Ads 468x60px

Monday, April 27, 2015

நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..!


அழகழகா பூத்தொடுத்து
ஆசையெல்லாம் கோர்த்தெடுத்து
அந்தியில காத்திருந்தேன்
ஆச மச்சான் வரவுக்குத்தான்.

ஆத்தாடி வழியப் பாத்து
அங்கமெலாம் நோகுதடி
நேரத்தோட போனமச்சான்
நெனப்பென்ன வாட்டுதடி!

காத்தோட சேதிசொன்னேன்
காததூரம் போகலையே...
பூக்காதில் போட்டுவச்சேன்
பொழங்குதடி வாசமாத்தான்!

கருத்து வரும் மேகத்திடம்
கண்ணசைவில் சொல்லி விட்டேன்..
நிறுத்தி வழி கேட்டு வரும்
நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..
நெசமாவே ஆசவுண்டா
நெஞ்சோரம் சொல்லுமச்சான்!
இன்னும் வாசிக்க... "நிலவுக்குந்தான் காத்திருக்கேன்..!"

Saturday, April 25, 2015

அன்பின்றி அகிலத்தில் நன்மை உண்டோ?

ஆடுகின்ற ஆசைகளால் நிறைவும் உண்டோ ?
         அன்பின்றி அகிலத்தில் நன்மை உண்டோ?
பாடுகின்ற பாட்டினிலும் கூட நல்ல
        பார்சிறக்கக் கருத்துகளும் இருக்க வேண்டும்.
தேடுகின்ற தேவைகளில் எல்லாம் நாட்டில்
      தீமையெதும் ஏற்படாது வளர்க்க வேண்டும்.
நாடுகின்ற நன்மைகளும் செழிக்க நம்மில்
       நட்புணர்வும் நற்குணமும் இருக்க வேண்டும்!

செய்கின்ற தொழில்களிலே இயற்கை நன்மை
       தருகின்ற வகையாக அமைய வேண்டும்.
நெய்கின்ற ஆடைகளும் தமிழர் வாழ்வில்
       நேர்மையினை உணர்த்திடவே இருத்தல் வேண்டும்.
மெய்யென்ற உணர்வுகளே ஓங்கி அன்பர்
        மேன்மைகளை உடுத்தியேதாம் வாழ வேண்டும்.
பெய்கின்ற வான்மழையைப் போலே நாளும்
       பெருமிதமாய் நற்கொள்கை வளர வேண்டும்.

இன்னும் வாசிக்க... "அன்பின்றி அகிலத்தில் நன்மை உண்டோ?"

Thursday, April 23, 2015

அவள் நினைவு!

இயற்றரவிணைக் கொச்சகக் கலிப்பா

தேங்காத நீருற்றாய்த் தேடிவரும் தாயன்பாய்
நீங்காது நின்று நிறைந்த அவள்நினைவு!
தூங்காது காத்துத் துயரினைப் போக்கிடும்!
தீங்கெனைத் தீண்டாது சீராட்டிக் காத்திடும்!
மாங்குயில் ஓசையாய் வந்தெனைச் சேர்ந்திடும்!
பூங்கொடி யாகவுளம் பூத்துப் பொலிந்திடும்!
தாங்கிட நானும் தவிக்கின்றேன் என்னவளே!
ஓங்கி ஒளித்திடும் என்குரல் கேட்டிடுவாய்!இன்னும் வாசிக்க... "அவள் நினைவு!"

Monday, April 20, 2015

தாயும் - தமிழும்!


அள்ளி அணைத்தே அமுதினை ஊட்டிய அன்னையினைத்
துள்ளி விளையாடி இன்பம் சுவைத்து மகிழ்ந்தவளைப்
பள்ளி அனுப்பிப் படித்திடச் செய்துனைப் பார்த்தவளைத்
தள்ளி நிறுத்தத் துணிந்திடும் மாந்தரைத் தள்ளுகவே!

உள்ளம் உருகி அழைத்திடும் தாயை உணர்ந்திடுவாய்
கள்ளத் தனமறி யாத மனத்தினைக் காத்திடுவாய்
அள்ளி யெடுத்தே அனுதினம் தந்திடும் அன்புமழை
பள்ளிக் குழந்தை அடையும் பரவசம் பாய்சிடுமே!

தங்க மனத்தில் இடமே கொடுத்த தளிர்முகமே!
எங்கும் தெரியும் வடிவென ஆகி இருப்பவளே!
பொங்கும் இனிமை புதுநல் வரவாய் அமைந்ததுவே!
மங்கா ஒளியை மகிழ்வுடன் வார்க்கும் தமிழ்மகளே!

கட்டளைக் கலித்துறை


இன்னும் வாசிக்க... "தாயும் - தமிழும்!"

Thursday, April 9, 2015

ஓடியே ஒளிவதும் தகுமோ?

தள்ளியே நின்று தன்னையே நோக்கிச்
        சாகசம் புரிந்தவன் யாரோ?
துள்ளியே ஓடும் மானினை ஒத்த
         சுந்தரி இவளது அகத்தை!
அள்ளியே அணைத்து அகத்தினில் சூடி
          அந்தியில் போனவன் பாதை
உள்ளமே நாட உறவினைத் தேட
         ஓடியே ஒளிவதும் தகுமோ?

 மனதினைக் கவர்ந்து மறைவினில் இருக்கும்
         மன்னவன் பெயரதும் அறியேன்!
கனவினைக் கொடுத்த கள்வனின் முகமே
         கரும்பென இனித்திடும் என்பேன்!
இனியென ஆகும் இவளது நிலையே
         எண்ணியே கனத்தது நெஞ்சும்!
நனித்திடும் நினைவால் நலிந்திடத் தேகம்
        நாணமும் தொலைத்தது பெண்மை!


விளம் மா விளம் மா
விளம் விளம் மா எழுசீர் விருத்தம்.
இன்னும் வாசிக்க... " ஓடியே ஒளிவதும் தகுமோ? "

Thursday, April 2, 2015

கட்டுக் கடங்கா ஆசையிது !

 
கட்டுக் கடங்கா ஆசையிது
       கதைத்து மகிழும் நேரமிது
தட்டிக் கைகள் பாராட்டும்
       தாளம் போட்டுச் சீராட்டும்
கட்டித் தங்கம் போலிருக்கும்
       கரும்புச் சுவையாய் இனித்திருக்கும்
எட்டிப் போக நினைத்தவரை
        எளிதாய் கவரும் விந்தையிது!


என்ன என்று கேட்போரே
         என்னில் இருக்கும் அதுவேதான்
கன்னித் தமிழே பெயராகும்
         கருவாய் இருக்கும் கவியாகும்
மின்னிச் சிரிக்கும் மின்னலென
          வனப்பைக் கொடுக்கும் வள்ளலென!
கன்னம் மிளிரப் பேசுமங்கை
          கனவில் மிதப்பேன் நாளுமிங்கே!


கருத்தில் நுழைந்த காரிகையைக்
         கண்ணாய்ப் போற்றி வணங்கிடுவேன்!
மரமாய்க் காக்கும் நிழலுமவள்
        மனத்தை மயக்கும் மாதுமவள்
உரமாய் இருந்தே  உழவினிலே
        உழைத்தக் களைப்பை தீர்த்திடுவாள்!
தரமாய் நெஞ்சில் உயர்ந்தவளைத்
        தமிழால் வணங்கிப் போற்றிடுவேன்.

வளைந்து போகும் நதியழகை
          மனத்தே காணச் செய்திடுவாள்
களைப்பு நீக்கும் கலையதனைக்
          கற்ற ஆசான் பெருந்தகையே
வளமே காணச் செய்திடுவாள்
           வாழ்வில் எழிலைக் கூட்டிடுவாள்!
களஞ்சேர் நெல்லைச் சேர்த்திடுவோர்
           கவலை நீக்கும் கலையழகே!

எண்ணக் கலவை எடுத்தியம்ப
          எழிலாய்த் தோன்றும் வடிவமிது!
கண்ணில் காணும் காட்சிகளைக்
          கவிதை வடிவில் ஏடேறும்!
மண்ணில் பிறந்த மாந்தரினம்
            வீரம் காதல் வெளிப்படுத்த
பண்ணாய் இசைத்துப் பாடிடுவோம்
            பரவும் தமிழர் பண்பாடே!
இன்னும் வாசிக்க... "கட்டுக் கடங்கா ஆசையிது !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி