Ads 468x60px

Wednesday, April 11, 2012

களையறுக்கப் போனவன்...


காலைவெயில் காயுமுன்னே,
களைபறிக்கும் எண்ணத்தோடு,
கற்பாறை  கடந்து நடந்து,
களைபறிக்க முயன்றபோது,
கடகடவென்ற பரிகாச சிரிப்பொலி,
கமபீரமாய் செழித்த களை
நண்பாஎன்றழைத்தது   !

நீகூடப் பேசுவாயோ?
அதிசயமாய் அதைப்பார்த்தான்!
நான் மனசாட்சி இல்லாத மனிதரிடம்
பொதுவாய்ப்  பேசுவதில்லை,
பேசினாலும் அவன் நீதிசெய்வதில்லை.
கேட்கின்ற கேள்விக்கு பதிலை,
நியாயமாய் உரைத்துவிட்டு,
எனனை என்ன வேண்டுமென்றாலும்,
செய்துகொள்ளும் என்றியம்பி,
கேள்விகளைக் கேட்டது!

உன் தந்தையும் தாயுமுனைப்,
பாவத்தில் ஈன்றது பொய்யா?
படைத்தவனே சாபமிட்டு உமை,
விரட்டி விட்டதுதான் கதையா?
ஆசையினால் தம்பியைக் கொன்று,
காவலாளியோ கேட்டது முறையா?
கண்ணனே கர்ணனை ஏய்த்து,
அழித்ததுதான் தர்மமா?
எவ்வழி நீ வளர்ந்தாய்?
உண்மையா!பொய்யா!!எதுஉன்பாதை?

ஒழுங்காய்க் கற்றாயா?
கற்றவழியில் நடந்தாயா?
நட்புக்காய் வாழ்ந்தாயா?
காட்டிக்கொடுத்து மகிழ்ந்தாயே?
அன்பாய் சொல்லக்  கேட்டாயா?
ஆசைவழி துறந்தாயா?
பருவமாற்றத்தில் உருவம்மாறியதா?
உணர்வெல்லாம் தீயாக,
தீமைகள் நாடியதா?
கண்ணை அதன்வழியில்,
பறந்தோட விட்டாயா?
கெட்டதை மட்டும் தேடும்,
கேள்வியை மறைத்தாயா?
இதயம் தேடிஅலைந்த,
இன்பங்கள் தேடலையா?

கண்ணால் விபச்சாரம்,?
நாவால் அபச்சாரம்?
பணமென்ற பேய்களின்,
பாட்டுக்கு நீ அடிமையாக?
இயற்கையை அழிக்கவில்லையா?
மரங்களை வெட்டவில்லையா?
மனங்களை சாய்க்கவில்லையா?
மானத்தை  விற்கவில்லையா?
அநீதிக்கு விலைகொடுத்து,
நீதியை கொல்லவில்லையா?

வாழ்வே பொய்யுரையாய்!
பயணமே சுயநலமாய்!
இருளாய் வாழ்ந்துவிட்டு,
என்னைத் தீமையென்கிறாய்?
உனக்கென்ன அருகதை,
எனைஅழிக்க உண்டோசொல்?
இருந்தால் பிடுங்கிஎறி,
மடிவேன் மகிழ்வுடனே!

களையறுக்கப் போனவன்,
அரிவாளை  வீசி எறிந்துவிட்டு,
கற்சிலையாய் திரும்பி நடந்தான்
குற்றவாளி தான் உணர்ந்து !

14 comments:

 1. கேள்விக் கணைகள் ஒவ்வொன்றும்
  கேட்பவர் காதினில் புகுந்து இதயத்தைத் துளைக்கும்.
  அருமையான கவிதைக் கதை சசிகலா.

  ReplyDelete
 2. களை
  பிடுங்கச்க் செற்றவனிடம்
  களை முன்வைக்கும்
  வினாக்கள்

  பேசும் களை
  சிறந்த கற்பனை நல்ல கவிதை

  ReplyDelete
 3. களையறுக்கப் போனவன்,
  அரிவாளை வீசி எறிந்துவிட்டு,
  கற்சிலையாய் திரும்பி நடந்தான்
  குற்றவாளி தான் உணர்ந்து !//அருமையான கவிதை

  ReplyDelete
 4. களையவேண்டியவை ஏராளம் என உணர்த்தியிருக்கிறது கவிதை.

  சிந்தனைக்குரிய கவிதை, கலா.

  ReplyDelete
 5. கண்ணனே கர்ணனை ஏய்த்து,
  அழித்ததுதான் தர்மமா?
  எவ்வழி நீ வளர்ந்தாய்?
  உண்மையா!பொய்யா!!எதுஉன்பாதை?---அருமையான வரிகள் .வாழ்த்க்க்கள் .....பரிதி முத்துராசன்

  ReplyDelete
 6. //வாழ்வே பொய்யுரையாய்!
  பயணமே சுயநலமாய்!//
  அருமையான சொல்லாட்சி.

  நம்மில் அநேகம் பேர் களை எடுக்கக் கூட அருகதை இல்லாதவர்கள் என்பதை க(ளை)விதை மூலம் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. நம்மிடம் நீக்கப்பட வேண்டியவைகள் நிறைய உண்டு. களை பேசுவதன் மூலம் அதை ஆணித்தரமாய் எடுத்தியம்பி விட்டீர்கள் தென்றல். பிரமாதம்!

  ReplyDelete
 8. கேள்விகள் ஒவ்வொன்றும் மனத்தை குத்தி கிழிக்கின்றன. அதற்க்கான பதில்களை கூற நமது மனம் மிக வெட்கப்படுகிறது என்பத்துதான் உண்மை சசிகலா

  எப்படிதான் நீங்கள் குடும்பத்தையும் கவனித்து கொண்டு பதிவும் போட்டும் சமாளிக்கிறிர்கள் என்பதை கண்டு எனது மனம் வியக்கிறது. பதிவுகள் போடுவது என்பது கடினமானது அல்ல ஆனால் தரமான பதிவுகளை போடுவது என்பது கடினம் அதையும் நீங்கள் மிக எளிதாக செய்கிறிர்கள் என்பது மிக ஆச்சிரியமாக இருக்கிறது. பலர் கவிதை என்ற பெயரில் பல குப்பைகளை போடுகின்றனர். ஆனால் உங்கள் பதிவுகள் எல்லாம் சிந்திக்க வைக்கிறது என்பதுதான் உண்மை.

  எப்படித்தான் நீங்கள் இப்படி அழகாக சிந்திக்கிறிர்கள் என்பது எனக்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

  வாழ்த்துக்கள் சசிகலா

  ReplyDelete
 9. களையறுக்கப் போனவன் அருமையான தலைப்பு ஆமட்டுமல்ல கவியளகு மிளிரும் சொற்றொடர்கள் அக்கா

  ReplyDelete
 10. வாழ்வே பொய்யுரையாய்!
  பயணமே சுயநலமாய்!
  இருளாய் வாழ்ந்துவிட்டு,
  என்னைத் தீமையென்கிறாய்?
  உனக்கென்ன அருகதை,
  எனைஅழிக்க உண்டோசொல்?

  -களை களைய வேண்டியவற்றை அருமையாக உணர்த்துகிறது!
  இரசித்தேன்! நல்ல பதிவு! வாழ்த்துக்கள்!
  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 11. மனந்தனில் தீய எண்ணங்கள் களையாக உருவாகும்போதே களையாமல் விட்டு இன்று வேரூன்றச் செய்துவிட்டு, காட்டுக்களைகளைக் களையச் செல்பவனுக்கு கேள்விகள் ஒவ்வொன்றும் சாட்டையடி. நமக்குள்ளும் கொஞ்சம் திரும்பிப் பார்க்கவைத்தக் கவிதை. பாராட்டுகள் சசிகலா.

  ReplyDelete
 12. ஒவ்வொரு கேள்விகளும் அர்த்தமுள்ளவை,அழகிய சிந்தனைகள்!

  ReplyDelete
 13. வருகை தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி தவிர்க்க முடியாத காரணத்தால் தனித் தனியே நன்றி கூற இயலவில்லை அதற்க்கு வருந்துகிறேன் .

  ReplyDelete
 14. sariyaana kelvikal!

  saattai adikal!

  ReplyDelete

 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி