Ads 468x60px

Tuesday, June 9, 2015

பறந்து திரிதலெங்கும் சாட்சி!


அள்ளி அணைக்குமெனை அமுதக் கானமதில்
       ஆடிக் களிக்குதென் மனமே!
துள்ளல் நடையழகில் தூங்க மறுக்குமெனைத்
         தூரல் நனைக்குதிங்குத் தினமே!

மின்னல் தீண்டியதாய் மேனி சிலிர்க்குமந்த
         வெள்ளி வந்துதிக்கும் வேளை!
கன்னல் மொழியழகில் கவிதை பலகோடிக்
          கைதி ஆக்குமிந்தக் காலை!

மதிலைத் தாண்டிநடை  மகிழ்ந்தே ஊர்ந்துவரும்
       மாயக் கதிரோனின் குணமே!
இதழ்கள் விரிக்குமந்த இனிமைக் காட்சியுண்டு
       எழிலில் மயங்குதென் மனமே!

ஊரை எழுப்பிவிட உரத்த  குரலெழுப்பும்
      ஓலைக் குடிசையெங்கும் சேவல்!
நீரில் குதித்தெழுந்து நீச்சல் பழகிவரும்
       நீந்தும் பருவமகள்  தாவல்!

சோலைப் பூக்களெலாம் சோம்பல் முறித்தெழுந்து
      சுற்றிப் பறந்தெங்கும் பாடும்!
காலைக் காட்சியினைக் கண்டு மகிழ்ந்துள்ளம்
      கதைத்து உடனழைத்து ஓடும்!

வண்டு வந்துலவும் வசந்த மெட்டிசைக்க
        வந்து சேர்ந்திடுமே தென்றல்!
கண்டு கேட்டுறங்கிக் கண்கள் தாம்சொருகும்
       கவிதைப் பைந்தமிழின்  மன்றல்!

விடியப் பார்த்திருந்து விளைந்த கதிர்முடிந்து
       மேட்டில் கதிரடிக்கும் காட்சி!
படிந்த மனங்களிலே பாழும் நினைப்புமில்லை
      பறந்து திரிதலெங்கும் சாட்சி!

43 comments:

 1. வணக்கம்
  சகோதரி

  கவிதையின் வரிகள் ஒவ்வொன்றையும் இரசித்து படித்தேன் மிக அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. தங்களின் முதல் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 2. // கவிதைப் பைந்தமிழ் மன்றல் // ஆகா...!

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. வாழ்த்திற்கு நன்றிங்க சகோ.

   Delete
 3. விடியப் பார்த்திருந்து விளைந்த கதிர்முடிந்து
  மேட்டில் கதிரடிக்கும் காட்சிப் படமும் ஆக்கமும் அருமை !

  ReplyDelete
  Replies
  1. வலைச்சர பணிக்கிடையிலும் தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 4. Replies
  1. வணக்கம் ஐயா! தங்களின் ஆசர்வாதம். வேறென்ன சொல்ல. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 5. "கண்டு கேட்டுறங்கி கண்கள் தான்சொருகும்"
  தங்களது தரமிகு வரிகளே சான்று சகோ!
  கவிதையை கண்டேன்!
  படிக்கச் சொல்லியும் கேட்டேன்!
  அரிதான இதுபோன்ற கவிதையை பாராட்ட
  கண்கள் உறங்காது ஓடோடி வந்தேன்! அருமை!

  (சகோ! எனது முதலாம் ஆண்டு குழலின்னிசைக்கு வாழ்த்து சொல்ல வரவில்லையே?)

  நன்றி!த ம 4
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ. காலையிலே சென்று வாழ்த்து தெரிவித்து வந்தேனே..

   Delete
 6. அற்புதம்
  தங்கள் கவிதைகள் தொடும் உச்சம்
  பார்க்க படிக்க மனம் மிக மகிழ்ச்சி கொள்கிறது
  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. வருக! வருக! தென்றலில் தங்களின் வருகை கண்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 7. தேன்சிந்தும் கவிதை கண்டு நான் மகிழ்ந்தேன் ¨!வாழ்த்துக்கள் என் அருமைத் தோழியே .த .ம.7

  ReplyDelete
 8. தேனமுத வாழ்த்தினையே நானும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

  ReplyDelete
 9. படித்து மனம் நிறைந்திருக்கிறது.நன்று

  ReplyDelete
  Replies
  1. நன்றெனக் கூற மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete

 10. வணக்கம்!

  பறந்து கவிபாடும் பாவை சசிகலாவைப்
  பசுமைத் தமிழன்னை காப்பாள்!
  சிறந்து புகழோங்கச் சிந்தை கமழ்ந்தோங்கச்
  செம்மை அணியாவும் சேர்ப்பாள்!

  நிறைந்து வியன்கவிகள் நெஞ்ச மலர்க்காட்டில்
  நித்தம் மணம்வீச வேண்டும்!
  உறைந்து சுவையிருக்கும் ஒண்மைத் தமிழேந்தி
  உன்றன் கவியொளிரும் யாண்டும்!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தமிழைப் பரப்பி தரணியாளும் உந்தன்
   அமுத மொழியின் அழகு.
   வணக்கம் ஐயா! தங்கள் வருகையும் வாழ்த்துப் பாவும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 11. கவிதையின் ஒவ்வொரு வரியும் ஏன்
  அதிலடிங்கிய ஒவ்வொரு சொல்லோவியமும்
  என்னை

  எட்ட இயலா சுவர்க்கத்துக்கு
  அழைத்துச் சென்று விட்டது.

  அமீர் கல்யாணி ராகத்தில் என்னையும் அறியாது பாடலானேன்.

  விரைவில் அந்த பாட்டின் லிங்க் அனுப்புகிறேன்.

  சுப்புதாத்தா.
  www.subbuthathacomments.blogspot.in

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! வாருங்கள் வாருங்கள் தங்கள் குரலில் தோழி அம்பாளடியாள் பாடலை இப்போதே கேட்டுக்கொண்டிருந்தேன். அதற்குள் இங்கு தங்களின் வருகை வியந்து போனேன். பாடுங்கள் ஐயா கேட்க காத்திருக்கிறோம். தங்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்.

   Delete
  2. www.youtube.com/watch?v=KLH9AD7MLhY
   பாட்டின் லிங்க்

   Delete
  3. ஆஹா அருமை அருமை ஐயா. தங்கள் வலைப்பக்கம் சென்று வந்தேன். தகவலுக்கு நன்றிங்க ஐயா.
   தங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

   Delete
 12. அழகான வரிகளில் நல்லதொரு நடை அருமை சகோ
  தமிழ் மணம் 10

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோ. தங்களுக்கு என் வணக்கமும் நன்றியும்.

   Delete
 13. தீயி னோடையிடை பாயு மோரிதயம்
  மாயும் வேதனையில் சாயும்!
  காயும் கற்பனையின் நோயும் தீரத்தமிழ்ச்
  சேயும் உம்கவிகள் ஆயும்!

  அருமை தொடருங்கள் கவிஞரே....!

  தொடர்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருக! ஆசிரியரே தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு மனமார்ந்த நன்றி.

   Delete
 14. இயற்கையோடு இயைந்த இணைந்த கவிதை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம்! வருக தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 15. ரசிக்கவைத்த பாடல்! அருமை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 16. அருமை சகோதரியாரே
  படித்தேன் மனம் மகிழ்ந்தேன்
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 17. அழகிய காட்சிகளின் வர்ணனையிலும் சொக்கவைக்கும் தமிழிலும் உள்ளம் பறிகொடுத்தேன். பாராட்டுகள் சசி.

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்களின் வருகையும் பாராட்டும் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 18. விட்டில் பூச்சியென விழுந்து விட்டேநுன்
  வண்ண தேன்தமிழின் மெட்டில்
  பட்டுத் தெறிக்கின்ற பவள ஒளிபோல
  பாவை உன்நெஞ்சில் தொட்டில்

  தட்டுத் தடுமாறி தலையை நீநீட்ட
  தொட்டுக் கதைபேசும் நிலவு
  வட்டம் இதுவென்று வாடி நிற்காமல்
  வாழ்வை வளமாக்கி குலவு

  சொட்டும் நீர்த்துளியில் சுடரும் ஒளிக்கீற்றில்
  தொடர்ந்து நீநனைய வேண்டும்
  கட்டுக் கடங்காமல் கவிதை நீபாட
  காலம் வெகுவாக ஓடும்

  அட அட அட அருமைம்மா என்ன சொல்ல பேச்சிழந்து போனேன் wow. மேலும் தொடர என் வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. வாடா மலர்ச்சரமே
   வாழ்த்துப் பாவென
   வந்துதிக்க வாயடைத்து
   நின்றேன் இன்று!

   இனிய வார்த்தை கொண்டு இதமாய்க் கோர்த்த வாழ்த்தில் அகமகிழ்ந்தேன் தோழி. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 19. எனக்கு உங்கள் போல கவி பாடவராது. பாடியுள்ள பாடல்களை ரசிக்கும் திறனும் குறைவு. இருந்தும் அவ்வப்போது வந்து கருத்திட்டிருக்கிறேன் என் தளத்தில் உங்கள் பின்னூட்டம் கண்டேன் மறு மொழியும் எழுதி இருக்கிறேன் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! வாங்க! ரசிக்கும் திறன் இல்லை என்று சொல்லமுடியாது அல்லவா ?
   உங்களிடம் பிடித்தது எதையும் மறைக்காமல் சொல்வது அந்த இயல்பு எத்தனை பேருக்கு இருக்கிறது ?
   நேரம் கிடைக்கும் போது வாங்க ஐயா. நானும் தொடர்கிறேன். நன்றி.

   Delete
 20. அதிகம் அறியப் படாத கவிதை வடிவம் இனிமையோ இனிமை வாழ்த்துகள்

  ReplyDelete
 21. என் தளத்தில் வந்துபின்னூட்டமிட்டது நீங்களில்லை வேறு ஒரு சசிகலா என்று அறிந்தேன் ஏதாவது குழப்பம் ஏற்படுத்தி இருந்தேன் என்றால் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி