Ads 468x60px

Tuesday, August 4, 2015

காலை நேரக் கவின்!


கிள்ளைச் சிறகடித்துக் கீழ்வானம் நோக்கியே
அள்ளிப் பருகும் அழகு.

மெல்ல எழும்பிவரும் மின்னும் கதிரொளி
சொல்லில் அடங்கா சுகம்.

கீற்றசைய ஊஞ்சலிடும் கிள்ளையுமே காட்சிதரும்
ஊற்றருவி ஓடும் உளத்து.


கூட்டின் வெளிக்கிளம்பிக் கூவும் பறவையினம்
பாட்டின் அமுதைப் பருகு.

பனிப்புல் வருடிடப் பாதம் சிலிர்க்கும்
நுனியில் மகுட நுரை.

மொட்டிதழ் வான்நோக்கும் மோகன நாட்டியம்
தொட்டணைத்து ஆடும் சுகம்.

சூரியனைக் கட்டத் துணிந்தோடும் மேகங்கள்
காரிருள் போர்த்தும் கவின்.

சில்லெனத் தென்றலாய்த் தீண்டிடும் காலையில்
புல்லிலும் பூக்கும் பொலிவு.

வண்டு வளைந்தோடி வாச மலர்மேவக்
கண்டு மனந்தாவும் காண்.

கீழ்வான் கதிர்நோக்கிக் கீற்றும் அசைந்தாட
ஆழ்ந்த உறக்கம் அகற்று.32 comments:

 1. அன்புத் தோழியே!

  கொத்துக் குறளமுதம் கோர்த்தே கொடுத்தனை!
  முத்துகளாய்க் காப்பேன் முடிந்து!

  அத்தனையும் மிக அருமை!

  வலைச்சரத்தில் ஐயா உங்கள் பெருமை கூறக் கண்டேன்!
  உளமார்ந்த வாழ்த்துக்கள் என் தோழியே!

  த ம 1

  ReplyDelete
  Replies
  1. வருக! வருக! அன்புத்தோழியே .
   முத்ததும் பேசுமோ முத்தமிழில் உன்னைபோல்
   பித்தாக்கும் உன்கவியின் பேச்சு.
   முத்துக்களாய்க் காப்பேன் முடிந்து! இதைவிட வேறென்ன வேண்டும் எனக்கு அகமகிழ்ந்தேன் தோழி.

   அனைத்து மாணவர்களையும் ஐயா அழகுடன் பாடி அறிமுகம் செய்ததை கண்டேன் தோழி. தகவலுக்கும் நன்றிங்க தோழி. ஐயாவிற்கு எனது மனமார்ந்த நன்றியும்.

   Delete
 2. அருமை! அருமை! கவிமழையில் நனைந்தேன்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 3. படப் பாடலைத் தொடர்ந்து ,சினிமா படப் பாடலுக்கும் வாய்ப்பைத் தேடி அசத்த வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் இல்லங்க சும்மா கிறுக்குவேன் அவ்வளவே.
   நன்றிங்க.

   Delete
 4. படப் பாடலைத் தொடர்ந்து ,சினிமா படப் பாடலுக்கும் வாய்ப்பைத் தேடி அசத்த வாழ்த்துகள்!

  ReplyDelete
 5. தென்றல் கவிகளெல்லாம் நீதீண்ட சொட்டுதே
  தேனாய்! உருகுதுளம் கண்டு !

  பத்துக் குறளும் பசிதீர்க்கும் நல்விருந்து
  முத்துக் குவியல்தான் போ!

  அருமை அருமை தோழி! அசந்து தான் நிற்கின்றேன் நின் கவியழகில் மயங்கி. நன்றி நன்றி ! வாழத்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. இனியென்ன வேண்டும் இனியாவின் வாழ்த்தும்
   கனியாய் இனித்தது காண்.
   வருக! தோழி தங்கள் வருகையும் வெண்பா வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். வெண்பாவிலேயே விளையாட ஆரம்பித்துவிட்டீர்கள் போல.. வாழ்த்துகள்.

   Delete
 6. குறள் வெண்பாக்கள் அனைத்தும் அருமை ரசித்ஹ்டுப்படித்தேன்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 7. நல்ல வர்ணனை, ரசனை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 8. Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 9. வணக்கம் கவிஞரே!

  கிள்ளைச் சிறகடித்துக் கீழ்வானம் நோக்கியே
  அள்ளிப் பருகும் அழகொருபால் - புள்ளினொடு
  மெல்ல எழும்பிவரும் மின்னும் கதிரொளி
  சொல்லில் அடங்கா சுகமளிக்க - முல்லைமலர்க்
  கீற்றசைய ஊஞ்சலிடும் கிள்ளையுமே காட்சிதரும்
  ஊற்றருவி ஓடும் உளத்தொருங்கே- காற்றெனவே
  கூட்டின் வெளிக்கிளம்பிக் கூவும் பறவையினம்
  பாட்டின் அமுதைப் பருகுவனோ - சூட்டும்.
  பனிப்புல் வருடிடப் பாதம் சிலிர்க்கும்
  நுனியில் மகுட நுரையும் - தனித்தவொரு
  மொட்டிதழ் வான்நோக்கும் மோகன நாட்டியம்
  தொட்டணைத்து ஆடும் சுகம்நினைய - வட்டமிட்டுச்
  சூரியனைக் கட்டத் துணிந்தோடும் மேகங்கள்
  காரிருள் போர்த்தும் கவின்காணத் - தூரிகையில்
  சில்லெனத் தென்றலாய்த் தீண்டிடும் காலையில்
  புல்லிலும் பூக்கும் பொலிவுவருந்திக் - கல்கரைய
  வண்டு வளைந்தோடி வாச மலர்மேவக்
  கண்டு மனந்தாவும் காண்‘அழகு- மண்விளங்கக்
  கீழ்வான் கதிர்நோக்கிக் கீற்றும் அசைந்தாட
  ஆழ்ந்த உறக்கம் அகற்றென்னும் – வாழ்வாங்கு
  வாழும் கவிமுடையும் வண்ணச் சிறகடிப்பில்
  சூழுமனத் தென்றல் சுகம்!

  கடன் தீர்த்தேன்.


  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. அட! என்னுடைய குறள் வெண்பாக்களா?
   என்று வியந்து போனேன்..
   ஆமாம் என்ன கடன் தீர்த்தீர்கள் ஆசிரியரே?
   ஏதும் விளங்கவில்லையே?

   Delete
 10. சூரியனைக் கட்டத் துணிந்தோடும் மேகங்கள்
  காரிருள் போர்த்தும் கவின்.
  அருமை சகோ
  தமிழ் மணம் 7

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 11. அதிகாலைப்பொழுதை அருமையாக கவியில் வடித்தீர்கள் ரசித்தேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 12. இயற்கையழகை இன்தமிழில் எடுத்துரைத்து மனம் வசீகரிக்கும் வெண்பாக்கள்... அனைத்தும் அழகு. பாராட்டுகள் தென்றல்.

  ReplyDelete
  Replies
  1. வருக! தோழி. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 13. வணக்கம்,
  முதலிலே படித்தேன், தங்கள் குறள்வெண்பா கவியில் மதி மயங்கி கருத்திடாமல் சென்றேன் போலும்,
  அருமையாக இருக்கு தோழி,,
  வாழ்த்துக்கள், நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் மறுமொழி எனை மிகவும் உற்சாப்படுத்தியது தோழி. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.

   Delete
 14. அசைந்தாடும் செடி கொடியா பறந்தோடும் பறவைகளா வீசி வரும் தென்றலா கற்பணை சுதந்திரமாய் அ.ருவியாய் கொட்டுகிறதே கவியரசிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 15. கவிதை அருமை கவியரசிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 16. அனைத்தும் அருமை! என்னை மிகவும் கவர்ந்தவை:
  கூட்டின் வெளிக்கிளம்பிக் கூவும் பறவையினம்
  பாட்டின் அமுதைப் பருகு.
  மொட்டிதழ் வான்நோக்கும் மோகன நாட்டியம்
  தொட்டணைத்து ஆடும் சுகம்.
  பாராட்டுக்கள் சசி!

  ReplyDelete
  Replies
  1. வருக! தோழி! தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 17. தமிழமுதம் இனிய சுவை தோழி!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி