Ads 468x60px

Tuesday, July 24, 2012

வசந்தங்கள் தொலைவதுமட்டும் உண்மை!


நந்தவனத்து ராசகுமாரி ரோசாப்பூ சிவப்பாக
ஆத்தாமடி உறவுவிட்டு தேவதையா வந்தாளே!
அவவந்த நேரந்தானே நஞ்சை புஞ்சையெல்லாம்
நாலத்தனையாய் பொங்கி விளைஞ்சதுவே!

அப்பன் ஆத்தா தங்கமேயெனக் கொஞ்சிப்பாடி
நிலாச்சோறு ஊட்டிய காலங்கள்!
தத்தித் தத்தி நடந்தபோது விழாமல் பின்னால் நடந்த
மூப்பன் மூப்பத்தி அத்தை மாமாக்கள்!

பட்டாம் பூச்சி பிடிக்கப்போய் வழிதவறி அழுகையிலே
அலைந்துதேடி முதுகில் சுமந்த அண்ணன்மார்!
 திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய பொம்மைதனை
நெஞ்சோடணைத்து தூங்கும் நினைவுகள்!

ஆசையாய் ஆமைபிடித்துவந்து தோட்டத்துக் கிணற்றில்
வளர்த்து அகம் மகிழ்ந்த நிகழ்வுகள்!
மயிலிறகு எடுத்துவந்து புத்தகத்தில் அதைபாதுகாத்து
வளருமென நம்பிய பொய் பேதமைகள்!

ஆடுபிடித்து அதன் மடியில் சூடாக பால் குடித்து
ஒளித்துவைத்த ஞாபகங்கள்!
அண்ணனுக்காய் பீடிதிருடி
சொல்லிடுவேன் மிரட்டிய வசந்தங்கள்!

பொரியுருண்டைக்காய் நெல்திருடிக் கொடுத்து
மாட்டிக்கொண்ட ஆசைகள்!
மழைபெய்யுமுன் வீசும் மண்மணமும்மழையிலாடி
இரவெல்லாம் குளிர் ஜூரத்தில் நடுங்கியதும்!

ஓராண்டுக்கு ஓர்முறை ஊருக்கு வந்தால் அனைத்தும்
காணாமல் போய்விட்ட ஆதங்கம்!
கதைவிடாதே மம்மியென பரிகசிக்கும் பிள்ளைகள்
நகரவாழ்வுக்கு பலியாகும் கிராமங்கள்!
மாற்றமா தடுமாற்றமா வாழ்வா சீரழிவா புரியவில்லை
வசந்தங்கள் தொலைவதுமட்டும் உண்மை!

22 comments:

 1. /// நகர வாழ்வுக்கு பலியாகும் கிராமங்கள்/// .... வேறென்ன ஆசை தான்.

  உண்மை தான்... வசந்தங்கள் தொலைவது

  வசந்தங்கள் இன்னும் கொஞ்சம் காலங்களின் காணாமல் போய் விடும் போல் உள்ளது....

  நன்றி சகோதரி... (த.ம. 1)

  ReplyDelete
 2. //பொரியுருண்டைக்காய் நெல்திருடிக் கொடுத்து
  மாட்டிக்கொண்ட ஆசைகள்!
  மழைபெய்யுமுன் வீசும் மண்மணமும்மழையிலாடி
  இரவெல்லாம் குளிர் ஜூரத்தில் நடுங்கியதும்!//

  கிராமத்து வாசனை வீசும் அற்புதமான வரிகள்... எங்கள் கிராமத்தில் பேசியது போல உணர்வு...

  ReplyDelete
 3. மடியில் வைத்து அம்மா நிலாச்சோறு ஊட்டியதை நாம் மறையும் வரை மறக்கமுடியுமா...இப்போது நினைத்தாலும் அந்த நினைவுகளை தவிர நிஜங்கள் என்பது நிழலாக மட்டுமே நமது நெஞ்சில் ஆடும்... தேன்செடி புடுங்கி அந்த செடியில் பட்டாம்பூச்சி அமுத்தி புடிச்சு பட்டாம் பூச்சி அகப்படாமல் அழும்போது எனக்காக பிடித்து கொடுக்கும் கூட்டாளியும் இப்போது என்னுடன் இல்லையே...

  மயில் தோகையின் இறகுதன்னை புத்தகத்தின் நடுவில் வைத்து மறுநாள் அது குட்டிப்போடும் என எதிர் பார்த்திருக்கும் அந்த அப்பாவித்தனமான எதார்த்தம் இப்போது யாரிடமும் இல்லாமல் எல்லாம் வினயமாகி போய் இருக்கிறார்களே..
  ஆடு பிடித்து திருட்டுப்பால் குடிக்கும் பழக்கம் கூட இப்போது இல்லையே நம் பசங்களிடம்... அண்ணனை மிரட்டுவதற்கோ அன்று பீடி உதவியது.
  தூறலால் பூமியை நனைத்து அதில் இருந்து கிளம்பும் அந்த ஒப்பிட்டு சொல்லமுடியாத அந்த மண்வாசனையை இப்போது ரசிக்க கூட நேரமில்லையே..

  ஒரு வருடம் நகரத்திற்கு சென்று வந்தாலே அழகு தமிழில் பேசிய நம் பிள்ளைகள் வாய் நிறைய அம்மா, எம்மா, அம்மாடி, எம்மோவ்., என்றெல்லாம் அழைத்த வாய் இப்போதோ மம்மி, மம் என்று புரியாத பாசையில் அழைக்கும் அந்த கொடுமையை நினைத்தாலே கோபம் வருகிறது...அந்த பிள்ளைகள் மீதல்ல அப்படி அழைக்க சொல்லும் அந்த பெற்றோர்கள் மீது... என்ன ஒரு கலாச்சார சீர்கேடு... தமிழில் பேசுங்கள் நம் கிராமிய மண்ணின் மனம் கலந்த நம் பாசையை.. பேசும்போதே உள்ளம் கூட பூரிக்குமே. நம் கிராமத்தை நாமே காப்பாத்தவில்லை என்றால் இதற்கென யாரவது வெளியூரிலிருந்தா இறக்குமதி ஆவார்கள்.. நாம் ஒவ்வொருவரும் அந்த பொறுப்பை கையில் எடுத்து செய்தால் மட்டுமே நம் மீதமுள்ள கிராமமாவது மிஞ்சும் நம் சந்ததியருக்கு.

  அருமையான மறக்கமுடியாத கடந்து வந்த வாழ்ந்த ஒரு வாழ்க்கையை 37 வருடத்திற்கு பின் சென்று அதை ரசித்து மீண்டும் வந்துவிட்டேன்..சசி... பாராட்டுக்கள் உங்களுக்கு என் மலரும் நினைவுகளை என்னுள் மலர வைத்ததற்கு...

  ReplyDelete
 4. கிராமங்களில் இருக்கும் வசந்தகள் ஒவ்வொன்றாய் சொல்லி இறுதியில் உண்மையச் சொன்ன விதம் நிஜம்
  //அனைத்தும்
  காணாமல் போய்விட்ட ஆதங்கம்!// இனிமையான தொடக்கம் ஆதங்கப் பட வைக்கும் முடிவு TM3

  ReplyDelete
 5. உங்களின் ஆதங்கம் எனக்கும தொற்றிக் கொண்டது தென்றல். அருமையான கவிதை. நேரமிருக்கும் போது இந்த இணைப்புகளில் சென்று பாருங்கள் சசி.

  http://avargal-unmaigal.blogspot.in/2012/07/blog-post_23.html

  http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_24.html

  ReplyDelete
 6. சத்தமிற்றி
  நம் வசந்தங்களை
  தின்று கொன்று இருக்கிறது
  நாகரீக மிருகம்

  ReplyDelete
 7. // நகரவாழ்வுக்கு பலியாகும் கிராமங்கள் //
  சரிதான் .

  ReplyDelete
 8. பட்டாம் பூச்சி பிடிக்கப்போய் வழிதவறி அழுகையிலே
  அலைந்துதேடி முதுகில் சுமந்த அண்ணன்மார்!
  திருவிழாவில் அடம்பிடித்து வாங்கிய பொம்மைதனை
  நெஞ்சோடணைத்து தூங்கும் நினைவுகள்!

  அருமை அக்கா.... என் சிறு பராயத்தை நினைவூட்டினீர்கள்....

  ReplyDelete
 9. நாம் நம் காலத்தில் இயற்கையோடு ஒன்றிய, ரசித்த யாவற்றையும், நம் பிள்ளைகள் அனுபவிக்க முடியவில்லை. காலம் மாறி விட்டது. உங்கள் கவிதையின்படி,
  “ வசந்தங்கள் தொலைவது மட்டும் உண்மை”

  ReplyDelete
 10. தொலத்துவிட்டதைக் கையில் கொஞ்சநேரமாவது பிடித்த சந்தோஷம் தோழி !

  ReplyDelete
 11. மிகச்சிறப்பானதொரு கவிதை! வாழ்த்துக்கள்! இன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை!http://thalirssb.blogspot.in/2012/07/blog-post_24.html

  ReplyDelete
 12. மாற்றங்கள் மட்டுமே மாறாதது .அதில் ..வசந்தங்கள் தொலைவதுமட்டும் உண்மை!

  ReplyDelete
 13. கிராமத்துக்கு இப்பல்லாம் போனா மனசுல இருக்கிற சந்தோஷமும் குறைந்துதான் திரும்ப வேண்டி இருக்கு..பொண்ணு விளைஞ்ச பூமி தரிசாகி தண்ணீர் இருந்தாலும் விவசாயம் பார்க்க ஆளில்லாமல் பசுமை இழந்துவிட்டது..சின்ன வயசுல அனுபவிச்ச அந்த வசந்த காலம் திரும்புமானு ஏக்கத்தோட திரும்ப வேண்டி இருக்கு.

  ReplyDelete
 14. உண்மைதான் தொலைத்துவிட்டோம் பல சந்தோசங்களை (TM 9)

  ReplyDelete
 15. சசிகலா... நான் கிராமங்களைச் சினிமாவில் பார்த்தது தான்.
  ஒரேஒரு முறை கதைஎழுதுவதற்காக அம்மாவுடன் சென்றேன்.
  அங்கே பாம்பின் பயம் கண்டு மூன்று மணி நேரத்திலேயே திரும்பிவிட்டேன்.
  கிராமங்களைப் பற்றி படிக்கும் பொழுதெல்லாம் அங்கே போய் கொஞ்ச காலம் தங்கி வரவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது தான்... ஆனால் முடியுமா என்று தான் தெரியவில்லை.

  நீங்கள் அனுபவித்து எழுதுவதால் அதில் ஓர் உண்மை ஒட்டுதல் இருக்கத்தான் செய்கிறது சசிகலா.

  ReplyDelete
 16. KAVI THARAGAI.. I LIKE ALL LINES.. SENSATIONAL.. SUPERB.. THANKS TO KAVI THARAGAI.. SASI KALA

  ReplyDelete
 17. //ஓராண்டுக்கு ஓர்முறை ஊருக்கு வந்தால் அனைத்தும்
  காணாமல் போய்விட்ட ஆதங்கம்!//

  காணாமல் போய்விட்ட ஆதங்கத்தால் இருந்த எங்களுக்கு உங்கள் கவிதை மூலம் அந்த கிராமத்திற்கு மீண்டும் அழைத்து சென்ற ஆஆஆ "தங்கம்" நீங்கள்தான்

  ReplyDelete
 18. என் மனைவி அடிக்கடி சொல்லுவாள் கிராமத்தில் போய் செட்டில் ஆகிவிட வேண்டுமென்று அவளூக்கு தெரியவில்லை நமது கிராமங்கள் இப்போது நகரமாகமட்டுமில்லை நரகமாவும் ஆகிவிட்டது என்று. இன்னும் பாரதிராஜா படத்தில் வரும் கிராமம் போல இருக்கிறது என்று கனவு காண்கிறாள்

  ReplyDelete
 19. அருமையான வரிகள் ... சூப்பர்...

  ReplyDelete
 20. தொலத்துவிட்டதாய் எதையோ தேடிக்கொண்டிருக்கிறோம் எதை எங்கே தொலைத்தோம் என தெரியாமலே! இப்படி தான் நகருகிறது நம் காலம்!
  அழகான வரிகள் அக்கா!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி