Ads 468x60px

Thursday, March 26, 2015

தேடும் நிம்மதி எங்கே ?

ஆடும் மாடும் வளர்த்து நாளும்
             அமுதம் உண்டோமே!
ஓடும் நதியின் அழகில் ஒன்றாய்
             ஊரில் வாழ்ந்தோமே!
பாடும் குயிலின் ஓசை யோடு
             பறந்த காலத்தில்
தேடி வந்த அமைதி கெட்டுத்
               தீயில் வாடுகிறோம்!

பதியம் இட்டுப் பாத்தி கட்டிப்
             பார்த்த நல்வேலை
எதையோ தேடி எங்கோ ஓடி
            எல்லாம் தொலைத்தோமே!
இதுவும் விதியோ என்றே நாமும்
            இன்று புலம்புகிறோம்!
மதியும் கெட்டு மாசைக் கற்று
           மண்ணாய்ப் போகின்றோம்!
கஞ்சி குடித்து வாழ நமக்குக்
             கழனி இருக்கிறது!

பஞ்சம் என்ற பெயரை அறியாப்
             பழமை திரும்பாதோ?
எஞ்சி இருப்ப தென்ன நம்மில்
            எச்சில் பிழைப்பன்றோ!
வஞ்சம் கொண்டு வாடி வதங்கும்
           வறுமை நிலையன்றோ!

உழுது நிலத்தை உண்டு மகிழ்ந்த
           உழைப்பை வெறுத்தோமே!
 எழும்பும் விதையும் எட்டி உதைக்க
           எங்குக் கற்றோமோ?
விழுந்த நம்மைத் தூக்கிச் சுமக்க
           விரும்பும் இயற்கையினால்
பழுதே இல்லாப் பசுமை எங்கும்
             பரவிச் செழித்திடுமோ? 
இன்னும் வாசிக்க... "தேடும் நிம்மதி எங்கே ?"

Friday, March 20, 2015

காதல் பருவமதில் !


பார்த்த நாளாய்த் தூக்கம் இல்லை
              பாவை நெஞ்சினிலே!
வார்த்தை இல்லா மௌன யுத்தம்
            மனதில் நடக்கிறதே!
கார்கா லத்து மேகம் போலே
              கனவில் மிதக்கின்றாள்!
போர்வை கொண்டு காதல் நினைவைப்
             போர்த்தப் பார்க்கின்றாள்.

சின்னச் சிட்டாய்ச் சிரிக்கும் மொட்டாய்த்
                திரிந்த இளமங்கை!
கன்னல் கவியில் கலந்து நாளும்
                காதல் புரிகின்றாள்!
மின்னல் பார்வை மேனி தீண்ட
               மீட்டும் இசையினிலே!
இன்னல் தீண்டா உலகம் இதுவே
               என்றே சொல்கின்றாள்.

இனிக்கும் காதல் தவிக்கும் தனிமை
               இவளுள் வந்ததுவோ?
பனியில் நனைந்த மலரைப் போலே
               பார்க்க இனித்ததுவோ?
கனியின் சாறாய்க் கவனம் ஈர்த்த
               காதல் பருவமதில்
நனியும் ஆவல் நல்கும் சுவையும்
                நாணம் பயிற்றிடுமே!
இன்னும் வாசிக்க... "காதல் பருவமதில் !"

Saturday, March 14, 2015

அடைகாத்த சொற்குவியல்! (ஏக்கம் நூறு)

புதுக்கோட்டையில்  பட்டுக்கோட்டையார் மக்கள் இயக்கம் நடத்திய இலக்கியத்  திருவிழாவில் எங்கள் ஆசான் கவிஞர் திரு.கி.பாரதிதாசன் ஐயா அவர்களின் ஏக்கம் நூறு மற்றும் கனிவிருத்தம் ஆகிய நூல் வெளியீட்டு விழா இனிதே நடைபெற்றது.

ஐயா சென்னை வந்திருந்த போது எனக்கும் நூல்களை அன்புடன் வழங்கினார். மிகுந்த மகிழ்ச்சியுடன் பெற்றுப் படித்து மகிழும் நேரத்தில் என் எண்ணத்தே எழுந்த உணர்வுகளை இங்குத் தங்களுடன் பகிர்ந்துமகிழ்கிறேன்.

1.
ஏக்கமதைப் பாட்டாக ஈந்துவந்தீர்! நற்காதல்
 ஆக்கமதைப் போற்றும் அகம்!

2..
வெண்பட்டுக் காதலியை விந்தைத் தமிழாலே
பண்கொண்டு பாடிய பாட்டு!

3.
கன்னியவள் ஏக்கத்தைக் கன்னல் தமிழாலே!
பின்னியவர் காண்கவே பீடு!

4.
அடைகாத்த சொற்குவியல்! ஆரமுதம்! உண்டு
மடைதிறந்து பாடும் மனம்!

5.
கற்கண்டாய் ஈந்த கவிதைகள் அத்தனையும்
விற்கொண்டு  தாக்கும் விரைந்து!

6.
பாடிய பாட்டெலாம் பாவைமுகம் வந்திங்குச்
சூடிய காதலின் சொத்து!

7.
துன்பத்தை ஓட்டும்! சுடர்கவி அத்தனையும்
இன்பத்தைக் கூட்டும் இசைத்து!

8.
கண்பட்டுப் போகுமிந்தக் காவியக் காரிகைக்கு
மண்ணெடுத்துச் சுற்றல் மரபு!

9.
மண்ணுலகம் போற்றும்! வளர்கவி பாவலரைப்
பண்ணுலகம் போற்றும் பணிந்து!

10.
கவிஞர் கி.பாரதி தாசன் கவிநூல்
புவியில் பெறுமே புகழ்!

   
இன்னும் வாசிக்க... "அடைகாத்த சொற்குவியல்! (ஏக்கம் நூறு)"

Thursday, March 12, 2015

பெண்ணே உன்னைவிட உயர்வில்லை!


பெண்ணுரிமை எதுவென்று பெருங்கேள்வி கேட்கின்றேன்
                                                                          பதிலோ இங்குக்
கண்மூடிச் சொல்லிடுவார் கைதிநிலை நல்லதென்று
                                                                          தகுமோ சொல்வீர்?
முன்னோர்கள் சதிசெய்தார்! முன்னேறத் தடைபோட்டார்!
                                                                          முகமே கோண!
எண்எழுத்தில் வாழுமந்தப் பெண்ணுரிமை என்றெண்ணி
                                                                             ஏங்கும் நெஞ்சே.

அடங்குதலே முறையென்பார் ஆட்டுவித்தே பழக்கிடுவார்
                                                                                         அன்றும் இன்றும்!
தடைசொல்லித் தடுத்தேதான் தகர்த்திடுவார் முயற்சிகளைச்
                                                                                          சிறைக்குள் பூட்டி!
மடைதிறந்த வெள்ளமென மாண்புறவே துணிந்திடவாய்
                                                                                             மகளே நீயும்!
துடுப்பாகத் தைரியத்தைத் துணையாக ஏற்றிடுவாய்!
                                                                                              துன்பம் நீங்கும்!


பொட்டுவைத்துப் பூவுமிட்டுக் கொலுபொம்மை என்றேதான்
                                                                                           பெண்ணை வைத்தார்!
கட்டிவைத்து முடக்குமிந்தத் தலைமுறையை எரித்திடவே
                                                                                          கனலை ஏற்று!
கொட்டிநமைக் குனியவைத்துக் கொண்டாட்டம் போடுமிந்தக்
                                                                                            கூட்டம் தன்னைக்
கட்டிவைத்துக் கடமையினை எடுத்துரைத்துக் கண்ணியத்தைக்
                                                                                            காத்து நிற்பாய்!

அதிகாலை எழுந்தேதான் அடுக்களையில் நாள்தோறும்
                                                                                            ஆடும் ஆட்டம்!
பதிவிரதை பாங்கென்றே ஏட்டினிலே எழுதிவைத்தார்
                                                                                            பாராய் பெண்ணே!
சதியாலே நமைச்சாய்த்தார்! விதியென்று வீட்டினிலே
                                                                                           சாய்தல் ஏனோ?
மதிகொண்டு வென்றிடுவாய்! மடமையினைப் போக்கிடுவாய்!
                                                                                           மலர்ச்சி காண!


அன்புகொண்டு வாழ்ந்திடவும் ஆணவத்தை ஒடுக்கிடவும்
                                                                                          அறமே பாடு!
தன்னிலையை உணர்த்திடவும் தன்மானம் காத்திடவும்
                                                                                           தமிழைச் சூடு!
என்னயில்லை நம்மிடையே? எட்டிடுவாய் இமயத்தை
                                                                                           இனிமை யோடு!
உன்னைவிட உயர்வில்லை! ஓங்கட்டும் நம்பிக்கை!
                                                                                           ஒளிரும் நாடு!

இன்னும் வாசிக்க... "பெண்ணே உன்னைவிட உயர்வில்லை!"

Monday, March 9, 2015

வாடி வதங்கும் பெண்ணுலகு! வளமை காணல் எந்நாளோ?

குட்டிப் பெண்ணை ஒடுக்கிடவே
               கூட்டம் சுற்றும் அவனியிலே!
சட்டிப் பானை உலகமெனச்
               சட்டம் பேசும் வழக்குண்டு!
தட்டிப் பறிக்க உரிமையினைத்
            தாரம் என்றே விலங்கிட்டு
எட்டி உதைக்கும் கொடுமையினை
           எதிர்த்து வாழ்தல் எந்நாளோ ?

அடைத்து வைத்தே பழக்கிடுவார்
         அறிவாய் உள்ள பெண்ணினத்தை!
நடையே பழகும் பிள்ளையையும்
        நயவஞ் சகரும் தொடர்ந்திடுவார்!
உடைக்குள் மறைத்த மேனியினை
      உற்று நோக்கும் கயவருக்குத்
தடையும் உண்டோ? இக்கொடுமை
      தாக்கி அழித்தல் எந்நாளோ?

அச்சம் நாணம் மடமையென
          அடிமைத் தனத்தைப் பழக்கிவிட்டே
இச்சை கொண்ட ஆண்வர்க்கம்
         இங்கே நம்மை ஏய்த்திடுவார்!
பிச்சை கேட்டே பெண்ணினமும்
          பிணியால் வாடிக் கிடக்கிறது.
எச்சில் பிழைப்பு? புவிகொண்ட
         இன்னல் ஒழித்தல் எந்நாளோ?

வற்றா நதிக்கும் பெண்பெயரே
        மானைத் துரத்தும் புலிவேடம்!
விற்கும் பொருளின் விளம்பரத்தும்
      வேடக் காட்சி பெண்ணாகும்!
மற்ற வர்க்கம் எதற்குமிந்த
       மாசு உண்டோ எண்ணுங்கள்?
பெற்று வந்த வரமிதுவோ?
       பிழைகள் அழித்தல் எந்நாளோ?

கூடிப் பறக்கும் பறவையினம்
        கொடுமை செய்யாப் பெண்ணுறவை!
நாடி வந்த இணையிடமே
        நகையும் பணமும் கேட்டிடுமோ?
தேடி வந்த துணையிடமே
         தேவை நாடும் ஆணினமே!
வாடி வதங்கும் பெண்ணுலகு
        வளமை காணல் எந்நாளோ?

எண்ணிக் களித்திங்கே ஏற்றங்கள் தந்திடுவாய்!
கண்ணுக் கினிமையைக் கார்முகிலாய் ஈந்திடுவாய்!
என்னுயிர்த் தாய்மொழியே! இன்பத்தின் ஊற்றாகி
இன்னல் தடுப்பாய் இசைந்து!
      
        
இன்னும் வாசிக்க... "வாடி வதங்கும் பெண்ணுலகு! வளமை காணல் எந்நாளோ?"

Thursday, March 5, 2015

காதல் தீவே!கண்ணுக்குள் பூத்திருக்கும் கட்டழகே! காவியமே!
                            காதல் தீவே!
எண்ணத்தில் தான்புகுந்து ஏதேதோ செய்கின்றாய்
                             இன்பத் தேனே!
வண்ணங்கள் மறந்தேதாம் வானவில்லை நான்தேடி
                              வானம் நோக்க!
பெண்ணிலவாய்ச் சிரித்துமங்கை வேடிக்கை காட்டிநின்றால்
                               பெருமை உண்டோ?


கட்டழகின் மதுவுண்டு கனவுலகில் மிதக்கின்றேன்
                                  கன்னித் தீவே!
கட்டிவைக்க ஆசையென்ன காகிதமோ? கற்கண்டோ?
                                  கண்ணே நீயும்
மட்டில்லா மகிழ்ச்சிதரும் மணிக்குயிலே வாடியிங்கே
                                   வளமே காண!
எட்டிநின்றே பார்த்திருந்தால் என்னிதயம் தாங்கிடுமோ
                                  இன்பத் தேனே?


உன்னினைவை உடுத்துகின்றேன் உலகையுந்தான் மறக்கின்றேன்
                                உன்னால் நானே!
என்னினைவே இல்லாமல் எடுத்தெரிந்து போவதெங்கே
                                 எழிலே வா..வா!
தன்னிலையை மறக்கவைத்துத் தள்ளாட்டம் போடவைக்கும்
                                   தன்மை ஏனோ?
என்றியம்ப மனம்வருமோ? என்னுயிரைக் காதல்..தீ
                                   எரிக்கு திங்கே!


பார்த்தவிழி மூடவில்லை! பசிதூக்கம் ஏதுமில்லை!
                                    பதுமைப் பெண்ணே!
போர்வீரன் போலநானும் பூமியிலே உலவுகின்றேன்
                                    போதும் கண்ணே!
ஆர்ப்பரிக்கும் எண்ணமதை அழகாகத் தாலாட்டி
                                     அமுதைத் தாராய்!
வார்த்தெடுத்த வடிவழகே! வண்டமிழே! வான்மதியே!
                                     வளமே வாராய்!
இன்னும் வாசிக்க... "காதல் தீவே!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி