Ads 468x60px

Tuesday, May 12, 2015

உயிரோடு வைக்கும் கொள்ளி!


கண்கொண்டு பார்த்திட்டான்! கவிமொண்டு எனக்கிட்டான்!
            கரம்பற்றி  இழுத்த கள்ளன்!
     கண்ணாற்றங் கரையோரம் கதைபேச அழைத்திட்டான்
           கைகோர்த்து இழுத்த மல்லன்!

மண்தோண்டும் நாணத்தை  மௌனத்தால் தானேந்தி
        வாவென்று  அழைக்கும் காதல்!
   மலர்கொய்து தான்சூட மதுவுண்ட வண்டாட
         மனத்துக்குள் இசைக்கும் ஊதல்!

விண்ணோடிப் பறந்திட்ட மனப்பாங்கில் தினமேங்கி
            வீறிட்டே    அழுவும்  நெஞ்சம்!
      வேறிட்ட நினைவள்ளி வேடிக்கை பலசொல்லி
             விளையாடச் செய்யும் மஞ்சம்!

உண்ணாமல் உறங்காமல் ஊரோடும் சேராமல்
              உள்ளாடும் நினைவைத் தள்ளி
       ஓடத்தான் வழியுண்டோ?  ஒதுங்கத்தான் நிழலுண்டோ?
             உயிரோடு வைக்கும் கொள்ளி!

28 comments:

 1. இன்பப்பூஞ் சோலைக்குள் ஏகாந்த ராகங்கள்
     இசைத்திடும் குயில்கள் ரெண்டு
    இலக்கணம் இதற்கில்லை.. இதயத்தின் ஓசைகள்
     இயக்கிடும் இயக்க மொன்று!
  அன்றிலின் குணமுண்டு! அன்பெனும் தீயுளம்
     அணையாமல் எரித லுண்டு!
    ஆசையின் கனவுண்டு! அலைபாயும் கடலொன்றை
     அடக்கியே கிடத்த லுண்டு!
  முன்றிலே தமிழுண்டு! முளைவிடும் பூக்களில்
     மோதிடும் தும்பி யுண்டு!
    மோகத்தில் நீந்திடும் மேகங்கள் வெண்ணிலா
     முகம்பொத்தி நகைப்ப துண்டு!
  ‘கொன்றுபோ’ ‘வேதனை கொடுத்தலின் நன்றெ’னக்
     கிடந்துள்ளம் துடிப்ப துண்டு!
  கொள்ளியில் ஓயுமோ? காதலின் கூக்குரல்
     கவிதையாய் வெடித்த தின்று!

  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ஜோடிக்கிளியிரண்டு சோலைப் பறந்தாடி
   சோகம் களையட்டும் மெல்ல....அடடா என்ன இது? உங்கள் வரிகளைப் பார்த்ததும் எனக்கும் பாட வந்து விட்டதே...

   Delete
 2. வணக்கம்
  சகோதரி

  உவமைக்க வரிகள் துள்ளி விளையாடுகிறது...
  ஓதிய வரிகள் அகத்தில் அகம் பதித்து..

  அருமையாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம 3
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

   Delete
 3. உண்ணாமல் உறங்காமல் ஊரோடும் சேராமல்
  உள்ளாடும் நினைவைத் தள்ளி
  ஓடத்தான் வழியுண்டோ? ஒதுங்கத்தான் நிழலுண்டோ ?
  உயிரோடு வைக்கும் கொள்ளி!
  அழகாக சொல்லியுள்ளீர்கள். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 4. சிரமம் தான்...! ஹா... ஹா... ரசித்தேன்...

  ReplyDelete
  Replies
  1. சிரமம் கண்டும் சிரிப்பவர் நீங்களாகத்தான் இருக்கும் சகோ.

   Delete
 5. இன்றைய தமிழ்க் காதலுக்குகந்த உளவியல் சார்ந்த நல்விருத்தம். தொடருங்கள் சகோதரி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எதாவது அவசரத்தில் கருத்திட்டு விட்டீர்களோ ?
   தங்களின் அழகிய பின்னூட்ட வரிகளை காண வந்தேனே...

   Delete
 6. ஓடத்தான் வழியுண்டோ? ஒதுங்கத்தான் நிழலுண்டோ ?

  உள்ளத்தின் தவிப்பு, அருமையான வார்த்தைகளில்
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிங்க சகோ.

   Delete
 7. அருமை அருமை . அரிய பா வகையில் அழகான கவிதை .
  முன்னையோர் ஜன்மாந்திரம் என்னென்ன பாவங்கள் மூடன் நான் செய்தனம்மா
  மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி மோசங்கள் பண்ணினேனோ
  //என்னவோ தெரியாது இட்சணம் தன்னிலே இக்கட்டு வந்ததம்மா
  ஏழை நான் செய்தபிழை தாய் பொறுத்து ரட்சித்து என் கவலை தீருமம்மா
  சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே சிறுநாணம் ஆகுதம்மா
  சிந்தனைகள் என் மீது வைத்து நல்பாக்கியம் அருள் சிவசக்தி காமாட்சி நீ
  அன்ன வாகனமேறி ஆனந்தமாக உன் அடியேன் முன் வந்து நிற்பாய்
  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும் அம்மை காமாட்சியே உமையே!//
  என்று எங்கள் அம்மா பாடும் பாடல் நினைவுக்கு வந்தது

  ReplyDelete
  Replies
  1. வருக வருக. அற்புதமான பாடலை பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

   Delete
 8. மண்தோண்டும் நாணத்தை மௌனத்தால் தானேந்தி
  வாவென்று அழைக்கும் காதல்

  அருமை அருமை சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணத்தில் நுழைக்க 7

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ . தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 9. இனிமையான சாதனை உணர்வுகள்
  முதல் மூன்று பத்திகளில் :)

  //ஓடத்தான் வழியுண்டோ?
  ஒதுங்கத்தான் நிழலுண்டோ?
  உயிரோடு வைக்கும் கொள்ளி!//

  அந்த சாதனை தந்த சோதனையோ
  வேதனையோ முடிவு வரிகளில் :(

  எனினும் அருமையான ஆக்கம். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete

 10. வணக்கம்!

  என்னென்று நான்சொல்ல? ஏதென்று நான்சொல்ல?
  இன்றென்றல் பாட்டைப் படித்து?
  இன்பத்துள் நான்துள்ள இதயத்தைத் தமிழ்வெல்ல
  ஈடில்லா அமுதைக் குடித்து!

  பொன்னென்றும் பூவென்றும் பொலிகின்ற மணியென்றும்
  புகும்காதல் சீரை வடித்து!
  பொங்கும்பால் கற்கண்டு புதுத்தேனைச் சேர்த்துண்டு
  புலர்ந்தாடும் நெஞ்சம் துடித்து!

  அன்பென்னும் அமுதத்தை அளிக்கின்ற தமிழாட்சி
  அடிதோறும் ஆடும் களித்து!
  அகலாத பேராசை அகங்கொண்டு தமிழாற்றில்
  அழகோடு பாடும் குளித்து!

  என்றென்றும் சந்தத்தை நன்றாகக் கவித்தென்றல்
  எழுதட்டும் எண்ணம் விரித்து!
  எல்லாரும் கவிகற்று! சொல்லாடும் கலைகற்று!
  இசைக்கட்டும் தமிழ்க்கை பிடித்து!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
  12.05.2015

  ReplyDelete
  Replies
  1. எசப்பாட்டு நான்பாட எனக்கேது ஞானம்
   இனிக்கின்ற இப்பாட்டில் நின்றாடும் மானும்
   வசப்பட்டு போனதென் வளர்தமிழ் ஆர்வம்
   மகிழ்ந்தாடி மனம்சொல்லும் நெஞ்சார்ந்த நன்றி.
   தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 11. அன்புள்ள சகோதரி,

  உயிருள்ள பாட்டாலே உணர்வெங்கும் தமிழாலே

     உறவென்ற உரிமைக் காதல்

    ஊரெங்கும் உணர்த்திட்டே உவகையில் மகிழ்ந்திட்டே

     உண்மையிலே அழகு சேர்க்கும்!

  நன்றி.

  த.ம. 8.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா வருக! தங்களின் அழகென்ற பாட்டில் அகமகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 12. அருமை சகோ தொடர வாழ்த்துக்கள்
  வாழ்க வளமுடன் !
  தம +1

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி