Ads 468x60px

Tuesday, December 16, 2014

தேன்மதுரத் தமிழுக்கு ஓர் பாமாலை !


துளிர்விடும் விதைகள் தம்மில்
            தோழியின் அகத்தைக் கண்டேன்
தளிரென அவரின் உள்ளம்
            தாய்த்தமிழ் உறவில் சொக்கும்!
விளித்திடும் சொற்கள் யாவும்
           வியப்புற நம்மை ஈர்க்கும்!
களிப்புறத் தந்த நூலைக்
           கருத்தினில் வைத்தேன் நன்றே!

தன்னுயிர் தமிழே என்று
        தாய்மொழி நாட்டைப் போற்றி
என்னிலா மகிழ்வே பொங்க
        ஏற்றமே காண வேண்டும்!
இன்றைக்குக் காணும் இன்பம்
        எஞ்சுமா என்றே எண்ணி
அன்னையின் தேசம் காக்க
         அரும்மழை வேண்டு மென்றாள்.

தண்ணீரா எங்கே என்று
         சாத்திரக் கதையைச் சொல்லி
கண்ணீரே மிஞ்சும் என்றார்
         காத்திடு மரத்தை என்றார்!
விண்ணகம் போனால் தேக்கும்
         வித்தையும் மக்கி இங்கே
மண்ணிதைச் சேருமே என்னும்
         மகிழ்ச்சியை விளித்து நின்றார்.

தளர்விலா வண்ணம் நாளும்
           தந்திட வேண்டும் ஆக்கம்!
வளர்ச்சியே பெற்று வாழ
           மகிழ்விலே வாழ்த்து கின்றேன்!
நளனெனும் பாகன் போன்று
           நற்றமிழ்ச் சுவையை காண
உளமெலாம் இன்பம் பூக்க
          உன்தோழி பாடு கின்றேன்!

குறள் வெண்பா
பூமாலை வாடுமென்றே பொற்றமிழில் நீமகிழப்
பாமாலை சூட்டுகிறேன் பாடு.

52 comments:

 1. அருமை அருமை அருமை

  ReplyDelete
  Replies
  1. முதல் வருகையும் முத்தான வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 2. அவர்களுக்கும் அவர்களை வாழ்த்திய உங்களுக்கும் பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 3. ஒரு கவிஞரின் கவிதைத் தொகுப்பை அகமகிழ்ந்து பாராட்டிய இன்னொரு கவிஞரின் கவிதைச் சாரல்!
  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ந்து பாராட்டியமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.

   Delete
 4. இதயசுத்தியோடு இமயமாயொரு வாழ்த்து,
  இயம்பியவரும்,எழுதியவரும் பல்லாண்டு
  இனிய தமிழ் கவிதை ஈந்து சிறந்திடவே
  இவ்வடியேனின் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வாழ்த்தை பணிவுடன் ஏற்கிறேன்.

   Delete
 5. கிரேஸ்க்கு இதைவிட அருமையா நூல் விமர்சனமோ பாராட்டோ யாரும் வழங்கிட முடியாது தென்றல். ரொம்ப அருமையா இருக்குது.

  ReplyDelete
  Replies
  1. இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

   Delete
 6. அருமையான வாழ்த்து

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 7. கவிக்கு
  கவியின் வாழ்த்து
  அருமை சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் சகோ.

   Delete
 8. வணக்கம் இனிய தோழி!

  பாமாலை சூட்டினீர் பாவை கிரேஸ்மகிழ
  தேமாப்பூ மென்மையைச் சேர்த்து!


  இன்னுயிர்த் தோழி நூலை
    இனிமையாய் எடுத்துச் சொன்னீர்!
  பொன்னெனப் போற்ற வேண்டும்!
    புதையலாய்க் காக்க வேண்டும்!
  முன்னிலைத் தோற்றம் கொண்ட
    மொழியினிற் தேர்ச்சி கொண்டார்!
  அன்புடன் வாழ்த்து கின்றேன்!
    ஆற்றலும் உயர நன்றே!

  அருமை! இனிய விருத்தப் பாமாலை!
  வழங்கிய உங்களுக்கும் பெற்ற தோழி கிரேஸுக்கும்
  உளமார்ந்த நல் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அமுதமான வாழ்த்துப்பாக்களையே நான் புதையலெனக் காக்க வேண்டும் தோழி. அகமகிழ்ந்தேன். தங்களுக்கு எனது வணக்கம்.

   Delete
 9. பாராட்டுக்கவிதை அருமையாக இருக்கு

  ReplyDelete
  Replies
  1. அப்படீனாக்கா நானும் பாராட்டி எழுதனுமே....

   Delete
  2. தங்களின் பாராட்டு இன்னும் சிறப்பாக இருக்குமே அதற்காகவே நானும் ஒரு நூல் வெளியிடுவேன். எழுதுங்க சகோ.

   Delete
 10. ஆஹா.... கவிதையில் வாழ்த்து...
  பாராட்டுக் கவிதை அருமை..

  ReplyDelete
  Replies
  1. வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete
 11. பாக்களின் ராணி தென்றல்
  பார்க்கவே கொடுத்தேன் என்நூல்
  பூக்களால் மாலை கோர்த்து
  பூரிக்கவே வாழ்த்தி னாளே
  ஆக்கவே வாழ்த்தும் நட்பே
  ஆனந்தமாய் சொல்வேன் நன்றி

  உளமெலாம் இன்பம் பூக்க
  உன்கவி பாடி விட்டாய்
  களஞ்சிய நிறைபொன் ஈடோ
  களிக்கிறேன் உன்பா கண்டு
  அளவிலா நன்றி யதனை
  அன்புடன் ஏற்பாய்த் தோழி!

  ReplyDelete
  Replies
  1. அகமகிழந்தேன் தோழி. இன்னும் பல நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன்.

   Delete

 12. வணக்கம்!

  மண்ணைத் பிளந்து சின்னவிதை
    வாழ்வைத் தொடங்கும்! அறிவென்னும்
  கண்ணைத் திறந்து நம்மான்மா
    காலம் வெல்லும்! செந்தமிழின்
  பண்ணைத் திறந்து நற்றென்றல்
    படைத்தார் கருத்தை! பாரதிநான்
  விண்ணைத் திறந்து பொழிவதுபோல்
    விளைத்தேன் இனிய வாழ்த்துக்கள்!

  கவிஞா் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. மண்ணுயிர் காக்கும் மழையென நற்றமிழை
   கண்ணெனப் போற்றும் கவி.

   அகமகிழந்தேன் ஆசான் வாழ்த்தில் வணங்கித் தொடர்கிறேன். நன்றிங்க ஐயா.

   Delete
 13. அருமையான பாராட்டுக்கவிதை.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகை கண்டு மகிழந்தேன். நன்றிங்க.

   Delete
 14. wow இருவருக்கும் என் வாழ்த்துக்கள் ......! வார்த்தைகளே வராவில்லை வாயடைத்து நிற்கிறேன்.இனிய தமிழ் வாழ்க .....!

  ReplyDelete
  Replies
  1. வருக தோழி வளமான வாழ்த்தை வரவேற்று மகிழ்ந்தேன்.

   Delete
 15. அருமை சகோதரி... உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. கவிதையால் நூல் அறிமுகம் சிறப்பு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

   Delete 17. அன்புச் சகோதரி,
  வணக்கம்.

  பாச்சூடி நெஞ்சத்தில் பதிய னிட்டுப்
    பார்த்தவர்க்குப் பைந்தமிழின் மேன்மை சொல்லும்
  பூக்கூடை ஒருபக்கம் புவியைக் காத்துப்
    புன்மைநிலை வேரோடு போக்கப் பார்க்கும்
  தீக்கூடு மறுபக்கம்! தேனின் சாறாய்
    தேன்மதுரத் தமிழ்கிரேஸின் துளிர்க்கும் வித்தின்
  ஆக்கத்தைப் பாராட்டும் தென்றல் காற்றோ
    அப்பொதியில் பிறந்துலவுந் தமிழி னூற்றோ?


  போட்டிகளோ புலமையினைப் போற்று தற்குப்
    புகைகனலும் உள்மறைத்துப் புன்சி ரிப்பே
  காட்டிப்பின் குழிதோண்டும் கயமை எண்ணம்
    கவிமகளீர் உம்மிடையே கடுகு மில்லை!
  தீட்டும்பா தேன்மதுரக் கிரேஸின் நூலைத்
    திறனாய்வு செய்யும்பா தென்ற லின்பா!
  ஊட்டுகின்ற எண்ணங்கள் உறுமே கோடி!
    உறையுமனம் நூல்பயில வருமே நாடி!

  கவிதைக்குக் கவிதையிலான விமர்சனம் அருமை!
  நன்றி சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ. வார்த்தைகள் இல்லை என்னிடம் தங்கள் வாழ்த்தினைப்படித்து வாயடைத்து நிற்கிறேன். வணங்குகிறேன் தங்கள் தமிழ் புலமைக்கு.

   Delete
 18. அற்புதமான பாடல்
  தங்கை கிரேஸின் இணைப்பு மூலம் வந்தேன்.. \
  சில தளங்களைப் பார்க்கும் பொழுது இனி தமிழ் பிழைத்துக் கிடக்கும் என்கிற நம்பிக்கை என்னுள் துளிர்விடும்..
  அத்தகு நம்பிக்கையை தங்கள் தளம் தந்தது..

  ReplyDelete
 19. வணக்கம். தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். இப்போது வளரும் தலைமுறையினர் பலரும் மரபில் எழுதுவதை (எழுத விரும்புவதை)இணையத்திலேயே பார்க்கிறோமே...

  ReplyDelete
 20. ஆஹா!! தோழி கிரேஸ்ஸின் நூலுக்கு இத்தனை அட்டகாசமான விருத்த கவிதையால் அறிமுகமா!!! மிக மிக அட்டகாசம் சகோ:)

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகையும் ரசித்து கருத்திட்டமை கண்டும் மகிழ்ந்தேன். நன்றிங்க சகோதரி.

   Delete
 21. கவிதைத் தொகுப்புக்கு கவிதையால் பாராட்டு மழை. அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 22. தங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். நன்றிங்க.

  ReplyDelete
 23. நல்ல தமிழ் ! விருத்தம் அருமை, அதைவிட ....என்னைக்கவர்ந்தது தாங்கள் படைத்த குறள் வெண்பா! இவ்வளவு திறமை உள்ள தாங்களும் புத்தகம் வெளியிடலாமே.!...கவிதைக்கு அழகு சந்தம்! அது தங்களுக்கு இயல்பிலேயே வருவது கலை ஞானத்தைக் காட்டுகிறது....பெயரிலேயே கலைவாணியின் அருள் கொண்டவரல்லவா நீங்கள்!...இனியாவது முயற்சி செய்யலாமே சகோதரி!

  ReplyDelete
 24. மிக்க மகிழ்ச்சி நண்பரே என்ன! பெயரிலேயே சிறப்பு இருக்கிறதா ? என் பெயருக்கான அர்த்தம் இது நாள் வரை தெரியாதே எனக்கு. அடுத்து தமிழ்த்தாயின் ஆசியிருந்தால் புத்தகம் வெளியிடலாம் நண்பரே. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

  ReplyDelete
 25. முத்தான தமிழ் கவிதைத் தொகுப்பு . அருமை. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 26. தங்களின் வருகை கண்டு மகிழந்தேன். நன்றிங்க.

  ReplyDelete
 27. மொழிக்கு முதலும் முடிவும் அடியும் நாதமும் நம் தமிழே..எத்திசையும் தமிழ் மனக்க நாம் அனைவரும் பாடுபட வேண்டும்.. மிகவும் அருமையான பதிவு..வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. மொழியையும் . . . . நட்்பையும்


  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி