Ads 468x60px

Thursday, May 7, 2015

விடையில்லாக் கேள்விகள் !


அதிகாலை எழுப்பிவிடும் மணியின் ஓசை
    அரவமின்றிக் கேட்டிடுதே எனக்கு மட்டும்
கதிர்வரவே காத்திருக்கும் மொட்டாய் மெல்லக்
      கதவடைத்தும் உறங்காத கனவே என்னில்
சதிராட்டம் ஆடுகின்ற காதல் தன்னை
       சகித்திருக்க வழியேதும் உண்டோ சொல்லேன்
குதித்தோடி வந்தேயென் காலைக் கட்டி
       குடிபுகுந்த மகிழ்விற்கும் எல்லை உண்டோ ?

அருகருகே வந்தமர்ந்து அன்பாய் நோக்கி
       அரவணைக்கும் பேச்சினிலே இழந்தேன் என்னை
கரம்தீண்ட கதைபேசும் கண்கள் மெல்லக்
       கனவுலகம் சென்றிடுதே என்ன சொல்ல
பருகிடவே கனிச்சாறாய் இனிக்க வந்து
      பரவசமும் தந்திடுதே பக்கம் நிற்க
மரக்கிளையாய் அசைந்தாடும் மனத்தைப் பாராய்
       மகிழ்வுடனே பூத்திருக்கும் மதியைக் கேளாய்.

கண்ணழகு!  காதழகு! கவிகள் பேசிக்
    கட்டிமுத்தம் கன்னத்தில் வைத்து நின்றான்
மண்ணுலகை மறந்தேதான் மயங்கி ஆட
    மயக்குமின்ப இன்னிசையை தமிழில் பாட
விண்ணுலகில் பறப்பதுவாய் வெறித்துப் பார்க்க
        விடையில்லாக் கேள்விகளைத் தொடுத்தான் என்னில்
எண்ணமெலாம் கவர்ந்திழுத்த தமிழை அள்ளி
        அகத்தினிலே சூடிக்கொண்(டு) அலையும் நெஞ்சே.


21 comments:

 1. காற்றுவரும் கதைபலவும் சொல்லும் வானில்
  கலைகின்ற மேகத்தில் நிலவும் தேங்கும்!
  ஆற்றுகின்ற தனிமையெனும் அரவு தீண்ட
  அடிமனத்தின் வேதனைகள் யாரோ காண்பார்?
  ஏற்றுவிட்ட பாத்திரங்கள் இருளின் கண்ணீர்
  ஏதிலியின் துயரங்கட் களவே யேது?
  நேற்றொடுங்கும் இன்றுசெடி துளிர்க்கும்! வாடும்!
  நெஞ்சழுந்தும் இசையிலொரு கீதம் பாடும்!

  பாடலின் வரிகள் படிக்கத் தோன்றிற்று.

  அருமை கவிஞரே!

  ReplyDelete
  Replies
  1. இயற்கையின் நீதியாய் இன்ப துன்பங்களும் துளிர்க்கும் வாடுமென்பதை அழகாய் உணர்த்திய வரிகளுக்கு நன்றிங்க.

   Delete
 2. ஆஹா அருமை அருமை!
  விருத்தப் பாக்களை விருந்தாய் படைத்தீர் விரும்பி உண்டேன் வயிறு புடைக்க. வார்த்தைகளின் கட்டுக் கோப்பில் மதி மயங்கி நின்றேன்.
  மேலும் மேலும் சிறந்த கவிதைகள் தாருங்கள் தொடர்ந்து காத்துக் கிடக்கிறேன். பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் ...!

  ReplyDelete
  Replies
  1. பெயருக்கேற்ப இனிமையான தங்களின் வாழ்த்து கிடைக்க தொடர்ந்து எழுதலாமே தோழி. நன்றிப்பா.

   Delete
 3. ஆகா நான் படித்த பிடித்தமான வரிகள் நன்றி.. தாங்கள் பணி தொடரட்டும்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க. தங்கள் வலைப்பக்கம் என்னால் மட்டும் வரஇயலவில்லையா ?

   Delete
 4. வணக்கம்.
  மன்னன் வந்திட மாற்றமும் கண்டிட
  தென்றல் வீசிடும் தேங்கனி கிட்டிடும்
  துன்பம் தீர்ந்திடும் தூமலர் தூவிடும்
  இன்பம் சூழ்ந்திடும் இன்னிசை பாடிடும்.
  துள்ளல் இசைப் பாட்டு தீந்தமிழில் பதிந்தமைக்கு வாழ்த்துகள் சகோதரி. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. தென்றலென வீசிய இசைப்பாட்டில் மயங்கித்தான் போனேன் சகோ. நன்றிங்க.

   Delete
 5. மனதை இதமாக வருடிச்செல்லும் சொற்களைக் கொண்ட கவிதை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. தங்களின் வருகையும் வாழ்த்தும் எனை ஊக்கப்படுவதாக அமைகிறது. தங்களுக்கு மனமார்ந்த நன்றிங்க ஐயா.

   Delete
 6. அருமை சகோதரி... மனம் மகிழ்வுடனே பூத்து விட்டது...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றி சகோ.

   Delete
 7. மனதை இதமாய் நெருடும் அருமையான வரிகள்
  நன்றி சகோதரியாரே
  தம+1

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete
 8. எண்ணமெலாம் கவர்ந்திழுத்த தமிழை அள்ளி
  அகத்தினிலே சூடிக்கொண்டு அலையும் நெஞ்சே
  அருமை சகோ வாழ்த்துகள்
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க சகோ.

   Delete

 9. வணக்கம்!

  விடையில்லாக் கேள்விகளைப் படித்துப் பார்த்தேன்!
  வியப்புற்றேன்! விருந்துண்டேன்! எண்சீர் பாட்டில்
  தடையில்லா வண்ணத்தில் சீர்கள் செல்லும்!
  தண்டமிழின் பேரழகு நெஞ்சை வெல்லும்!
  படையில்லா அரசுண்டோ? புலவோர் வாழ்வில்
  பாட்டில்லா நாளுண்டோ? முன்னோர் போன்று
  கொடையில்லாக் காலத்தில் தமிழை அள்ளிக்
  கொடுக்கின்ற கவித்தென்றல் வாழ்க! வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பான வருகைக்கும் அழகிய விருத்தப்பா வாழ்த்திற்கும் எனது மனமார்ந்த நன்றிங்க ஐயா.
   தங்கள் ஆசியுடன் தொடர்கிறேன். வணங்கி.

   Delete
 10. #அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன் அழைத்து வந்தார் என்னிடம் உன்னை #
  பாடல் வரிகளை நினைவூட்டியது உங்களின் அருமையான கவிதை :)

  ReplyDelete
  Replies
  1. அற்புதமான பாடல் வரிகளை நினைவுபடுத்தினீர்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 11. பொற்றாமரை இலையில் சில கண்ணீர் பூக்கள்,
  புல்லின்நுனிவாழ் மென்பன்னீர்த் துளி பிம்பமாய்,
  சொற்சோலையாய் கவிதை தமிழ் பாமாலையாய்,
  கரும்பேந்திய இனிப்புந் துவர்ப்பும் கண்ணறியாதே,
  கருவாழும் உயிரும் துடிப்பும் அறிந்துமறியாமலே,
  காட்டாற்றிலும் மீன்குஞ்சது நீந்துமாப்போலுந்தன்,
  தமிழும் அதன் நயமும் கொள்ளைகொள்ளுதேயினி,
  கைபிடிக்காமலே நடக்கும் பிள்ளையாத் துள்ளியோடு.

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி