Ads 468x60px

Wednesday, December 31, 2014

வரவேற்போம் புத்தாண்டை !

அன்பை நாளும் விதைத்திடுவோம்!
         அகத்தே தூய்மை அடைந்திடுவோம்!
அன்னைத் தமிழை அரவணைத்து
           அறிவை வளர்த்து மகிழ்ந்திடுவோம்!
தன்னைக் காக்கும் நம்பிக்கை
           தளரா திருக்க பார்த்திடுவோம்!
என்ன இல்லை நம்மிடையே
           என்றே துணிந்து செயல்படுவோம்!

தென்றல் வந்து தழுவிடவே
          தேனார் சோலை காத்திடுவோம்!
நன்றி மறவா நல்லொழுக்கம்
          நாளை வளரும் தலைமுறைக்கே
பண்பாய் உணர்த்தி வளர்த்திடுவோம் !
          பசுமை காக்க பயிற்றிடுவோம்!
இன்னல் நீங்க வாழ்வினிலே
          எளிமை தவழப் பழக்கிடுவோம்!

கண்ணாய் நாட்டைக் காத்திடுவோம்!
           கடமை மலராய்ப் பூத்திடுவோம்!
மண்ணின் வளத்தை வளர்த்திடுவோம்!
           மரங்கள் வைத்தே மகிழ்ந்திடுவோம்!
பெண்மை போற்றிப் பெயர்பெறுவோம்!
           பெருமை யாவும் பேணிடுவோம்!
எண்ணம் சிறக்க எந்நாளும்
          இயன்ற உதவி செய்திடுவோம்!

கல்லா திருக்க பழிவருமே
         கற்றே நாளும் தெளிந்திடுவோம்!
நில்லாச் செல்வம் நிதந்தேடி
        நீளும் பயணம் தடைசெய்வோம்!
எல்லை காக்கும் படைசேர்ந்து
         என்றும் நாட்டைக் காத்திடுவோம்!
தொல்லை போக்கும் அருமருந்தாய்த்
         தோழர் துயரை போக்கிடுவோம்.

உயர்வும் தாழ்வும் இல்லாமல்
        ஒன்றாய்க் கூடி வாழ்ந்திடுவோம்!
அயர்வே இன்றி உழைப்பேந்த
         ஆளும் திறனை வளர்த்திடுவோம்!
துயரில் வதியும் இல்லார்க்குத்
         துணையாய் என்றும் இருந்திடுவோம்!
உயிரின் இனிய செந்தமிழை
         உலகம் எங்கும் பரப்பிடுவோம்!

பிறக்கும் இனிய புத்தாண்டில்
       சிறக்கும் வழிகள் உரைத்துள்ளேன்!
பறக்கும் பறவை போலுள்ளம்
       பாடிக் களிக்கப் பணித்துள்ளேன்!
திறக்கும் சொர்க்கம் மண்ணுலகில்
        திறமை ஒன்றே நம்சொத்து!
முறுக்கும் ஆசை நிலைபோக்கி
         முதல்வன் திருத்தாள் ஏத்துகவே!

இன்னும் வாசிக்க... "வரவேற்போம் புத்தாண்டை !"

Wednesday, December 24, 2014

உன்னையே தேடும் உயிர் !

 
உன்னகம் தீண்ட உருவாகும் காவியம்!
என்னகம் வந்தே இணைந்திடுக!-பொன்மயிலே!
தன்னகத்தைத் தாங்காது தள்ளாடும் மெல்லியளே!
உன்னையே தேடும் உயிர்.

கன்னம் சிவக்கக் கதைபேசும் பைங்கிளியே!
முன்னிருக்க முன்வருமே முத்தமிழும் - என்னிலையைக்
கண்கொண்டு பாராய் கனியமுதே! என்று...நீ
என்னகம் சேர்வாய் இயம்பு!


வாவென்றாள் வண்ணமகள்! வாஞ்சையுடன் வாய்மணக்கத்
தாவென்றாள் தித்திக்கும் தண்டமிழை! - போவென்றாள்
என்னிதயம் தாங்கிடுமோ? ஏக்கம் பெருக்கெடுத்துப்
பொன்னுதயம் காட்டும் பொலிந்து!


சிந்தை செழித்திடச் சின்னவளின் சிந்தனை
வந்தென் மனத்துள் மகிழ்வூட்டும்! - செந்தேன்
மலரில் நடமிடும் வண்டானேன்! கண்ணுள்
கலந்தே யிருக்கும் கனவு!
இன்னும் வாசிக்க... "உன்னையே தேடும் உயிர் !"

Tuesday, December 16, 2014

தேன்மதுரத் தமிழுக்கு ஓர் பாமாலை !


துளிர்விடும் விதைகள் தம்மில்
            தோழியின் அகத்தைக் கண்டேன்
தளிரென அவரின் உள்ளம்
            தாய்த்தமிழ் உறவில் சொக்கும்!
விளித்திடும் சொற்கள் யாவும்
           வியப்புற நம்மை ஈர்க்கும்!
களிப்புறத் தந்த நூலைக்
           கருத்தினில் வைத்தேன் நன்றே!

தன்னுயிர் தமிழே என்று
        தாய்மொழி நாட்டைப் போற்றி
என்னிலா மகிழ்வே பொங்க
        ஏற்றமே காண வேண்டும்!
இன்றைக்குக் காணும் இன்பம்
        எஞ்சுமா என்றே எண்ணி
அன்னையின் தேசம் காக்க
         அரும்மழை வேண்டு மென்றாள்.

தண்ணீரா எங்கே என்று
         சாத்திரக் கதையைச் சொல்லி
கண்ணீரே மிஞ்சும் என்றார்
         காத்திடு மரத்தை என்றார்!
விண்ணகம் போனால் தேக்கும்
         வித்தையும் மக்கி இங்கே
மண்ணிதைச் சேருமே என்னும்
         மகிழ்ச்சியை விளித்து நின்றார்.

தளர்விலா வண்ணம் நாளும்
           தந்திட வேண்டும் ஆக்கம்!
வளர்ச்சியே பெற்று வாழ
           மகிழ்விலே வாழ்த்து கின்றேன்!
நளனெனும் பாகன் போன்று
           நற்றமிழ்ச் சுவையை காண
உளமெலாம் இன்பம் பூக்க
          உன்தோழி பாடு கின்றேன்!

குறள் வெண்பா
பூமாலை வாடுமென்றே பொற்றமிழில் நீமகிழப்
பாமாலை சூட்டுகிறேன் பாடு.
இன்னும் வாசிக்க... "தேன்மதுரத் தமிழுக்கு ஓர் பாமாலை !"

Tuesday, December 9, 2014

சூடிக்கொண்ட பேரழகு !

மல்லிப் பூவாய்ச் சிரித்திங்கே
     மனத்தை அள்ள வந்தவளைத்
துள்ளி ஓடி வருகையிலே
      சூடிக் கொண்டேன் பேரழகை!
கிள்ளி உன்னைக் கொஞ்சிடவே
        கிளர்ந்தே எண்ணம் பெருகுதடி!
அள்ளி அணைக்கத் துணிந்திட்டேன்
    அருகே வாடி ஆருயிரே!

மடியில் வைத்து மகிழ்ந்திடவோ
           மரபுக் கவியும் சொல்லிடவோ? 
வடியும் தேனாய் வார்த்தைகளை
       வழங்கி நெஞ்சம் மயங்கிடவோ?
அடியே என்றே அழைத்திடவோ
        அணைத்தே முத்தம் தந்திடவோ ?
பிடிவா தமாக  நீயிருந்தால்
       பிழையா காதோ நம்காதல்!


முந்தி உன்னைப் பார்த்திருந்தால்
           முடிந்தே யிருப்பேன் மனத்தில்தான்!
பிந்தி உன்னை பார்ப்பதினால்
           பித்தாய்  மனமே  அலையுதடி!
தந்தி கண்ட படபடப்பாய்த்
          தாங்கா துள்ளம் துடிக்குதடி!
சந்தி சிரிச்சி போகுமுன்னே
        தாங்கிக் கொள்ளவாய் மடியினிலே!
இன்னும் வாசிக்க... "சூடிக்கொண்ட பேரழகு !"

Thursday, December 4, 2014

என்றும் எனக்குள் இருந்து விளையாடு!

அழகே! அமுதே! அருமை தமிழே!
வழங்க வழங்க மகிழ்வே - பழக
இனிக்கும் மொழியே! இணையிலா வண்ணம்
மினுக்கும் கவிதையை மீட்டு.!

எளிமை! இனிமை! இளமை! புதுமை!
வலிமை! கொழிக்கும் வளமை! -  பொலிவைத்
தருமே எனக்கு! தழைக்கும் தமிழ்ப்பா
வருமே மனத்துள் வளர்ந்து!

மருந்தாக ஆனாய்! மனம்மகிழ்ந்து உண்ணும்
விருந்தாக ஆனாய்!  விரைந்தே - விரும்பி 
எருவாக ஆகுமென ஏட்டில் படைத்தேன்
உருவாகும் பாக்கள் ஒளிா்ந்து!

பாடும் மொழியே! படா்கின்ற இன்பத்தைச்
சூடும் தமிழே! சுவையமுதே! - நாடுகிறேன்
உன்றன் திருவடியை! ஓங்கும் கவிபாட
என்றன் இதயம் இரு!

என்றும் எனக்குள் இருந்து விளையாடு!
மன்றம் மணக்கக் கவிபாடு! - என்தாயே!
தன்னோ் இலாத தமிழே! மயங்குகிறேன்
என்னே இயற்கை எழில்!

இன்னும் வாசிக்க... "என்றும் எனக்குள் இருந்து விளையாடு!"

Monday, December 1, 2014

நினைவுகள் !


பாட்டுப் பறவையாய்ப் பாரதி தாசனாா்
நாட்டும் பணிகள் நலங்கொடுக்கும்! - மீட்டிச்
சுவைகூட்டி சொல்லும் சுடா்க்கவிகள் என்றும்
அவைகூட்டி ஆளும் அழகு.


எங்கள் ஆசான் கவிஞர் பாரதிதாசன் ஐயாவின் கவியரங்க விழாவிற்கு நானும் எழுதியனுப்பிய விருத்தம். தலைப்பு நினைவுகள். விழாவில் கவிதையை வாசித்த திருமதி. சுகுணா ! அவர்களுக்கும் வாய்ப்பை வழங்கிய ஐயாவிற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

                நினைவுகள் !

எண்ண இனிக்கும் நினைவுகளை
         இன்பத் தமிழால் நானெழுத...
கன்னம் சிறக்கும் அதனுறவால் !
         கவிதை கொடுக்கும் கனியமுதாய் !
சின்னப் பூவாய்ச் சிரித்திருக்கும்
         சிறகை விரித்தே பறந்திருக்கும் !
மின்னல் ஒளியை ஒத்திருக்கும்
          மேனி  யழகாய் மிளிர்ந்திருக்கும் !

மண்ணும் பொன்னாய் மின்னிடுமே
         மவுன மொழியில்  பேசிடுமே !
கண்ணும் கவிதை பாடிடுமே
         கருத்தில் என்றும் நிலைத்திடுமே !
வண்ண மீனாய்க் கவர்ந்திடுமே
        வாழ்வில் நிறைவைத் தந்திடுமே !
உண்ணும் போதும் உறவாடி
       உழன்று இருக்கும் நினைவுகளே !

ஆலைக் கரும்பின் சுவையூட்டி
       அகத்துள் நன்றே உறைந்திருக்கும் !
காலை உதயக் கதிரோனாய்க்
       கவலை தீர்க்கும் தினந்தோறும் !
மாலை நேரம் மயங்கவர
       மலரும் நினைவாய் மணம்வீசும் !
சேலைப் பூவில் நிழலாடி
        சேர்த்தே அணைக்கும் நினைவுகளே !


இன்னும் வாசிக்க... "நினைவுகள் !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி