Ads 468x60px

Monday, January 26, 2015

மனசெல்லாம் மத்தாப்பு !

 
கட்டான கட்டழகி
கரும்சாந்து பொட்டழகி
கண்ணசைச்சே எனைதுரத்தும்
கருமேக ஓட்டக்காரி.
தோப்போரம் காத்திருக்கேன்
தோரணமே நீ வாடி...
பேசாம பேசுமந்த
பெருவிழிய காட்டேன்டி...
ஆத்தோரம் காத்திருக்கேன்
ஆரமுதே வாயேன்டி..
அழுக்கெடுக்க எம்மனச
அரைநொடியும் ஏந்தேன்டி...
மாந்தோப்பில் மறைஞ்சிருந்தேன்
மனசெல்லாம் மத்தாப்பு
மரிக்கொழுந்தா உன்வாசம்..
மடிச்சி வைச்ச நெனப்பினிலே
வீசுதடி காதல் வாசம்..
பாட்டா பாடி காத்திருப்பேன்
விழி தோட்டா கொண்டு வாயேன்டி.
இன்னும் வாசிக்க... "மனசெல்லாம் மத்தாப்பு !"

Monday, January 12, 2015

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !

இருளினை அகற்றி எங்கும்
       எழிலினைக் கொடுத்த வள்ளல்
அருவியின் ஊற்றாய் நாளும்
       அழகுசேர் பணியைச் செய்யும்
கருணையின் வடிவாய் வந்த
        கதிரவன் புகழைப் பாட
அரும்சுவை நன்னாள் தையே
         அன்பினைப் பொங்கி வாழ்க!

பூங்கிளி கொஞ்சிப் பேசும்
         புத்தொளி எங்கும் வீசும்!
மாங்குயில் கூவிப் பாடும்
        மரத்தினில் அணில்கள் ஆடும்!
தேங்கிடா நதியின் ஓட்டம்
         தேவதை அழகை ஒக்கும்!
பாங்குடன் இன்பம் நல்கும்
        படர்புகழ்த் தைநாள் வாழ்க!


சில்லெனக் குளிரை நல்கி
        சிலிர்த்திடும் காலைக் காட்சி!
மல்லிகை மணத்தைத் தேக்கி
        வழங்கிடும் தென்றல் காற்று!
மெல்லவே பறக்கும் வண்டு
         விந்தையே பறவை கூச்சல்!
செல்லவே சுரக்கும் எண்ணம்
          சுடர்ந்திடும் தைநாள் வாழ்க!

வாசலில் வண்ணக் கோலம்
        வஞ்சியர் எண்ணம் மின்னும்!
மாசதை நீக்கும் வண்ணம்
        வளந்தரும் கதிரை வாழ்த்து!
பூசணிப் பூவும் வைத்துப்
        பொன்னெனப் பொலியும் வாயில்!
வாசமாய் மனத்தை நல்க
         வந்தொளிர் தைநாள் வாழ்க!


இளங்கதிர் கிழக்கே தோன்ற
         எங்குமே எழிலே கூடும்
களமதில் நிறைந்த நெல்லும்
         களைப்பதை நீங்க வைக்கும்!
வளமதைக் கண்ட மக்கள்
         மனங்களில் பூக்கும் இன்பம்!
உளமதில் உவகை பொங்க
         உதித்துள தைநாள் வாழ்க!
இன்னும் வாசிக்க... "இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் !"

Wednesday, January 7, 2015

எண்ணம் குடிக்கும் பேரழகே !


கண்ணே மணியே! காதலியே!
         கவலை தீர்க்கும் ஆரமுதே!
எண்ணி மகிழ்ந்தேன் பூங்கொடியே!
           என்னுள் பூக்கும் தாமரையே!
வண்ண ஆடை நீயுடுத்த
           வாடைக் காற்றும் தீண்டுதடி!
எண்ணம் குடித்த பேரழகே
           என்னை ஏற்றுத் தழுவாயோ!


பாலை வார்க்கும் உன்விழிகள்!
           பருவம் பொழியும் இன்மொழிகள்!
காலம் நேரம் மறந்தேநான்
          கனவை உடுத்தித் திரிகின்றேன்!
காலை மலர்ந்த சோலையெனக்
           கண்ணுக் கினிமை தருவாயோ!
மாலை உலவும் நிலவாக
           மனத்துள் உலவ வருவாயோ!

அல்லிப் பூக்கும் குளத்தோரம்
          அன்பே நானும் காத்திருப்பேன்!
மல்லி மலர்கள் தாம்சூடி
          மாதே வருவாய் எனைத்தேடி!
செல்வி உன்னைப் பார்த்தவுடன்
           சேரத் துடிக்கும் இதயமடி!
நல்ல பதிலைச் சொல்வாயோ!
          நாளை என்று மறுப்பாயோ?

தாகம் பெருகிக் தவிக்கின்றேன்!
        தமிழைப் பாடிக் குவிக்கின்றேன்!
நாகம் போன்றே நாம்பின்னி
         நலமே காணத் துடிக்கின்றேன்!
வாகை சூடும் நாளதனை
        மனமோ எண்ணி ஏங்குதடி!
மோகத் தீயில் வாடுகிறேன்!
        மௌனம் ஏனோ முத்தமிழே!

பூவில் அமர்ந்த வண்டாகப்
         புதைந்து போனேன் உன்னழகில்!
நாவில் பிறக்கும் வார்த்தைகளும்
        நங்கை உன்பேர் சொல்லுதடி.
தாவி யணைக்க துடித்தேதான்
        தவித்துக் கிடக்கும் மனமேதான்!
கூவி யழைக்கும் குயிலேவா
         கூடிப் பேசிக் களித்திருப்போம்!

கண்ணின் இமையாய்க் கமழ்பவளே! நான்பாடும்
பண்ணின் சுவையாய்ப் படர்பவளே! - எண்ணத்துள்
நின்றாடும் நேரிழையே! நீங்காத உன்னினைவு
திண்டாட வைக்கும் திரண்டு!
இன்னும் வாசிக்க... "எண்ணம் குடிக்கும் பேரழகே !"

Sunday, January 4, 2015

உயர்தமிழ் யாப்பைக் கற்பீர்!

மரபினில் எழுதக் கற்க
       மதுவென மயக்கும் நாளும்!
வரவென மகிழ்வே தங்கும்
       வசந்தமே வந்து கூடும் !
தரமிகு தமிழைப் போன்று
         தரணியில் மொழியும் உண்டோ ?
உரமெனப் பயிரைக் காக்கும்
         உயர்தமிழ் யாப்பைக் கற்பீர்!

உலவிடும் தென்றல் காற்றும்
        உவந்திடும் பாட்டே கேட்டு!
கலந்திடும் உறவாய் நம்மில்
        காத்திடும் வாழ்வை என்றும்!
கலத்தினில் நெல்லைப் போலே
        கவின்மிகு காட்சி ஆகும்!
பலத்தினை வழங்கும் பாவைப்
         பருகிடச் சுவையே கூடும்.

பூக்களில் தேனைத் தேடிப்
         புகுந்திடும் வண்டாய் நாமும்!
பாக்களில் கலந்தே நாளும்
         பலசுவை காண்போம் வாரீர்!
ஈக்களாய் மொய்க்கும் துன்பம்
         போக்கிடும் வழிகள் காட்டும்!
தாக்கிடும் பகைவர் நெஞ்சைத்
       தகர்த்திடும் வீரம் ஊட்டும்!

வண்ணமாய் வளங்கள் வந்து
        வாழ்வினில் நிறைந்து நிற்கும்!
திண்ணமாய் வடிக்கும் பாட்டில்
        திரண்டிடும் இனிமை பூக்கும்!
மண்வளம் மாண்பைப் பாடும்
        மனத்தினை உலகம் வாழ்த்தும்!
கண்ணெனக் கவிகள் கற்றுக்
        காவியத் தமிழைப் பாடு!

பாடிடப் பறக்கும் உள்ளம்
        பார்வையில் இனிக்கும் காட்சி!
நாடிட நலமே சேரும்
        நல்விதை முளைக்கும் நன்றே!
தேடியே முன்னோர் வைத்த
        செந்தமிழ்ச் செல்வம் தன்னைக்
கூடியே காப்போம்! வல்ல
        கொள்கையை ஏற்போம் இன்றே!

இன்னும் வாசிக்க... " உயர்தமிழ் யாப்பைக் கற்பீர்!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி