Ads 468x60px

Wednesday, January 7, 2015

எண்ணம் குடிக்கும் பேரழகே !


கண்ணே மணியே! காதலியே!
         கவலை தீர்க்கும் ஆரமுதே!
எண்ணி மகிழ்ந்தேன் பூங்கொடியே!
           என்னுள் பூக்கும் தாமரையே!
வண்ண ஆடை நீயுடுத்த
           வாடைக் காற்றும் தீண்டுதடி!
எண்ணம் குடித்த பேரழகே
           என்னை ஏற்றுத் தழுவாயோ!


பாலை வார்க்கும் உன்விழிகள்!
           பருவம் பொழியும் இன்மொழிகள்!
காலம் நேரம் மறந்தேநான்
          கனவை உடுத்தித் திரிகின்றேன்!
காலை மலர்ந்த சோலையெனக்
           கண்ணுக் கினிமை தருவாயோ!
மாலை உலவும் நிலவாக
           மனத்துள் உலவ வருவாயோ!

அல்லிப் பூக்கும் குளத்தோரம்
          அன்பே நானும் காத்திருப்பேன்!
மல்லி மலர்கள் தாம்சூடி
          மாதே வருவாய் எனைத்தேடி!
செல்வி உன்னைப் பார்த்தவுடன்
           சேரத் துடிக்கும் இதயமடி!
நல்ல பதிலைச் சொல்வாயோ!
          நாளை என்று மறுப்பாயோ?

தாகம் பெருகிக் தவிக்கின்றேன்!
        தமிழைப் பாடிக் குவிக்கின்றேன்!
நாகம் போன்றே நாம்பின்னி
         நலமே காணத் துடிக்கின்றேன்!
வாகை சூடும் நாளதனை
        மனமோ எண்ணி ஏங்குதடி!
மோகத் தீயில் வாடுகிறேன்!
        மௌனம் ஏனோ முத்தமிழே!

பூவில் அமர்ந்த வண்டாகப்
         புதைந்து போனேன் உன்னழகில்!
நாவில் பிறக்கும் வார்த்தைகளும்
        நங்கை உன்பேர் சொல்லுதடி.
தாவி யணைக்க துடித்தேதான்
        தவித்துக் கிடக்கும் மனமேதான்!
கூவி யழைக்கும் குயிலேவா
         கூடிப் பேசிக் களித்திருப்போம்!

கண்ணின் இமையாய்க் கமழ்பவளே! நான்பாடும்
பண்ணின் சுவையாய்ப் படர்பவளே! - எண்ணத்துள்
நின்றாடும் நேரிழையே! நீங்காத உன்னினைவு
திண்டாட வைக்கும் திரண்டு!

21 comments:

 1. உங்கள் எண்ணத்தில் உதித்த அழகான கவிதை

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் முத்தான வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 2. அருமை... ரசித்தேன் சகோதரி...

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 3. கவிதை அருமை அதற்கேற்ப புகைப்படங்களும் பொருத்தமானதே.....
  த.ம.3

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சி சகோ. படங்கள் தேடவே நேரம் பிடித்தது. அதனை ரசித்தது கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க சகோ.

   Delete
 4. கவிதை அருமை! தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றிங்க.

   Delete
 5. அடடா... அற்புதம்.

  காலம் நேரம் மறந்தேநான்
  கனவை உடுத்தித் திரிகின்றேன்!

  ஆஹா.... என்ன ஒரு கற்பனை!
  வாழ்த்துக்கள் சசிகலா.
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. அன்பான வாழ்த்தை அமுதெனத் தந்தீர்கள்
   என்பால் விளைந்த எழில்.

   மிக்க மகிழ்ச்சி தோழி. நன்றியும்.

   Delete
 6. வணக்கம் !

  அருமையான பா மாலை தோழி !மிக மிக ரசித்தேன் வாழ்த்துக்கள்
  மென் மேலும் தொடரட்டும் .

  ReplyDelete
  Replies
  1. அம்பாள் சூடிய வாழ்த்தை அகமகிழ்ந்தே ஏற்றேன் தோழி. மனமார்ந்த நன்றியும் தோழி.

   Delete
 7. அருமை தோழி..
  தமிழைப் பாடி குவிக்கிறார் என்றால் ஏங்கியே இருக்கட்டும் :)

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி. வளமான வாழ்த்துரை கண்டு மகிழ்ந்தேன். நன்றி தோழி.

   Delete
 8. அத்தனை இனிமை! அருமை!

  வண்ண விருத்தம் வரைந்தே மகிழ்வுடன்
  எண்ணம் நிறைந்தீரே இங்கு!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வண்ணமாய் வாழ்த்தீனிர் வானவில்லாய் ஏற்கநானும்
   கண்ணில் கரையும் கவி.
   மிக்க மகிழ்ச்சி தோழி. வருகை தந்து வாழ்த்தியமைக்கு.

   Delete

 9. வணக்கம்!

  பாடிவரும் தென்றலே! பைந்தமிழ்ப் பொன்னணியைச்
  சூடிவரும் தென்றலே! சொக்குகிறேன்! - ஓடிவரும்
  ஆற்று நடையாகச் சாற்றிய பாட்டெல்லாம்
  ஈற்றுவரை ஏந்தும் இனிப்பு!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. தேனமுத வாழ்த்தினையே தென்றலுக்கு சூட்டினீர்
   வானமுத பாக்கள் வடித்து.
   அகமகிழ்ந்தேன் ஐயா வருகையும் வெண்பா வாழ்த்தினையும் கண்டு வணங்கித் தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

   Delete
 10. அற்புதமான கவிதை...
  வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 11. பாலை வார்க்கும் உன்விழிகள்!
  பருவம் பொழியும் இன்மொழிகள்!
  அழகான கவிதை, அருமை!
  ,அன்புடன்
  அப்துல் வாஹித்

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி