Ads 468x60px

Thursday, July 26, 2012

கல்வியெனும் பெயரால்.....


 காலையில் பொட்டு வைத்துப் பூச்சூடிய பின் பள்ளி செல்ல அழுத தன் குழந்தையின் கையில் ஒற்றை ருபாய் கொடுத்து  'பண்டம் வாங்கிக் கொள்' என்று சமாதானம் செய்து வழி அனுப்பிய அவளுக்கு தெரியாது.

 அடுத்த நாளே தன் பாசமகளின் நெற்றியில் அந்த ஒற்றை ரூபாயை வைத்து இறுதியாக பிணமாக...அய்யோ இதற்கு மேல் என்னால் அந்தக் காட்சியை விவரிக்க இயலவில்லை.  எனக்கே முடியவில்லை என்றால் அந்தத் தாய் மனது என்ன வேதனைபட்டிருக்கும், ஆட்டோ ஓட்டி பாடுபட்ட பணத்தில் தன் குழந்தைகளை படிக்க வைக்கும் அந்தத் தந்தையின் மனது எவ்வளவு பாடுபட்டிருக்கும். மனதைப் பாதித்த அந்த செய்தி... காட்சியை விரிக்கிறேன்...

பள்ளி வாகனங்களை கவனித்து இருகிறீர்களா, சென்னை போன்ற பெருநகரங்களில் கட்டுக்கடங்காத போக்குவரத்து நெரிசலில் வேகமாக செல்லும் ஒரு வாகனம் உண்டென்றால் அது பள்ளி வாகனமாகத் தான் இருக்கும். திடிரென்று பிரேக் போட்டு வாகனத்தை நிறுத்துகையில் தலையிலும் மார்பிலும் அடிபட்டு வந்த பல குழந்தைகளின் நிலையைப் பற்றி நான் கேள்வி பட்டிருக்கிறேன். ஆனால் சென்னையில் நேற்று நடந்த இந்த விபத்தோ சற்றே கோரமானது, கோரமானது என்பதை விட அகோரமானது என்பது தான் மிகச் சரி.

ஸ்ருதி.. கோர விபத்தில் பலியான அந்தக் குழந்தையின் பெயர் இது தான். எத்தனை கனவுகளுடன் பிறந்த குழந்தையோ? கண் மூடித்திறக்கும் நேரத்தில் பேருந்துக்குள் இருந்த ஒழுங்காக அடைக்கப்படாத ஓட்டையின் வழியாக தவறி விழுந்து பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி...

 இன்று அந்தக் குடும்பமே சின்னபின்னமாகிப் போயிருக்கும் விபத்திற்குக் காரணம் பேருந்தில் இருந்த அந்த ஓட்டையா? தர்ம அடி வாங்கிய அந்த ஓட்டுநரா? சில நாட்களுக்கு முன்பு  எஃப் சி சென்ற அந்தப் பேருந்தை லஞ்சம் பெற்று முறையாக சோதனையிடாத அந்த RTO வா?  இல்லை பணம் பணம் என்று பணத்தைக் கொட்டிக் கொடுத்தால் பிணத்திற்குக் கூட பாடம் எடுக்கத் தயாராய் இருக்கும் தனியார் பள்ளியா? இவர்களை நம்பித் தானே நாமும் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறோம்.

விபத்து என்று ஒன்று நடந்தால் மட்டும் தான் கல்வித்துறை அதிகாரிகளுக்கு உறக்கம் கலையும் போல! ஒரு கும்பகோணம் உங்களுக்கு போதாதா?  மீண்டும் ஒரு பள்ளி பற்றி எரிய வேண்டுமா? எத்தனை பள்ளி வாகனகள் விபத்திற்கு உள்ளாகின்றன அப்போது மட்டும் அறிக்கை விடுகிறீர்களே, அதை செயல் படுத்த உங்களுக்கு அவகாசம் இல்லையா?  அரசு ஏன் மொளனம் காக்கிறது எங்கும் லஞ்சம் எதிலும் லஞ்சம் வாங்கும் நீங்கள் உயிரோடு ஏன் விளையாடுகிறீர்கள் உங்களைப் போன்ற பள்ளத் தலைமைகளும் இருக்கும் பொழுது விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகள் மட்டும் எப்படிக் குறையும்!

அரசாங்கப் பள்ளியில் கல்வித் தரம் கேவலமாய் உள்ளது என்று தானே, பெற்றவர்கள் எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என் பிள்ளைக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று தனியாரைத் நாடி  வருகிறர்கள். அய்யா!  தனியார் பள்ளிகளே அந்த அன்றாடக் கூலிகளின் கனவில் மண்வாரிப் போட்டு விடாதீர்கள். பள்ளிகள் குழந்தைகளின் வாழ்வாதாரம்  அவர்களே நாட்டின் எதிர்காலம் என்பது படிக்காத மேதை கர்மவீரர் அவர்களின் கூற்று, உம்  போன்ற படித்த முட்டாள்களுக்கு இது தெரியாமல் போனது  கேவலமாய் உள்ளது. கோடிக் கணக்காய்  செலவு செய்து பள்ளி ஆரம்பித்து போட்ட பணத்தை எடுக்கக் கற்றுக் கொண்ட உங்களைச் சொல்லி குற்றமில்லை, கல்வியைக் கொண்டு பணம் செய்யும் நிலைக்கு உங்களைத் தள்ளி அதை வேடிக்கை பார்க்கிறதே  அரசாங்கம் அவர்கள் தான் இது போன்ற அவலங்களுக்கு முழுக் காரணம்.

வரவென்று டாஸ்மாக்கை எடுத்து நடத்தும் அரசாங்கத்திற்கு செலவென்று கல்வியை எடுத்து நடத்தமுடியாமல் போனது கையாலாகத் தனமில்லாமல் வேறு என்னவாகக் கருத முடியும்?  பத்து மாதங்கள் சுமந்து பெற்ற தாயின் முன்னால் அவள் குழந்தையின் பிணமும் சில லட்சம் பணமும் வைத்தால் என்ன மன நிலை இருக்குமோ அந்த நிலைக்குத்தான் இந்நாட்டில் பலரும் தள்ளப்படுகிறார்கள், கொலைகளை செய்துவிட்டு கவனக் குறைவு விபத்து என்று காரணம் கூறி நிவாரணம் என்ற பெயரில் சில லட்சங்களைத் தரும் அரசாங்கமும் பள்ளி நிர்வாகமும்  இருக்கும் வரை கவனக் குறைவால் விபத்து என்ற பெயரில் நடைபெறும் கொலைகளும் நிற்கப் போவது இல்லை என்பது தான் உண்மை!

31 comments:

 1. படிக்கும் போதே நெஞ்சம் கனக்கிறது சசி..

  ReplyDelete
 2. ஒரு விபத்து நடந்தால்தான் எல்லோரும் அதை பத்தி எல்லோரும் யோசிப்பாங்க..உயிரிழப்பு நடக்கும் முன்பே அரசும் பள்ளி நிர்வாகமும் நடவடிக்கை எடுத்திருக்கணும்..

  ReplyDelete
 3. அரசாங்கத்தில் இருப்பவர்கள் தானே இன்றைய
  பெரும்பாலான பள்ளிகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்..
  இந்த விஷயத்தில் எதிர்வாதமில்லா சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்...
  மலர்கள் போன்ற இளம் பிஞ்சுக் குழந்தைகள் பலியாவது
  இத்துடன் முடிக்கப் படவேண்டும்..

  மனம் பதைக்க வைக்கும் நிகழ்வு. ...

  ReplyDelete
 4. சொல்லிமாளாத ஒரு துயர சம்பவம் தான் இது...
  ஜீரணிக்கவும் முடியாமல் ஆறுதலும் சொல்லமுடியாத சூழ்நிலையில் நாம் இன்று... அந்தோ பரிதாப நிகழ்வினை நினைத்தாலே நெஞ்சம் பதறுகிறது... பெற்றவர்களுக்கு எப்படி இருக்கும்... அதுவும் அந்த தாய்க்கு பத்துமாதம் சுமந்தெடுத்த வயிறு படும்பாடு அந்த ஆண்டவனுக்கு கூட தெரியாது... பணத்திற்கு பேயாக அலையும் நிலை என்று ஒழியுமோ அதுவரை இப்படித்தான் தான் நாம் எண்ணற்ற ஸ்ருதிகளை தொடர்ந்து இழக்கவேண்டியிருக்கும்.

  ஒவ்வொருவரும் தனது கடமையை ஒழுங்காக மனசாட்சிக்கு பயந்து செய்தாலே போதும்... பணத்திற்கு அடிமையாகி போன வக்கிர புத்திகாரன்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை... அந்த அச்சடித்த காகிதத்திற்கு ஆளாய் பறந்து போகும்போது அவர்களோடு சேர்த்து அந்த பணத்தையும் புதைத்து விடுங்கள்... அப்போதாவது திருப்தி அடைகிறார்களோ என்று பார்ப்போம்... எனக்கு தெரிந்தே இப்படி பணம் பணம் என்று பறந்து பாதியில் போக துடிக்கும் பண்ணாடைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்...

  அவர்களை அப்படியே உயிரோடு புதைக்கவேண்டுமேன்றே எல்லோருக்கும் தோன்றுகிறது... மனித உருவில் வாழும் அந்த ஜென்மனகளை என்ன சொல்லி திட்டுவது.. திருத்துவது என்பது ஆகாத ஒன்று.. சாகும் வரை அவர்கள் திருந்தவே மாட்டார்கள்... அந்த ஜென்மங்களை எப்படி என்ன செய்வது என்று அரசாங்கமோ அல்லது ஒரு தனிப்பிறிவோ முடிவு செய்தால் தான் இது ஒரு முடிவுக்கு வரும்... சசிகலாவின் ஆதங்கம் இங்கு சரியான ஒன்றுதான்.. வேதனை அதனால் தான் கொட்டி தீர்த்து விட்டார்..இங்கு..

  ReplyDelete
 5. தனியார் நிறுவங்களில் வாங்கும் சம்பளத்திற்கு இரண்டு மடங்கு வேலை பார்க்கும் மனித புழுக்கள்.., அரசாங்க உத்தியோகம் கிடைத்தால் வாங்கும் சம்பளத்திற்கு கூட வேலை பார்ப்பதில்லை!

  அடிப்படை வசதிகள் கூட இல்லாத கல்வி நிலையங்களுக்கு பணத்தை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கும் உயர் அதிகாரிகளிலிருந்து கடைநிலை ஊழியர்கள் வரை அனைவரும் மிருகங்களே!

  எவனாவது ஒருவன் வாங்கும் சம்பளத்திற்கு ஒழுங்காக வேலை பார்த்திருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்திருக்குமா? இதுபோன்ற சம்பவங்களை வாசிக்கும் ஒவ்வொரு நாளும் இந்தியா என்ற பிச்சைக்கார நாட்டில் பிறந்ததிர்க்காக மிகவும் வருந்துகிறேன் :(

  மனிதம் என்பது மரித்துபோய்விட்டது..கேடுகெட்ட மாந்தர்கள் வாழும் உலகில் எதுவும் நிகழும்!

  ReplyDelete
 6. இந்த நிகழ்வைக் கேள்விப்பட்டதில் இருந்து மன் நிலையே
  சரியில்லை.ஒரு நொடி என்றாலும் அந்த்ப் பச்சிளம்
  குழந்தை என்ன பாடு பட்டிருக்கும் என்கிற எண்ணம்
  உறங்கவிடாமல் செய்கிறது
  இதற்குக் காரணமானவர்கள் காலமெல்லாம்
  தூங்க முடியுமா என்ன ?

  ReplyDelete
 7. நெஞ்சம் கனக்கிறதுன்னு ஒற்றைவரியில் அடக்கிட முடியாது நம் சோகத்தை. பள்ளிகளை தனியாருக்கு தாரை வார்த்து நாட்டை குட்டிச்சுவராக்கிய அரசும் ஒரு காரணமே.

  ReplyDelete
 8. வாக்களிக்கும் நமக்கு வாழ்வளிக்க மறுக்கும் அரசாங்கம் இருக்கும் வரை ஒன்று பொறுத்துப் போக வண்டும் இல்லையேல் பொங்கி எழ வேண்டும், இரண்டாவது விரைவில் நடந்தால் மகிழ்ச்சியே

  பிரிவால் வாடும் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை மட்டுமே செய்யும் நிலையில் இருக்கும் தமிழன்

  ReplyDelete
 9. கல்வி வியாபாரம் ஆனாதால் வந்த வினை...

  ReplyDelete
 10. மனிதர்களின் அலட்சியத்தால் இதுபோன்ற விபத்துக்கள் அடிக்க்டி நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இரண்டொரு நாள் அதிகார வர்க்கம் கர் புர் என்பார்கள் அவ்வளவுதான். தொலைக் காட்சியிலும், செய்தித் தாளிலும் பார்க்க மனமில்லாமல் மூடி விட்டேன். கவிஞரான தாங்கள் எப்படித்தான் எழுதினீர்களோ?

  ReplyDelete
 11. ஆமாம் நானும் இப்பொழுதுதான் அந்த கொடுரசெய்தி பார்த்துவிட்டு மனம் தாங்காமல் தொலைகாட்சிப் பெட்டியை அணைத்துவிட்டு வந்தேன்.... என்ன செய்வது எல்லாத்திற்கும் பணம் தான் காரணம்.... ஆமாம் அந்த பேருந்தை முறையாக சோதித்து உரிமைவழங்கி இருந்தால் இப்படி நடப்பதை தவிர்த்து இருக்கலாம்... இன்னும் கொடுமை என்னவென்றால் ஸ்ருதியின் தந்தை தன்னுடைய குழந்தைக்கு இப்படி நடந்தது என்று தகவல் கிடைத்த பின்னும் அவருடைய கடைமையாகிய பள்ளிகுழந்தகளை ஆட்டோவில் அவரவர் வீட்டி சேர்த்து விட்டுதான் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார்..... அவரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.......

  ReplyDelete
 12. மனம் வேதனைப்படைகிறேன் அந்த குழந்தையின் பெற்றோரின் மன அமைதிக்காக இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  ReplyDelete
 13. நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைந்து விட்டால்... என்று உருகத்தான் முடியும். உயிர் மதிப்பில்லாதது என்பது இரு பொருளிலும் சரியே.

  ReplyDelete
 14. கண்ணுருகி மண் விழுவதைப்போல்
  வான் விடிவெள்ளி சிதைதலாய் சுருதி!
  காலையிலே மையெழுதிய அம்மாவும்
  கனவோடு வாழ்ந்திருந்த அவள் அப்பாவும்
  அழுத கண்ணீர் ஆண்டவனே இதுதகுமா?
  ஓட்டை வழி வீழ்ந்தாளென கவனஈர்ப்பு!
  அரசாணை துரித நடவடிக்கை எனும்பேரில்.
  முதல் குடிமகனின் ஆரம்ப சொற்பொழிவே
  கல்வியென-இங்கோ அரசுபதவிவைத்து
  வியாபாரம்-அதன் விலையாய் சிறுகுழந்தை!
  தூக்குத் தண்டனை சரியில்லை உரைப்போரே
  உண்மைதான் உம்கூற்று!பணத்துக்காய்
  பாதகம்செய்த மாபாவிகளைக் கண்டறிந்து
  சுட்டுக்கொலல் வேண்டும் விசாரணையின்றி!
  ஓட்டை ஊர்தியில் மட்டுமில்லை- கவியின்
  ஆதங்கம்போல் ஆரம்பம் கண்டறிந்து களை
  அகற்றுதலே சுருதிக்கு அரசின் நன்றிக்கடன்!

  ReplyDelete
 15. .மனதை உறைய வைத்த சம்பவம்....அந்த குடுமபத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்....பஸ்ஸை எரித்தவர்கள் அந்த சம்பவத்திற்கு காரணமான உள்ளவர்களின் குடும்பத்தையும் சேர்த்து எரித்திருக்க வேண்டும் அப்போதுதான் எதிர்காலங்களில் இந்த மாதிரி அசம்பாவிதங்கள் தடுக்கப்படுவது குறைக்கப்படும்....முதலில் அந்த பஸ் ஒட அனுமதி தந்த RTO அடுத்து அந்த பஸ்ஸின் சொந்தக்காரர்.கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்

  ReplyDelete
 16. நீண்ட கவி தொடர்களுக்கு பின் ஒரு
  அருமையான கருத்தை தாங்கி வந்த கட்டுரை தொடர்...

  அருமை அக்கா............

  ReplyDelete
 17. திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? என் வலைப்பூவிலும் இதுபற்றி பதிவிட்டுள்ளேன்! வேதனையுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு! சிறப்பு!

  ReplyDelete
 18. மனைதை பாதிக்கும் சம்பவம்தான் ஆனால் கட்டுரையை எழுதிய விதத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.. அருமை ..கவிதையோடு நின்று விடாமல் சமுக நலன் சார்ந்த செய்திக்ளையும் எழுதி வாருங்கள்...

  ReplyDelete
 19. வேதனைப்படும் நிகழ்வு...
  (TM7)

  ReplyDelete
 20. செய்தியைக்கேட்டு இரவெல்லாம் உறக்கம் வரவில்லை சகோதரி..

  ReplyDelete
 21. நெஞ்சம் துடிக்கின்றது ...
  என்ன சொல்ல இன்னும் இரண்டொரு நாட்களில் மறந்து தத்தமது பணிகளை கவனிக்க போய்விடும் இச்சமூகம் ..
  நிலையான தீர்வு இல்லாமல் .. மீண்டும் இது போன்ற கோர நிகழ்வு இப்படி தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றது ..

  ReplyDelete
 22. படிக்கும்போதே நெஞ்சம் கனக்கிறது... தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகள் நடந்தபடியே இருக்க, என்ன தான் செய்கிறது பள்ளி நிர்வாகம்...

  ReplyDelete
 23. இதில் சம்மந்த பட்ட அனைவரையும் கண்டிப்பாக தண்டித்து, தவறு செய்ய நினைப்பவர்களுக்கு ஒரு உதாரணமாக மனதில் தோன்ற வைக்க வேண்டும்

  ReplyDelete
 24. அந்தக் கால்ம் மாதிரி இல்லீங்க, இப்பெல்லாம் ஒன்னு இல்லைனா ரெண்டி பெத்துக்கிறோம், அதுகளுக்கு ஏதும் உடம்பு சரியில்லைனாலே வீடு ஸ்தம்பித்திக்கும் போது, இதுமாதிரி சம்பவத்தால வீட்டோட நிலைமை நினைச்சுப் பாக்க முடியலைங்க. எம்பொண்ண எல் கே கி சேத்தவுடனே வீட்டை ஸ்கோல் பக்கத்துக்கு மாத்திட்டோம், 90% காரணம் ஸ்கூல் பஸ்/வேன் கண்டிஷந்தான். குழந்தயை இழந்து வாடும் சதோதர குடும்பத்திற்கு எனது ஆழந்த அனுதாபங்கள்.

  ReplyDelete
 25. மனம் கனக்கும் பதிவு.

  ReplyDelete
 26. நம்மால் வேதனைப்படவும் ஆதங்கப்படவுமே முடிகிறது! நெஞ்சை உலுக்கிய அகோர விபத்து! சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப் படவேண்டும்! அப்போதாவது பணப்பேய்கள் திருந்துவார்களா? வேதனை நிறைந்த மனதுடன்
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 27. எது நடக்கக் கூடாது என்று நினைக்கிறோமோ? அது நடந்துவிட்டது.பல பேருக்கு பாடம் கற்றுக்கொடுக்கிறது விபத்து மீட்க இயலாத பிஞ்சு உயிரை பலிவாங்கி. இறைவா! எப்படியேனும் தப்பிக்க வைத்திருக்கக் கூடாதா?

  ReplyDelete
 28. .மனதை உறைய வைத்த சம்பவம்..........

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி