்.அதற்கு முன்பு வருகைப்பதிவேட்டில் பதிந்துவிட்டீர்களா...?

மேலும் தகவல்களுக்கு இந்த வலைப்பக்கம் பாருங்கள்.
இன்னும் வாசிக்க... "புதுமைகளைக் காண புதுக்கோட்டை வாங்க!"

Tuesday, September 8, 2015

வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!


வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
(ஒன்றில் நான்கு)
பஃறொடை வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
செந்தேன் மலரே! செழுந்தமிழே! - சந்தமதில்
விந்தை புரியும் வியன்மொழியே! என்னுயிரே!
சிந்தை மணக்கின்ற தென்மொழியே! - எந்நாளும்!
தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

நேரிசை வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
செந்தேன் மலரே! செழுந்தமிழே! - சந்தமதில்
விந்தை புரியும் வியன்மொழியே! என்னுயிரே!
தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

சிந்தியல் நேரிசை வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
செந்தேன் மலரே! செழுந்தமிழே! - சந்தமதில்
 தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

 குறள் வெண்பா
வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!
 தந்துவப்பாய் பாக்கள் தழைத்து!

இலக்கணக் குறிப்பு!
பஃறொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வரவேண்டும்!
நேரிகை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை சிந்தியல் வெண்பா வரவேண்டும்!
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்கக்
குறள் வெண்பா வரவேண்டும்!
 மேலும் தகவலுக்கு எனது ஆசான் வலைப்பதிவில் காண்க.

படம் உதவிக்கு தோழி இளமதிக்கு நன்றி!
இன்னும் வாசிக்க... "வந்தென் மனக்கூட்டில் வாழும் எழில்மகளே!"

Wednesday, September 2, 2015

பொற்செய்தி என்பேன் புகழ்ந்து!அன்புடையீர்! அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம்!

26.09.2015 - 27.09.2015 ஆகிய இரண்டு நாள்கள் கம்பன் விழா நடைபெறவுள்ளது.
27.09.2015 காலை 11.00 மணிக்கு உலகத் தொல்காப்பிய மன்றம் திறக்கப்படவுள்ளது.

கம்பன் கழகத்தின் யாப்பிலக்கணப் பயிற்சிப் பட்டறையில் கற்றுயர்ந்து சிறப்புடைய கவிதைகளைக் படைத்து, செந்தமிழுக்குச் சீர்சேர்க்கும் தங்களுக்கு இவ்வாண்டுப் பிரான்சு கம்பன் விழாவில் பாவலர் பட்டம் அளித்துச் சிறப்பிக்கும் நற்செய்தியைத் தெரிவித்து மகிழ்கின்றோம் .
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர் கம்பன் கழகம் பிரான்சு.
                                ---------------------------------

பாவலர் பட்டமதைப் பாங்குடனே என்ஆசான்
காவியக் கம்பன் விழாவினில் - நாவினிக்க
நற்றமிழில் நல்கிடும் நற்பேரும் பெற்றேனே
பொற்செய்தி என்பேன் புகழ்ந்து!


பள்ளியில் பயிலும் பிள்ளையாய் நானும்
      பைந்தமிழ் மொழியினைக் கற்க!
துள்ளியே நாளும் தொடர்ந்திடச் செய்யச்
     சூட்சமம் கவியினில் வைத்தாய்!
அள்ளியே பருக அமுதெனப் பாக்கள்
       அருளிடும் அருங்கவிக் கடலே! 
உள்ளமே தங்கி உவகையில் பூத்தே
       உங்களைத் தொழுதிடும் நெஞ்சே!

அவைதனைக் கூட்டி அழகுடன் யாப்பை
        அன்புடன் பயிற்றிடும் ஆசான்!
கவிமணம் வீசிக் கலந்திட நாளும்
      கனிதமிழ்ப் பாடிடும் விந்தை!
செவிதனில் கேட்கும் செந்தமிழ் மொழியே
        தேனுடன் ஊறிடும் மொந்தை!
புவிதனில் புலவன் பாரதி தாசன்
        போலவே யாரினும் உண்டோ?

இன்று மின்னஞ்சல் மூலம் வந்த "பாவலர் பட்டம்" அழைப்பிதழைக் கண்டதும் மிகவும் மகிழ்வில் ஆழ்ந்தேன். அந்த மகிழ்வினை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

ஆசானுக்கு   என் மகிழ்வான வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இன்றைய இந்த மகிழ்வினை என் வளர்ச்சியில் பங்குடைய உங்களுடன் பகிர்ந்து கொள்வதை எண்ணி மகிழ்கிறேன். தொடர்ந்து தங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகிறேன்.

   நேற்றுவரைப் பிறை நிலவு,
   இன்று வளர் பிறையாய்!
   பௌர்ணமியாய் வளர்கவென,
   வாழ்துகின்ற சுடரொளி உங்கள்,
   பாதம் தொழுது வளர்கின்றேன்,
   பயணத்தைத் தொடர்கின்றேன்!

இன்னும் வாசிக்க... "பொற்செய்தி என்பேன் புகழ்ந்து!"

Tuesday, September 1, 2015

விண்மீன் கூட விழிநோக்கும்!

கண்ணே மணியே என்றேதான்
          காதல் மொழியில் கொஞ்சாமல்
                 கண்கள் காட்டும் நயனமதைக்
                       கடந்து செல்லும் கள்வனவன்!

வண்டாயத் தினமும் வந்தேதான்
           வண்ணக் கனவில் குடியேறி
                    வாவா என்றே அழைத்தென்னை
                               மடியில் மயங்கச் செய்திடுவான்!

உண்ண மறுக்கும் உணர்வளித்தே
          உடும்பாய் என்னைப் பிடித்திருப்பான்
                   உடலின் சுமையாய் உடைமாறும்
                              உயிரின் சுகமாய்க் கனவாடும்!

விண்மீன் கூட விழிநோக்கி
          மெல்ல மின்னிக் கதைகேட்கும்
                        மேகம் வந்து மெதுவாக
                                மேனி தழுவும் என்னென்பேன்?

 தவழ்ந்து வந்த வெண்ணிலவும்
               சாடை பேசி நின்றிருக்கும்!
                      சரிகைப் பட்டுச் சேலையிலே
                               சாய்ந்து றங்க இடங்கேட்கும்!

 அவையை நோக்கும் மக்களென
             அச்சம் கொண்ட விண்மீன்கள்
                       அசைய மறந்த மரக்கிளையில்
                                   ஆந்தை போன்றே விழித்திருக்கும்!

தவிக்கும் நெஞ்ச ஆசைகளை
           தாளில் எழுத முடிந்திடுமோ?
                   தத்தி நட ந்தே பழகுமிந்த
                           சாள ரத்துப் பைங்கிளியும்!

சுவையை எண்ணி மனமேங்கும்
            தூய தமிழின் கவியோங்கும்!
                      தொடரும் இனிமை நினைவெல்லாம்
                                சுழலும் பசுமைக் கொடியன்றோ?
    இன்னும் வாசிக்க... " விண்மீன் கூட விழிநோக்கும்!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி