Ads 468x60px

Friday, March 29, 2013

விடியலொன்றைத் தேடி !


மலரொன்று வாடியதற்கா ?
மனமொன்று வாட்டியதற்கா ?

தினமொன்று கழிந்தற்கா ?
தினம் சோகம் தொடர்வதற்கா ?

அலை வந்து தீண்டியதற்கா ?
அதுவும் விட்டுப் போனதற்கா ?

ஒளி வந்து எழுப்பியதற்கா ?
இருள் வந்து சூழ்ந்ததற்கா ?

ஒலி கேட்டு அஞ்சியதற்கா ?
ஓலம் கண்டு ஓடுவற்கா ?

கட்டியழும் தனிமையிடம் 
எதற்க்கிந்த சோகமென்றேன் ?- அதுவும்
விட்டொழிந்து போனதுவே
விடியலொன்றைத் தேடி 
தொடரும் என் பயணங்கள்.

இன்னும் வாசிக்க... "விடியலொன்றைத் தேடி !"

Tuesday, March 26, 2013

நீயா? ... நானா ?


விண்னை முட்டிய சோகங்கள்
மண்ணில் வென்ற கனவுகள்
கண்ணில் வாழ்ந்த காட்சிகள்
நம்மில் வாழும் உறவுகள்.

வார்த்தையால் வந்த பேங்கள்
உயிரில் கலந்த உண்மைகள்
உதிரம் குடித்த பொய்கள்
நிரந்தரம் என தேடும் துணைகள்.

இடையில் மலர்ந்த வழித்துணைகள்
இன்பத்தால் விளைந்த லாபங்கள்
துன்பத்தால் கண்ட இழப்புகள்
அன்பால் வென்ற மனங்கள்.

அச்சத்தால் பறிபோன வெற்றிகள்...
சொல்லும் செயலும் நாமாயிருந்தால்
பொருளில் பொருளிருக்கும்.

வாழ்க்கை வழியில்
நீயா நானா கேள்வி எழுந்தால்
வாழ்வே பொய்யாகும்.

கனவு வாழ்வைத் தேடியலைந்தால்
கசப்பே எஞ்சி வாழும்.
இன்னும் வாசிக்க... "நீயா? ... நானா ?"

Thursday, March 21, 2013

தினம் போடும் புதிரேனோ !


மச்சானே மச்சானே- ஆச
வச்சானே வச்சானே.

பாதையில்லா  ஊருக்கு
பரிசம் போட வந்தானே

ராகமில்லா பாட்டெடுத்து
ராத்திரி வந்து சொன்னானே

பூவிருக்கு பொழுதிருக்கு
பொண்ணும் கூட காத்திருக்கு

கண்ணடிச்சி ஜாட காட்டி
கம்மாக் கர போறவரே

தினம் போடும் புதிரேனோ
தினுசாத்தான் விடைய சொல்லு

கண்ணாடும் சதிராட்டம்
காலாடும் பொம்மலாட்டம்

வழிப்பேச்சு வேனாம் போய்யா
விழியசைவும் போகும் பொய்யா

பிடிச்சிருந்தா சொல்லு மச்சான்
பெசையாத வீனா மனச மச்சான்.
இன்னும் வாசிக்க... "தினம் போடும் புதிரேனோ !"

Tuesday, March 19, 2013

ஏதுமில்லாததாய் பயணம் !செந்தூரப் பொட்டு வைத்து
செங்கதிரும் துளிர்த்ததடி.

செங்கால் நாரையொன்று
ஒற்றைக்காலை  சேற்றிலூன்றி
மீன் வரவை தேடுதடி.

ஆலமர கிளையொன்றில்
ஆசையாய் இரண்டு கிளிகள்
ஆனந்தமாய் கூடிவாழ.

இன்னிசைக் குயிலதுவும்
இசைப்பாட்டு தான் பாட.

ஈரக்காற்றை உண்ட இரவு
ஈசல்கள் புற்று துறக்க
அதன் முடிவு இன்னாளே.

உச்சாணிக் கொம்பிலொரு
தேன்கூட்டுத் தேனொழுக
கண்ணாடி மேனியனிந்த
ஆற்று நீரில் அது கலக்க.

ஆமையும் கெண்டையுமே
மேல்மட்டம் வந்து பார்க்க
பசுந்தளிர் தானிருப்பை
காற்றாடி வெளிப்படுத்த.

வளை எலியும் தன்பங்காய்
கதிரதை வெட்டிச் செல்ல.

அரசமரம் சுற்றியே
சுமங்கலிகள் அடி வைக்க.

ஊஞ்சல்கள் இரண்டு மட்டும்
ஊரின் கதை பேசியே
கடந்த காலம் நினைத்திருக்க.

வந்ததும் போவதும்
நடந்ததும் நடப்பதும்
கடந்தோடி கலைந்தோடும்
மேகமாய் வரவுகள்.

நன்மையுடன் தீமையுமே
மாய்ந்து மடிந்து போக
நிஜமில்லா கடந்த காலம்
நினைவலையாய் கலந்து விட
யார் யாருடனோ யாருக்கும்
ஏதுமில்லாததாய் பயணம்.
இன்னும் வாசிக்க... "ஏதுமில்லாததாய் பயணம் !"

Sunday, March 17, 2013

மாறாத மனித இயல்பு !உழைப்பொன்றையே தன்னில் வைத்து
உலகுக்காய் உழைக்கும் கடிகாரமும்
தானே நின்றதுண்டா..?
நாம் கவனிக்க மறுப்பின் நிற்கும்.

நல்ல நேரம் கெட்ட நேரம்
உள்ள நேரம் இல்லா நேரம்
இரவு நேரம் பகல் நேரம்
அதிலும் குறை கண்டு திரிகின்றோம்.

காலமது தன் மணிக்கணக்கை காட்டி
சுழன்று கொண்டேயிருக்கிறது
யாரையும் எதிர்பார்த்தல்ல
எதையும் எதிர்பார்த்துமல்ல.

தன் வழி அது போகும்
நாம் அதன் வழி போவோம்
ஆனாலும் 
அதை குறை சொல்லியே நாம்.
ஏன் இந்த தாகம் 
குறை தேடும் மோகம்
உயிரில்லா கடிகாரத்தை மட்டுமல்ல
உயிருள்ள இதயத்தையும்
எண்ணத்திலும் குறை தேடி நாம்.

மாற மாட்டோமா
மாறின் அது நன்று
மாறாதிருப்பின் முடிவு வரும் 
அன்று கடிகாரம் ஓடும்
நாம் நின்றிருப்போம்.

இன்னும் வாசிக்க... "மாறாத மனித இயல்பு !"

Saturday, March 16, 2013

பீரிட்டு வரும் பிரியம் !எந்த வித முன்னறிவிப்புமின்றி
அறிமுகங்களுக்கு விருந்தாகும்.

நாசி தொட்டு 
நாவையழைக்கும் மணம்.

இதழ் தொட்டணைத்து
இருதய கதகதப்பை
உணரும் தருணங்கள்.

மிக மிக அருகிலேயே
அடர்ந்த நிறத்தில் ...
ஆர்வமாய் எனை நோக்கி.

கைகள் பரஸ்பரம் உணர்ந்த பின்பும்
ஏனோ...நாவைத் தீண்டும் முன்பு
ஞாபகத்திற்கு வந்தே தொலைக்கிறது
மருத்துவ ஆலோசனை..
டீ...காபி கூடாது என்பது.

ப்ரியத்தின் அளவை மீறி
பீரிட்டு வழிகிறது
கோப்பை வழியாக
தேநீர்க் காதல்.

இன்னும் வாசிக்க... "பீரிட்டு வரும் பிரியம் !"

Friday, March 15, 2013

எல்லாம் தேடல் தான் !தீ எடுத்து மாலை தொடுத்து
நன்மை குணம் சூடுமோ ?
காற்று பிடித்து பையடைத்து
உருகொடுத்தல் ஆகுமோ ?
வானவில் பிடித்து வந்து
ஆடை நெய்தல் ஆகுமோ ?
பாசத்தை தொலைத்துவிட்டு
உறவு தேடலாகுமோ ?
எல்லாம்  தேடல் தான்
வரவு செலவு அறியாமல்.

பகலது இரவு தேடும்
இரவதை நிலவு தேடும்
நிம்மதி இதயம் தேடும்
கனவுதனை நினைவு தேடும்
தேடியது கிடைப்பினது வெற்றி
நினைப்பது  பொய்ப்பின் தோல்வி
எதுவும் நமதே என்று
கேட்க உரிமையுண்டா ?
கேள்வியுடனே வாழ்வும்.
இன்னும் வாசிக்க... "எல்லாம் தேடல் தான் !"

Thursday, March 14, 2013

வியர்வைத் துளிகள் !

எல்லோரும் தான் 
ஓடிக்கொண்டிருக்கிறோம்....
ஆனாலும்
வீழ்ந்து கிடக்கும் 
விவசாயியை பார்க்காமல்
ஓடுவதில் பயனில்லை..


பசித்த போதும்
பைசாவைத் தேடுபவன்
உண்டே தவிர.....
உழுதவரை நினைப்பவர்
யாரும் இலர்.
இன்னும் வாசிக்க... "வியர்வைத் துளிகள் !"

Wednesday, March 13, 2013

உயிர் பயண மாற்றம் !உதிர்வென்பதது முடிவோவென்று
காலத்தை அழைத்து கேட்டுப்பார்த்தேன்
உயிர் பயண மாற்றமே வேறில்லையென்று
சொல்லியதும் உதிரக்கண்டேன்.

பகலவனை கேட்க ஓடி காலை
கடற்கரை மணலில் நடந்து போனேன்
மௌனமாய் அதுவும் கூட மாலை
கடலில் புதையக் கண்டேன்.

இருளது படர்ந்து இருளாய் நிற்க
முழுநிலவும் வந்து ஒளி சிந்தி மலர
மெதுவாய் அதுவும் கரைந்தேயழிந்து
அம்மாவாசையாகப் போகக்கண்டேன்.

ஜோடியாய் பறந்த பறவைக் கூட்டம்
கட்டின கூடுகள் தன்னின வாழ்வென
பொரித்தன முட்டைகள் புதிதாய் ஜனனம்

தேடின தேனீ பூவில் உணவினை
சேர்த்தன தேனை மெழுகுக் கூட்டில்
பறித்தன கைகள் சேமித்த தேனை
மனித சுயநலம் சுரண்டலாய் தானே.

நகர்ந்தன எறும்புகள் சாரை சாரையாய்
வேனிற்கால சேமிப்பை தனதென நம்பி
கனிந்தன கனிகள் மண்ணீல் வீழ
புதைந்த விதைகள் எழுந்து மலர.

அம்மாவென்றே அழைத்த கன்றும் 
அம்மாவாகி பாலை ஈந்திட
பூவை அவளும் பாவை ஆணால்
கொஞ்சும் பாதம் தாங்கி நடந்தாள்
இடுப்பில் இன்று அவளது சாயலில்
குட்டித்திருமகள் மகவு என்றே.

காலமுருண்டது நேரமுதிர்ந்தது
கோலமுதிர்ந்தது வளர்ச்சி கண்டே
விடைபெற்ற உறவுகள் உதிர்ந்ததென்ன
முடிவோ ? கேள்வி முடிவில்லை
கேள்வி கேட்டு பயனொன்றுமில்லை

உண்டுழைத்து கண்டு மகிழ்ந்து
நிம்மதி கொண்டு நித்திரை காணின்
அதுவே வாழ்வில் ஆனந்தக் காற்று.
இன்னும் வாசிக்க... "உயிர் பயண மாற்றம் !"

Tuesday, March 12, 2013

மரண நேரத்தில் !


சீக்கிரம் எழுந்து விடு
மரணிக்கும் பனித்துளிகளின் 
எண்ணிக்கையே முடியப் போகிறது.


இன்னும் வாசிக்க... "மரண நேரத்தில் !"

Monday, March 11, 2013

உன்னுறவு இனியும் வேண்டாமெனக்கு!இதயத்தை கிழித்தெறிந்து
இங்குமங்கும் அலைகின்றேன்
சிதறிக்கிடக்கும் உன் முகத்தை
கண்ணீரில் சிலையாய் வடிக்கின்றேன்.

வெட்டி ஒட்டி பூசினாலும்
அழுதழுது தேற்றினாலும்
ஒட்டாத உன் முகத்தை
என்னில் ஏந்தித் திரிகின்றேன்.

காண்பவர் நகைத்து நிற்க
காணாதவரும் பகைத்துப்  பேச
கொஞ்சியவனை கோபமுறச்செய்து
மிஞ்சியவரை மிரள வைத்து
ஏ... கோபமே
 நீ சிதறியதே போதும்
மீண்டும் என்னில் ...
சேர்ந்து என்னெண்ணமதை
கங்கையில் கரைத்துவிடாதே.
காயங்களின் சாபங்கள்போதும்
காயதுகனிந்து விதையது
மண்வீழ்ந்து தளிர்குமுன்
மண்ணாகிப்போவதோ நினைவு
கோபமே எனையாழும் சாபமே
போ போய்விடு உன்னுறவு
இனியும் வேண்டாமெனக்கு!
இன்னும் வாசிக்க... "உன்னுறவு இனியும் வேண்டாமெனக்கு!"

Saturday, March 9, 2013

இருப்பது போதும் !பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி
சிறகொண்ணுத் தருவாயா?
உன்னபோல நானும்பறக்க
படிச்சித்தான் கொடுப்பாயா?

அணிலண்ணா அணிலண்ணா
உனக்கெதுக்கு இந்தஆசை
அற்பஆயுள் வாழ்வெனக்கு
அறிந்துத்தான் கேட்டாயா?

கழுகங்கே காத்திருக்கு
மரமேறமுடியலையே
கூட்டுக்குள்ள எத்தனை 
நாள் பட்டினியா இருப்பது
சிறகிருந்தா பறந்தோடி
கொய்யாப்பழம் தின்னலாம்!

ஆண்டவனே ஆண்டவனே
அண்ணாவுக்குத் தோகைகொடு
அதுபறந்துப் பொழைக்கட்டும்
பசியாற உண்ணக்கொடு!

கொடுத்தானே ஆண்டவனும்
வௌவாலா வேஷந்தான்
எடுத்தானே பார்வைமட்டும்
தலைகீழாய் தொங்கியதேயதுவும்
உருமாறிப்போனதுவே மனித
ஜாதியாய்ப் பாதியானதுவே!

இன்னும் வாசிக்க... "இருப்பது போதும் !"

Friday, March 8, 2013

ஆகாயம் தொடும் முயற்சி !போராட்டம் இல்லையெனில்-மன
தேரோட்டம் அழகில்லை
நன்று மட்டும் வாழ்வெனில்
நஞ்சறிய வாய்ப்பில்லை.

இன்பமும் வாழ்வு தான்
துன்பமும் அதன் பகுதிதான்
பிள்ளைத் தொல்லை தாய்க்கழகு
மண்ணின் மாண்பு சேய்க்கழகு

விளைந்த கதிர் தலைக்குனியும்
அதற்கது மேன்மையே.

சூறாவளியாய் சுழன்றாடும்
காட்டாற்று வெள்ள வாழ்வும்
மீனுக்கது விளையாட்டே.

முள்ளின் மீது ரோஜா வாழும்
அதனுள்ளே மணம் வாழும்
முள்ளென்பது வேலியே.

சின்னச்சின்னதாய் கூடுகட்டி
அழகாய் அதில் முட்டையிட்டு
மகவு வளர வாழ்ந்திருக்கும்
குருவியின் வாழ்வும் தியாகமே.

ஒன்றிலொன்றாய் கலப்பதும்
ஒன்றிலொன்று முளைப்பதும்
முளைத்தது வளர்வதும்
வளர்ந்தது வீழ்வதும்
யார் கையில் அறியாமல்
பதுமைகளாய் நாமுமே.

ஆனாலும் விடமாட்டோம்
ஆகாயம் தொடும் முயற்சி
நடக்கட்டும் நாடகம்
நடப்பதும் நன்மைக்கே.

இன்னும் வாசிக்க... "ஆகாயம் தொடும் முயற்சி !"

Wednesday, March 6, 2013

மல்லு கட்ட அவளுமில்ல மனக்குறைய எங்க சொல்ல !'ஏன்டி .....துலுக்காணம்
நான் போனேன் மரக்காணம்
என் வூட்டு மலைச்சிருக்கி
உலுக்காத மரம் உலுக்கி
வாங்கி வந்தா சீர்சனத்தி....

ஆத்துப்பக்கம் போகவேணாம்
அதுவாவே தொவச்செடுக்கும்
அழகான செவுர் ஒடச்சி
அதுக்கு வச்சா ஒரு பைப்பு....

கொளத்து மீன புடிச்சி வந்து
கொழம்பு வைக்க அம்மி வேணாம்
அரைச்செடுக்க மிசினிருக்காம்
அதுக்கு நாலு கிண்ணமிருக்காம்...

பச்ச மிளகாய் கடிச்சி தின்ன
பழங்கஞ்சி அலுத்திருச்சாம்
இட்லி தோசை இடியாப்பம்
அர அடுக்கு கிண்ணத்தில
குருக்கும் நெடுக்கும்  கல்லுரெண்டு
ஓடி ஓடி மாவரைக்க
அதுவா கவுத்து அரைக்குமாமே
அனியாயத்த கேளு புள்ள...

தண்ணி இரைக்க கிணறுமில்ல
தாகம் தீர்க்க இளனியில்ல
இளைப்பாற நிழலுமில்ல
என்னா பொழப்பு சொல்லு புள்ள...

ஆடு மாடா சுத்தி புட்டு
நடு நிசி ஊடு வந்து
உறங்கி யெழுந்து போறா அவளும்
விருந்தாளி முகமும் பார்க்கவில்லை
அவளுக்கு.....
புருசன் முகமாவது நினைவிருக்குமா ?
சொல்லு புள்ள....

குனிந்து நிமிர்ந்து வேலசெஞ்சி
குழாய் தண்ணி எடுத்து வந்து
குழம்பு சோறு ஆக்கி வச்சி
கண்டாங்கி சேல கட்டி
கட்டு சோறு கட்டிகிட்டு
கழனி பக்கம் நாம போன
கதைய சொல்ல அவளுமில்ல
காற்றும் வீசவில்ல
என் கொரைய எங்க சொல்ல....
கேக்க கொக்குமட்டும்
உச்சிவெயிலில் ஒத்தக்காலில்
என்னப்போல அதுவுமிங்கே!
இன்னும் வாசிக்க... "மல்லு கட்ட அவளுமில்ல மனக்குறைய எங்க சொல்ல !'"

Monday, March 4, 2013

அனுபவப் பாடம் !கடலோரம் கடலோரம்
காத்திருக்கேன் படகோரம்

அலையோடும் வேகமென்ன
அது உணர்த்தும் பாடமென்ன

நண்டோடி வளைதனைத் தேட
நாமோடி மனசாந்தி தேட

மணல் வீட்டின் அழகைப்பாரு
மலராய் சிரிக்கும் மனமே தேரு

வலை வீசி வாழ்வைத் தேடி
வாழ்விழந்தோர் விந்தை கோடி

நீர் குடித்த கடலம்மா
நீந்தப் பழகும் அலையம்மா

காற்றாடுது மனமம்மா- அதில்
கானலாய் எண்ணமம்மா

வார்தையெலாம் உதிருதம்மா அதுவே
மணல் விரிப்பாய் கிடக்குதம்மா

எழுதுகிறேன் கவிதையம்மா அதை
அலையழித்துச் சிரிக்குதம்மா

அனுபவங்கள் பாடமம்மா நாம்
காலத்தின் கைதியம்மா.

வருவார் போவார் வாழ்வம்மா
உணர்த்தும் பயணமே வழியம்மா

முள்ளும் மலரும் இருக்குமம்மா
முயற்சி மட்டுமே நமதம்மா.இன்னும் வாசிக்க... "அனுபவப் பாடம் !"

Saturday, March 2, 2013

விளைச்சல் யாவும் பதராக !

பொன்னிற பூமியாய்க் காலை
மஞ்சளாடையணிந்து சோலை
சென்னிற மேனியோடு வானம்
பனித்துளி தாங்கி புல்வெளி.

மேகவெண்மேனியுள் மலை
காலைக் கதிரவன் பாட்டு
கொஞ்சும் கிளியின் ராகம்
பச்சைப் பரப்பாய் வயல்கள்.

பட்டுடுத்தியே சிட்டாய்சிட்டு
பஞ்சமெங்கே காணோம்
இயற்கையிலில்லைத் தவறு!

அழகழகாய்த் தோரணம்
அன்னத்தின் நீச்சல் சீதனம்
கள்ளமில்லாப் பார்வைகள்
கபடுகளறியா உறவுகள்!

அறிவு வளர்தோம் எதற்காக?
ஆஸ்தி தேடினோம் நமக்காக!
விதைகளில் கலந்த தீமையாலே
விளைச்சல் யாவும் பதராக!

பகிர்வும் நமக்குத் தூரமாய்
பண்பு மனதில் பாரமாய்!
தொலைத்து தொலைந்தோம்
தொலைந்து அழுகிறோம்!

எதற்காக இந்த ஓட்டங்கள்
யாருக்காயிந்த தேட்டங்கள்!
மண்ணுக்குரிமை எல்லாமும்
பெண் ஆண் பேதங்களில்லை
வந்தோம் ஆடையணியாமல்
போவோம் அதை இங்கெறிந்தே!
இன்னும் வாசிக்க... "விளைச்சல் யாவும் பதராக !"

Friday, March 1, 2013

அன்றும்...இன்றும் !


அன்பாய் தலைகோதி
ஆசையாய் வருடிவிட்டு
தாய் தந்தை உறவின் நடுவே
சேயதனை உணர்த்தும் விதமாக
கூந்தலை மூன்றாய் பிரித்து....
பின்னிப் பிணைத்து ...அம்மா
ஜடை போட்ட விதமெங்கே ?

இன்று

உதறிப் போகும் உறவுகளை
அள்ளி  முடியாக் கூந்தலும்
குறிப்பாய்  உணர்த்திப் போகுதோ ....?

இன்னும் வாசிக்க... "அன்றும்...இன்றும் !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி