Ads 468x60px

Monday, October 29, 2012

துளித் துளியாய் - 3


பட்டாம் பூச்சி
பிடிக்கத்துடிக்கும் மழலையாய்
உன் பார்வைக்கு முன்பு
நிற்க முயன்று தோற்றுக்கொண்டிருக்கிறேன்.

நீண்ட காத்திருப்பில்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சல் தேய்ந்து
கோபமாகிக் கொண்டிருக்கிறது.

அணைக்கப்பட்ட
மின்விசிறியின் அசைவாய்
மிதமாய்த்தான் உழுதுகொண்டிருக்கிறாய்
என்னுள்ளும்.


கனவுகளை அனுப்புங்கள்
 இமைக் கதவுகளை
திறந்து வைக்கிறேன்.

 சிந்தையிலிருந்து சிதறிவிழுந்த
தூறலது தமிழ்த்தூறலது
தமிழ்க் கவியானதோ?


உன் பார்வைக்கு முன்பு
நான் கொலு வைத்த
பொம்மையாகிறேன்
கொலு பொம்மையெல்லாம்
 நாட்டிய மாட
கொலுசு கேட்கின்றன.

இன்னும் வாசிக்க... "துளித் துளியாய் - 3"

Saturday, October 27, 2012

இலவசத்தின் இழி நிலை !


அடுப்பெரிய நாதியில்லை நோய்க்கு எங்கேயோட
அரசுமருந்தகத்தில் மருந்துமில்லை மருத்துவரும்தான்
அதிகாலை வேளையிலே அடுக்கடுக்காய் அவலங்கள்
அதிலும் பத்துரூபாய்க்கு வரிசையில் முன்னுரிமை!

ஆடும்தொட்டில்களதில் குடியிருக்கும் மூட்டைப்பூச்சி
ஆண்டவனே வந்தாலும் கடுகடுவென செவிலியர்
ஆகாயத்திலிருந்து குதிப்பதுபோல் மருத்துவர்வருகை
ஆவலோடு வலிதீர காத்துக்கிடக்கும் ஏழைபாழை!

இறந்தவரை பன்றியென தூக்கிச்செல்ல பிணவூர்தி
இமைமூடி நிம்மதியாய்த் தூங்கவோர் காவலாளி
இயந்திரமாய் மாறிப்போன இதயமணிந்தேயவர்
இரக்கத்தைக்கொன்றுவிட்டு கடமைப்போர்வை!

ஈனங்களும் ஊனங்களும் பாலைமான் நீர்தேடலாய்
ஈடில்லா உயிர் காப்பாரோ பணமொன்றே நோக்கமாய்
ஈக்களின் புகலிடமாய் பொதுமருத்துவமனையிருக்க
ஈன்றவர்போல் கண்காணிப்பு தனியாரின் தயவாக!

உழைக்காமலூதியம் பொதுமக்கள் பணத்தினிலே
உறவாய்த்துடித்து பொய்யெழுதி கோடிகளாய்
உண்மை அழுகிறது சுரண்டலினாலானவலி
உருப்படியின்றி உரிமை கொடிதிலுங்கொடிது!

ஊழியமே மருத்துவம் உறுதிமொழியெங்கே
ஊருக்காயுழைப்பு சுயவிளம்பராய் மட்டும்
ஊஞ்சலாடும் உயிர்வைத்து வியாபாரமெனில்
ஊமையாய்ப் பார்த்திருத்தல் நல்நீதியில்லை!
இன்னும் வாசிக்க... "இலவசத்தின் இழி நிலை !"

Friday, October 26, 2012

ஜாதிகள் இல்லையடி பாப்பா !விதைப்பவனிங்கே கீழ்ஜாதியதை
உண்பவர் புவியில் மேலோராய்!

தட்டான் வேண்டும் தாலிதட்ட
தரையில் அவருக்கிருக்கை நீதி!

கைராசிக் காரனெனில் போட்டி
பணம் கொடுத்து உயிர்காக்க!

தன் வாழ்வுக்காய் போராடும்
ஜோதிடன் சொல்வது வேதம்!

நோய்வாய்ப்பட்ட கைகொடுப்பின்
காணிக்கை பணத்தில் தீதில்லை!

பூஜாரியுடுத்துமாடை நெய்தவனார்
கேள்வி கேட்டா உடுத்துகிறார்?

நெய்தவன் நேரில்வந்தால் விபூதி
கொடுக்கையில் கைபடினது தீட்டு!

ஜாதிகளில்லையடி சொன்னபாரதி
இன்றிருப்பினவனும் தீட்டென்பார்!

உடலழுக்கில் பழுதில்லையது உழைப்பு
உள்ளம் பழுதுபடின் சிறப்பில்லையதுதீமை!

ஆலாய்வாழ்ந்து விழுதேநாம் என்றெண்ணின்
ஜாதியுமில்லை மதமுமில்லை மனிதரிடை
உயர்வு தாழ்வென்றபொய் பேதமுமில்லை!
இன்னும் வாசிக்க... "ஜாதிகள் இல்லையடி பாப்பா !"

Thursday, October 25, 2012

எங்கெங்கு காணினும் !


எங்கெங்கு காணினும்
கல்விக் கூடமடா
மேதினியெங்குமே
 தரமிகுகல்வியில்லையடா!

இலவசமாயின் வாலாய் நீளும்
கூட்டமிங்கே பெருகுதடா
கல்வி இலவசமாயினும்
கற்க மனம் இல்லையடா!

கண்ணிருந்தும் அறிவின்றி
குருடர் ஆனோமடா
பெருமையென்றே கல்விக்கும்
 காசுகொடுக்கத் துணிந்தோமடா!

அம்மாவெனும் அழகுத்தமிழையும்
மம்மிடாடி என்றழைத்தே
மண்ணில் புதைத்தோமடா!

தாய்மொழியைத் தள்ளிவைத்தே
தறிகெட்டு அலைந்தோமடா
எம்முயிரே எம்தமிழே
எம்பிழையை பொறுப்பாயோ ?
எம்குலம் தழைத்திடவே
எம்முடனே இருப்பீரோ!
இன்னும் வாசிக்க... "எங்கெங்கு காணினும் !"

Wednesday, October 24, 2012

அன்புக்கும் பூஜை !


அன்பும் உறவென்ற ஆயுதமணிதல்போல்
ஆண்டவன் படைப்பில் ஆயுதம் உறவுகளாய்
இரும்பு வெள்ளித் தங்கமென உலோகங்கள்
உருக்கியெடுத்தே வாழ்வில் ஓட்டங்கள்!

ஊர்வலம்போக நம்மூர்சாமிக்கும் காவலாய்
ஏர்மாட்டின் கழுத்தில் ஆழஉழும் ஏர்சுமையாய்
ஐயங்கள் வாழுமிடம் கொலைக் கருவிகளாய்
ஒருமைப்பாட்டு கீதத்தில் ஆலை இயந்திரமாய்!

ஓலையது செதுக்கின் தூசியோட்டும் துடப்பம்
ஔவைத் தமிழில் காப்பானுங்கெடுப்பானும்
அஃதொன்றும் பெரிதில்லை இன்னுமுண்டு
கடைக்கண் பார்வையும் ஆயுதமாவதுண்டு!

அரங்கேறும் பூஜைகளாயிரமாயிரமுண்டு
அதுபாடும் பண்பாடு படும்பாடுசொலில்
முரண்பாடாய் கருத்துரைத்தாயென்பார்
ஆனாலும் சொன்னேன் என்கருத்தை!

வெள்ளைச் சுவரினிலேயோர் கரும்புள்ளி
அதைமட்டும் பார்க்காதே என்பவரே நம்
முன்னோர் மூடரல்ல இதயமுள்ளவரவரே
முதற்கனி கடவுளுக்கு ஏன்சொன்னார்?

பூஜைகள் முடிந்தவுடன் அதையெடுத்தே
ஏழைக்குத் தானமென அள்ளிக்கொடுப்பார்
காக்கையும் காத்திருக்கும் அதைக்கூடியுண்ண
எங்கேநாம் நிற்கின்றோம் எண்ணியதுண்டா?

மெழுகாலே பழங்கள்செய்து படைக்கின்றோம்
அடுத்தமுறையதைவைக்க கழுவிவைப்போம்
ஆயுதங்களே பரவாயில்லை நினைக்கின்றேன்
நாம்வாழ அதுதேய்ந்து மாள்கிறதேஆதனில்!

ஆயுதமாயிருக்கும் எண்ணம் களைந்து
அன்பேந்தி ஆயுதபூஜை செய்வோம்
ஆயுதமாயல்ல இதயமுள்ள மனிதராய்
புகழுக்காயுமல்ல தர்ம புண்ணியமென்றே!!
இன்னும் வாசிக்க... "அன்புக்கும் பூஜை !"

Monday, October 22, 2012

மாறுதுமனம் அழிவையணிந்தே !சுத்தமான மென்காற்று
பளிச்செனப் பட்டாடை
பளிங்குக்கல்லால்ஆன தரை
பல் தேய்க்கவும் பன்னீர்
அறுசுவையாய் உணவு
தேவலோகக் கனவுவாழ்வு!

எண்ணத்தின்தேடலென்றும்
 ஏணிப்படிகளை மட்டுமே
நம்மால் முடியுமென்றெண்ணி
அதனை உருவாக்கும் திறனை
வளர்த்திட நாம் மறுக்கிறோம்.

ஒரு சிறு உயிரணுவும்
உருவாக்கும் சக்தியில்லை
கல் சுமந்துழைக்கும்ஏழை
உழைப்பாளியினுழைப்பை
விலை பேசி நிற்கிறோம்!

உணவே நஞசான போதும்
உழுதுழைக்கும் நிலத்தினை
உரிமையாக்க துடிக்கிறோம்.
அதில்மாடிகளாய் கல்லறைகள்!

சேற்றை மிதிக்கும்நம்கால்
காக்கசெருப்பைச் செய்தவனின்
சேம நலம் எண்ணத்திலில்லை!

எதனையும் விலை கொடுத்து
வாங்கி உழைப்பை விட்டு..
இன்று உழைக்கும் வர்க்கமும்
எந்திரமாகவேத் தெரிகிறதோ ?

மாறுதுமனம் அழிவையணிந்தே
தேடுதுதினம் அன்பை மறந்தே
ஓடுதுகால்கள் தீமையணிந்தே
திரும்புமாகாலம் நன்மைநாடி?
இன்னும் வாசிக்க... "மாறுதுமனம் அழிவையணிந்தே !"

Friday, October 19, 2012

டவுட் சுந்தரியும் அலமுவும் !


அலமு : சசி என்னடிம்மா நேத்து அதிசயமா நீயும் உன் புருசனுமா சேர்ந்து சிரிப்பு சத்தம் கேட்டுதே.

சசி : ஆமா மாமி நேத்து மஞ்சு பாஷினி அக்கா பேசினாங்க மாமி. அவங்களுக்கு புலவர் ஐயா பதிவில் கருத்து போட முடியவில்லையாம்.

என்னனு கேட்டுட்டு இருந்தாங்க அப்படி ஆரம்பித்தது கலாட்டா.

அலமு : யாரு நல்லா பாடுவாங்கனு சொல்லியிருக்கியே அவங்களா ?

சசி : ஆமா ஆமா மாமி இனிமையான குரலாலே எனை கவர்ந்த அக்கா தான்.

அலமு : அப்படி என்ன தான் சொன்னாங்க நீங்க சிரிக்கிற அளவுக்கு.

சசி : ஐயாவின் ஐடி கொடுத்தேன் பிறகு நம்பரும் கொடுத்து பேசுங்க அக்கா என்றேன். இரு சசி இப்பவே பேசலாம் என்று எனக்கு கேட்கும் படியாக இருவரும் பேசினாங்க ஆனால் என் குரலை அவர்களால் கேட்க முடியாது.

அலமு : அப்படின்னா நீ ஒட்டு கேட்ட அப்படி சொல்லு.

சசி : மாமி இப்படி சொன்னா எனக்கு கெட்ட கெட்ட கோபமா வரும் நான் சொல்ல மாட்டேன் போங்க.  அக்காவே இரு சசி பேசலாம்ன சொல்லவே தான் இருந்தேன்.

அலமு : சரிடிம்மா ஏன் இப்படி கோபம் வருது சும்மா தான்டிமா சொன்னேன்.

சசி :  சரி சரி புலவர் ஐயா போன் எடுத்தாங்களா.  அக்கா ஐயா நான் மஞ்சு பேசுறேன். உங்க கீழ் வீட்ல குடித்தனம் இருந்தேனே அந்த மஞ்சு எப்படி இருக்கிங்க இப்படி ஆரம்பிச்சாங்களா .

அலமு : அப்படியா அவங்க வெளி நாட்ல இருப்பதா சொன்னியேடிம்மா.

சசி : ஆமா மாமி நானும் உண்மையாவே அவங்க புலவர் ஐயா வீட்ல தான் முன்னாடி இருந்தாங்களோனு நினைச்சேன். பிறகு தான் தெரிந்தது எல்லாம் கலாப்புனு.

அலமு : அடடே அவங்க பெரிய ஆள் தான் போல சொல்லு சொல்லு ஏன்டிம்மா புலவர் ஐயாவுக்கு 80 வயதுன்னு சொன்னியே இப்படியா கலாப்பிங்க 2 பேரும் . வேற யாரும் கிடைக்கலியாடி உங்களுக்கு .

சசி : மாமி ஏன் அவசரம் அடுத்து ஒருத்தரும் நேத்து மாட்டினாங்க.இருங்க  சொல்றேன்.

அலமு : அதானா நேத்து பட்டிக்காட்டான் மிட்டாய் கடைய முறைச்சி பாக்குற மாதிரி குடும்பமே கம்பூட்டர் முன்னாடி உக்கார்ந்துண்டு கெக்ககேன்னு சிரிச்சிட்டு இருந்திங்க.

சசி : ஆமா மாமி புலவர் ஐயா யாரும்மா எனக்கு நினைவில்லையேனு சொன்னாங்களா ?  உடனே அக்கா சரிங்க ஐயா உங்க வீட்டுக்கு இரவு சாப்பாட்டுக்கு வரேன்னு சொன்னாங்க . ஐயா யாரும்மா தெரியலையேனு சொன்னாங்க. அக்கா பிறகு தான் மஞ்சுபாஷினினு சொன்னாங்க ஐயா உடனே அப்படியாம்மான சிரிச்சாங்க .  எங்கம்மா இருக்க இப்படி நார்மல் உரையாடல் தொடர்ந்தது மாமி. அக்கா பதிவில் மட்டுமில்லை போன்லயும் விரிவா விளக்கமா எல்லாம் விசாரிச்சி பதிவர் சந்திப்பு உட்பட ஐயாவின் பேரக்குழந்தைகள் மகள்கள் இப்படி எல்லாரை பற்றியும் பேசி பிறகு ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்தும் சொல்லிட்டு வச்சாங்க. ஐயாவின் பதிவர் சந்திப்பு பற்றிய உரை நெகிழ வைத்தது . உண்ணும் உணவோ மருந்து மாயமோ எதுவுமே என்னை உற்சாகமா வாழ வைக்கள பதிவுலக நண்பர்களின் அன்பும் பாசமும் தான்னு சொன்னதும் நெகிழ்ந்து போனோம்.

அலமு :  ஆமா சொல்லி இருக்க இல்ல அவங்க எந்த பதிவுக்கும் இரண்டு வரில கருத்து சொன்னதில்லைனு .

சசி : ஆமா மாமி அதோட விடல அவங்க. சசி அடுத்து ராஜியோட பேசலாமானு கேட்டாங்களா சரிக்கானு சொன்னேன்.

அலமு : போச்சி அவங்களையும் விடலியா நீங்க. ஆமா அவங்க உங்களுக்கு மேல கிண்டல் பேர்வழியாச்சே.

சசி : அதான் மாமி இல்ல அக்காவை யாரால ஜெயிக்க முடியும் அவங்களையும் கவுத்துட்டோம்ல.

அலமு : அப்படியா ?

சசி : ஆமா மாமி ராஜி அக்கா நம்பர்க்கு டயல் பண்ணாங்களா  அவங்களும் எடுத்து ஹலோனு சொன்னாங்க உடனே அக்கா நாங்க சன் டிவில இருந்து பேசுறோம் உங்களுக்கு பிடிச்ச பாட்டு சொல்லுங்கனு சொன்னாங்க அவ்ளோதான் அந்த பக்கம் கட் ஆகிப்போச்சி மாமி.

அலமு : இவ்ளோ பயந்தாங்கோலியாடி அவங்க ?

சசி : ஆமா மாமி அதான் எங்க வீட்ல எல்லாம் ஒரே சிரிப்பு. மறுபடி அக்கா விடல நம்பர் போட்டாங்க அவங்களும் எடுத்தாங்க என்ன ராஜி இப்படி கட் பண்ணிட்டிங்கனு சாதாரணமா பேசினாங்களா. பிறகு ராஜி அக்கா நீங்க யாருங்க என்று கேட்டாங்க. மஞ்சு அக்கா பதிவர் சந்திப்புல ஊதா கலர்ல புடவை கட்டிட்டு ரோட்லயே ஐஸ் சாப்டது யாரும்மானு கேட்டாங்களா . ராஜி அக்கா யாரோ தெரியள நீங்க யாரு சொல்லுங்க உங்களுக்கு என் நம்பர் யார் கொடுத்தது சொல்லுங்க நாளைக்கு இருக்குது அவங்களுக்குனு சத்தமா பேசினாங்களா.


மஞ்சு அக்கா விடாம ராஜி உன்னோட பதிவர் சந்திப்பு பதிவு போட்டியே அத படிச்சிட்டு முருகனும் ஔவைபாட்டியும் இருந்திருந்தா அம்மாடி எங்கள விட்டுடிம்மானு அழுதிருப்பாங்கனு சொல்ல ஒரே சிரிப்பு.

ராஜி அக்கா மயங்கவேயில்ல கணேஷ் அண்ணா கொடுத்தாங்களானு கேட்டாங்க. மஞ்சு அக்கா அவர் இல்ல பா அவரும் பதிவர் சந்திப்ப பற்றி சொல்லும் போது எனக்கு மிஸ் பண்ணிட்டோமேனு இருந்ததுனு சொன்னாங்க.
டவுட் சுந்தரி அவரில்ல. ஆமா வா போனு சொல்றேனா தப்பிலையேனு கேட்க அவங்க எப்படிவேனா சொல்லுங்க சொல்ல அக்கா எப்படி பீட்ரூட் கேரட் அப்படி அழைக்காவானு கேட்க  என் பசங்களுக்கும் சிரிப்பு.


ஆமா ராஜி மதுமதிய ஓவரா கிண்டல் பண்ணி எழுதியிருந்த அதுவும் நல்லாயிருந்தது சொல்லவும் ராஜி அக்கா மதுமதி கொடுத்தாங்களானு கேட்டாங்க. மஞ்சு அக்கா இல்லம்மானு சொல்ல ஏன் ராஜி அதோட விட்டியா என் தம்பி மகேந்திரனையும் விஜயகாநத் மாதிரி வந்தாருன்னு கலாச்சிட்டியே நல்ல எழுத்து நடம்மானு சொன்னதும் ராஜி அக்கா மஞ்சு பாஹினி அக்காவானு அப்புறம் நார்மல் பேச்சு ஆரம்பிச்சது. மஞ்சு அக்கா பேசிட்டே இருக்கும் போதே லைட் போட மறந்துட்டேன் வைச்சிடவா கேட்டாங்க. ராஜி அக்கா மண்டைல லைட் பிரைட்டா இருந்தாலும் இப்படியா வீட்ல லைட் போடாம இருப்பிங்கனு ஆரம்பிச்சுட்டாங்க. எனக்கு சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்துடுச்சி.


அலமு :  நல்லா தான் கலாய்ச்சியிருக்கிங்க அதான் நேத்தெல்லாம் ஒரே சிரிப்பு மயமா இருந்ததா?

ஆமா மாமி ஐயாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லிட்டு என்றென்றும் ஐயாவின் ஆசி கிடைக்க வேண்டுமுனு ஆசிர்வாதம் வாங்கனும் வாங்க வாங்க போகலாம்.

இன்னும் வாசிக்க... "டவுட் சுந்தரியும் அலமுவும் !"

Wednesday, October 17, 2012

அகிலத்தின் தேடல் !


அன்பொன்றையே முன்வைத்து
அகிலத்தின் தேடலென்றால்

அரசாட்சியும் வாழ்ந்திருக்கும்
மக்களாட்சியும் நிலைத்திருக்கும்

நாற்காலிக்கு உயிர் கொடுத்து
நன்றியை நஞ்சென்று கொள்கின்றார்

நாமெனும் நிலை மாறியிங்கே
நானெனும் அகந்தை வாழ்கிறது

இம்சிக்கத் துணிந்துவிட்டதால்
இயற்கையும் மிஞ்சுவதில்லை

இருளாளும் காலமிது துணை
தீமையேயோடி வருகிறது

சுயநலத்தின் மறுவுருவாய்
சுரண்டல்களே கனவுகளாய்

லஞ்சமதை நியாயப்படுத்துகிறோம்
நம்பங்கெது எண்ணுகிறோம்

வஞ்சங்கள் நெஞ்சிலணிந்தோம்
பணமொன்றே வாழ்வென்றோம்

பெண்ணுக்குமிங்கே விலைதான்
மண்ணுக்குமிங்கே கொலைதான்

உயிருக்கு விலையில்லை பலர்
வீதிவாழ் சொறிநாய்களாய்

குப்பையிலேக் குழந்தைகள்
கோபுரத்தின் களவுகளாய்

பாதையெலாம் குப்பைகள்
பரவுதிங்கே தொற்றுநோய்

ஆள்வாரும் சரியில்லையிங்கே
ஆக்குவாரிலும் நேர்மையில்லை

அறிக்கைப்போர் நடக்கிறது
மாறிமாறி சேரிறைத்து

ஜனங்களெங்கேத் தேடுகிறேன்
விசிலடிக்கப் போனார்களாம்!
இன்னும் வாசிக்க... "அகிலத்தின் தேடல் !"

Tuesday, October 16, 2012

இருவரியில் ஒரு தேடல் !


காலமுனை வெல்லு முன் நற்செயலால்
காலத்தை நீ வெல்!

கற்றாழைக்கும் வாசமுண் டென்றறி யுனது
பிணி நீக்கும் மருந்தாகும்!

நாளை நமதில்லை யெதுசெய்வ தாயினும்
இன்றே நம்பிச் செய்!

முடியா தென்று நினைப்பர்தம் வாழ்வில்
முடிவ தெலாம் கனவுகளாய்!

முன்னுரை யெழுதுமுன் முடிவுரை எழுதுவான்
முகவுரைக் காண்ப தில்லை!

கேடில்லா நெஞ்சம் கொண்டோ ரென்றும்
கேள்வியாய் நிற்ப தில்லை!

கொதிக்கு மெண்ணையில் கைவிட்டாற் போல்
அழவைக்கு மன்பின் பிரிவும்!

போனதெல்லா மென்று இருப்பதையு மிழப்பின்
காலத்தின் கைதி யாவோம்!
இன்னும் வாசிக்க... "இருவரியில் ஒரு தேடல் !"

Monday, October 15, 2012

துளித் துளியாய் -2உன்னிடம் கோபிப்பதாய்
நடிக்கக்கூட
எத்தனை ஒத்திகை
தேவைப்படுகிறது.


விடுவிப்பதாய்  நினைத்து
விரட்டிப்பிடித்ததில்
விம்மிக்கொண்டிருக்கிறது
பட்டாம்பூச்சி.


ஒதுங்கி நின்றாலும்
உரசி சிரிக்கிறது
சாரல்.


எல்லாமே நன்றாய்
நடந்து கொண்டிருக்கும் போது
நான் மட்டும் ஏன்
இறகில்லாமலும் பறந்து கொண்டிருக்கிறேன்.


எனக்கு பிடித்ததெல்லாம்
உனக்கு பிடிக்காமலும்
உனக்கு பிடிக்காததும்
எனக்கு பிடித்துப் போக
என்னை மட்டும் உனக்கு
பிடித்திருப்பதாகவே...
நினைத்துக்கொள்கிறேன்
நம்பிக்கை தான் வாழ்க்கையாம்.


 தவிர்ப்பதற்காக
நீ தவிப்பதையே
தாங்க முடியாதவள் நான்.

இன்னும் வாசிக்க... "துளித் துளியாய் -2"

Friday, October 12, 2012

காதல் !மழை கொடுக்கும் மேகத்திலும்
மறைந்தோடும் விண்மீனிலும்
மணம் தேடி வரும் வண்டிலும்
வண்ணமணிந்த அந்தி வானிலும்
வரிசை மாறா தென்னங்கீற்றிலும்
வாசலில் சிரிக்கும் கோலத்திலும்
தாய் நோக்கும் கன்றுக்குட்டியிலும்
கொட்டுகின்ற மலைஅருவியிலும்
கொட்டினும் கூடிவாழும் தேனீயிலும்
தேன் சுமந்து தானுதிரும் மலரிலும்
தேனினும் இனிய மழலையிலும்
உப்பாய் மாறிய அலைகடலிலும்
உதிரம் கொடுத்த உயிர்த்தாயிலும்
தரணியாளும் தங்கத் தமிழிலும்
மயக்கிச் சிரிக்கும் ஓவியத்திலும்
துள்ளியோடும் புள்ளிமானிலும்
தூரத்து ஒளியாம் பசுமையிலும்
சுட்டெரிக்கும் மாயசூரியனிலும்
பட்டுத்தும் பண் பாவையிலும்
வானோடும் வண்ண நிலவிலும்
மண்ணோடும் அழகு ஆற்றிலும்
மனமோடும் எண்ணப் பாட்டிலும்
மலையாடும் மேகக் கூட்டிலும்
மரமாடும் தென்றல் காற்றிலும்
எங்கும் காதல் எதிலும் காதல்
எல்லாமே காதலாய் !
இன்னும் வாசிக்க... "காதல் !"

Thursday, October 11, 2012

துளித் துளியாய்...!

                                                 
                                              கொஞ்சல் பேச்சில்
                                              கெஞ்சலில் நிற்கும்
                                               வெட்கம்.
                                                


குளிரெடுத்தும்
சிலிர்க்காத உடம்பு
உன் குரல் கேட்டு
சிலிர்க்கிறதே

பேனா எழுதும் 
வார்த்தைகளை கூட
பேதை என்னால்
பேச முடிவதில்லை.


எல்லாக் கனவுமே
நிறைவேறியதாய் 
நினைவேயில்லைதான்
உன்னை பார்க்கும் போதும்.

கண்ணாடி முன்பு
நின்று விடாதே
காட்டிக்கொடுத்துவிடும்
உன்னில் எனை.
--திரைச்சீலை கூட
தினுசு தினுசாய் உடுத்துகிறது
எனை மட்டும் ஏன்
வெட்க ஆடை மட்டுமே
உடுத்தச்செய்கிறாய்.


இன்னும் வாசிக்க... "துளித் துளியாய்...!"

Wednesday, October 10, 2012

பேருந்து கலாட்டா !அலமு : ஏண்ணா... இன்னைக்கும் கிளம்பியாச்சா ?

மாமா : என்னடிம்மா புதுசா கேக்குற? எப்பவும் நான் ஆபிஸ் போறது தான? இன்னக்கி என்ன ?

அலமு : ஆமா, உங்களுக்கு என்னையே ஞாபகம் இருக்காது இதில் கல்யாண நாள் மட்டும் எப்படி ஞாபகம் இருக்க போகுது-

மாமா : கல்யாண நாளா..? அத வேற ஏன்டி ஞாபகப்படுத்துற- அப்புறம் நான் ஆபிஸ்ல இஞ்சி தின்ன குரங்கு மாதிரி தான் இருக்கனும். அத வச்சே எல்லாம் என்ன வீட்ல விசேஷமானு ட்ரீட் கேட்பானுங்கடி.
அலமு : அதுக்குத்தாண்ணா சொல்றேன்... லீவ் போடுங்க. வாங்க, எங்காவது கோவில் குளம்னு அழைச்சிட்டு போங்களேன்.

மாமா : ஆமாண்டி, எனக்கும் ரொம்ப நாளா ஆசை எங்காவது குளத்துல உன்னைய பிடிச்சி தள்ளிட்டு வரனும்னு.

அலமு : ஏன் சொல்ல மாட்டிங்க..? நான் என்ன ஒவ்வொருத்தி மாதிரி அக்கம் பக்கத்துக்கே கேக்குற மாதிரி சண்ட போட்டேனா, இல்ல அது வேணும் இது வேணும்னு அரிச்சுப் பிடுங்கினேனா? சொல்லுங்கோண்ணா.

மாமா : ஆரம்பிக்காதடியம்மா உன் ஆலிந்தியா ரேடியாவ....

அலமு : இப்ப நான் பேசினா ரேடியா மாதிரி தான் இப்ப இருக்கும். பொண்ணு பார்க்க வரும் போது அழகா இருக்கியே அப்படியே ஒரு பாட்டும் பாடுடினு நீங்க தான கேட்டது.

மாமா : ஆமாண்டிம்மா அது அப்ப! பொய் சொல்லலியே நீ அழகா தான் இருந்த.

அலமு : சரி விடுங்க இப்ப அழைச்சிட்டு போறிங்களா இல்லையா ?

மாமா : நீ சொல்லி நடக்காம இருக்குமா? போவோண்டிம்மா.

அலமு : ஏன்னா அப்படியே இந்த கிஷ்கிந்தா பீச் இப்படி எங்காவது போவோமே.

மாமா : ஆமாண்டி புதுப் பொண்ணு அதனால பீச்சுக்கு போவோம். உன்ன பார்த்தாலே சுனாமி வந்துடும்டிமா.

அலமு : வரட்டுமே... இங்க என்ன இருக்கு அப்படியாவது போவோமே ஜோடியா.

மாமா : நல்ல ஆசைடிம்மா உனக்கு.

அலமு : பேசியே பொழுத ஓட்டாதிங்க சீக்கிரம வாங்க. கரண்ட் வேற இல்ல... எல்லா சுவிட்சும் ஆஃப் பண்ணிட்டு வாங்க.

மாமா : உன்னைய மாதிரி பேசியே பொழுத ஓட்றதெல்லாம் என் பொழப்பில்லடிமா. அதெல்லாம் நான் பார்த்துட்டேன் கிளம்பு கிளம்பு.

அலமு : ஏண்ணா டிவிய ஆஃப் பண்ணிங்களா? யாரோ சிரிக்கிற மாதிரி கேக்குதுண்ணா...

மாமா : அது டிவில இல்லடி நீ பேசுறத கேட்டுட்டு பக்கத்து வீட்ல சிரிக்கிறாங்கடி...

அலமு : ஆமா உங்கள மாதிரி ஒருத்தரக் கட்டிண்டா எல்லாம் சிரிக்க தான் செய்வாங்க,,,

மாமா : அசிங்கமா பேசாதடி! அதுக்கு வேற சிரிச்சி வைக்க போறாங்க... பத்தடி கேப்லதானே நானே இருக்கேன்!
பஸ் நிறுத்தத்தில்...
அலமு : ஏண்ணா. எனக்கு எங்க இறங்கனும்னு தெரியாதுண்ணா. இறங்கும் போது சொல்லுங்க.

மாமா : அப்படியாவது எங்காவது தொலைச்சிட்டு போன நான் கொஞ்சம் நிம்மதியா இருப்பேனே அது நோக்கு பிடிக்காதே, சரி சரி வா.

இரண்டு மூன்று நிறுத்தத்திற்கு பிறகு கூட்ட நெரிசலினால் இறங்கி இறங்கி ஏறும்படியாக இருந்தததால் மாமா இறங்கி இறங்கி இள வயது பையனைப் போல படிக்கட்டுகள்ல மாமா தொங்கிட்டு வந்தார். அடுத்த நிறுத்ததில் மாமா இறங்கி நின்றதும் மாமி பார்த்து விட்டு இது தான் இறங்குமிடமென இறங்கிவிட்டார்.

பேருந்து நகர்ந்ததும் மாமா தேட ஆரம்பிக்க. மாமி கீழிருந்து ஏண்ணா ஏண்ணாவென்று கதற... 1 கி லோ மீட்டர் தூரம் வரை சென்று பிறகு மாமா இறங்கி பின்னோடி வந்து பிரிந்த மாமியை தேடிப்பிடித்தார். காரசார மான பேச்சு முடிந்து கோவிலும் வேண்டாம் குளமும் வேண்டாமென வீட்டுக்கு மாமியை கரம்பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தார் வீட்டுக்கு.

இன்னும் வாசிக்க... "பேருந்து கலாட்டா !"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி