Ads 468x60px

Friday, July 13, 2012

பேச்சில் பெண்ணுரிமை !


பூந்தோட்டமெங்கும் ஆடும் வண்ணமலர்
சிந்தையிலோ மணம்வீசும் எண்ணமலர்
விழியிரண்டும் அலைந்தோடி காட்சிதனை
நிழற்படமாய்க் கொய்து மகிழ்கையிலே
வண்டினத்தோடு தேனீயும் போட்டிபோட்டு
தேனெடுக்க முயன்ற முயற்சி வென்றாலும்
மகரந்தம் சுமக்க இயற்கை அனுப்பிய தூதர்
அறியாமல் அவரோட்டம் அவனிவாழ்வுக்காய்!

மொட்டுவிரிந்து மலராகி மணம்பரப்பி நிற்க
இதழ் உதிர்ந்து காயாகி மறுஜென்மம் காண
ஒன்றிரண்டு மட்டும் தாய்மை வரமின்றி ஏங்கி
மொட்டுவடிவிலேயே குழந்தைக் கனவோடு
மலருக்கே இதுகொடுமை மனிதரில் இவர்கள்!
மலடியெனப் பட்டம்சூட்டி மனங்களை தீயிட்டு
படைப்பின் குறைபாட்டுக்கு பெண்ணை பலியாக்கி
நடத்தும் நாடகத்தின் பெயர்தான்-சமூகநீதியெனில்,
அந்தநீதி அழிவதுவே பொது தர்ம நீதியாகும்!

காட்சியிலோர் மாற்றம் பார்வையும் வேறாக
மங்கலமாய்ப் புறப்பட்ட திருமண ஊர்வலத்தின்
குறுக்கே ஓடிய பூனை அபசகுனம் ஆனதுபோல்
பெற்றோர்க்கு குலமகளாய் திகழ்ந்த மலர்கள்
ஊருக்குள் தேவதையாய் ஓடிய பூங்கால்கள்
வாழ்க்கைத் துணையைக் காலன் கவர்ந்ததால்
பொட்டின்றிப் பூவின்றி வெள்ளையாடையுடன்
கனவெல்லாம் போனவனோடு போட்டுப் புதைத்து
நடைபிணமாய்கண்ணீரெல்லாம் தலையணையில்
இருட்டோடு இருளாய் நாளெல்லாம் தவித்தழுது
வெளியே வந்தால் தீட்டு முண்டச்சி விதவை
அபச்சார வார்த்தைகளால் ஆயிரம் அர்சனைகள்!
விட்டொழிந்து போய்விட எண்ணி கயிறெடுக்க
அம்மா வேண்டாம்மா பிள்ளையின் அபயக்குரல்!
அவளுக்காய் இல்லை பிள்ளைக்காய் சுமைதாங்கியாய்
புன்னகையைக் கொய்தெடுத்த அந்தக் காலன் கொடியவனா?
பூமனமறியாத மாந்தரின் சயநலச் சட்டங்கள் கொடியதா?

பேச்சில் பெண்ணுரிமை ஏட்டிலவர் தேவதைகள்
இயல்பில் அடிமைவர்கம் வாழ்வில் பாலுண்ணிகள்
பேசாமடந்தைகளாய் வாழ்வையே சாபமெனஎண்ணி
வாடும் இவர்க்கெல்லாம் விடியல் மலர்ந்திடுமா?
எழுப்பிவிடயாருமில்லை எழும்பினால் பட்டங்கள்!
இதயமில்லா மானுடத்தின் ஓரக்கண் பார்வையிலே
உருகிவிழும் நட்சத்திரங்களாய் விழும் இவரின்
பாலைவாழ்வு சோலையாக பூவெல்லாம் கனியாக
சமூகத்தைக் கைகாட்டி தப்பிக்க முயலவேண்டாம்!
நான் நீ நாம் மாறின் நலம்பெறும் இவர்வாழ்வும்!!
இன்னும் வாசிக்க... "பேச்சில் பெண்ணுரிமை !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி