Ads 468x60px

Friday, July 10, 2015

ஓசையிடும் பூவை உயிர்!


கொஞ்சி யழைத்து கொடிமுல்லைக் கொய்தேதான்!
அஞ்சி நடந்தான் அருகினில்! -நெஞ்சத்தின்
ஆசை    இயம்பிடவே ஏன்தயக்கம் என்றேதான்
 ஓசையிடும்  பூவை  உயிர்!

அசைந்தாடும்  காற்றே அவனிடத்துச் சென்றே
இசைவாய் நிலையை இயம்பு - பிசையும்
உணர்வுகளைச் சென்றங்கே ஓதாமல் நீயும்
மணப்பதும் வீணே மனத்து!

மலரிடத்தும் பேசிடுவான்! மானும் விரட்ட!
உலவிடும் தென்றல் உறவு! - மலங்க
விழிக்குமெனை வன்விழியால் வீழ்த்தும் அழகு
மொழியில்  அடங்கா முகம்!

மலரதும் கூறுமோ மான்விழியால் தூதை!
புலர்ந்திடும் காலைப் பொழுதில்  -நலமதை
நாடியே வந்திடும் நங்கையின் கூக்குரல்
வாடிடும்  நெஞ்சம்  வலித்து!

அஞ்சாமல் நோக்கும் அவனழகு கண்டுதினம்
கெஞ்சாமல் கெஞ்சிடும்  கோவையிதழ் - தஞ்சம்
இனியவனே என்றுயிர் ஏங்கும்! சுவைத்தேன்
கனியவனே சொல்வாய் கவி!

33 comments:

 1. பட்டறுத்துப் போகும் படிப்போர்கள் நெஞ்சத்தைத்
  தொட்டெழுப்பும் வெண்பா துடிதுடிக்க - சுட்டெரித்து
  மோதும் நினைவெடுத்து முத்தமிடும் கற்பனைகள்
  ஆதலினால் காதல் அழகு.

  தொடருங்கள் கவிஞரே!

  ReplyDelete
  Replies
  1. ஆதலினால் காதல் சுகம் என்பதற்கு பதில் வெண்பா இப்படி தந்துவிட்டீர்கள் போல... அருமை ஆசிரியரே.
   நன்றியும்.

   Delete
 2. “நெஞ்சத்து ஆசை “ என்பது ‘குற்றுயிர்க்கு உற்ற குறை’ என்போர் மரபறிஞர்.

  பார்க்க வேண்டுகிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மாற்றி விட்டேன் நன்றி ஆசிரியரே.

   Delete
 3. அருமை சகோதரி...

  இன்றேனும் அவன் எனை நினைவானோ...?
  இளமையைக் காக்க துணை வருவானோ...?
  நன்று தோழி நீ தூது செல்வாயோ...?
  நங்கையின் துயர சேதி சொல்வாயோ...?

  என்னுயிர் தோழி கேளொரு சேதி...
  இது தானோ உங்கள் மன்னவன் நீதி...?
  என்னுயிர் தோழி கேளொரு சேதி...
  இது தானோ உங்கள் மன்னவன் நீதி...?

  ReplyDelete
  Replies
  1. அசத்தலான பாடல் வரிகளை எப்படித்தான் உடனுக்குடன் கண்டு பிடிப்பீர்களோ தெரியவில்லை சகோ.

   Delete
 4. இனிமையான வெண்பாக்கள் அனைத்து ஈற்றடிகளும் அட்டகாசம்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 5. Replies
  1. வருக வருக சகோ. நன்றியும்.

   Delete
 6. அருமையான வெண்பாக்கள்.

  ReplyDelete
 7. இனியவன் ஆயின் அவன் இயம்புவானா தோழி
  கள்ளன் அவன் காதல் யார் அறிவார்
  நெஞ்சம் வலித்து வாடியாலும் வஞ்சன்
  அவன் வருவானா நம் வாயில்
  சொல் தோழி,,,,,,,,,
  அருமையான வரிகளம்மா,
  வாழ்த்துக்கள்,
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. (கற்பனை)தலைவிக்கு தகுந்த தோழியின் உரைபோலும் தங்கள் கருத்து.ஹஹ
   நன்றிங்க தோழி.

   Delete
 8. This comment has been removed by the author.

  ReplyDelete
 9. அருமையான காதல் வெண்பாக்கள் தொடர வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. எங்கும் இனியாவின் வெண்பா இருக்க..எனக்கு மட்டும் இல்லையே அது ஏனாம் ?

   Delete
  2. காதல் உணர்வுகளைக் கச்சிதமாய்ச் சொன்னீரே
   போதும் எனச்சொல்லப் போவதில்லை - சோதனை
   காலத்தும் உங்கள் கவிதையின் கோலங்கள்
   போலுண்டோ சொன்னேன் புரிந்து!

   வெண்பாவோடு வர தாமதமாகுவதால் தான் அப்படி இட்டேன் ஒவ்வொரு தடவையும் பிந்தி வந்தால் கோபித்து விடுவீர்கள் அல்லவா அதான். இப்போ மகிழ்ச்சி தானே !
   ஆமா எங்க என் பக்கம் காணலையே என்னாச்சு .

   Delete
  3. இனிக்கின்ற வெண்பா இதயம் நிறைக்க
   மனமது ஏற்கும் மகிழ்ந்து.
   இனியாவின் வருகை இனி வெண்பாவோடு தான் இருக்க வேண்டும்... ஹஹ நன்றிப்பா.

   Delete
 10. அழகான எதிர்பார்ப்பு இனிமையான வரிகளில். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்க நான் தானே நன்றி கூற வேண்டும் ஐயா.

   Delete
 11. சந்தக் கவி அருமை! வாழ்த்துக்கள்! உங்களுடைய இடுகை ஒன்றினை இன்றைய வலைச்சரத்தில் அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வலைச்சர அறிமுகம் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 12. நன்றாம் வெண்பா நவின்றாயே பொன்மகளே! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 13. Replies
  1. வாங்க சகோ! நன்றியும்.

   Delete
 14. மிக மிக அற்புதம்
  இருப்பினும் இடையிடையே
  வசன கவிதையும் எழுதவும்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி