Ads 468x60px

Thursday, March 26, 2015

தேடும் நிம்மதி எங்கே ?

ஆடும் மாடும் வளர்த்து நாளும்
             அமுதம் உண்டோமே!
ஓடும் நதியின் அழகில் ஒன்றாய்
             ஊரில் வாழ்ந்தோமே!
பாடும் குயிலின் ஓசை யோடு
             பறந்த காலத்தில்
தேடி வந்த அமைதி கெட்டுத்
               தீயில் வாடுகிறோம்!

பதியம் இட்டுப் பாத்தி கட்டிப்
             பார்த்த நல்வேலை
எதையோ தேடி எங்கோ ஓடி
            எல்லாம் தொலைத்தோமே!
இதுவும் விதியோ என்றே நாமும்
            இன்று புலம்புகிறோம்!
மதியும் கெட்டு மாசைக் கற்று
           மண்ணாய்ப் போகின்றோம்!
கஞ்சி குடித்து வாழ நமக்குக்
             கழனி இருக்கிறது!

பஞ்சம் என்ற பெயரை அறியாப்
             பழமை திரும்பாதோ?
எஞ்சி இருப்ப தென்ன நம்மில்
            எச்சில் பிழைப்பன்றோ!
வஞ்சம் கொண்டு வாடி வதங்கும்
           வறுமை நிலையன்றோ!

உழுது நிலத்தை உண்டு மகிழ்ந்த
           உழைப்பை வெறுத்தோமே!
 எழும்பும் விதையும் எட்டி உதைக்க
           எங்குக் கற்றோமோ?
விழுந்த நம்மைத் தூக்கிச் சுமக்க
           விரும்பும் இயற்கையினால்
பழுதே இல்லாப் பசுமை எங்கும்
             பரவிச் செழித்திடுமோ? 

37 comments:

 1. பழமைக்கு நாம் திரும்பினால் எல்லாம் சரியாகி விடும்...

  ReplyDelete
  Replies
  1. மின்னல் வேக வருகைக்கு மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 2. பழமை திரும்பாதோ?...இது தான் என் ஏக்கமும் உலகப் பிரச்சனை பல ஓயும்.
  கவி வரிகள் மிக நன்று...sis,,,

  ReplyDelete
  Replies
  1. மிகவும் மகிழ்ச்சிங்க தோழி. நன்றியும்.

   Delete
 3. யானைகட்டி மன்னன் போரடித்த காலமுண்டு,
  எலியுமெறும்பும் தன்வளைசேர்க்கும் காலமிது,
  கோவணமேந்தியவர் கோணலாய் ஆளவில்லை
  கோடிசேர்த்தவர் ஆட்டம் கோமாளி கூத்தாக,
  குயில்பாட்டுக் காணவில்லை,தென்றல் வீசவில்லை,
  நரியோசைப் பட்டுப்போய் இயந்திர ஊளைகளாய்,
  பணம்கொண்டு வாழ்ந்திடலாம் என்ற சிந்தனையால்
  அறியாமை வளர்கிறது,அன்புதேய்ந்து மடிகிறது.
  பழையதை நினைப்பூட்டும் கவிதைக்கு நன்றியதை
  எழுதி ஏர்பூட்டி மாலையாக்கிய இதயத்துக்கும் 'நன்றி'

  ReplyDelete
  Replies
  1. தாங்கள் சொல்வதும் உண்மையே கோடி சேர்க்கும் ஆசையில் ஆடும் கோமாளிக்கூட்டங்களால் வந்த தீமை என்று அழியோமோ ?

   Delete
 4. உழுது நிலத்தை உண்டு மகிழ்ந்த
  உழைப்பை வெறுத்தோமே!
  எழும்பும் விதையும் எட்டி உதைக்க
  எங்குக் கற்றோமோ?
  விழுந்த நம்மைத் தூக்கிச் சுமக்க
  விரும்பும் இயற்கையினால்
  பழுதே இல்லாப் பசுமை எங்கும்
  பரவிச் செழித்திடுமோ?
  எத்துனை உண்மை, எங்கே செல்கிறோம் நாம். அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 5. வயல்வெளிகள் எல்லாம் வீட்டு மனைகள் ஆகி வருவது வேதனைதான்! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 6. வணக்கம்
  பழைய நினைவுகளை மீட்டுப்பார்க்க செய்துள்ளது நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி த.ம4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்கசகோ.

   Delete
 7. பழைய வாழ்க்கை மீண்டு(ம்) வருமா ?
  இந்த மாற்றத்திற்க்கு அரசாங்கமும் ஒரு காரணமே....
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சகோ. சரியாகச் சொன்னீர்கள்.

   Delete

 8. ////தேடும் நிம்மதி எங்கே ? /// நிச்சயம் நெட்டில் இல்லை அப்படி இருந்திருந்தால் எங்கே நிம்மதி என்று கேட்க தோன்றியிருக்காது

  ReplyDelete
  Replies
  1. இயற்கையை அழித்து எங்கே நிம்மதி என்று கேட்டால் எப்படிக் கிடைக்கும் ? நமக்கு நாமே தேடிக்கொண்டது தானே...

   Delete
 9. \\எஞ்சி இருப்ப தென்ன நம்மில்
  எச்சில் பிழைப்பன்றோ!
  வஞ்சம் கொண்டு வாடி வதங்கும்
  வறுமை நிலையன்றோ!\

  உண்மைநிலையை எடுத்துரைத்து சுருக்கென மனம் தைக்கின்றன வரிகள்.

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 10. விவசாயத்தை ஒரு இழிநிலை தொழிலாக சமுதாயம் நினைக்கும் நிலையை மாற்ற வேண்டும். அப்போதுதான் அதற்கான மேன்மை கிட்டும். அப்போதுதான் நாம் தேடும் நிம்மதி கிடைக்கும்.

  பாதிப்பை ஏற்படுத்திய கவிதை!
  த ம 6

  ReplyDelete
  Replies
  1. உண்மையே மக்கள் உணரவேண்டும். அப்போதே மாற்றம் உண்டாகும். தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிங்க.

   Delete
 11. இயற்கை தந்த செல்வங்களை இழந்த பின்பு வாழ்வேது தோழி ஆனாலும்
  அந்த இயற்கையைப் போட்டி போட்டு அழித்து வருபவர்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள் தான் என் செய்வோம் :( அருமையான வெண்பா விருத்தம் !வாழ்த்துக்கள் தோழி .

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.

   Delete
 12. விருத்தம் கண்டேன்-நல்
  விருந்தாய் உண்டேன்
  பொருத்தம் முற்றும்-மகிழ்வு
  பொங்கிட உற்றேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க ஐயா.

   Delete
 13. எஞ்சி இருப்ப தென்ன நம்மில்
  எச்சில் பிழைப்பன்றோ//
  உங்களது எண்ணம் புரிகிறது

  ReplyDelete
  Replies
  1. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 14. இலக்கணம் 1 தமிழ் இலக்கண உலகில் முதல் நூல் வழி நூல் சார்பு நூல் என்ற ஒரு பகுப்பு உண்டு அதன் படி அகத்தியம் ...வருக தோழி

  ReplyDelete
  Replies
  1. தகவலுக்கு நன்றி தோழி.

   Delete
 15. Replies
  1. வருக சகோ. நன்றியும்.

   Delete
 16. அருமையான விருத்தப்பாக்கள் சகோ..!
  இப்பொழுதுதான் தெரிந்தது தங்களின் புதிய பதிவு.
  ஆனால் மிகத்தாமதமாக வருகிறேன்.

  அருமை அருமை தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ.தங்கள் வருகை எனை மேலும் ஊக்கப்படுத்தும் நன்றிங்க சகோ.

   Delete

 17. வணக்கம்!

  வாடும் உலகின் வறுமை அறிந்து
    வடித்த கவிகண்டேன்!
  ஓடும் மனத்துள் ஓங்கும் ஆசை
    சூடும் துயர்என்பேன்!
  கேடும் நிறைந்து கீர்த்தி இழந்து
    கீ்ழ்மை ஏய்துவரோ?
  பாடும் கலையில் பகன்ற கேள்வி
    பதிலைத் தேடுகிறேன்

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு


  ReplyDelete
  Replies
  1. இயற்கையை சிதைத்தால் மக்களின் நிலை என்னவாகும் ?
   கேள்வியே என்பதை சரியாகச் சொன்னீர்கள் ஐயா.

   Delete
 18. பசுமையை நாம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைக்க ஆரம்பித்துவிட்டோம். அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.

  ReplyDelete
 19. நம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.

  பாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.


  இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.

  Regards,
  gopalelango.blogspot.com

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி