செந்தூரப் பொட்டு வைத்து
செங்கதிரும் துளிர்த்ததடி.
செங்கால் நாரையொன்று
ஒற்றைக்காலை சேற்றிலூன்றி
மீன் வரவை தேடுதடி.
ஆலமர கிளையொன்றில்
ஆசையாய் இரண்டு கிளிகள்
ஆனந்தமாய் கூடிவாழ.
இன்னிசைக் குயிலதுவும்
இசைப்பாட்டு தான் பாட.
ஈரக்காற்றை உண்ட இரவு
ஈசல்கள் புற்று துறக்க
அதன் முடிவு இன்னாளே.
உச்சாணிக் கொம்பிலொரு
தேன்கூட்டுத் தேனொழுக
கண்ணாடி மேனியனிந்த
ஆற்று நீரில் அது கலக்க.
ஆமையும் கெண்டையுமே
மேல்மட்டம் வந்து பார்க்க
பசுந்தளிர் தானிருப்பை
காற்றாடி வெளிப்படுத்த.
வளை எலியும் தன்பங்காய்
கதிரதை வெட்டிச் செல்ல.
அரசமரம் சுற்றியே
சுமங்கலிகள் அடி வைக்க.
ஊஞ்சல்கள் இரண்டு மட்டும்
ஊரின் கதை பேசியே
கடந்த காலம் நினைத்திருக்க.
வந்ததும் போவதும்
நடந்ததும் நடப்பதும்
கடந்தோடி கலைந்தோடும்
மேகமாய் வரவுகள்.
நன்மையுடன் தீமையுமே
மாய்ந்து மடிந்து போக
நிஜமில்லா கடந்த காலம்
நினைவலையாய் கலந்து விட
யார் யாருடனோ யாருக்கும்
ஏதுமில்லாததாய் பயணம்.