Ads 468x60px

Monday, June 22, 2015

காதல் குயில்கள்!
குயில்பாட்டுக் கேட்டிடவே    குதித்தோடி வாவென்றான்
                 குழந்தை போலே
மயிலாடும் தோப்போரம் மனமொன்றிப் பேசிடவே
                வாவா என்றான்
முயலோடிப் பிடிப்போமா? முகிலாடப் பார்ப்போமா?
                என்றே சொல்லி
வயலோரம் கரம்பற்றி வரப்பினிலே நடக்கின்றான்
                மயங்கிப் போனேன்!.                 
                     
கீதங்கள் கேட்குமந்தக் கிணற்றோரப் படிக்கட்டில்
                        கீற்றாய்  என்னைப்
பாதங்கள் தாம்நோக்கப்  பாரென்னை என்றேதான்
                          பாட்டும் சொன்னான்!
நாதத்தில் தான்மயங்க  நானென்ன  செய்வேனோ
                      நாணம் மோதும்
ஓதுகின்ற வேதமென உயிர்வருடும் பாட்டாக
                        உலவும் காற்றே!.

தேனுருகும் அவன்பாட்டில் நானுருகி நின்றிடவே
                    தேவி என்றே
ஏனுருகிப் போகின்றாய் என்னவளே என்றழைக்க
                  எங்கே நானும்
ஊனுருக உயிருருக உளமிழந்து வசமானேன்
                   உன்றன் கண்ணில்
வானோடும் மேகமென வட்டமிடும் விழிகண்டே

                  வாழ்கின் றேனே.
இன்னும் வாசிக்க... "காதல் குயில்கள்!"

Thursday, June 18, 2015

மனிதம் கற்கப் பழகிடுவோம்!சின்ன சின்ன பூக்களுமே
         சிரிக்கத் தினமும் மறப்பதில்லை!
உன்னைப் போலே சோகமுடன்
          உறவை வெறுத்துப் போவதில்லை!
என்ன இருக்கு வாழ்வினிலே
      என்றே என்றும் நினைப்பதில்லை!
மின்னல் கண்டும் சிரிக்குமந்த
       வீரம் ஏனோ நமக்குமில்லை!

அடைந்து கிடக்கும் நம்மைப்போல்
        அடைப்ப துண்டோ மணத்தையுமே?
உடைந்து போகச் சொற்களையும்
        உதிர்ப்ப தில்லை பூக்களுமே!
இடையே வாழும் பொழுதேனும்
         இழிவுச் செயலைச் செய்யாது
மடிந்தே போகும் மலரிடத்தில்
        மனிதம் கற்கப் பழகிடுவோம்!
       
எல்லாம் கடந்து போகுமென்றே
      என்றும் நினைந்து செயல்படுக!
கல்லாய் நாமும் அமர்ந்திடவோ
     கசந்த நினைவும் போகிடுமோ!
நில்லாது ஓடும் காலம்போல்
      நித்தம் ஓடப் பழகிவிட்டால்
இல்லை இங்கே துயரமதும்
       என்றும் இனிமை சேர்ந்திடுமே!
இன்னும் வாசிக்க... " மனிதம் கற்கப் பழகிடுவோம்!"

Tuesday, June 9, 2015

பறந்து திரிதலெங்கும் சாட்சி!


அள்ளி அணைக்குமெனை அமுதக் கானமதில்
       ஆடிக் களிக்குதென் மனமே!
துள்ளல் நடையழகில் தூங்க மறுக்குமெனைத்
         தூரல் நனைக்குதிங்குத் தினமே!

மின்னல் தீண்டியதாய் மேனி சிலிர்க்குமந்த
         வெள்ளி வந்துதிக்கும் வேளை!
கன்னல் மொழியழகில் கவிதை பலகோடிக்
          கைதி ஆக்குமிந்தக் காலை!

மதிலைத் தாண்டிநடை  மகிழ்ந்தே ஊர்ந்துவரும்
       மாயக் கதிரோனின் குணமே!
இதழ்கள் விரிக்குமந்த இனிமைக் காட்சியுண்டு
       எழிலில் மயங்குதென் மனமே!

ஊரை எழுப்பிவிட உரத்த  குரலெழுப்பும்
      ஓலைக் குடிசையெங்கும் சேவல்!
நீரில் குதித்தெழுந்து நீச்சல் பழகிவரும்
       நீந்தும் பருவமகள்  தாவல்!

சோலைப் பூக்களெலாம் சோம்பல் முறித்தெழுந்து
      சுற்றிப் பறந்தெங்கும் பாடும்!
காலைக் காட்சியினைக் கண்டு மகிழ்ந்துள்ளம்
      கதைத்து உடனழைத்து ஓடும்!

வண்டு வந்துலவும் வசந்த மெட்டிசைக்க
        வந்து சேர்ந்திடுமே தென்றல்!
கண்டு கேட்டுறங்கிக் கண்கள் தாம்சொருகும்
       கவிதைப் பைந்தமிழின்  மன்றல்!

விடியப் பார்த்திருந்து விளைந்த கதிர்முடிந்து
       மேட்டில் கதிரடிக்கும் காட்சி!
படிந்த மனங்களிலே பாழும் நினைப்புமில்லை
      பறந்து திரிதலெங்கும் சாட்சி!
இன்னும் வாசிக்க... " பறந்து திரிதலெங்கும் சாட்சி!"

Thursday, June 4, 2015

வெண்பனி எழிலதன் கூடோ?


கண்களால் அழைத்துக் கதைத்தநல் பொழுதைக்
           கனவெனச் சொல்வதும் சரியோ?
விண்ணிலே பறந்து வியன்மிகு காட்சி
           மனத்தினில் வடித்ததும் பொய்யோ?
மண்ணிலே ஊன்றும் விதையென என்னில்
           வளர்ந்திடும் அன்பதன் நிலையும்
வெண்ணிலா தோன்றி விடியலில் மறையும்
             வெண்பனி எழிலதன் கூடோ?

கனவினில் மெல்லக் காலடி வைத்துக்
           கவிதையில் உருவென ஆகி
நினைவினில் நிறைந்து நெருங்கிய அவனே
          நெஞ்சினில் நுழைந்தது தகுமோ?
பனைமரக் கள்ளைப் பருகிய நிலையாய்ப்
           படுத்திடும் அவனது நினைவு
நனைத்திடும் மழையாய் நளினமே புரிந்து
          நடனமே ஆடிடும் பெண்மை!

மின்னிடும் வனப்பை மேனியில் வடித்து
          மீட்டிடும் இசையினில் நாளும்
என்றுதான் தன்னை ஏற்குமோ நெஞ்சம்
          எண்ணியே ஏங்கிடும் பெண்மை!
அன்றுநாம் கொண்ட அன்றிலின் குணத்தில்
           என்றுமே இருந்திட நினைந்தும்
இன்றெனைச் சுமக்கும் உயிரினில் நீயே
          இருப்பதை மறந்ததேன் மனமே!
இன்னும் வாசிக்க... "வெண்பனி எழிலதன் கூடோ?"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி