Ads 468x60px

Saturday, May 30, 2015

வாசமில்லாத் தேடல்களாய்!


கரைபுரண்டோடும் நீரும்
கடலைத்தேடி...

சிறகுவிரிந்த மேகமும்
மலையாழம் பார்த்து...

முட்டைவிரிந்த குஞ்சும்
இரை தேடி...

வாழ்வுதேடி சுழல்நீரில்
எதிர் நீச்சலிடும் மீனும்...


மலர் வருடும் வண்டும்
மண்ணுக்கு உயிராய் புழுவும்.

எல்லாம்வழங்கும் காலமும்
அறிவைத்தேடும் ஞானமும்
அணையாத மெய்யன்பும்
சுகமென்று சுமைதாங்கும்!

எண்ணம்தேடும் கவிஞனும்
வம்பாய் முடியும் நல்லுறவும்
ஆசை துறந்த மனப்பாட்டும்.

நீ நான் அவன் அவள் அதுஇது
எனது உனது நமதுபிரிவுகளும்

வாசமில்லாத் தேடல்களாய்
கொடுத்ததெது தெரியாது
கொண்டதெது அதுநினைவாய்
வருவதெதுவோ அறியோம்நாம்
ஆயினுமெல்லாம் நமக்காக.

நானென்ற நம்ஆசைக்காய்
பிரபஞ்சத்தில் மாயத்தேடல்கள்.
எல்லாமே ஏதோபிரதிபலனை
எதிர்நோக்கியே நன்மையும் ஏன்?
தீமையுமிணைந்த பயணங்கள்!!
இன்னும் வாசிக்க... "வாசமில்லாத் தேடல்களாய்!"

Tuesday, May 19, 2015

மீனுரு வாழ்வோ?


கட்டி வைத்த மாலையெனக்
கனவுகளைக் கோர்த்தெடுத்துக்
கண்டு விட்ட லாபமென்ன?

இன்பமும் துன்பமும்
மாயையெனத் தெரிந்திருந்தும்
மன்றாடும் நெஞ்சமதைக்
காவலிடத் துணிவுமில்லை...

வெள்ளாடை தனையுடுத்தி
வீதிவழி மேகமென
விதிப்பயண ஆற்றினிலே
கரைதேடும் உள்ளங்கள்!

நினைவலையில்
சிக்கி மாயும்
மீனுரு வாழ்வோ
நமது வாழ்க்கை?
இன்னும் வாசிக்க... "மீனுரு வாழ்வோ?"

Saturday, May 16, 2015

நினைவூஞ்சல் !


நினைவாற்றில் நீந்தவிட்டு நீயெங்குப் போனாய்?
எனைவருத்தும் காதலதை ஈந்தே - உனைநோக்கிக்
காத்திருக்கும் கண்ணில் கனவுண்டு! காட்சியில்லை!
பூத்திருக்கும் பூவெடுத்துப் போ!

இன்பக் கடலில் இதமாக நீந்தவிட்டுத்
துன்பம் துடைக்கின்றாய்த் தூயவனே! - இன்றென்
இதயத்தில் நீங்கா இடம்பிடித்தாய் என்றும்
உதயமென ஆவாய் உவந்து!

அழைக்காத நேரம் அலைபாயும் எண்ணம்
மழையில்லாக் கோடை வனமாய்! - பிழையேதோ
என்றேதான் போராடி இன்னுயிர் வாடிடும்!
குன்றாத் துயரைக் குறை!

கண்ணடிதான் பட்டதுவோ காரிகையின் கையெழுதும்
எண்ணத்தில் நின்றாடும் என்னவனே? - வண்ணமுற
வான்வெளியில் நான்பாடி வந்திடுவேன்! உன்னுடைய
தேன்மொழியில் நெஞ்சம் திளைத்து!

நினைவினில் எந்நாளும் நின்றாடும் காதல்
எனைஏதோ செய்கிறது இன்று - கனவினிலும்
உன்னுருவம்! காற்றினிலும் உன்வாசம்! கள்வனே
என்னுயிர் தன்னையே ஏந்து!
இன்னும் வாசிக்க... "நினைவூஞ்சல் !"

Wednesday, May 13, 2015

உள்ளாடும் உயிரே !


மடிமீது எனையேந்தி வளம்பாடி தினம்கொஞ்சி
      மகிழ்வோடு வளர்த்த அன்னை!
  மண்ணாற்றில் எனைவிட்டு மறைந்தோடிப் போனாயே
      மனமேங்கிச் சாடும் என்னை!

வடிவத்தில் தினம்மூழ்கி வடிக்கின்ற பாட்டெல்லாம்
     வாழ்த்தாகி மணத்தைக் கூட்டும்!
   வடிவாகி என்னுள்ளே வரமான தமிழாகி
        மகிழ்ந்தாடி என்னை மீட்டும்!

அடித்தாலும் அணைத்திட்ட அன்பான உருவத்தை
      எங்கோடித் தேட நானும்!
   அழுதாலும் புரண்டாலும் அணைக்கின்ற ஆளில்லை
        அறிவாயோ அன்னை நீயும்!

தடிகொண்டு நடந்திட்ட தள்ளாடும் பருவத்தில்
      தாயுன்னைப் பார்க்க வில்லை!
   தவறென்ன செய்தோமோ தவிக்கின்ற துன்பத்தைத்
        தாங்கத்தான் யாரும் இல்லை!
இன்னும் வாசிக்க... "உள்ளாடும் உயிரே !"

Tuesday, May 12, 2015

உயிரோடு வைக்கும் கொள்ளி!


கண்கொண்டு பார்த்திட்டான்! கவிமொண்டு எனக்கிட்டான்!
            கரம்பற்றி  இழுத்த கள்ளன்!
     கண்ணாற்றங் கரையோரம் கதைபேச அழைத்திட்டான்
           கைகோர்த்து இழுத்த மல்லன்!

மண்தோண்டும் நாணத்தை  மௌனத்தால் தானேந்தி
        வாவென்று  அழைக்கும் காதல்!
   மலர்கொய்து தான்சூட மதுவுண்ட வண்டாட
         மனத்துக்குள் இசைக்கும் ஊதல்!

விண்ணோடிப் பறந்திட்ட மனப்பாங்கில் தினமேங்கி
            வீறிட்டே    அழுவும்  நெஞ்சம்!
      வேறிட்ட நினைவள்ளி வேடிக்கை பலசொல்லி
             விளையாடச் செய்யும் மஞ்சம்!

உண்ணாமல் உறங்காமல் ஊரோடும் சேராமல்
              உள்ளாடும் நினைவைத் தள்ளி
       ஓடத்தான் வழியுண்டோ?  ஒதுங்கத்தான் நிழலுண்டோ?
             உயிரோடு வைக்கும் கொள்ளி!
இன்னும் வாசிக்க... " உயிரோடு வைக்கும் கொள்ளி!"

Thursday, May 7, 2015

விடையில்லாக் கேள்விகள் !


அதிகாலை எழுப்பிவிடும் மணியின் ஓசை
    அரவமின்றிக் கேட்டிடுதே எனக்கு மட்டும்
கதிர்வரவே காத்திருக்கும் மொட்டாய் மெல்லக்
      கதவடைத்தும் உறங்காத கனவே என்னில்
சதிராட்டம் ஆடுகின்ற காதல் தன்னை
       சகித்திருக்க வழியேதும் உண்டோ சொல்லேன்
குதித்தோடி வந்தேயென் காலைக் கட்டி
       குடிபுகுந்த மகிழ்விற்கும் எல்லை உண்டோ ?

அருகருகே வந்தமர்ந்து அன்பாய் நோக்கி
       அரவணைக்கும் பேச்சினிலே இழந்தேன் என்னை
கரம்தீண்ட கதைபேசும் கண்கள் மெல்லக்
       கனவுலகம் சென்றிடுதே என்ன சொல்ல
பருகிடவே கனிச்சாறாய் இனிக்க வந்து
      பரவசமும் தந்திடுதே பக்கம் நிற்க
மரக்கிளையாய் அசைந்தாடும் மனத்தைப் பாராய்
       மகிழ்வுடனே பூத்திருக்கும் மதியைக் கேளாய்.

கண்ணழகு!  காதழகு! கவிகள் பேசிக்
    கட்டிமுத்தம் கன்னத்தில் வைத்து நின்றான்
மண்ணுலகை மறந்தேதான் மயங்கி ஆட
    மயக்குமின்ப இன்னிசையை தமிழில் பாட
விண்ணுலகில் பறப்பதுவாய் வெறித்துப் பார்க்க
        விடையில்லாக் கேள்விகளைத் தொடுத்தான் என்னில்
எண்ணமெலாம் கவர்ந்திழுத்த தமிழை அள்ளி
        அகத்தினிலே சூடிக்கொண்(டு) அலையும் நெஞ்சே.


இன்னும் வாசிக்க... " விடையில்லாக் கேள்விகள் !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி