Ads 468x60px

Monday, July 27, 2015

சின்னவிழிப் பார்த்ததுமே சிறையெடுத்த தென்ன?

அல்லிமலர்க் கொடியசைந்து அருகில்வரக் கண்டு
     ஆசையுடன் மனந்தாவி அல்லலுறும் நின்று!
தள்ளிவிட எண்ணமின்றித் தவிக்குமிரு கைகள்
    தாவியதைப் பறித்திடவே துடித்திடுமே நெஞ்சும்!
கள்ளவிழிப் பார்வையினால் களவெடுக்கத் துள்ளும்!
    கண்டவுடன் காதலினால் ஊனுறக்கம் தள்ளும்!
அள்ளிமனக் கோவிலிலே ஆவல்மிகக் கொஞ்சும்
 
    இல்லையெனச் சொல்லுமந்த இடைகாணக் கெஞ்சும்!

சின்னவிழிப் பார்த்ததுமே சிறையெடுத்த தென்ன?

     சேதிசொல்ல மறந்துவிட்டுத் திசைநோக்கும் கண்ணே!
மின்னலென  தீப்பொறியாய்க் காதலீந்த பெண்ணும்
     மேகமென ஓட்டமிட வீழ்த்துதடி நோயும்

 என்றுமுனை ஏந்திடவே  ஏங்குதடி  உள்ளம்!
     எழிலரசி உன்முகமே மதுநிறைந்த கிண்ணம்!
என்னிலுனைத் தேக்கிடவே இனிக்குதடி பொழுதும்
    இந்நிலையை எழுதிடவே எங்குமிலை மொழியும்!
இன்னும் வாசிக்க... "சின்னவிழிப் பார்த்ததுமே சிறையெடுத்த தென்ன?"

Thursday, July 23, 2015

எது நலம்? எது சுயநலம்?


தன் சுயநலத்திற்காக
எதையும் அழிக்கத்
துணிந்தவர்கள் நாம்.
காடழித்து வீடமைப்போம்
கூட்டுக் குடித்தனமழித்து
தனிக்குடித்தனம் என்போம்!

தன் வீடு சுத்தமென்று
சாலையை அசுத்தப்படுத்தத்
தயங்க மாட்டோம்.

 வள்ளுவக் குறளென்போம்
வாய்மையே மூச்சென்போம்
எனினும்
எல்லோரும் செய்வதையே
நானும் செய்கிறேன்
எனச் சமாதானமாவோம்.

 அடுத்த வீட்டில்
திருட்டென்றால்
நமக்கென்ன...?

அடுத்த வீட்டில்
அடிதடி என்றால்
நமக்கென்ன...?

யாருக்குப் பசியென்றால்
நமக்கென்ன..?

இதோ இன்றைய
என் குடும்பம்
என் தேவை முடிந்தது
புறப்படும்..
நாளைய சேமிப்பிற்க்காய்க்
கடிவாளமிட்ட பயணங்கள்.

இன்னும் வாசிக்க... "எது நலம்? எது சுயநலம்?"

Wednesday, July 22, 2015

குறள் வெண்பா!


துள்ளிக் குதித்தோடு தூரம் இலக்கில்லை
அள்ளி அணிவாய் அறிவு.

ஒழுக்க நெறிகளை ஓதிப் பழகு
பழுக்கும் பழமாய்ப்  பயன்.


சோம்பல் துணையிருக்கச் சொர்க்கம் தெரிவதில்லை
சாம்பல் உரமாகும் சான்று!
     
அஞ்சி நடப்பதினால் ஆற்றல் பெருகாது
பிஞ்சில் பழுத்தல் பிணி!

எண்ணம் சிறந்திருக்க எல்லாமே கைகூடும்
கண்காணும் காட்சி கவின்.


துணிவைத் துணைகொண்டால் துன்பம் நெருங்கா!
பணிவில் உயர்ந்திடப் பார்.

பகிர்ந்துண்டு வாழப் பழகுதலே நன்று

அகமதில் தூய்மை அழகு.
கொண்டாட ஆளின்றிக் கோடி இருந்தாலும்
உண்டோ பயனும் உனக்கு?

பகையென்றே எண்ணாதே பாசத்தைக் காட்டு!
தகையுடன் நட்பைத்தா லாட்டு!.

கூடியே கெட்டவர் கோடியிலும் உண்டோசொல்

நாடியே நட்பை நவில்.
இன்னும் வாசிக்க... "குறள் வெண்பா!"

Friday, July 10, 2015

ஓசையிடும் பூவை உயிர்!


கொஞ்சி யழைத்து கொடிமுல்லைக் கொய்தேதான்!
அஞ்சி நடந்தான் அருகினில்! -நெஞ்சத்தின்
ஆசை    இயம்பிடவே ஏன்தயக்கம் என்றேதான்
 ஓசையிடும்  பூவை  உயிர்!

அசைந்தாடும்  காற்றே அவனிடத்துச் சென்றே
இசைவாய் நிலையை இயம்பு - பிசையும்
உணர்வுகளைச் சென்றங்கே ஓதாமல் நீயும்
மணப்பதும் வீணே மனத்து!

மலரிடத்தும் பேசிடுவான்! மானும் விரட்ட!
உலவிடும் தென்றல் உறவு! - மலங்க
விழிக்குமெனை வன்விழியால் வீழ்த்தும் அழகு
மொழியில்  அடங்கா முகம்!

மலரதும் கூறுமோ மான்விழியால் தூதை!
புலர்ந்திடும் காலைப் பொழுதில்  -நலமதை
நாடியே வந்திடும் நங்கையின் கூக்குரல்
வாடிடும்  நெஞ்சம்  வலித்து!

அஞ்சாமல் நோக்கும் அவனழகு கண்டுதினம்
கெஞ்சாமல் கெஞ்சிடும்  கோவையிதழ் - தஞ்சம்
இனியவனே என்றுயிர் ஏங்கும்! சுவைத்தேன்
கனியவனே சொல்வாய் கவி!
இன்னும் வாசிக்க... " ஓசையிடும் பூவை உயிர்!"

Tuesday, July 7, 2015

தேடிடுதே நெஞ்சும் உன்னை!சிட்டாட்டம் பறந்து வந்து
     சிக்கவைச்சான் கண்ணுக் குள்ள!
பொட்டெடுத்து வைக்கும் போதே
      பொதச்சிபுட்டான்  என்ன மெல்ல!
மெட்டெடுத்துப் பாடி வந்தே
     மெய்சிலிர்க்க வச்சான் மல்லி!
கட்டறுந்த காளை போலக்
       கதைத்திடுவான் நெஞ்சுக் குள்ளே.

பார்த்திருக்கும் போதே வந்து
       பதித்திடுவான் முத்தம் ஒன்னு!
கார்மேக ஓட்டம் கொண்டு
     கடந்திடுவான் என்னை இங்கு!
வார்த்தையில் வடம் பிடிச்சி
     மனவாசல் தேர் இழுத்தான்!
கூர்விழியால் தாக்கி என்னை
      கூப்பாடும் போட வச்சான்!

போனவழி பார்க்க விட்டுப்
      பூத்திருக்க  வச்சான் என்னை!
தேனெவே பேச்சி னிக்கத்
      தேடிடுதே நெஞ்சும் உன்னை!
கானகத்துக் காத்தா வந்து
   கலந்துபுட்டான் நெஞ்சுக் குள்ள!
ஊனுருகப்  பார்த்த பார்வை
    உயிர்உருகி ஓடும் மச்சான்!
படம் உதவி இணையம்
இன்னும் வாசிக்க... " தேடிடுதே நெஞ்சும் உன்னை! "

Friday, July 3, 2015

அருங்கவிக் கடலே! பொன்விழா நிறைவு !


உயிரெனத் தமிழை உளந்தனில் போற்றி
    ஒளர்ந்திடும் அருங்கவிக் கடலே!
இயம்பிடும் பாக்கள் இன்னிசை அளித்தே
    ஈந்திடும் ஈடிலா அமுதே!
அயலவர் வணங்கும் அருந்தமிழ்ப் புலவன்
    பாரதி தாசன்என் குருவே!
வயலென வளமை! வானளவு இனிமை!
    வழங்கியே என்மனம் நின்றாய்!


பொன்விழா காணும் பாரதி தாசன்
     புகழினைப் பாடுக நெஞ்சே!
பொன்னெழில் பூக்கும் புதுமணம் வீசும்!
     பொங்கிடும் கடலென இன்பம்!
தன்னுயிர்த் தமிழைத் தரணியில் பரப்ப
    தளர்விலா துழைத்திடும் ஆசான்
இன்முகம் தானே இன்றமிழ்ச் சோலை
     என்றுளம் ஏத்தியே பாடும்!

புதுவையில் பிறந்து புதுமைகள் புரிந்து
      பொன்விழா கண்டிடும் வேந்தே!
எதுகையும் மின்ன மோனையும் ஓங்க
     எழில்மிகு கவியென வாழ்க!
மதியினில் இன்ப மாண்பினைச் சூடும்
     வான்புகழ்ப் பாரதி தாசா!
நதியினில் நீந்தும் மீன்என என்றும்
     நற்றமிழ் யாப்பினில் வாழ்க!

தமிழ்வளர் நேசன் தனிப்புகழ்த் தாசன்
    தரணியில் தோன்றிய நாளே!
அமிழ்தென இனிக்கும்! அன்பினைச் சுரக்கும்
      அலகிலாப் பெருமையை ஊட்டும்!
இமையெனக் காத்தே எழிற்றமிழ் போற்றும்
     இன்கவி பாரதி தாசா!
எமக்கரும் யாப்பை இயம்பிய உன்னை
     எண்ணிடக் கவிதைகள் பூக்கும்!

பாட்டினில் தேனைப் பருகிட நல்கும்
     பாங்கினைக் கண்டுளம் சொக்கும்!
கேட்டிடும் கேள்வி கிடைத்திடும் பதில்கள்
     ஊட்டிடும் ஆற்றலை நன்றே!
பாட்டுடைத் தலைவன் பாரதி தாசன்
    பைந்தமிழ் நடையினைப் பாடு!
நாட்டினில் எங்கும் நற்றமிழ் பரப்பும்
      நற்பணி ஓங்கிடப் பாடு!

படம் உதவி நண்பர் சீராளன் நன்றி நட்பே.
இன்னும் வாசிக்க... "அருங்கவிக் கடலே! பொன்விழா நிறைவு !"

Thursday, July 2, 2015

தென்றலைப் பழிக்கும் தலைவி!நிலாவரும் நேரம் நினைவுகள் கூடி
      நெடுந்துயர் தந்தெனை வாட்டும்!
கலைந்திடும் உறக்கம் கனவினில் மிதந்து  
      கரைசேரத் துடித்திடும் அலையாய்!
உலாவரும் போதும் உளத்தினில் கேட்கும்  
       உருகிடும் மெல்லிசைப் பாடல்!
கலையெனத் தெரிந்தும் கடந்திட முடியாக்
     கவலையில் மூழ்கிடும் நெஞ்சம்!

தினமிது தொடரும் திகட்டிடா தெனினும்
     திசையினை இருவிழி தேடும்!
மனமதை ஏற்று மகிழ்ந்திடும் கூட்டில்
     வந்தடைந் திடும்பல ஏக்கம்!
சினத்தினை உடைய தலைவனின் மடலைத்
    தாங்கியே வந்திடாத் தென்றல்
குணத்தினை ஏனோ குறையெனக் கூறிக்
      கொதித்திடும் செய்கையும் தகுமோ?
இன்னும் வாசிக்க... "தென்றலைப் பழிக்கும் தலைவி!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி