Ads 468x60px

Thursday, March 5, 2015

காதல் தீவே!கண்ணுக்குள் பூத்திருக்கும் கட்டழகே! காவியமே!
                            காதல் தீவே!
எண்ணத்தில் தான்புகுந்து ஏதேதோ செய்கின்றாய்
                             இன்பத் தேனே!
வண்ணங்கள் மறந்தேதாம் வானவில்லை நான்தேடி
                              வானம் நோக்க!
பெண்ணிலவாய்ச் சிரித்துமங்கை வேடிக்கை காட்டிநின்றால்
                               பெருமை உண்டோ?


கட்டழகின் மதுவுண்டு கனவுலகில் மிதக்கின்றேன்
                                  கன்னித் தீவே!
கட்டிவைக்க ஆசையென்ன காகிதமோ? கற்கண்டோ?
                                  கண்ணே நீயும்
மட்டில்லா மகிழ்ச்சிதரும் மணிக்குயிலே வாடியிங்கே
                                   வளமே காண!
எட்டிநின்றே பார்த்திருந்தால் என்னிதயம் தாங்கிடுமோ
                                  இன்பத் தேனே?


உன்னினைவை உடுத்துகின்றேன் உலகையுந்தான் மறக்கின்றேன்
                                உன்னால் நானே!
என்னினைவே இல்லாமல் எடுத்தெரிந்து போவதெங்கே
                                 எழிலே வா..வா!
தன்னிலையை மறக்கவைத்துத் தள்ளாட்டம் போடவைக்கும்
                                   தன்மை ஏனோ?
என்றியம்ப மனம்வருமோ? என்னுயிரைக் காதல்..தீ
                                   எரிக்கு திங்கே!


பார்த்தவிழி மூடவில்லை! பசிதூக்கம் ஏதுமில்லை!
                                    பதுமைப் பெண்ணே!
போர்வீரன் போலநானும் பூமியிலே உலவுகின்றேன்
                                    போதும் கண்ணே!
ஆர்ப்பரிக்கும் எண்ணமதை அழகாகத் தாலாட்டி
                                     அமுதைத் தாராய்!
வார்த்தெடுத்த வடிவழகே! வண்டமிழே! வான்மதியே!
                                     வளமே வாராய்!

32 comments:

 1. அறுசீர் விருத்தம் நறுமண விருத்தம்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. தங்கள் வருகை கண்டு பெரிதும் மகிழ்ந்தேன். நன்றிங்க ஐயா.

   Delete
 2. பாரதிதாசனின் பாணியில், நான்கு காய்ச்சீர் இரண்டு மாச்சீர் எனவரும் அறுசீர் ஆசிரிய விருத்தப்பா அருமை என்றால், அதில் ஆணின் பார்வையில் எழுதிய பாங்கும் அழகு. காதல் சொட்டும் கவிதையும் அழகு. உனது முதல் தொகுப்பைப் பார்த்து, அண்மைக்காலக் கவிதைகளையும் பார்த்தால் கவிதை இலக்கணம் கைவந்த பரிணாமம் நல்ல வளர்ச்சி தெரிகிறதும்மா.
  நல்ல மரபுக் கவிதைகள் தமிழில் குறைந்து வருகின்றன. அதிலும் பெண்கவிஞர்களின் பங்கு மிகவும் குறைந்து வருகின்ற இன்றைய சூழலில் உங்கள் பதிவுகள் நிச்சயம் பேசப்படும். எனது ஒரு சிறு வேண்டுகோள்-- காதல் கவிதையுடன் ஆண்-பெண் இருவருக்கும் பொதுவான சமூகச் செய்திகளை உங்கள் இனிய மரபுக்கவிதைகளில் அதிகம் எதிர்பார்க்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. அண்ணா வாங்க! வாங்க! மிக்க மகிழ்ச்சிங்க அண்ணா. தங்களின் வருகையும் ரசித்துக் கருத்திட்டமைக்கும். ஆனால் ஒரு வருத்தம் அது என்ன வேண்டுகோள் என்றெல்லாம் என்னிடம் பேசுவது. முன்பே சொல்லியிருக்கிறேனே. கட்டளையிடுங்கள் இந்த தங்கைக்கு என்று.

   Delete
 3. எனது வேண்டுகோளைத் தங்கை நிறைவு செய்வாய் எனும் நம்பிக்கையில் த.ம.வாக்கு எண்-3

  ReplyDelete
  Replies
  1. நிச்சயம் தங்களின் எண்ணப்படி எழுதுகிறேன் அண்ணா. நிறை - குறைகளை இந்த தங்கைக்கு குட்டி உணர்த்துங்கள்.

   Delete
 4. அருமையான அழகான வார்த்தைக் கோர்ப்பு, சரளமான சொற்றொடர் வரிசை, வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க தோழி.

   Delete
 5. மிகவும் ரசித்தேன்.

  உங்கள் சொற்தேர்வு கவிவடிவம் எல்லாவற்றிலும் மாபெரும் முன்னேற்றம்... பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் தங்களின் பாராட்டு மிகவும் மகிழ்வளித்தது. நன்றிங்க.

   Delete

 6. வணக்கம்!

  காதலின் தீவென்று காட்டும் கவிதைகளை
  ஓதிட ஊறும் உணர்வு!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தினை பெற்றேதான் மாண்புமிகு ஆசானால்
   வாழ்வினில் காண்பேன் வளம்.
   வணங்கித் தொடர்கிறேன் ஐயா.

   Delete
 7. நிறைந்த முன்னேற்றம்
  வாழ்த்துடன்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சிங்க தோழி. நன்றியும்.

   Delete
 8. அருமை சகோ செதுக்கிய வரிகள் பாராட்டுகள்
  நலம் தானே
  தமிழ் மணம் 5

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. நலமே.தங்களின் நலனை அறிய ஆவல்.

   Delete
 9. வார்த்தெடுத்த வடிவழகே! வண்டமிழே! வான்மதியே!
  வளமே வாராய்!//

  கவிதை அருமை சசி .

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. தங்களின் வருகையால் மகிழ்ந்தேன். நன்றியும்.

   Delete
 10. ரொம்ப நாட்கள் ஆகி விட்டது சகோதரி... தொடர்ந்து ரசிக்க வையுங்கள்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சகோ. இனி தொடர்ந்து வர முயற்சி செய்கிறேன். நன்றிங்க சகோ.

   Delete
 11. முத்து நிலவன் ஐயா சொன்னது போல இப்போதுள்ள கவிதைகளில் தெரிகிற மரபுச் செறிவு அப்போது காணப்படவில்லை. குறுகிய காலத்திற்குள் மரபுக் கவிதை கற்றுக்கொண்டீர்களா? ஆனால் நீங்கள் எழுதியதைப் பார்த்தால் புதிதாக கற்று எழுதியது போல் தெரியவில்லை.
  சந்தம் விளையாடுகிறது. வாழ்த்துக்கள்
  பொழியட்டும் மரபுக் கவிமழை

  ReplyDelete
  Replies
  1. இப்போதே கற்று வருகிறேன். மிக்க மகிழ்ச்சிங்க . உற்சாகப்படுத்தும் தங்களின் வாழ்த்து என்னை மேலும் மெருகேற்றும். மிக்க நன்றியும்.

   Delete
 12. அருமை. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 13. சசி,சொல்லவே வார்த்தையில்லை.தங்களது சென்ற ஆண்டு கவிதைக்கும் இப்போதுள்ளதுக்கும் எவ்வளவு வேறுபாடுகள்.சிறப்பாய் இருக்கிறது .மாறியது நெஞ்சம் மாற்றியது யாரோ?

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி நன்றியும்.

   Delete
 14. Replies
  1. வருகைக்கு நன்றி.

   Delete
 15. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவிதை கண்டு
  மகிழ்ந்தேன் சகோதரியாரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வருக சகோ. வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 16. காற்றேநில் ஒருசேய்தி கற்கண்டு மரபெங்கும் காணோம் என்ற
  நேற்றிடத்தில் போய்ச்சொல்க! நேரில்வர அலைப்புண்ட தாகம் தீர்க்க
  ஊற்றுண்டு நாவிற்கே உவப்புண்டாம் உணர்வூக்கும் பாக்கள் கட்ட
  ஏற்றகவி வாணிதென்றல் சசிகலாவிங் கேயிருக்கக் காண்க வென்றே!!!

  அருமை சகோ!

  த ம கூடுதல் 1

  ReplyDelete
  Replies
  1. வழங்கிய வாழ்த்தினிலே வாயடைத்து நிற்க
   செழிக்கவே தாரிர் சிறப்பு.
   மிக்க மகிழ்ச்சிங்க சகோ. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியும்.

   Delete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி