நெஞ்சோர வரப்பு வெட்டி
நீர்பாச்சிப் போன கண்ணே!
நெடுந்தூரம் போகவேணும்
கதிரதுவும் மெய்களம்காண!
காற்றாடிக்கும் வெயிலுரைக்கும்
வானமது பொய்த்து நிற்கும்!
போட்டவித துளிர்க்க வேணும்
நெற்கதிரா தளிர்க்கவேணும்!
களைவளரப் பறிக்கவேணும்
துயிலாம காக்கவேணும்!
நீர்பாச்சி நிக்க வேணும்
காக்காஅத வெரட்டவேணும்!
உரமிட்டு வளர்க்கவேணும்
நாத்து பிரிச்சி நடவும் வேணும்!
பாத்திகட்டி வைக்க வேணும்
பாதம் படாம நடக்கவேணும்!
அணியணியா அறுக்கவேணும்
மாடுபூட்டி போரடிக்கவேணும்!
பதரெல்லாம் நீக்கவும் வேணும்
களம்கொண்டு சேர்க்க வேணும்!
புத்தாடை புனைய வேண்டும்
புதுவரவை அவிக்கவேண்டும்!
பொங்கலிட்டு உண்ண வேணும்
மழலை சிரிக்க ரசிக்கவேணும்!
குடும்பமது தழைக்க வேணும்
நாடும் வீடும் செழிக்கவேணும்!
வாடியென் அத்தப் பொண்ணே
வாய்க்காலோரம் இளைப்பாற!
உழைப்பெல்லாம் உனக்காக
தலைசாய்க்க உன்மடிதாடி!