Ads 468x60px

Thursday, August 13, 2015

செந்தேன்.... முத்து!

                                                     இளமதிக்கு வெண்பாக் கொத்து!

எங்கள் வணக்கத்திற்குரிய ஆசான் திரு.கி.பாரதிதாசன் ஐயா இலக்கண விளக்கத்துடன் எழுதி வெளியிட்டிருந்த வெண்பாக் கொத்து எனும் வகையை என் தோழி இளமதியும் ஆசிரியரைப் பின்பற்றி எழுதியிருந்தார். ஐயாவின் மாணவர்கள் ஆகிய நாங்கள்  ஆர்வமுடன் கற்க அவர் தரும் ஊக்கமும் உற்சாகமுமே காரணம் ஐயாவிற்கு எனது வணக்கத்தையும் மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொண்டு தோழி இளமதிக்கு வெண்பாக் கொத்தை எனது அன்புப்பரிசாகத் தருகிறேன்.


குறள் வெண்பா

செந்தேன் கவிகண்டு தென்றல் மகிழ்ந்தாடி
முந்தும் சுவைத்தமிழ் முத்து!

நேரிசைச் சிந்தியல் வெண்பா

செந்தேன் மலர்ச்செண்டு தேவி உனக்கெடுத்து
வந்திடவோ? வாழ்த்தும் மனத்தோடே - சந்தமுடன்

முந்திவரும் முத்தமிழ் முத்து!

இன்னிசைச் சிந்தியல் வெண்பா
செந்தேன்  இனிக்கவில்லை தேவியுன்  பாட்டைப்போல்
சிந்தை நிறைந்திடும் தீஞ்சுவையை நீதருக
முந்தியில் மூடிவைத்த  முத்து!


நேரிசை வெண்பா
செந்தேன் மலரும் தினமேங்கும் நீபாட 
வந்துந்தம் கூந்தலில் வாழ்ந்திடும்- இந்தநிலாச்
சிந்தும் மொழியழகைச் சேர்த்தணைத்துச் சீராட்டும்
முந்தைத் தொடர்பிருக்கும் முத்து!


இன்னிசை வெண்பா
செந்தேன் பொழிந்து திசையெங்கும் பாய்ந்திடும் 
உந்தம் கவிமழையில் உள்ளம் உருகிடும்
மந்தநிலை போக்கி வளமதும் நல்கிடும்
முந்தும் மகிழ்வெனும் முத்து!


பஃறொடை வெண்பா

செந்தேன் மழையாகிச் சீராட்டும் சொற்களையே
பைந்தமிழ்ப் பாத்தொடுத்துப்  பாடிடவோ - சந்தங்கள்
கள்ளாகிப் போதைதந்து கற்பனையில் ஆட்டமிடும்
உள்ளாடும் சேதிகளை ஓதிடவே - தள்ளாடும்
வண்டாகி மாலையினை வட்டமிடும் வாஞ்சையுடன்

உண்டாகும் ஆசைதனை ஓவியமாய் - ஒண்டமிழில்
நானெழுதி ஓடையதில் நாட்டியமே ஆடவிட்டு
வானோடும் மேகமென வையத்தில் - ஊனெடுத்த

நற்பயனை நானடைய நானும் கவிபாடிக்
கற்றோரின்  முன்வைத்தே காத்திருக்கச் - சொற்போரும்
எந்தம் மனத்திலும்  ஏனோ? இளமதியே

முந்தி முகங்காட்டும் முத்து!
 

இலக்கண விளக்கம்
வெண்பா கொத்தெனும் இப்பாட்டில் குறள் வெண்பா, நேரிசைச் சிந்தியல் வெண்பா, இன்னிசைச் சிந்தியல் வெண்பா, நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, பஃறொடை வெண்பா இடம்பெறவேண்டும்.
அனைத்து வெண்பாக்களிலும் முதல் சீர் ஒன்றாக வரவேண்டும். ஈற்றுச்சீரும் ஒன்றாக வரவேண்டும்.

   

40 comments:

 1. வணக்கம் கவிஞரே..!

  எங்கெங்கு காணினும் சக்தியடா என்பதுபோல் எங்கெங்கும் மரபின் தேர்கள் விதவிதமாய்ப் பவனி வர வியப்புற்று நிற்கிறேன்.

  இதோ என் நடைவண்டி.

  1)
  முத்தின் முறுவலித யத்தின் முனையெழுதும்
  பித்தின் தமிழ்பாட லே

  2)

  முத்தின் மழைக்கருவின் மோன உயிர்த்தவத்தின்
  வித்தின் விளையாடல் வேர்கொள்ள – எத்திக்கும்
  தத்தித் தவழ்ந்தாட லே!

  3)

  முத்தின் விளைவிடத்தில் மூங்கை வெறுஞ்சிப்பி
  சொத்தற் றிருப்பதுபோல் சோர்கின்றேன் உம்வெண்பா
  கொத்தின் கவியேட்டி லே!

  4)
  முத்தின் குளிப்பிற்கு மூச்சடக்கு மந்நிலைபோல்
  கத்தும் கடற்சொற்கள் கண்டெடுத்து – நித்தம்
  இணைத்துக் கட்டுகின்ற இன்றமிழ்ப் பாடல்
  பிணைக்கும் மனத்தேட லே!

  5)

  முத்தின் மதுரையுடை முச்சங்கத் தமிழாலே
  எத்திக்கு மேங்கும் எழிற்கொள் கவிபடைத்த
  ஆழப் புலமைவளம் ஆளப் படுமுங்கள்
  வேழப் பொருள்கூட லே!

  6)

  முத்தின் இருப்புள்ள முல்லை நகைதோன்றின்
  பத்தில் தளைக்கின்ற பாக்கூட்டம் – வித்தையறி
  யாதவனின் கண்ணின் வியப்பூட்டும் அற்புதமாய்ச்
  சாதனைவெண் பாக்கொத்துச் சாத்திரங்கள் – மாதவத்தில்
  வண்ணத் தமிழ்ப்பெண்ணாள் வாக்கில் உறைகின்ற
  எண்தேர் உருளும் எழிற்பாதை – கண்வண்டு
  பச்சைப் பசுஞ்சோலை பாபூத்த நந்தவனம்
  இச்சித் துறைய இருகவிதை – உச்சிபட
  இன்னும் எழுதுங்கள் இன்புற்று நிற்பவனாய்ச்
  சொன்னேன் இதுவேண்ட லே!


  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. முந்திவரும் தேரெனவே முக்கனியின் சாறோடும்
   வந்துதித்த பாமாலை வாழ்த்திதுவே எந்தனது
   சிந்தை செழித்தோங்கச் சீராட்டி மாண்பளிக்கும்
   விந்தை மொழிவளத்தை வேரூன்றச் செய்கின்றீர்
   என்னாசான் இன்புற்று ஏற்றவுயிர்த் தோழர்க்கு
   நன்றியதைக் கூறநான் நற்சொற்கள் தேடுகிறேன்
   நல்லாய்வுப் பெட்டகத்தை நாடறியத் தந்திடுமுன்
   சொல்லாட்சி கண்டுளமே சொக்கும் தினம்தேடி
   வந்தே வலைப்பூவை வண்டெனவே சுற்றிடுவோம்
   தந்திடுக தாய்மொழியை தாங்கிடுவோம் நெஞ்சினிலே
   வென்று களிப்புடனே மீட்டு!.
   வணக்கம் ஆசிரியரே!

   Delete
  2. துரை அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
  3. நான்காம் வெண்பாவின்,

   இணைத்துக் கட்டுகின்ற என்னும் இடத்தில் தளைப் பிழை உள்ளது.

   அதனை,

   “ இணைவித்துக் கட்டுகின்ற “ எனத் திருத்திப்படிக்க வேண்டுகிறேன்.

   பிழைக்கு வருந்துகிறேன்.

   நன்றி.

   Delete


  4. என்னாசான் இன்பமுடன் ஏற்றவுயிர்த் தோழர்க்கு என்று வாசிக்க வேண்டுகிறேன்.

   Delete
 2. ““““““““““““““எந்தம் உள்ளத்தில் ஏனோ? ““““““““““““““““““““““““

  ஏனோ?

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 3. வெண்பாக்கொத்து இளமதிக்கு மட்டுமல்ல, எங்களுக்கும். அருமை.

  ReplyDelete
  Replies
  1. வெண்பா கொத்து அனைவருக்குமே... நன்றிங்க ஐயா.

   Delete
 4. வணக்கம் அன்புத் தோழியே!

  முந்தி முகங்காட்டும் முன்வந்த மின்மடல்!
  சிந்தை கிறங்கிச் செயலிழந்தேன்! - அந்தமிலாச்
  செந்தமிழின் செல்லத் திருமகளே! என்றுமே
  எந்தம் உளத்தில் இருக்கிறாய்! தென்றலாய்த்
  தந்திடும் சந்தப்பா கொள்ளையிடும் உள்ளத்தை!
  விந்தை புரிந்துன் விரல்கள் கவிபாட
  வந்து கிடக்குதே சீர்கள் மடியினில்!
  பந்தமாய்ப் பாக்களைப் பந்தாடும் உன்றனுக்குப்
  பைந்தமிழ்த் தாயவள் பக்கத் துணையாவாள்!
  இந்தப் பிறப்பெனக்குப் போதாது நன்றிசொல்ல!
  வந்தித்தேன்! தோழி மகிழ்ந்து!

  உங்கள் செந்தேன் முத்து அத்தனை இனிமையுடன் இருக்கிறது!
  என் படைப்புகளைப் பாடினீர்களே!..
  உங்கள் பா!..படையலிங்கே அற்புதம் தோழி!

  சாதாரணமாகவே பாடியிருக்கலாம் அத்தனை
  திறமையும் சிறப்பும் உங்களிடத்தில் இருக்கின்றனவே!
  இதற்குள் இவள் இளமதியையும் சேர்த்திருக்கவே தேவையில்லை!

  தங்கள் அன்புகண்டு செயலிழந்து நெகிழ்ந்திட்டேன் தோழி!
  வைத்தியரிடம் போய் இப்போதுதான் வீடு வந்தேன். வந்ததும்
  உங்கள் அழைப்பு மின்மடல் என்னைத் தூக்கிவாரிப் போட,
  பதிவைக் கண்டதும் இதனை எழுதுகிறேன்!

  உங்களின் அன்பிற்குக் கோடி முறை நன்றி கூறிடினும் போதது!
  உளமார வாழ்த்துகிறேன் தோழி!

  ReplyDelete
  Replies
  1. பாட்டுடைத்தலைவிக்கு வந்தனம்!
   பின்னல் பிடித்திழுத்துப் பின்னே மறைந்தேநீ
   என்னை வியக்கவைக்கும் ஏந்திழையே -உன்கரம்
   பற்றி வலைப்பதிவில் பள்ளிக்கும் செல்வதினால்
   கற்றலில் கண்ட கவின்.

   அதென்ன அப்படிசொல்லிவிட்டீர்கள். ஐயா முகநூலில் பதிந்த சில தினங்களிலேயே எழுத முயற்சி செய்து விட்டுவிட்டேன். தங்கள் வெண்பாக் கொத்தை பார்த்ததும் எனக்கும் எழுத ஆவல் வந்தது ஆதலால் தங்களுக்கே எழுதிவிட்டேன்.

   நன்றிங்க தோழி.

   Delete
 5. ரசித்தேன் சகோ அருமை
  தமிழ் மணம் 3

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ! ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.

   Delete
 6. அசத்துகின்றீர்கள்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அப்படியெல்லாம் ஒன்றுமில்லைங்க. நன்றிங்க.

   Delete
 7. வெண்பா கொத்து
  அருமை
  இனிமை
  நன்றி சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 8. இனிய திராட்சைக் கொத்து

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 9. வணக்கம்
  சகோதரி
  நற்றமிழ்கொண்டு முத்தமிழ் சொன்னாய்
  சொற்றமில் சொல்லி செந்தமிழ் தந்தாய்.
  உன் தமிழ் கண்டு உள்ளமே அள்ளிட
  உத்தம செற்பதம் உள்ளங்கள் கனிந்தன.

  அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.த.ம
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ரசித்து கருத்திட்டமைக்கு நன்றிங்க சகோ.

   Delete
 10. செந்தேன் ...படித்து அசந்தேன் :)

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தெனக்கு தேன்...தேன்..
   நன்றிங்க.

   Delete
 11. அன்புத் தோழியே அசத்தல் தான் போ!

  தென்றலின் பாக்கள் தரும்தேன் சுவையேநீ
  வெண்நிலவு என்மனவா னில் !

  அருமை அருமை !

  வியந்து நிற்கிறேன் வார்த்தை இன்றி என்ன சொல்ல பொங்கி பொலியட்டும் உம் புகழ் ! என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழி !

  ReplyDelete
  Replies
  1. இனியாவின் வாழ்த்தும் இனித்திடும் தேனே
   கனியாவும் சேர்ந்ததுவே காண்.

   உங்களோடு கரம்பற்றி நடக்கும் சகதோழி நான் ஆதலால் வியக்கும்படியாக ஒன்றும் இல்லை இங்கே. நன்றிப்பா.

   Delete
  2. தாங்களும் வெண்பாக்கொத்து ஐயாவின் வலையில் எழுதியிருந்ததைப் பார்த்தேனே...கலக்குங்க! வாழ்த்துகள்.

   Delete
 12. அன்புடையீர்,

  தங்களது தளம் வலைச்சரத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வருகைதந்து சிறப்பிக்கவும்.

  http://blogintamil.blogspot.in/2015/08/blog-post_14.html

  அன்புடன்,
  எஸ்.பி.செந்தில்குமார்

  ReplyDelete
  Replies
  1. தென்றலின் அறிமுகத்திற்கும் தகவல் தந்தமைக்கும் நன்றிங்க சகோ.

   Delete
 13. வணக்கம் சகோ,
  தேன் பூங்கொத்து அருமை,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க தோழி.

   Delete
 14. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 15. முன்பு புதுக்கவிதைகளில் இயல்பாக புதுமையான கருத்துக்களைச் சொன்னீர்கள். இன்று மரபுக் கவிதைகளில் கட்டுண்டு பழமை மாறா புதுக் கருத்துக்கள் தருகின்றீர். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மரபில் தான் எத்தனை! எத்தனை! புதிய கருத்துக்களை நம் முன்னோர்கள் சொல்லியிருக்காங்க அதையும் கற்போமே..
   தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க.

   Delete
 16. Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 17. அம்மாடீ... மலைத்துப் போயிருக்கிறேன். என்ன அழகாய் பா புனைகிறீர்கள். பாராட்டுகள் சசி.

  ReplyDelete
  Replies
  1. ஹஹ மலைக்கும் படியாக ஒன்றுமில்லையே தோழி.
   தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க தோழி.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி