Ads 468x60px

Thursday, June 4, 2015

வெண்பனி எழிலதன் கூடோ?


கண்களால் அழைத்துக் கதைத்தநல் பொழுதைக்
           கனவெனச் சொல்வதும் சரியோ?
விண்ணிலே பறந்து வியன்மிகு காட்சி
           மனத்தினில் வடித்ததும் பொய்யோ?
மண்ணிலே ஊன்றும் விதையென என்னில்
           வளர்ந்திடும் அன்பதன் நிலையும்
வெண்ணிலா தோன்றி விடியலில் மறையும்
             வெண்பனி எழிலதன் கூடோ?

கனவினில் மெல்லக் காலடி வைத்துக்
           கவிதையில் உருவென ஆகி
நினைவினில் நிறைந்து நெருங்கிய அவனே
          நெஞ்சினில் நுழைந்தது தகுமோ?
பனைமரக் கள்ளைப் பருகிய நிலையாய்ப்
           படுத்திடும் அவனது நினைவு
நனைத்திடும் மழையாய் நளினமே புரிந்து
          நடனமே ஆடிடும் பெண்மை!

மின்னிடும் வனப்பை மேனியில் வடித்து
          மீட்டிடும் இசையினில் நாளும்
என்றுதான் தன்னை ஏற்குமோ நெஞ்சம்
          எண்ணியே ஏங்கிடும் பெண்மை!
அன்றுநாம் கொண்ட அன்றிலின் குணத்தில்
           என்றுமே இருந்திட நினைந்தும்
இன்றெனைச் சுமக்கும் உயிரினில் நீயே
          இருப்பதை மறந்ததேன் மனமே!

19 comments:

 1. சந்தம் சிந்த வந்தக் கவிதை! நன்று

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா! தங்கள் முதல் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 2. பனைமரக் கள்ளைப் பருகிய நிலையாய்ப்
  படுத்திடும் அவனது நினைவு
  மனதைத் தொடும் வரிகள். அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 3. அருமை கவிஞரே மிகவும் அருமையான வரிகள்
  தமிழ் மணம் 2

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 4. படமும் கவிதையும் அழகு!
  த ம 3

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியுங்க.

   Delete
 5. படத்திற்கேற்ற கவிதையா, கவிதைக்கேற்ற படமா எனச் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. படத்திற்காக எழுதிய கவிதையே..
   நன்றிங்க.

   Delete
 6. அருமையான கவிதை சசிகலா

  ReplyDelete
 7. வணக்கம்.

  உறைந்திடும் கடலில் ஓடுதல் அற்றே
    ஒடுங்கிடும் நிலவெனும் படகு!
  சிறைபடும் மீன்கள் சிதைவுறும் போதும்
    சாம்பலே ஆகுபொய் உடலாய்!
  குறைபட வெம்மை கூட்டுதல் காலக்
    குலத்தொழில் ஆயினும் எண்ண
  நிறைமழை பொழியத் துடுப்பெனும் மின்னல்
    நகர்ந்திடத் தொடர்ந்திடும் பயணம்!

  சாகவோ மேகம்? சில்லெனத் தென்றல்
    சிலிர்க்கவே பெருமழை கொட்டிப்
  போகவே வாழ்க்கை! போர்களும் உண்டு!
    பெருகிடும் அழுகையா னந்தம்!
  வேகவும் வெந்து நோகவும் நொந்து
    விம்மவும் மட்டுமே ஆன
  காதலிற் நெய்த வெண்பனிக் கூட்டில்
    கருத்தரிக் கின்றது கவிதை!

  அருமை. தொடருங்கள் கவிஞரே!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பெருமழை கொட்டிப் போகவே வாழ்க்கை!
   அருமையான விருத்தம் கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிங்க ஆசிரியரே.

   Delete
 8. அட அட அட என்ன சந்தம் எப்படி இப்படி அழகழகா வருது உங்களுக்கு ம்..ம் சூப்பர் மா ... நானும் ட்ரை பண்ணி களைத்து விட்டேன்மா. ஹா ஹா ...
  மிக்க நன்றி தொடர வாழ்த்துக்கள் ...!

  காதலை எண்ணி கனவுகள் காணும்
  காளையர்க் கில்லை பஞ்சம்
  வாதங்கள் செய்யும் வழக்குகள் வெல்லும்
  வீழ்ந்திடும் நெஞ்சில் மஞ்சம்
  சாதனை என்று சோற்றையும் தள்ளி
  சொக்கியே சிந்தனை செய்யும்
  வேதனை மிஞ்சும் வாழ்க்கையைக் கொல்லும்
  வனப்புகள் இன்றி வாழும்

  ReplyDelete
  Replies
  1. சூப்பரா எழுதுகிற நீங்களே இப்படிச் சொன்னா எப்படிம்மா?
   இனிய விருத்தமதை இனியா தந்தது கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றிம்மா.

   Delete
 9. அன்பு வலைப்பூ நண்பரே!
  நல்வணக்கம்!
  இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
  தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

  முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
  அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
  "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
  உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
  ஆம்!
  கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
  http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
  சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
  தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
  மற்றும்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  TM 9

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி