Ads 468x60px

Saturday, June 30, 2012

நீளும் நம் பயணங்கள் !
கருவறையில் தொடங்கி
மலங்க மலங்க விழித்து
உணர்வு தேடி
உறவு தேடி !

தட்டுத் தடுமாறி
தவழ்ந்து நடை பழகி ...
கிள்ளை மொழி பேசி
பள்ளிப் பாடம் கற்று !

நட்புச் சோலையில்
பூவாய் மலர்ந்து
தென்றலாய் வீசி
தேவராகம் பாடி ...!

காதல் வலையில் சிக்கி
கனவுலக மீன்தொட்டிக்குள்
வாழ்வுதேடி முட்டிமோதி
காட்சிப்பொருளாய் கல்யாண
மாலை சூடி வாழ்வின்
நிஜமது விளங்குமுன்னே !

கையில் மழலையாய்
மலர்க்கொத்து மணம்வீச
அவர் வாழ்வே இவர் கனவாய்
நீளும் நம் பயணங்கள் !


இன்னும் வாசிக்க... "நீளும் நம் பயணங்கள் !"

Thursday, June 28, 2012

எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!


கண்ணாடி நிழல்போல
காலங்கள் போகிறது
பின்னாலே ஓடினாலும்
அதுநம்மை அழைக்கிறது
முன்னோடிப் போனாலும்
துரத்திவந்துப் பிடிக்கிறது!

ஆற்றோரப் பனைமரம்
கண்ட காட்சியெல்லாம்
காணமல் போனகதையை
கவிதையாய் வடிக்கையிலே!

காலையில் பெண்ணினமாய்
மஞ்சள்பூசிதளிராக கதிரவன்
நடுநிசி சுட்டெரிக்கும் ஆதவன்
மாலை மடிகையில் சிவப்பெழுதி
தாமரையாய் ஓர் பொன்மேனி!

இரவு மலர்கையிலே வானில்
இனிமையாய் இளையநிலா
அதைப்பாடும் விண்மினிகள்
தனைத்தாங்கும்விழுதோடு
பரந்து விரிந்த ஆலமரம்!

ஊஞ்சலாடும் வாலிபங்கள்
காத்திருக்கும் கொக்கு கண்டு
வளைபதுங்கிய நண்டினம்
வயலோர வரப்பு நீரில்
தலை கவிழ்த்து நாணல்களும்!

சாரைப்பாம்பு விரட்டியோட
பறந்தோடும் வயல் எலியும்
மச்சானின் பசியாற்ற கஞ்சி
கலயம் சுமக்கும் பொன்மகளும்!

காதல் பறவைகளின் மொழியாய்
கண்ணாம் பூச்சி ஆட்டங்களும்
ஆடிப்போன காற்றலையும்
பாடிப் பறந்த பறவைகளும்!

வசந்தம் தென்றல் வேனிலென
வந்துபோன மாரி காலங்களும்
மரங்கள் செடிகள் பூத்ததுவும்
காயாய் கனியாய் வாழ்ந்ததுவும்
இன்பம் துன்பமென மாறிமாறி
இயற்கையாய் வந்துபோனதுவும்!

கண்ட ஒரே சாட்சியாய் நான் மட்டும்
தூரத்திலழகாய்  பறந்து திரியும்
பட்டாம் பூச்சியாய் நினைவுகள்
கடந்து போயின எல்லாமே
மறக்கவில்லை மனம் மட்டும்
காயங்களாய் நினைவு மட்டும்!

காலை இன்று விடிகையிலே
கையில் கோடாலியோடு நால்வர்
செங்கல் சூளை விறகுக்காக
எனை வெட்டிச் சரித்தனரே
நெடுஞ்சாண் கிடையாய் வீழ்கையில்
பனம்பழமொன்று உருண்டோடி
பக்கத்தில் குழியில் புதைந்தது
மண்ணோடு வாழ்வைத் துவங்கியதே!

காலம் கடந்து போவதைப் போல்
நானும் இன்று போகின்றேன்
இன்ப துன்பம் மட்டுமல்ல புவியில்
எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!


வலையுலகத் தோழமைகளுக்கு, வணக்கம். வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி சென்னையில் பதிவர் சந்திப்பு நடத்தத் திட்டமிட்டிருந்தோம். அந்தத் தேதியில் அரங்கம் கிடைக்காத காரணத்தால் ஆகஸ்ட் 19ம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவர் சந்திப்பு மாற்றப்பட்டுள்ளது. கவிரயங்கம், கருத்தரங்கம், சிறப்பு விருந்தினராக ஒரு பிரபலம் என்பது உள்ளிட்ட பல சுவாரஸ்ய நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டு வருகிறது. அவை பற்றிய விரிவான அறிவிப்புகள் இனிவரும் நாட்களில் அறிவிக்கப்படும். கவியரங்கம், கருத்தரங்கம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்குபெற விருப்பமுள்ள நட்புகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.

நாள் : 19.08.2012 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : மாணவர் மன்றம், சென்னை.


இன்னும் வாசிக்க... "எல்லாம் கடந்துபோகும் மாயங்களே!"

Tuesday, June 26, 2012

இதய வீணை !


நெல்லும் விளைஞ்சாச்சி,களனியும் நெறஞ்சாச்சி,
அள்ளிக்கொடுக்க நீயிலையே கண்ணம்மா!
இதயமிங்கே வாடுதடிப் பொன்னம்மா![இதய]

பன்னீர் பூவெடுத்து,கண்ணீரை நூலாக்கி,
கோர்த்து வைத்தேன் மாலையொன்று-கண்ணம்மா,
அது சாத்துகின்ற மாலைதானோ-பொன்னம்மா[இதய]

பட்டானப் பைங்கிளியே,சிட்டானப் பூங்கொடியே,
கட்டழகு காவியமே கண்ணம்மா,
வில்லானக் கண்ணாலே பொய்யெழுதிப் போகாதே,
சொல்லான கவிதையே பொன்னம்மா![இதய]

மலையரசி குறிஞ்சியாகி,மலராகி மணமாகி,
பூத்தவள் நீதானே கண்ணம்மா.
கண்மூடும் இமையிரண்டும்,மனம் மூட முடியாமல்,
கண்ணாம் பூச்சி காட்டுதடி பொன்னம்மா![இதய]

அத்திப்பழம் கனிஞ்சாச்சி,ஜோடியெல்லாம் வந்தாச்சி,
உனைமட்டும் காணோமே கண்ணம்மா.
கடலலைபோல் தேடுகிறேன் பொன்னம்மா[இதய]

இதயத்தில் ஊஞ்சல்கட்டி,தேனீபோல் கூடுகட்டி,
ஆடிப்பாடினாயே கண்ணம்மா.
ஆல்மறந்த விழுதாகி,பாலை வீழ்ந்த மழையாகி,
மறைந்தே போவதேனோ பொன்னம்மா![இதய]
 
இன்னும் வாசிக்க... "இதய வீணை !"

Monday, June 25, 2012

காற்றோடு முட்டி மோதி !


புழுதியோடு புகையும்
விடியலோடு ஓட்டமும்
வியர்வையோடு தேடலும்
விடை காணாது தொடர

காற்றோடு முட்டி மோதி
கனவினை தள்ளி வைத்து
சுடும் உறவுகளுக்கு
சுருக்கமாய் முன்னுரை கூறி
ஆடையில் சுத்தமும்
அருகில் நட்பும் சூழ ...

அள்ளிவைத்த மதிய
உணவோடு அரை மணி நேர
தாமதமும் சேர்ந்து அழுத்த
ஆசிரியரை நெருங்கும்
மாணவனாய் ...
மனம் தாமதத்திற்கான
காரணம் தேடியபடி ..
கை கட்டி நிற்கிறது .
இன்னும் வாசிக்க... "காற்றோடு முட்டி மோதி !"

Saturday, June 23, 2012

கலைந்தோடும் மேகம்போல!


கலைந்தோடும் மேகம்போல
அலைந்தோடும் இதயமொன்று
பறந்தோடிப்போகிறதே-உறவைப்
நினைத்தே மாய்கிறதே!

கல்லுக்குள் தேரைபோல
நெஞ்சுக்குள் சுமையை ஏந்தி
பாலைவழி போகிறதே-மனம்
காலின்பாதை நடக்கிறதே [கலைந்தோ]

வென்னீரில் குளித்ததாலே
பட்டுப்போன பட்டுப்பூச்சி
பட்டாகும் காலம் மலருமா?-இல்லை
பட்டமரம் போலாகுமா? [கலைந்தோ]

கடல் கண்ட முத்தாய் வந்தான்
கண்காணா காட்சி கண்டான்
கரைமீனாய்த் துடித்தானே-அவன்
கரைதேடிப் போறானே! [கலைந்தோ]

கையளவு இதயத்தில்
கடலளவு சோகமணிந்து
கண்ணிலே நீரைச்சூடி
விதியோடு கலந்தானே-வாழ்வில்
விடியாத இரவவனோ? [கலைந்தோ]

கொடுக்கவும் எதுவுமில்லை
இழக்கவும் உறவுமில்லை
அணைக்க அன்புமில்லை
வசந்தம் வந்திடுமா-வாசம்
மலர்ந்திடுமா.... [கலைந்தோ]
இன்னும் வாசிக்க... "கலைந்தோடும் மேகம்போல!"

Thursday, June 21, 2012

சொர்க்க பூமி !களத்து மேடு போறவரே
கண்ணுறக்கம் காணாதே
காவலுக்கு நானும் வரவா ?

நெல்லுமணி பார்த்த
விழி சொல்லு மொழி
ரசிக்குமடி !

களவாடும் கூட்டமும்
நெல்மணி தவிர்த்து
பொற்சிலையை கொண்டு போக
பொல்லாப்பு வந்து சேரும்
போய் உறங்கு கண்மணியே !

பொல்லாப்பு வேணாம் மாமா
இராக் கண்ணுமுழிக்கும்
பொழப்பும் வேணா ..
பட்டினந்தான் நாமும் போவோம்
பகட்டாதான் வாழ்ந்திடுவோம் !

கணக்கிலடங்கா மாடி
வீடு அங்கிருக்காம் ..
இங்க மாட்டுச் சாணந்தானே
நிறைஞ்சிருக்கு !

மாடிவீடு வேணாம் புள்ள
மகவ காக்கும்
கோமாதா போதும் புள்ள !

ரயிலேறி பயணம் போக
இராவெல்லாம் சொப்பனங்கண்டேன் !

கூட்டாஞ்சோறு
ஆக்கித்தின்னு குதுகலமா
வாழ்ந்திருப்போம் ...
கூட்டத்தோடு சிக்கித் தவிக்கும்
ரயில் பயணம் வேண்டாம் புள்ள !

சிட்டுக்குருவி சைசா இங்க
ஏரோப்ளேன்  நானும் பார்த்தேன்
சிங்காரப் பட்டிணம்  போய்
சிறப்பா பாக்க ஆச மாமா !

பட்டணத்தில் பொருளெல்லாம்
பெருசுதான் இருக்கும் புள்ள ,
மனுசங்க மனசேனோ
கடுகளவும் இல்லையாம் புள்ள !

ஏரு பிடிச்சி உழுது வர
வரப்போரம் வம்பு பேசி
நீயும் நிக்க ...
சொர்க்க பூமி இங்கிருக்கு ,
சோகப் பட்டினந்தான்
வேண்டாம் புள்ள .

வலையுலக நட்புகளுககு ஒரு மகிழ்வான அறிவிப்பு

வரும ஆகஸ்ட் 15 (புதன்) சுதந்திர தினத்தன்று சென்னையில பதிவர் சநதிப்புக்குத் திட்டமிடப்பட்டுளளது, புலவர் ச.இராமாநுசம் அவர்கள் தலைமையில், திரு,சென்னைப பித்தன் அவர்கள் முன்னிலையில் இந்தச் சந்திப்பு நிகழ இருககிறது, கவிதை பாடுபவர்கள் கவியரங்கத்தில் கவிதை படிக்கலாம், மற்றையோர் தங்களுக்குப பிடித்தமான ஏதேனும் ஒரு தலைப்பின் கீழ் (சுவாரஸ்ய அனுபவம். நகைச்சுவைத் துணுக்கு போன்றவை) பேசலாம்.இவை பற்றிய விரிவான அறிவிப்பு இனி வரும் நாட்களில் வெளிவரும். 

முழுக்க முழுக்க நமக்கான இந்த நிகழ்ச்சிக்கு அவசியம் வருகை தரும்படி அனைவரையும வேண்டுகிறோம். நிகழ்ச்சிக்கு வர இருப்பவர்கள் தங்களின் வருகையை 98941 24021 (மதுமதி), 73058 36166 (பா,கணேஷ்), 94445 12938 (சென்னைப் பித்தன்), 90947 66822 (புலவர் சா,இராமானுசம்) ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவித்தால் ஏற்பாடுகள் செய்வதற்கு வசதியாக இருக்கும்..

இத்தகவலை நட்புகள் அனைவரும் தங்கள் பதிவுகளில் வைத்து அனைவரிடமும் கொண்டு சேர்க்கும்படி வேண்டுகிறோம்.

இன்னும் வாசிக்க... "சொர்க்க பூமி !"

Wednesday, June 20, 2012

மது முகர்ந்த வண்டாய்!
மிகச் சாதாரணமென
நினைத்த அந்தப் பார்வை
நிகழ்வுகளை விழுங்கியபடி !

மீண்டெழ முடியா
ஆழத்தில் தள்ளிவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறது !

வான்வெளியில்
நட்சத்திரமெல்லாம்
நகைக்கிறது !

நிலவேனோ -என்
நிலை கண்டே தேய்கிறது !

சூரியனும் சுருக்கெழுத்தாய்
மேகத்தோடு கண்ணாமூச்சி
ஆடுகிறது !

மொட்டெல்லாம்
ஆடிக்காற்றில் மலராமலே
உதிர்கின்றன !

இடிதாங்கியான
இதயமட்டுமேனோ
மது முகர்ந்த வண்டைப் போல்
மயங்கிக் கிடக்கிறது !

மயக்கதோடே
இருந்துவிட்டுப் போகிறேன்
மறுமுறைப் பார்த்துத் தொலைக்காதே !


இன்னும் வாசிக்க... "மது முகர்ந்த வண்டாய்!"

Tuesday, June 19, 2012

சில்லறைச் சிணுங்கல்!சில்லறைச்சிணுங்கலில்
எல்லாம் உன் சிரிப்பொலியே
கேட்கிறது .....

உன் சுவாசக்
காற்றடிக்கும் திசை
நோக்கி என் மனச்சிறகும்
பறக்கிறதே..

வீதி கூட்டும் புயல்
எனையும் அள்ளியெடுத்து
உன் மடிதனில் சேர்த்ததுவே ..

துரும்பென எண்ணி
நீயும் உதறி எறிந்து
சென்றாயோ ?
இன்னும் வாசிக்க... "சில்லறைச் சிணுங்கல்!"

Monday, June 18, 2012

ஆட்டுவிக்கும் பகடைகளாய் !


தாய்மண்ணிலிருந்துப் புறப்பட்டு
அவள் மடி மீண்டும் போனாலும்
மனம் மட்டும் கல்லாய் மாறும்
மானிடர்க்கு இது சாப வரவாய்!
நுகர்பொருளாய் மாறிவரும்,
நாமெங்கே நிற்கின்றோம்,
கடன்படாமல் கடன்பட்ட,
கடனாளிகள் நாமானோம்!
வாடகைக்கு கருவறைகள் 
வாழ்க்கைப்பட  சீதனங்கள்
அன்புகொடுத்து அவமானம்
அறிவைவிற்று வியாபாரம்!
கண்ணாடி வளையலெல்லாம்
கரைதேடித் தவிக்கிறது.
முன்நோக்கிப் போகையிலே,
சமூகமெழும்பித் தடுக்கிறது!
ஆட்டகால அவசரத்தில்-மன
ஆடை துறந்து ஓட்டங்கள்
ஆட்டுவிக்கும் பகடைகளாய்
ஆயிரமாயிரம் ஆசைகள்!
அரசியலில் தூய்மையில்லை
அன்பிலும் உண்மையில்லை
அரிசியிலும் கல் கலக்கும்
அநீதியாய் வணிகங்கள்!
குடிமகன் போற்றுகிறோம்
குடிகாரராய் குடிமகன்கள்
குலமகள் பாண் இசைப்போம்
குற்றுயிராய் அவர் வாழ்வு!
கல்வியெல்லாம் வியாபாரம்
தெருக்குத்தெரு விபச்சாரம்.
சின்னவீட்டில் சிரிப்பொலி
தலைமுறைமேல் சாபமாய்!
நுகர்பொருளாய் மாறிவிட்டோம்
பொய்வாழ்வு சூடிவிட்டோம்
கனவுகளோடு நாம் வாழ்வதனால்
கண்ணீர் கதவுகள் திறக்கிறது.
உருவமின்றி உள்ளேநுழைவது
காதல் மட்டுமல்ல கடனுந்தான்.
அரவமின்றி அணைக்கும் கடன்
அன்பு வாழ்வின் முடிவாகும்!
இன்னும் வாசிக்க... "ஆட்டுவிக்கும் பகடைகளாய் !"

Saturday, June 16, 2012

வேரின் வலிகள்!


ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
ஆங்கே  புழுதியை வாரி
ஆடையாய் உடுத்தும்
மாளிகைத் தாவரங்கள்
அழகழகாய் விதைக்கப்பட்டது
வேரில் நனையவும் விதியில்லை
வேரை நனைக்கவும் இங்கு
தண்ணீர் இல்லை ..!

இயற்கை வளம் காப்போம்
சாலையெங்கும் வாசகங்கள்
சாக்கடை கழிவிலே
எங்கள் சுவாசங்கள் ...
விளம்பரத்திற்காய்  உயிர் பெரும்
சாலையோரத்  தாவரங்கள்
வேர் படர்தளிலும்
என்ன விந்தை
தொட்டித் தாவரமெனும்
பெயரில் வியாபாரங்கள் !

வாயில் காவலரா நாங்கள்
வாடி நிற்கும் எங்களைக்
கண்டால் வேரோடு
பிடுங்கி எரியும் மனிதன் .
வாடிய முகத்தோடு இருக்கும்
மனிதரை என்ன செய்கிறீர் ?
நீரூற்றாமல் வாட்டியும்
துளிர் விடும் தளிரையும்
அழகென்ற பெயரில்
வெட்டிச்  சிதைப்பதும் மானிடரே
கொஞ்சம் கண் பாருங்களேன்
நாங்களும் வாழ வழி சொல்லுங்களேன் !
இன்னும் வாசிக்க... "வேரின் வலிகள்!"

Friday, June 15, 2012

பூவாய் மலர்ந்தவளே!கண்ணே கலைமானே!
வாடாக்கதிரின் ஒளியையணிந்து,
பூவாய் மலர்ந்தவளே!
உதிர்ந்து வீழ்ந்த விண்மீன் பிடித்து,
வதனமணிந்தனையோ!
தங்கத்தாமரை வடிவில் வலம்வரும்,
பெண்ணே பேரெழிலே!
கடலில் இருந்து அலையில் வந்த,
முத்து நீதானோ!
கட்டிக் கரும்பே தேனேப் பாலே,
மழலை உன் மொழியோ!
மரகதக்கல்லே மாணிக்கச் சுடரே,
தமிழே நீதானோ!
கானகக் குயிலே சோலைப் பாட்டே,
இசைதான் உன்குரலோ!
பாசக் காற்றே பரம்பொருள் அன்பே,
வெண்ணிலா உன்வடிவோ!
வண்ண மேகமே எண்ண தீபமே,
மழைத்துளி ஆனவளோ!
கலைமான்போலே நடக்கும் உந்தன்,
பாதம் பனியில் செய்தானோ!
இதயமே இரக்கமே உதயமே நீயொரு,
கவிதைத் தோரணமோ!
பசுந்தளிர் மேனியில் நடனமாடும்,
கலைதான் ஓவியமோ!
காலம் வாழ்த்தும் கோலமணிந்த,
காவியமாவாயோ!
கவியாய் வாழும் உன்னைப் பாடிட,
வானம் பொழியுமடி!
கண்ணிண் மணியென கவிஞர்கூடி,
வாழ்த்தும் நேரமதை!
கண்டு நிறைந்திட காத்திருக்கும்,
ரசிகை நானடியே!ஒரு பெண் குழந்தை இருந்தால் இப்படிக் கொஞ்ச ஆசை .
படம் இணையத்தில் எடுத்தது .

இன்னும் வாசிக்க... "பூவாய் மலர்ந்தவளே!"

Thursday, June 14, 2012

கொள்கை மாறவேண்டும்!

பூங்காற்றும் சுகமாய் இல்லை 
புன்னகையிலும் சுரத்தில்லை 
புது மலரிலும் வாசமில்லை 
பூலோகத்திலும் நாட்டமில்லை. 

அவரவர்க்கு ஆயிரம் எண்ணங்கள் 
அத்தனையும் அள்ளி எடுத்து 
ஆட்டுக்கல்லில் போட்டறைத்து 
அதில் முளைத்த ஓர் கருத்தை 
அழகாய் சொல்ல வந்தேனே 

பிச்சை எடுக்கும் பிழைப்பும் 
 கையேந்தும் அரசியலும் 
போலிச் சாமியார் பெயரிலே 
மதங்களை சாக்கடையாக்கும் 
மடங்களும் வேண்டாம். 
மனிதனைப் பிரித்தாளும் 
கோவில்களும் வேண்டாம். 
அடக்கு முறையில் ஆக்ரமித்த 
கடைகளை இல்லமுடைத்து,
மேம்பாலம் எனும் பெயரில் 
 பயணமும் வேண்டாம்
மனிதகுலம் வாழவைக்கும்,
இயற்கை வளம் அழித்து,
கட்டுகின்ற மாளிகையெதற்கு,
மனம் வேண்டும்குணம் வேண்டும்

நாடுவாழ வீடும் செழிக்க
நானிலம் போற்றும் நல்
திட்டங்கள் வேண்டும்.
இயற்கை காக்கின்ற
சட்டங்கள் வேண்டும்
மனிதநேயம் வளர்ந்திட
மனங்கள் மாறவேண்டும்
வேண்டியதைத் தொலைத்து,
வேண்டாததைக் கொடுக்கும்
கொள்கை மாறவேண்டும்
மாறமறுப்பின் மாற்றிட
நாம் இறங்கவேண்டும்!
இன்னும் வாசிக்க... "கொள்கை மாறவேண்டும்!"

Wednesday, June 13, 2012

காதலின் பார்வையில் !


கொட்டிக் கிடக்கும்
ரோசா நோக்கின்
ராசா வந்தானே ....
குண்டு மல்லி
வாங்கப் போனேன்
முன்னே குழைந்து நின்றானே !

வயகாட்டு வழி நடக்கையில
முறைச்சி பார்த்தானே
முக்கி முனகி திரும்பி பார்த்தேன்
முழுசா மறைந்தானே !

செவுத்த பார்த்தும்
சேத்த பார்த்தும்
அவனே நிக்கிறான்
சொப்பனம் கண்டு
எழுந்து பார்த்தா
அங்கும் அவனே நிக்குறான் !

சோறு தண்ணி
மறந்து நாளாச்சி ,
மாமா மறந்து நாளாச்சி !

மாடு கண்ணு பார்த்த விழி
இப்போ மாமனத் தேடுதே
மல்லிகைப்பூ வாசம் கூட
என்கூட மல்லுக்கு நிக்குதே !

வயக்காட்டுப் பக்கம்
நானும் போக வழியும் தெரியல
வாக்கப் பட போகும்
நாள எண்ணி மனசும் ஏங்குதே !

போருக்குப் போகும் வாளா
நீயும் விறைச்சி நிக்குற
என் புத்திக்குள்ள புகுந்து நீயும்
என்னை ஆட்டி வைக்குற !

உன் பார்வை என்ன
தீயா மாமா ?
பற்றி எரியுதே ...
உணர்வும் பற்றி எரியுதே !

நாத்து நடும் பொழப்ப
மறந்து நானும் நின்னேனே
நாலு நாளா பித்து பிடிச்சி
நானும் அலைந்தேனே !

கூத்து மேடை தனிலே
நானும் காதல் பார்த்திருக்கேன்
இதென்ன உசுர குத்திக் கொலைக்கும்
வலியா இல்ல காதலும் இருக்குது .
இந்த காதலும் இருக்குது .
இன்னும் வாசிக்க... "காதலின் பார்வையில் !"

Tuesday, June 12, 2012

ரசிக்க மனமிருந்தால் !
அழகென்று எதைச் சொல்ல!
கூந்தல் அழகு 
கூந்தலில் சூடும் 
கொத்து மலர் அழகு 
கோபுர கலசம் அழகு 
கானக் குயிலோசை அழகு 
கன்னம் வருடும் மயிலிறகு அழகு 
கற்சிலையும் அழகு 
அச்சிலை சுமக்கும் 
மண்பாண்டம் அழகு 
மானுடம் அழகு 
அதில் வாழும் மனித நேயமழகு
மண்ணழகு அதில் வாழும்
மரம் அழகு குடியேறும்
பறவை அழகு அது கட்டும்
கூடழகு வாழும் குஞ்சழகு,
ஊட்டும் தாய் அழகு-அது,
பாடும் பாட்டழகு-அதை,
ரசிக்கும் மனமழகு!
கடல் அழகு,
நீலவான் அழகு,
வாழும் நிலவழகு,
மின்னும் வெள்ளியழகு,
மலரும் சுடரழகு,
பொழியும் மழை அழகு,
ஓடும் மேகமழகு,
ஆடும் மயிலழகு,
ரசிக்க மனமிருப்பின்,
காற்றென்ன முத்தென்ன,
பாலையும் அழகுதான்.
இன்னும் வாசிக்க... "ரசிக்க மனமிருந்தால் !"

Sunday, June 10, 2012

பூவிற்றகாசும் மணமாயில்லை!

 
அருமைத் தாய்மடிதன்னில்,
அழகாய்ப் பாத்தியமைத்து,
சீரான இடைவெளியில்,
பதிகளை நட்டுவைத்து,
நீரூற்றி உயிர் கொடுத்து,
நிலமகளின் கருவறையில்,
வளர்ந்த பூங்கொடியை,
உரமிட்டு பார்த்திருந்து,
பூ பூக்க காத்திருந்தான்.
காவல்நாய் வடிவெடுத்து.                  

வேனிற்காலம் விடைபெற,
தென்றல்வந்து தாலாட்ட,
மொட்டினங்கள் தலைதூக்கி,
பனிமழையில் குளித்தகாலை,
வானத்து விண்மீன் கூட்டம்,
வாழ்த்துப் பாடிச்செல்ல,
வான்மதி மென் ஒளிபோல்,
சிந்தையில் பூங்கவிதைதந்த,
ரோஜா மலர்க் கூட்டம்,
கூடியாடிமயிலாய் நடனமட,
திருவிழாவந்த காளைகள் போல்,
வண்டினங்கள் வந்து கூட,
மணம் பரப்பி நின்றவரை,
மகிழ்ச்சியோடு அவன் பார்த்து,
குதூகலித்த அந்த நேரத்தில்,
வந்தனன்காண் எஜமானன்,
பூப்பறிக்க ஆளுடனே!
வியாபாரிக் கருணையின்றி,
பூவெல்லாம் பறித்தெடுக்க,
பரிதவித்த காவல் மனம்,
பார்வையாளன் ஆனதுவே!

கூடை கூடையாய் பூக்கள்,
சாரைசாரையாய் வண்டிகளில்,
தாரைதாரையாய் கண்ணீரோடு,
பனிமலரகள் ஊர்கோலமாய்,
அரவையிடம் நோக்கிச் செல்ல,
எஜமானன் விலைத்தொகையை,
வாங்கிமடியிலே கட்டிவிட்டு,
எருமைமாதிரி நிற்காதே,
போய் வேலையைப்பார் விரட்ட,
எதிர்பார்ப்பு ஏதுமன்றி,
கடமை செய்திட முனைந்தானே.
நாய்விற்ற காசு குரைப்பதில்லை போல்,
பூவிற்றகாசும் மணமாயில்லை-அவனுக்கு!

இன்னும் வாசிக்க... "பூவிற்றகாசும் மணமாயில்லை!"

Saturday, June 9, 2012

புரிதலின் வேகம் !


சோர்ந்த முகத்தோடும் சொப்பனங்கள் நிறைந்த கண்களோடும் இரண்டு கதவின் இடைவெளியில் கால் வைத்த படி கதவுகளின் இடைவெளியைக் கூட நிரந்தரமாக்கி ரசிப்பதில் சொற்ப மகிழ்ச்சி பெற்றிருந்தாள் சுதா .

எதிலும் விரக்தி! எல்லோர் மீதும் கோபம்! எல்லாம்  அம்மா செய்த வேலை... கல்யாணம் வேண்டாம் என்றவளையும் அழுதே சாதித்து சந்தேகப் பேர்வழி ஒருவன் தலையில் கட்டி இன்று வாழா வெட்டியாக வந்து அமர்ந்திருக்கிறேனே என்று தனக்குள்ளே வெந்து நொந்து கொண்டாள்.

மின்சாரம் இல்லாத வேளையிலேயே இப்படி மிரட்டும் எண்ணங்கள் மின்னலென வந்து போகும். மின்சாரத்தில் சொர்க்கத்தையே கண்டது போல் மகிழ்ந்திருந்தாள். அதற்குக் காரணமும் இருந்தது .

கொஞ்ச நாட்களுக்கு முன்பு கணினியில் பழக்கமான நட்பே காரணம். முதலில் எதையும் சொல்லக்கூடாது என்று இருந்தவளே கரைப்பார் கரைக்க கல்லும் தேயும் என்பது போல அவன் அன்பில் கரைத்துக்கொண்டிருந்தாள் சோகம் முழுமையும் .

கதைப்பதில் உண்டான ஆனந்தம் அவளிடம் மாற்றங்கள் பலவற்றை உண்டாக்கியது உண்மையே . அவனது அன்பான பேச்சும், அரவணைப்பாய் வரும் வார்த்தைகளும், அனுசரித்துப் போகும் விதமும் முழுவதுமாய் அவனது நினைவுகளிலேயே கட்டுண்டு இருந்தாள்.

கனவுக் காதலன் போலும் அவன் கணினிக் காதலன்! அவன் வரவிற்காய் ஏங்க ஆரம்பித்தாள். வருகை தாமதமானால் வம்பிழுக்கவும் செய்தாள். ஒரு நாள் விடுப்பு என்றாலும் உலகமே இருண்டு விட்டதாய் உணர்ந்தாள். பசி , உறக்கம் எல்லாம் மறந்து கணினியே கதி என்றிந்தாள்.

மின்விசிறி சுழல ஆரம்பித்ததும் மின்னலென ஓடி கணினி முன்பு அமர்ந்தவளுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அலுவலக வேலையாக அன்பு அவன் ஊருக்கு வருவதாகவும் முதன் முறையாக அவளை நேரில் பார்க்க வருவதாகவும் பேசிக் கொண்டார்கள் .

அவள் கால்கள் தரையிலே படாமல் மிதப்பது போலவே உணர்ந்தாள். கண்ணாடி முன்பே நேரம் கழித்தாள். அலங்காரத்திற்கே  புதுசாய் அறிமுகமாகி இருந்தாள். அன்றேனும் மலர்ந்த மலராய்  அழகாய் அள்ளி முடிந்த கூந்தலும் அதில் சொருகிய ஒற்றை ரோஜாவும் அவள் அழகை இன்னும் கொஞ்சம் எடுப்பாக்கித் தான் காட்டின.

பெரும் இரைச்சலுக்கு நடுவே பேருந்து நிலையத்தில் காத்திருந்தாள் சுதா.  இருவரும் பார்த்தது இல்லை எப்படி அறிமுகம் செய்து கொள்வது, என்ன பேசுவது இப்படி சிந்தித்துக் கொண்டிருந்த வேளை கையில் இருந்த அலை பேசி ‘கண்ணா உனைத் தேடுகிறேன்’ என்றபடி சிணுங்கியது. முகத்தில் புன்முறுவல் ஒட்டிக்கொள்ள ஆன் செய்து பேசியவளின் பின்புறமிருந்து ஒலித்தது ஓர் குரல்.

பழகிய குரல் போலும் உள்ளதே என சற்றே நிதானித்து திரும்பிய அவளுக்கு படபடவென இதயம் அடித்துக்கொள்ள அவமானத்தால் வெட்கித் தலைகுனிந்தாள். உள்ளுக்குள் ஆயிரம் ஆயிரம் கேள்விகள் துளைத்தன.

யாரை வேண்டாமென வெறுத்து ஒதுக்கி ஓடி வந்தாளோ... அந்த உருவமே அவள் முன்பு சிலையாய் நின்றது!

இன்னும் வாசிக்க... "புரிதலின் வேகம் !"

Friday, June 8, 2012

அழிவின் ஆரம்பம் !


சினத்தை வெளிக்காட்ட
அழுகையாய் கோபத்தை
வெளிக்காட்டுகிறது குழந்தையும் !
சொல் பேச்சு கேளாமையால்
அடிப்பதாய் மிரட்டும்
அன்னையும்  தந்தையும் !
அறிவைப் புகட்டும் ஆசானும்
குட்டி உணர்த்தும் நற்குணப் பண்புகளை !
அன்பின் மிகுதியால்
அடித்து அணைக்கும் தோழனும் !
உறவின் மிகுதியால்
உரக்க குரல் கொடுக்கும் மனைவியும் !
கோபமெனும் ஓர் குணமே
இல்லா மானிடரை இங்கே காணோம்
இருப்பவரிடம் ஓர் அங்கமாகவும்
இல்லாதவனிடம் பருவ மாற்றத்தை போலும்
பாவங்களும் சாபங்களும்,
கோபத்தின் பிள்ளைகளாய்.
பாரங்களும் சோகங்களும்,
தொடரும் தொடர்கதையாய்.
அன்பால் வரும் கோபம்,
வளர வழி காட்டும்.
ஆணவத்தில் விளையும் கோபம்,
அழிவின் ஆரம்பமாய்.
நம் தவறை நாமறிந்து நம்மீது,
நாம்கொளும் கோபம்.
நம்மை சீரமைக்கும் ஆயுதமாய்.
கோபமில்லாமல் அன்பில்லை,
கோபம் மட்டும் அன்புமில்லை.

இன்னும் வாசிக்க... "அழிவின் ஆரம்பம் !"

Thursday, June 7, 2012

உடலூனம் தவறில்லை!


பார்வையற்றோர் பார்வையிலே,
பாட்டின் உருவில் காட்சிகள்.
மொழியிழந்தோர் கண்களில்,
காட்சியெல்லாம் பாடல்கள்.
நடைமெலிந்தோர் கனவுகளில்,
ஓட்டங்கள்வெறும் நிழல்களாய்,
மனம் உடைந்த மனிதனுக்கோ,
வாழ்க்கையே பெரும்பேரிடராய்!

விதைத்தவர்க்கிது விளையாட்டு,
அறுப்பவனும் கவலைப்படுவதில்லை,
முளைத்த நாள் முதலாய் இவர்கள்,
இருளின் உறவுகளாய் புவியில்,
வாழ்ந்தும் வாழா தேரைகளாய்!

தென்றல் இவரைத் தீண்டுவதில்லை,
புயலிவரை விட்டு நீங்குவதுமில்லை,
களிமண்ணில் செய்த பானைகளாய்,
அகிலத்தில் வெந்துநொந்து மாய்கின்ற,
இவர்செய்த பாவமென்ன;முன்னோர்,
செய்த தவறென்றுரைத்தலே பாவம்!
படைத்தவன் படைப்பில் இவரெல்லாம்,
உள்ளவர்கு உதாரணம் என்றாயின்,
இறைபடைப்பே தவறென்ற கொள்கை,
சரியாயென ஞானம் உரைக்கிறது.
மனமா மதியா வாழ்வைஎதுவெல்லும்,
அன்புவெனறால் அது நன்றென்பேன்!

ஊனப்பார்வைகள் அழிந்தொழிந்தால்,
ஊனமென்பது உறவுககொன்றுமில்லை,
ஊரையும் உறவையும் ஏய்க்கின்ற,
ஊனமுற்ற பொய் எண்ணங்களே,
ஊமையாய்ப் பதிவிருந்துலகில்,
ஊழிகாலமும் தீமைசெய்யும்.

உடலூனம்  தவறில்லை,
உள்ளஊனம் பெருங்கேடு!!
இன்னும் வாசிக்க... "உடலூனம் தவறில்லை!"

Wednesday, June 6, 2012

அன்பொன்றே கோவில் !


தேய்ந்துபோகும் நிலவாய்க் காதல்,
வாழ்வதில் அர்த்தமில்லை.
மண்ணில் சாய்ந்த மரமாய் மனங்கள்,
மரிப்பதில் மாட்சியில்லை.
கண்ணில் விரியும் காட்சிகள்யாவும்,
சொந்தங்கள் ஆவதில்லை.
கனவில்வந்த நிழல்பட வாழ்க்கை,
உண்மையின் பிம்பமில்லை.
கூடநடக்கும் நிழலும் கூடநம்முடன்,
இரவில் வருவதில்லை.
உறவும் பிரிவும் ஒன்றாய் இணைந்தால்,
பயணத்தில் பொருளில்லை.
பாசமும் கபடமும் கைகோர்த்து வாழ்தல்,
உண்மை வாழ்க்கையில்லை.
கொண்டுவந்ததும் கொண்டுபோவதும்,
பாவத்தின் சுவடுகளே.
விட்டுச் செல்வதும் கட்டி வைப்பதும்,
நமதில்லை சொப்பனங்களே .
விலையின்றி கொண்டதை விலைபேசி,
வலைவீசும் ஆசைகளே.
நமைக்கொல்லும் நாளை அறிந்தவர்யாரும்,
வீழார் அவனியிலே.
இருப்பதைப் பகிர்ந்து இல்லார்க்கு கொடுப்பார்,
இதயம் உள்ளவரே.
நேற்றும் நமதில்லை இன்றிலும் நாமில்லை,
நாளையும் கனவுதானே.
காயங்கள்யாவும் நாம்செய்த பாவத்தின்
பயனால் முளைத்தவையே.
காலங்களோடு போட்டி போட்டு ஓடும்,
ஓட்டத்தில் பயனிலையே.
ஒருவர்வாழ்வில் மற்றவர் ஏற்றும் தீபம்,
இதயஅன்பொன்றே.
அடுத்தவர் உயர்வில் அகம் மகிழும் மனமே,
கோவில் சொல்கின்றேன்.
தனைஅழித்து தன்குலம் வளர்த்தும்
 நண்டினம், வாழ்வதுபோல்.
அன்புக்காய் தனையே கொடுக்கின்ற வாழ்வே,
கவிதையில் தேனாகும்.
அவர்பாதம் பணிந்து அடிமையாய்வாழ நானும்.
வரமே வேண்டுகிறேன்!
இன்னும் வாசிக்க... "அன்பொன்றே கோவில் !"

Tuesday, June 5, 2012

சிறகுகள் பறக்கத்தான்...!


நம்மால் முடியுமென்பதும் முடியாதென்பதுவும்,
நாமறியா பகல் கனவென்ற நம்பிக்கையே.
முடிந்ததெல்லாம் நன்மையாய் முடியவில்லை,
முடியாமல் போனதெல்லாம் தீதாயும் ஆகவில்லை.

உறவுகள் பிரிவெழுதின் நம்பிக்கை துரோகமென்போம்,
காலங்கள் கடந்துபோனால் இயற்கையதுவிதிவெனபோம்.
கைவிரல் ஐந்தும் சேர்ந்திருந்தால் பிரிக்க வழி பார்ப்போம்,
தனித்தனியாய் இணைந்திருந்தால் அழகு என்றுரைப்போம்.

வயதில்லா மழலையின் வார்த்தை தேனிசையாய்,
வாலிபத்தின் மொழியெல்லாம் மயக்கும் கனிமொழியாய்,
வசந்தகால நினைவெல்லாம் நிகழ்கால தாலாட்டாய்,
நாளைய வாழ்வெல்லாம் இன்றய கனவுகளாய்!

கணக்கில் பிழையேதும் இருப்பதாயத் தெரியவில்லை,
நம்கணக்கு சரியில்லை இதுவே யதார்த்தமென்று,
அறிந்தவன் சிரித்துக் கொடுத்து வாழ்கின்றான்,
புரியாதோர் புன்னகைத் தொலைத்து மாய்கின்றார்!

சிறகுகள் பறக்கத்தான் காற்றுள்ள எல்கைவரை,
சிந்தனையும் அப்படித்தான் நினைவுள்ள காலம்வரை,
அழுகையும் சிரிப்பும் யார்சொல்லி வந்ததென,
அறிந்தவர் யாருமில்லை நினைப்பதில் லாபமில்லை.

வாழ்கின்ற காலங்கள் கடுகளவு கூட இல்லை,
வானத்தில் பறந்தாலும் நிம்மதி இல்லையெனில்,
பிறந்ததில் பயனில்லை வாழ்விலும் பொருளில்லை,
அனைத்துமே அன்புதான் அதன்வழி நிம்மதியே,
ஆதலால் அன்பு செய்து மனங்கள் வென்றிடுவோம்!
படம் உதவி கூகிள் நன்றி கூகுளுக்கு .
இன்னும் வாசிக்க... "சிறகுகள் பறக்கத்தான்...!"

Monday, June 4, 2012

ஊஞ்சலாடும் நினைவுகள் ...!


ண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் இந்த முகத்தைத்தானே  வேண்டாம் என்று விரட்டியடித்தாள் ஒருத்தி .. மீண்டும் நினைவுகள் விரட்ட... நிமிர்ந்து சட்டை பொத்தானை சரி செய்தபடி நகர்ந்தான் ராகவன் .

"தம்பி மிஷினுக்கு போகணும் கொஞ்சம் ராஜாவை ஸ்கூலில் இருந்து கூட்டிட்டு வரீங்களா?" என்றாள் அண்ணி. ஒன்றும் சொல்ல முடியாதவனாய் 'ம்' என்றபடி வாசலில் நின்ற வண்டியை நோக்கி நகர்ந்தான்.

ணி அடித்து பிள்ளைகள் ஓடி வரத்தொடங்கினர் . முகப்பில் ஆசிரியைகள் நின்று முகம் பார்த்து ஒவ்வொருவராக அனுப்பிக் கொண்டிருந்தனர். ராஜாவைத் தேடிக்கொண்டிருந்தவனின் கண்களில் என்ன ஒரு ரம்மியமான காட்சி!

அவளா ...? அவளே தான்! இங்கு எப்படி..? ஆயிரம் கேள்விகளோடு அவளை நெருங்கினான்.

"நீங்க..?" என்ற குரலுக்கு சுமதி நிமிர்ந்து பார்த்து விட்டு சிலையாய் நின்றாள். "எங்க அப்பா மிஸ்" என்று பின்னாலிருந்து வந்த குரல் கேட்டு திடுக்கிட்டாள். ராஜா அவள் பதிலுக்கு காத்திராமல் ராகவனின் விரல் பிடித்து. "போலாம் பா" என்றான்.

எல்லோருக்கும் உண்டான இயல்பே அவனையும் பிடித்துக் கொள்ள, அவளைப் பார்த்த உடனே அவன் தேடல் தொடங்கியது. எதிர்பார்த்த மாதிரி கழுத்தில் தாலியும் இல்லை , காலில் மெட்டியும் இல்லை. 'சொல்ல முடியாது மதம் மாறி இருந்தாலும் இருப்பாள்! எக்கேடோ கேட்டுப் போகட்டும்'என்று நினைத்தபடி நகர்ந்தான்.

சுமதி சிலையாய் நின்றிருந்தவள் சிதைந்தே போனாள். 'எப்படி ஓடி ஓடி காதலித்தான்? அதற்குள் மறந்து விட்டானா? ஒரு குழந்தைக்கு தகப்பன் வேறு . எல்லாவற்றுக்கும நான் தானே காரணம்... வாசல் தேடி வந்த வசந்த வாழ்வை தம்பி, தங்கைகள் என்று காரணம் காட்டி விரட்டி அடித்த பாவியானேன்.' தன்னைத்தானே நொந்தபடி நின்றவளை சக தோழி தோளில் கை வைத்து, "வாடி போலாம்" என நகர்த்தவே... ஜடமாய் நகர்ந்தாள்.

'அவள் என்ன நினைத்திருப்பாள்...? எனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றா? ராஜா வேறு 'அப்பா' என்று சொன்னானே... சரி. அவள் என்ன நினைத்தால் எனக்கென்ன... எப்படியோ நினைத்து விட்டு போகட்டும்.' என்று சலித்துக் கொண்டான் மனதுக்குள்.

நிகழ்வுகள் தான் நகர்த்தின அவனை! நினைவென்னவோ அவளைச் சுற்றியே இருந்தது. "நான் அம்மா பார்க்கிற மாப்பிள்ளையைத்தான் கட்டிப்பேன்" என்று முகத்தில் அடித்தாற்  போல் சொல்லி விட்டுச் சென்றாளே... 'சீ.. என்ன இது அவளை ஏன் நான் நினைக்கிறேன்?' என நொந்து கொண்டாலும் மனம் அவளையே செக்குமாடாய் சுற்றியது .

ருவரின் நினைவுகளும் சந்தித்ததில் உறக்கத்திற்கு விடுமுறை.

நிலவை அனுப்பிவிட்டு சூரியனை எதிர்பார்த்து காத்திருந்தாள் சுமதி. பள்ளிக்கு வந்ததும் ராஜாவைத் தேடினால் இருக்கைஎல்லாம் காலியாக இருந்தன. இன்னும் நேரம் ஆகவில்லையோ என அமர்ந்தால்... மலர் தேடும் வண்டாக மதி தேடி விரைந்தன சில்வண்டுகள் கூட்டம்.

ராஜாவைப் பார்த்ததும் மலர்ந்தாள். "ராஜா, யாருடா நேத்து உன்னை அழைக்க வந்தது?" என்றாள். "எங்க சித்தப்பா மிஸ்!" என்று நகர்ந்தான். அவள் மனதில் உள்ளூர சந்தோஷம் ஒட்டிக்கொண்டது. கூடவே ஒரு குற்ற உணர்ச்சியும் தொற்றிக்கொண்டது . குழந்தையிடம் விசாரணை தேவை இல்லையென நகர்ந்தாள். சின்னக் குழந்தை போல அன்றும் ராஜாவை அழைக்க ராகவன் வருவானோ என்று ஏக்கத்துடன் காத்திருந்தாள் சுமதி.

மணி அடித்தது தான் தாமதம்... பார்வை அவனை தேட ஆரம்பித்தது. ராஜாவின் அம்மாவே வந்தாள் அன்று. எதையும் கேட்கத் துணியாத மனது! "ஒரு வேளை அவருக்குத் திருமணம் ஆகியிருக்குமோ?" என அஞ்சினாள்.

னத்துப்போன நெஞ்சோடு இறுதியாய் சந்தித்த பூங்காவில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு போக எண்ணி நகர்ந்தாள். பசும் புல்தரை, வண்ணமாய் சிரித்த பூக்கள், ஆங்காங்கே அமர்ந்திருந்த காதல் ஜோடிகளையும் கடந்து அவர்கள் சந்தித்த இடத்தில அமர்ந்தாள். அவளின் வாழ்க்கையில் வசந்தம் வருமா... இல்லை, இழந்தது இழந்தது தானா.... மனம் கேள்விகளால் நிரம்பி அலைபாய்ந்து கொண்டிருந்தது, அருகில் சிறுவர்கள் ஊஞ்சலாடி விட்டுப்போன சங்கிலியில் பலகை மட்டும் ஆடிக்கொண்டிருந்தது- வெறுமையான அவளது உணர்வுகளைச் சுமந்தபடி.
இன்னும் வாசிக்க... "ஊஞ்சலாடும் நினைவுகள் ...!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி