Ads 468x60px

Wednesday, June 26, 2013

எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )


என்னை புதுப்பித்த புதியவனுக்கு  அன்புடன் சசி....
வார்த்தைகளற்ற பிரரேசத்தில் பார்வையாலே பல புரிதல்களை பரிமாறிக்கொண்ட காலம் அது. அங்கு நாம் அறிமுகமாகிக்கொண்ட போது....

அற்புதமாய் அலங்கரிக்கப்பட்டு
வடம்பிடித்து இழுக்க 
காத்திருக்கும் தேராய்
இதய வாசலில் நிற்கும்
வார்த்தைகள் உன் 
பார்வைப் புயலில் சிக்கி
திரும்ப மௌனக் கூடாரத்திற்கே 
சென்றுவிடுகின்றன.

எந்த காந்தமும் கவர்ந்து விடாத என் இதய மலரை இரும்பாக்கும் சக்தி உன் விழிகாந்தத்திற்கு எப்படி வந்தது என்றே தெரியவில்லை. 
முதன் முதலாக உனை மலர் கண்காட்சியில் வைத்தே சந்தித்தேன்.

வண்டொன்று நடக்கக் கண்டேன் 
வாஞ்சையோடு நோக்கக் கண்டேன்
வார்த்தையில் சரம் தொடுத்து 
வானவில்லுக்கு சூடக் கண்டேன் 
கம்பீரம் உன் நடையில் கண்டேன் 
 தமிழ் காதல் உந்தன் 

காந்தவிழிப் பார்வையில் கண்டேன் .

நம்மை நமக்கு அறிமுகம் செய்து வைத்ததே நண்பர்கள் தான். கேலியும் கிண்டலுமாக தொடர்ந்த நம் உறவு நம்முள் எப்படி காதலை விதைத்தது என்றே இது வரை தெரியவில்லை. நம்மில் யார் முதலில் காதலை சொன்னது என்று நண்பர்கள் கேட்கும் போது யார் என்று சட்டெனச் சொல்ல முடியவில்லை.
கிணற்றடியில்
குயிலின் கீதத்தில்
மயிலின் நடனத்தில்
மாந்தோப்பு சந்திப்பில்
மன்னார்குடிப் பேருந்தில்
மழலையின் சிரிப்பில்
மகரந்தப் புன்னகையில்
எங்கு தேடியும் கிடைக்காத நீ
என்னுள் எப்போது வந்தாய்!
தேடலில் கிடைத்த
வைரம் நீ...
தீண்டலில் சுகம் தரும்
தென்றலும் நீ...
மணம் வீசி அழைக்கும்
மலரும் நீயே
மயக்கியது போதும்...

ஆம் ! நம்மை அறிமுகம் செய்து வைத்த நண்பர்கள் தான் நம்மிடையே உள்ள காதலையும் நமக்கு அறிமுகப்படுத்தியது. அந்த நாள் உனக்கு நினைவிருக்கும் என்றே நினைக்கிறேன்.

நண்பர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி ராக்கி கட்டிக்கொண்டோம்சட்டென குறும்பாக சுரேஷ், அண்ணா! இங்க வாங்க!! ன்று உங்களை அழைத்து, எனையும் ருகே அழைத்து, அக்காவுக்கு இதைட்டுங்க என்றான்இதயம் படபடக்க நானும் அமைதியாக நின்றேன்உன் கோபப் பார்வையால் அவனைச் சுட்டாய்! எனக்குள் அமுதம் விட்டாய்!!


சிரித்து மழுப்புகிறாய் 
சில நேரம் 
முறைத்து மறுக்கிறாய் 
பல நேரம் 
பாசாங்கு செய்து ஓடுகிறாய் 
என்றுதான் சொல்லப்போகிறாய் ...? 
உனக்கே உன் காதலை .

அப்பப்பா அன்றிலிருந்து இரண்டு நாட்கள் காணவில்லையே உங்களை . ப்படி காதலை உங்களுக்குள்ளேயேவைத்து ஏன் தவித்துக்கொண்டிருந்தீர்கள்?
இன்னும் எத்தனை
நாட்களுக்கு மௌனத்தோடு
மல்யுத்தம் செய்யப்போகிறாய் ?
காதலை சொல்ல 
நீ தவிப்பதையும்
தாங்க முடியாதவளடா நான் !ஒவ்வொரு முறை உனை பார்க்கும் போதும் உன் பார்வைகள் உணர்த்திவிடுகின்றன எனை தேடும் உன் தவிப்பை.  உன்னை நொந்து கொள்ளும் என்னால் மட்டும் முடிகிறதா ? உன் அருகாமையில் ஓரிரு வார்த்தை பேசவும்.

உன் மூச்சுக்காற்று
உரசும் வரை உணர்ந்ததேயில்லை
தென்றலின் அருகாமையை.

பட்டாம்பூச்சி பிடித்து
மகிழும் மழலையாய்
உன் பார்வைக்கு முன்பு
நிற்க முயன்று 
தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

 அதற்காகவே தனி இடம் தேடித்தேடி அமர்கிறேன். நினைப்பதையெல்லாம் எழுதி உன்னிடம் கொடுத்து விட பாரேன்....

உன் நினைவுகளை
குடித்தே நிமிர்ந்து நின்று

உறங்கி விழுகிறது பேனாவும்....

நம் இருவருக்குமே பரிட்சையமான நண்பர்கள் தான் எனினும் எப்போதும் உன்னுடனே சுற்றிக்கொண்டிருக்கும் அவர்களால் என் நினைவு கூட உன்னுடன் கை கோர்த்து நடக்க அஞ்சுகிறது. தனிமையான சந்திப்பை எதிர்பார்த்து காத்திருந்த போது...
காற்றோடு .. 
கனவோடு ... 
நினைவோடு 
அலையோடு .. 
அனலோடு .. 
இப்படி எங்கெங்கோ 
சொல்லிப் பார்க்கிறேன் 
உன் கண்களோடு 
பேசமுடியாத வார்த்தைகளை .

அந்த மழைக்கால இரவும் வந்தது. எனக்காவே காத்திருந்தது போல.... நீயும் வந்தாய்!!  சின்ன சாரலுக்கும் தூரலுக்குமே திண்ணையைத் தேடி ஓடும் எனை, அன்று பலமாய் பெய்த மழை கூட கிண்டல் செய்வதைப்போல் இருந்தது.  ஆமாம்... ஏதோ கோவில் பிரகாரம் சுற்றுவதைப்போல் மெதுவாக நடந்துகொண்டிருந்தோம்.  இடிமின்னலுக்குக் கூட ஒருவரை ஒருவர் சினிமாத்தனமாக கட்டிப்பிடித்துக்கொள்ளாமல், கைகளை மட்டும் அழுந்தப் பிடித்தபடி நடக்கையில் பளிச் பளிச்சென படம் பிடித்துப் போனது வானத்து மின்னல்கள்.  அடுத்த நாள் இருவருக்குமே காய்ச்சல் வந்து நம் சந்திப்பை காட்டிக்கொடுத்தது நண்பர்களிடம். அன்று அவர்களின் கேலிப்பேச்சைக் கேட்டு என் வெட்கமும் பொய் கோபமும் என் முந்தானைக்குள் முகம் புதைத்துக் கொண்டது.

தினம் தினம் கதிரோனாய்

காட்சி தருகிறாய்எனக்கான
காட்சிகளை கவர்ந்து போகிறாய்!

மற்றொரு நாள் அவர்கள் சினிமாவிற்கு அழைத்த போதும், முதலில் நான் தயங்கினாலும் உன் அருகாமையில் இரண்டு மணி நேரம்... என்பதே எனை சம்மதிக்க வைத்தது.  பக்கத்து பக்கத்து இருக்கை... இருட்டில் உன் ஆயுள்  ரேகையை என் உள்ளங்கையில் தேடிக் கொண்டிருந்தாய்! நாம் விழிகளின் வெளிச்சத்தில் கனவுகளைக்கோர்த்துக்கொண்டிருந்தோம்

அந்த மௌன இன்பத்தில்
சொல்லப்படாத 

வார்த்தைகள் தான் 
இப்படி சொற்குவியல்களுக்கு
மத்தியில் எனை
அமர வைத்திருக்கிறது.
திரும்பத் திரும்ப தனிமையில் அசைபோட்டுக்கொண்டிருக்க எத்தனை ஆனந்த நிகழ்வுகள். அருகருகே உன் தோள் உரசி... கரம் கோர்த்து நீண்ட பயணம் போக ஆசை கொண்டு ஏங்கித் தவித்த எனக்கு , உன் பின்னால் வண்டியில் அமர்ந்து போகும் வாய்ப்பும் கிடைத்தது அப்போதெல்லாம் சிறகு இல்லாமலும் பறந்து சிகரங்களைத் தொடுகிறேன். 

உலகம் ஏன் 
உருண்டையாக
இருக்கிறது என்று
வருந்துகிறேன்.
ஆமாம் புறப்பட்ட
இடத்திலேயே 
கொண்டு வந்து 
விட்டு விடுகிறாயே ?

உனை மட்டுமே நினைத்திருக்கும் பதுமையாக செய்து விட்டாய் எனை.  இன்னும் என்ன ...என்ன செய்ய காத்திருக்கிறாய் இதய திருடா ?

இது நாள் முதல் என்றுமே அநுபவித்திராத என்னவென்றே விளக்கமுடியா இந்த இன்ப அவஸ்தைகளின் ஆரம்பம் எங்கிருந்து ... உன் கண்களில் இருந்து தான் இந்த மகிழ்ச்சியின் மூலாதாரத்தை வாங்கினேனோ ? இம்மாதிரியான பரிமாற்றங்களை உன் அருகாமையில் அமர்ந்து நீ சொல்ல சொல்ல நான் கேட்க வேண்டும் என்கிற ஆவல் என்னில் கூடிக்கொண்டே போகிறது. 

   காதல் என்கிற இந்த அற்புதமான நிகழ்விற்குள் குடிபெயர்ந்த நமக்குள் எதற்கு தயக்கம். நீ நினைப்பதையும் உன் கண்கள் உணர்த்துவதையும் எந்த விதத்திலாவது கூறி விட மாட்டாயா ? என்றே மனம் ஏங்குகிறது. 

ரகசியங்களுக்கு சொந்தக்காரனே
ராத்திரியின் நீளம் அளப்பவனே
இமைப்பதற்குள் 
நிகழ்ந்து விட்டது
என் பாலிய மரணமும்
 பருவக் காதலும்.

அலையாய் 
எண்ணங்கள் தொடர்ந்தாலும்
அமைதியாகவே நெருங்குகிறேன்.
  
     என்ன என்ன நவீன வளர்ச்சிகளை நாம் அடைந்து கொண்டிருந்தாலும் இம்மாதிரியான காதல் அவஸதைகளை கடிதமாக எழுதி நீ எனக்கும் நான் உனக்குமாய் பரிமாறிக்கொள்ளும் போது அந்த ஆனந்தத்திற்கு எல்லையேது... ?
மனதாள வந்தவனே
மர்மமாய் சிரிப்பவனே
கன்னத்தால் எனை உரசி
கனவினிலே கவர்ந்தவனே
எண்ணத்தில் தான் புகுந்து
எனை ஏதோ செய்தவனே.
சொல்ல(த்தான்) துடித்தேனே
சொக்கி தினம் வெந்தேனே.

எத்தனை எத்தனை ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் சொல்லிடவோ எழுதிடவோ நாட்களும் தாள்களும் போதாதே . வாழ்நாள் முழுவதும் அழகுத் தமிழால் காதலை வாசிப்பதும் நேசிப்பதுமாக இருப்போமே . ஆதலால் கண்ணாளா காதலை சொல்லவாவது பதில் கடிதம் எழுதிவிடு. 

இப்படிக்கு
உன் நினைவுகளையே சுவாசிப்பவள்.
இன்னும் வாசிக்க... "எழுத நினைத்த காதல் கடிதம் (திடங்கொண்டு போராடு பரிசுப்போட்டி )"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி