Ads 468x60px

Monday, April 30, 2012

வாழ்க்கை பயணத்தில் ...!

   தந்தைதாய் கட்டிவைத்த,
   கூட்டுக்குள் வாழ்ந்திருக்கும்,
   குருங் குஞ்சி மகவுகளை,
   கூர்போடக் காத்திருக்கும்,
   வட்டமிடும் வல்லூராய்,
   உலாவரும் தீமைகள்,
   வெல்லுகின்ற காலமிது!

   கிராமத்துப் பள்ளியிலே,
   முப்பது ரூபாய் ஊதியத்தில்,
   ஊழியராப் பணிபுரிந்த,
   அஃரகார வாத்தியாரின்
   வாழ்க்கை பயணமிது.
   மனைவி உயிரோடில்லை,
   பெற்றதுவும் பெண்களாய.
   துன்பம் எட்டிப்பார்கும்,
   இவர்க்கு வாழ்கையே துன்பமாய்!

   வள்ளிக்கு இருபதுவயது,
   கடைசிமகள் பத்துவயதில்,
   ஆறுநாள் நீராகாரம்
   பழகிப்போன உறவாக.
   தீபாவளி துணிமணியே
   மானம்காக்கும் போர்வையாய்.
   மேல்படிப்பு கனவாக
   மேலாடை கிழிசல்போல்.
   மானம்மட்டும் பாக்கியுண்டு,
   அதுவும் கேள்வியானால்?
   ஓட்டைக் குடமேந்தி
   தண்ணீரெடுக்கப் போனவளை,
   வல்லூரொன்று வழிமறித்து,
   ஐயர் மறுவீடு அனுப்பமாட்டார்,
   வா சின்னவீடாய் அழைத்ததனை
   அப்பாவிடம் அழுது சொல்ல,
   அரண்டுபோனார் ஆசிரியர்
   தந்தையவர் இதயத்தி்ல்,
   ஆயயிரமாயிரம் மோதல்கள்,
   இயலாமையை ஒருபக்கம்,
   வேதனை தொடர்கதையாய்.
   விட்டுச்சென்ற மனையாளின்
   புகைப்படம் வெறித்துவிட்டு,
   குடையெடுத்துப் புறப்பட்டார்
   விஷம்கொஞ்சம் வாங்கிவர!
   கதவைத்தாள் போட்டுவிட்டு,
   கண்ணீரோடு பிள்ளைகளை,
   கட்டியணைத்து முத்தமிட்டு,
   அமிர்தம்மான விஷந்தன்னை,
   குடிக்க எடுத்த வேளையிலே
   'சார்' எனறசப்தம்,கை நடுங்க,
   கதவைத்திறந்தவர்-போலீ்ஸ்
   கண்டு உறைந்துபோனார்!

  "என்னைத் தெரியலையா?
    நான்தான் சார் முகுந்தன்,
   படிக்க வைச்ச நீங்கள்தான்
   என்தெய்வம் என்றானவன்!
   வள்ளிக்குப் புரிந்தது,
   மாடு மேய்க்கும் கந்தனின்
   மகனாய் ஒதுங்கிநின்று,
   பரிதாபமாய்ப் பார்துநிற்கும்
   கீழ்ஜாதி...ஒதுக்கப்பட்டவெனறு!
   இன்ஸ்பெக்டர் முகுந்தன்,
   இதேகிராமத்தில்....சார்
   கேட்டா கோபிக்கமாட்டீங்கே,
   உங்கபொண்ணு வள்ளியை
   திருமணம் கேட்கவந்தேன்.
   சட்டென்று ஏதோஒன்று,
   இதயத்தை அடைப்பதைப்போல்,
   அவன்காலைக்கட்டி கதறி,
   விடமனம் துடிக்க-கைகூப்பி,
   உள்ளே வாப்பா என்றார்,
   வீட்டுக்கு ஒளியாய்-வள்ளிக்கு
  காவலனாய் நுழைந்தானவன்! 
இன்னும் வாசிக்க... "வாழ்க்கை பயணத்தில் ...!"

Friday, April 27, 2012

சுயநலத்தின் முதல் குழந்தை...!

   
   கரம்முதல் சிகரம்வரை,
   ண்டவன்துவங்கி அடிமைவரை,
   தயங்களும் எண்ணங்களும்,
   ரமற்ற கொடும் பாலையாய்,
   ண்மைகளை உண்டுவாழ்ந்து,
   னமான எண்ணம் சூடி,
   ரிகின்ற பச்சைமரத்தை,
   ய்கின்ற காலம் பார்த்து,
   ம்பொன் சாமி திருட்டுபோல்,
   ருநாளும் திருந்தாத மனதோடு,
   டுவதேன் சுயநலப் பாட்டோடு!

   சுயநலத்தின் முதல் குழந்தை,
   யார? பதில்தான் தேடுகிறேன்!
   வானில்லைப் புவியில்லை,
   நீரில்லை,மலையில்லை,
   மண்ணில்லை,மரமில்லை,
   காற்றில்லை-பாவமனிதனுமில்லை.

   எதுவுமில்லா வெறுமையின்,
   வசந்தகாலம் கொன்றுவிட்டு,
   இயற்கையெனும் விதையை,
   ஊன்றியதின் நோக்கமென்ன!
   என்பெயர் விளங்க வேண்டும்,
   எனைவணங்க கைகள் தேவை,
   என்ற சக்தியின் சுயநலத்தால்,
   நாம் வந்து வீழ்ந்தோமோ?

   முற்பிதாக்கள் செய்த பாவம்,
   முல்லைப்பூவைச் சேருவதேன்,
   அதைக்கொய்து உயிரெடுக்கும்,
   இதயமற்ற செய்கையேன்,
   பேசா மடந்தைகளை- நாம்,
   நம் உணவாய் நினைப்பதேன்,
   நமைக்காக்க சட்டங்களைத்,
   தீட்டிவைத்து அழிப்பதேன்,
   உறவென்ற பெயர்சொல்லி,
   அடிமைத்தனம் வளர்ப்பதேன்,
   எல்லாமே பொய்யுரைகள்,
   சுரண்டும் சுயநலங்கள்!

   திறந்துவிட்டால் பறந்துபோகும்,
   என்பதினால் திருமணங்கள்!
   நம்பிக்கைக்கு விலங்கிட்டு,
   அரங்கேறும் நாடகங்கள்,
   மனதைக் கேட்டால் தெரிந்துவிடும்,
   வலியைச் சுமந்து பயணங்கள்,
   பிரியங்களும்,பிரிவுகளும்,
   ஒருகூட்டுப் பறவைகளாய்,
   இறகைவெட்டிப் போட்டதனால்,
   கூண்டில் இணை ஜோடிகளாய்.
   என் உதிரம்,என் குடும்பம்,
   என்பிள்ளை,என்வீடு,
   என்சுற்றம்,என் சமூகம்,
   என்சொத்துஎன் பணம்,
   என்தேசம்,என் உலகம்,
   எனதென்றே பாடுகிறோம்,
   என் மூச்சிக் காற்றுக்கும்,
   எனக்கும் பந்தமென்ன ?
   எங்கிருந்தோ வருகிறது,
   என்னுயிர் காக்கிறது!

   எதையுமது கேட்டதில்லை,
   எப்போது அதுபோகும்,
   எனக்குச்சொல் மானுடமே!
   அடங்காத  ஆழ்கடலும்,
   அறியாத பெரும் புயலும்,
  அமிலமான எரிமலையும்,
   அறியாத தாதுக்களும் ,
   அழகாய் ஒளிரும் கதிரவனும்,
   அடியில்வாழும் பொக்கிஷமும்,
   அத்தனையும் நமதேயெனறு,
   அனைவருமே நினைக்கும்வரை,
   அத்தனையும் சுயநலமே,
  அமைதி வேண்டுமெனில்
   அழுக்கான சுயம் அழிப்போம்!
படங்கள் நன்றி கூகுளுக்கு .
இன்னும் வாசிக்க... "சுயநலத்தின் முதல் குழந்தை...!"

Thursday, April 26, 2012

முகமூடிகள்...!!


தாயின் முன்பு
கனிவோடும்  !

தந்தையின் முன்பு
தவறுகளை மறைத்தும் !

முதலாளி முன்பு
குழைந்து  நின்றும் !

கடன் கொடுத்தவன் முன்பு
கோழையாகவும் !

மனைவி முன்பு
மாயவித்தைக் காரனாகவும் !

கணவன் முன்பு
கைதியாகவும் !

உறவுகளுக்கு முன்பு
கசப்பான அனுபவங்களை
மறந்தும் !

நண்பனே ஆனாலும்
சில நேரங்களில்
நல்லது கெட்டதை
நம்முள் புதைத்தும் !

எதிரியின் முன்பு
எந்த நேரம்
கவிழ்ப்பான் என்ற பயத்தோடும் !

மரணத்தின் முன்பு
வாழ்வை பிச்சையாய் கேட்டும் !

வாழ்வெதற்கு
என்ற கேள்விக்கு
ஜாண் வயிற்றை முன் வைத்தார்கள்
அந்த ஜாண் வயிற்றுக்கா
இத்தனை முகமுடிகள் !!


இன்னும் வாசிக்க... "முகமூடிகள்...!!"

Wednesday, April 25, 2012

உயிர்மூச்சின் எதிரொலியாய் ...!

உலகின் உன்னத உறவான
இல்லறத்தின் இதயமாய்
உயிர்மூச்சின் எதிரொலியாய்
கண்ணீரை துடைத்த கைகள்
உறவை மறந்து விட்டு
பிரிவெழுதிப் போகின்ற
ஊர்கோலம் கண்முன்னே !

அவள் இனிவரமாட்டாள்
நான் தான் போகவேண்டும்
கூடவே வாழ்ந்தவள்
கூடுவிட்டு ஏன் பறந்தாள்
சொல்லாமல் ஏன் பிரிந்தாள் ?
படுத்திருந்த அவள் மீது
பார்வை பதிந்தது
இன்னமும் சிரிக்கின்றாள்
எப்படி இவளால் முடிகிறது .

வாழ்ந்த காலத்தில்
வார்த்தை எதிர்த்து உதிர்த்ததில்லை
கடமையே கதியென்று
கண்ணாய் வாழ்ந்து விட்டாள்!
எது வேண்டும் கேட்ட போது
நீங்கள் போதும் என்றவள்
நிம்மதியாய் வாழ்ந்தாளா ?
அறியாத பாவியாய் நான் !

பண்ணையார் மகளை
மணம்பேசி நிற்கையிலே
ஆற்றங்கரை ஓரத்தில்
ஆலமரக் காற்றிடையில்
அன்னமாய் வந்தவளை
ஆசைமனம் தேடியோட
ஆரம்பம் காதலுடன்
தடைகளெல்லாம் தகர்த்தெறிந்து
அப்பாகாலம் போனபின்பு
அம்மாவின் அழுகையோடு
கரம்பிடித்த கோலமகள்..

கருஏந்தி மடிசுமந்து
பத்தியமிருந்து , பாதி இரவு
கண்விழித்து ...
பெண் மலரொன்று
மழலை ஈன்று
பேணிக்காத்து அவர் வாழ்வே
இவள் கனவாய்
பூச்சூடி பொட்டிட்டு
தங்கமாய் வைரமாய்
காத்து நின்று
மொட்டது மலரானதும்
மணவாளனுக்கு மாலைசூடி
சிறு பிள்ளைகள்
விளையாட்டை சீர் கொடுத்து
ரசித்துப் பார்த்து
வாழ்ந்த பெண்மை !

கட்டையாய்க் கிடக்கின்றாள்
எடுக்க நேரமாச்சி
என்கின்ற உறவினருக்கு
என்ன தெரியும் - அவர் பார்வையில்
அழுகுமுன் பிணம் எடுக்க வேண்டும் .

சாய்நாற்காலியில் வெறித்திருந்த
அவரைப் பார்த்து
அம்மாவை வழியனுப்ப
வாங்கப்பா என்றான் - மகன்
அசைவில்லை அவரினிலே
அருகில் வந்துப் பார்த்த மகள்
அலறினாள் ஐயோ என்று
எங்களுக்கு யாருமில்லை
ஏனப்பா இப்படி எங்களை அனாதையாய்
விட்டுச் சென்றீர்கள் !
பிள்ளைகள் கதறியழ
அவரும் தன் துணையோடு
அன்பென்றால் இதுதானோ ?
அறவாழ்வு மணந்தானோ
வாழ்விலும் தாழ்விலும்
இன்பத்திலும் துன்பத்திலும்
இறப்பிலும் இணையாக ...

இப்புவியில் இன்று காணும்
இல்லறங்கள் எப்படியோ ?
அத்திப் பூ பூத்தது போல்
இதைப் போன்ற உண்மைக்காதல்
சாட்சியாய் வாழ்கிறது .
வாழ்கிறோமா ? நாம் இதுபோல்
கேள்விகேட்டால் பதிலில்லை
வாழ ஆசைப்பட்டால்
அது அன்பு ..... !!

இன்னும் வாசிக்க... "உயிர்மூச்சின் எதிரொலியாய் ...!"

Monday, April 23, 2012

அழகு கண்ணாளா ...!


தாவணி போட்ட
தங்கமே வாடி
தனிச்சி பேசுவோம் ...
ஆத்துப் பக்கம்
நாமும் போவோம்
அழகே வாயேண்டி!

ஆற்று மணலில்
வீடு கட்டி
கொஞ்ச வழியில்ல
மணல் திருட  
மண்டிக்கிடக்கும் கூட்டம் பாரங்கே !!.

குளத்துப் பக்கம்
நாமும் போவோம்
குயிலே வாயேண்டி!

குளத்தை சீரமைக்கும்
பணியென்றே
கும்மியடிக்கும் கூட்டம் பாரங்கே!! .

ஏரிப்பக்கம்
நாமும் போவோம்
எழிலே வாயேண்டி !.

ஏரி நிலைத்தைஎல்லாம்
வீட்டு மனைகளாக்கி
ஏச்சிப் பிழைக்கும்
கூட்டம் பாரங்கே !!.

தென்னந்தோப்பு பக்கம்
போவோம் தேனே வாயேண்டி !.

கள்ளிறக்கும் கூட்டமஅங்கே
காத்துக் கிடக்குதே !.

மாந்தோப்பு பக்கம்
போவோம் மானே வாயேண்டி !.

மாங்காய் கடிக்கு
மல்லுக்கு நிற்கும்
சிறுவர் கூட்டம் பாரங்கே!! .

சோலைக் காட்டுப்
பக்கம்  போவோம்
சொர்ணமே வாயேண்டி! .

சோலைக் கதிர்
சுட்டுத் தின்ன
காத்து கிடக்கும்
காதலர் கூட்டம் பாரங்கே !!.

சினிமா பார்க்க
நாமும் போவோம்
சிட்டே வாயேண்டி!

சீண்டி பேசி
வம்பிழுக்கும் கூட்டம் பாரங்கே!! .

கோவில் புறா
பார்க்க போவோம்
கொஞ்சு புறாவே வாயேண்டி!

உண்டியல் திருட்டை
தடுக்க அங்கே
ஒருவருமில்லையே
உடுத்திப் போகும்
என் நகைக்கங்கே
காவல் யாரங்கே!! .

உன் கண்ணைப் பார்த்து
வந்த காதலுக்கு வழியும் சொல்லேண்டி! ...

கண்ணால் பேசி
கருத்தை கவரும்
அழகு கண்ணாளா ...
உன் சொல்லால் மயங்கி
உன் பின்னே நானும் வர
உன் பெஞ்சாதி  யாகனுமே !!

கல்யாணத்துக்கு முன்னே
வந்த காதலும் வேண்டாமே
கல்யாணத்துக்கு பின்னே
வரும் பெஞ்சாதி  வேண்டாமே
சந்நியாசம் தான் நானும் போறேன்
சற்றே வழி விடு!!.

சகலமும் தெரிஞ்சவனே
சந்நியாசம் வாங்கணும்
முன் கோபத்தையே
விடத்தெரியா உனக்கெதுக்கு
சந்நியாசமும் ...சம்சாரமும் !.

இன்னும் வாசிக்க... "அழகு கண்ணாளா ...!"

Saturday, April 21, 2012

அழையா விருந்தாளி ...!


அவனியில் அவதரித்த
நாள்முதல் பார்கின்றேன்
அழையா விருந்தாளிகளாய்
ஆயிரம் வாழ்வினிலே !


அழுகைக்கு குரல்கொடுத்து
வந்ததை அறிவித்தோம்
துன்பத்தின் குடியேற்றம்
ஆரம்பமாய் பார்க்கின்றோம் !

வாழ்வு வேண்டுமென கேட்டா
நாம் வந்தோம்
வந்து உதித்ததனால் நாம்
வாழ ஓடுகிறோம் !
கையை மூடி வைத்து
களத்தில் விழுந்தோம் நாம்
கையேந்தி நிற்கின்றோம்
கனவுகள் மெய்ப்படவே !

கடல் உள்வாங்கினாலும்
வெளியே கரை கடந்தாலும்
அழிவோம் என்ற பயம்
மனிதனைக் கொல்கிறது !
மனமும் இப்படித்தான்
இல்லாத உருவத்தை
கற்பனையில் சமைத்துவைத்து
நம்பிக்கையில் காத்திருக்கும்
கண்முன்னே வாழ்திருக்கும்
உயிர்களை மறந்துவிடுவோம்
கண்காணா கடவுளுக்கு
உருவங்கள் கொடுக்கின்றோம் !

கேட்டது கிடைத்து விட்டால்
வெற்றி நமதென்போம்
கேள்வியாய் அது நின்றால்
கேவலம் தோல்வி என்போம் !
எது வெற்றி , எது தோல்வி
எனதென்று எதுவுமில்லை
எல்லாமே பொதுவுடைமை
நினைவே வெற்றி என்பேன் !
காலச் சக்கரத்தின்
வேகம் அதிகமானால்
காலைக்குப் பதில் மாலை வரும்
கனவில் நிலையும் இதுவே காண்!
தீமைகள் கூடுதேடி
பறந்தோடித் திரிகிறது
தீயில் போய் வீழுமுன்
விழித்தெழுதல் நன்றென்பேன் !

நன்மையெது தீமையெது
பகுத்தறிதல் லாபமென்பேன்
பார்வையில் நன்மையானவை
நாளை தீமைஎனில் என் செய்வோம் !
ஆயத்தம் செய்துவைத்த
ஆயுதங்கள் வீணாய்ப்போன
ஆயிரம் கதைகளுண்டு
ஆனாலும் ஆயத்தம் -தேவை !
படங்கள் கூகுள் நன்றி கூகுளுக்கு .
இன்னும் வாசிக்க... "அழையா விருந்தாளி ...!"

Friday, April 20, 2012

வாராதோ வசந்த காலம் !


மஞ்சள் பூசி நீராடி,  
 கண்டாங்கிச்  சேலை கட்டி      
 பொட்டு வைத்து பூச்சூடி
காதோரம் ஜிமிக்கி போட்டு
கழனிக்கு  போன மசசானுக்கு
கஞ்சி கொண்டு நானும் போனேன்! 

ஓரப்பார்வையாலே எனை அள்ளி        
 வந்தாயோ என்று கொஞ்சி
கஞ்சி குடிச்ச மச்சானுக்கு
களைப்பு தீர பாட்டு பாடி ...
என்னன்பே என்று மச்சான்
மயங்கிய நேரம் காதோரம் சேதி
சொல்லிகாசுமாலை கேட்டு நின்றேன்!

புன்னகை ஏக்கத்தோடு,
 மச்சான் முகம் நோக்கி
என்னை உற்றுப் பார்த்து!
காசுமாலை கேட்ட புள்ள
களையெடுக்கவும் ஆள் இல்ல
வளர்ந்து வரும் நெல்மணிக்கும்
தண்ணிபாச்ச நாதியில்லை
கால் வயிறு இனிகண்காணாது போலும் ...

அடி என் கண்ணே,
மணியேகண்ணுக்கு அழகா தெரியும்
ஜிமிக்கி கொஞ்சம் தாயேன் புள்ள!
விதை நெல்லு வாங்கின
கடனுக்குவட்டியாச்சும் கட்ட உதவும் ...
காசுமாலைக்கு ஆசைப்பட்டு
காது ஜிமிக்கியும் போனதென்ன?    
காலமெல்லாம் வராதோ வசந்தகாலம்!                                                                               
இன்னும் வாசிக்க... "வாராதோ வசந்த காலம் !"

Thursday, April 19, 2012

காதலின்றி ஏதுமில்லை!

 
அப்பா அம்மா காதலில்
 அரங்கேறிய நாடகத்தில்
 ஆயிரமாயிரம் உயிரணுக்கள்
 ஆடியோடி போட்டியிட்டு
 இயன்றவரைப் போராடி
 இறந்ததுபோக உயிர்த்ததுவே
 ஈடில்லா குழந்தையாய்
 ஈகையெனப் பிறந்ததுகாண்!
  உள்ளத்து எண்ணமெல்லாம்
 உயிர் காதல் தேடுகையில்
 ஊனங்களும் இடவேழியில்
 ஊர்கோலம் போகிறதே!
  எனதென்ற கொள்கையிலே
 எழுந்தாடும் சுயநலங்கள்
 ஏனென்று அறியுமுன்னே
 ஏறியோடும் நினைவலைகள்!
  ஜந்தில் விளையும் மனமுண்டு
 ஜம்பதிலும் மலரா மலருமுண்டு
 ஒவ்வோர் நினைவிலும் காதலுண்டு
 ஒழித்துவைக்கும் கதைகளுண்டு.
  ஔவையின் காதல் கனவென்றால்
 ஔஷதமாய் அவர் கவிதைகளே!
  அஃகினி வார்ப்பு இரும்பென்றால்
 அஃதும் அழகு பரம் பொருளே!

  மனவியல் கற்பியல் காதல்
 களவியல், உடலியல் காதல்
 இதைவிடுத்து வேறு காதல்
 உண்டா தெரியவில்லை!
  ஜென்ம ஜென்மமாய ஜீவனுள்ள
  அனைத்துக்கும் பொதுவாக
 காதலொன்றே வாழ்கிறது
 அழிந்தாலும் வாழ்ந்தாலும்
 காதலின்றி ஏதுமில்லை!
  மண்ணுக்கும்,மரத்துக்கும்
 பெண்ணுக்கும் பொன்னுக்கும்
 வானுக்கும் கடலுக்கும்
 அறிவுக்கும் ஆசைக்கும்
 இரவுக்கும் பகலுக்கும்
 நன்மைக்கும் தீமைக்கும்
 கதைக்கும் கவிதைக்கும்
 இயற்கைக்கும் செயற்கைக்கும்
 காதல்மட்டும் பொதுவுடமை!

  பச்சை பசுமை பரப்புகளில்
 படர்ந்திருக்கும் மனக்காதல்.
  சிவப்புக் கம்பளவிரிப்புகளில்
 சிதறிவிழும் களவியல்காதல்
 இரண்டுக்கும் இடையினிலே
 ஊஞ்சலாடும் ஒருதலைக்காதல்
 ஆசிரியர் யாருமின்றி
 தானேகற்றுத் தெளியும் காதல்!

   எப்படி, எப்போது எவ்வழி
  வருமென்ற கேள்விக்கு
  யாரிடமும் பதிலில்லை.
   ஒருமுறையா! பலமுறையா!!
  அதுவும் தெரிவதில்லை.
  சொல்லி வருவதுமில்லை
 கூறிவிட்டுச் செல்வதுமில்லை
 நாமுமதை விடுவதாயில்லை
 அதுவும் நமைப் பிரிவதாயில்லை!

  இனியென்ன செய்திட-பயணத்தில்
 வருவதை எதிர்கொள்வோம்!
  காதல் சுமையென்றால்
 சுமக்கின்ற சுமைதாங்கிகளாய்!
  காதல் சுமைதாங்கியானால்
 சுமைகளாய் -நாம்.

Images thanks to goole
இன்னும் வாசிக்க... "காதலின்றி ஏதுமில்லை!"

Wednesday, April 18, 2012

சமர்த்து கண்ணா...

தினசரிஅதிகாலை எழுந்து,  வீடெல்லாம் பெருக்கி கதிரவன் மலருமுன் குளித்து,  அழகாய் கோலமிட்டு ,மான்போல் நடந்துவந்து,மலராய் சிந்திய சிரிப்போடு  கவிதையாய் வந்துநின்று, எழுமபுங்கப்பா என்றழைத்து, கண் முன் காப்பியோடு வந்து நிற்கும் அவளது நடவடிக்கைகள் யாவும் இன்றுஎப்போதும்போலில்லாமல் விந்தையாய் இருந்தது .
 எதையோபறிகொடுத்ததைப்போல் சுரத்தில்லாமல் சோகம் வடிந்த முகத்தோடு சர்க்கரை இல்லா காப்பியும் , சாந்தமில்லா அவள் முகமும் அவனை நிலைகுலையச் செய்தது.  அதற்கு தான் தானே காரணம் என்ற வலியும் அவனை வாட்டியது.
  சூழ்நிலை உணராமல்   தானே முடிவெடுத்ததால் விளைந்த விபரீதம்,   அவளையும் சோக நகரத்தில் தள்ளி, மலர் கொண்டு பிரிவை வரவேற்றது அவளது  நடவடிக்கை! .
 அமுதா .... என அழைக்கும் போதெல்லாம் ‘இன்னும் எத்தனை நாளைக்கு’ எனக் கூறி விம்மி விம்மி அழத்தொடங்கி விடுவாள் .
 மகப்பேறுக்கு கூட தன்னை விட்டு பிரிய மனமில்லாது தாய் வீடு போக மறுத்தவள் இனி தாய் வீடே கதி என இருக்கப் போவதை நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது .  
அவளைப் பற்றிய சிந்தனையிலேயே எங்கோ நிலைத்து விட்ட பார்வையின் முன் அவளே வந்து நின்று; ...
         ‘சாப்பிட வாங்க’ என்றால் ...
         சுரத்தில்லாத அவள் உபசாரத்தால் ‘சாப்பாடே வேண்டாம்’ என்றான் அவன் .
இயலாமை அணைத்தபோதும்,மெல்ல அவன் அருகில் அமர்ந்தவள் முகத்தில் திடீரென பற்றிக் கொண்டது மகிழ்ச்சி! .     
‘இங்க பாருங்க’ என கையை மெல்ல எடுத்து தன் ஏழு மாத கர்ப்பிணி வயிற்றில் வைத்தாள், .  வலமிருந்து இடம் சிறு உயிர்  நகர்வதை அவனாலும் உணர முடிந்தது .  அவன் கண்களிலும் ஆனந்தம்! மெதுவாக அவளை தோளில் சாய்த்து,தலையைக் கோதிவிட்டு ‘என்னம்மா,குரல் தழுதழுத்தது .
         ‘நம்ம  குழந்தை பிறக்க போற நேரம் கூட நீங்க என்னோடு இருக்க முடியாததை நினைத்தால்’ என்று சொல்லி முடிக்கும் முன்னே நெஞ்சம் விம்ம அழஆரம்பித்தாள்!
            ‘குணா .....குணா’  .. என அழைக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு விரைந்தான் .    கையில் பெட்டியோடுஅவன் நண்பன் மணி நின்றிருந்தான் .        சுமூக பேச்சி வார்த்தைக்கு உங்க முதலாளி ஒத்துக்கிட்டாராம் .ஸ்டிரைக் வாபஸ்.போராட்டம் முடிஞ்சாச்சி,  இனி நீ எதிர்பார்த்த சம்பளம் வரும்.  உன் வெளிநாட்டு பயணம் கான்சல்!                 ‘நான் வேற உன்னை என்னோட கூட்டிட்டு போறதா சொல்லி  தங்கச்சிய கஷ்ட படுத்திட்டேன்! .  சரிடா போய் சமாதானம் பண்ணு .  எனக்கு பிளைட்டுக்கு நேர மாச்சி கிளம்புறேன்’ என்று நகர .    கதவோரம் நின்று கேட்டுக்கொண்டிருந்தவளின் வயிற்றில் பிள்ளை துள்ள “சமர்த்து கண்ணா”என்றாளவள்!


முதல் முறையாக ஒரு சிறுகதை தலையில் ஓங்கி குட்டு குட்டுவதாக இருந்தால் மெதுவா குட்டுங்க சொல்லிட்டேன் ..ஆமா .
            
இன்னும் வாசிக்க... "சமர்த்து கண்ணா..."

Tuesday, April 17, 2012

அழியா கிராமியக் கலைகள்-2


பரதக்கலை ...
தமிழ்த்தாயின் தலைமகளாய்
ஒளிர்கின்ற பரதக்கலை
உலகாளும் மந்திரத்தை
தமிழினம் உணரவேண்டும் !
நெற்றிச் சூடி
காதில் ஜிமிக்கியிட்டு
வைரமாய் சுண்டியிழுக்கும்
மூக்குத்தி பரிணமிக்க
அழகு பதுமையாக சலங்கையும்
ஜல் , ஜல் , ஜல் ஒளியோடு
புருவம் முதல் பாதம் வரை
அபிநயம் புரிகின்ற
இக்கலையை வெல்வதற்கு
எக்கலையும் பிறக்கவில்லை !

நாடகக் கலை ...
கதை சொல்லும் தெருகூத்து
வில்லுப் பாட்டு இவையெல்லாம்
தெருமுனையோடு நிற்க
சமூக சரித்திர பாத்திரத்தை
கண்முன்னே நிற்க வைத்து
நாடகமே இன்று வரை
ஆள்கின்ற வண்ணத் திரையின்
ஆரம்பம் இது உண்மை !
தனை மாய்த்து வாழ்விக்கும்
மெழுகு போல் தான் வீழ்ந்து
சினிமாவை வாழவைக்கும்
நாடகக் கலை கருவறையே ...!
வில்லுப் பாட்டு ...

வில்லெடுத்து போர்க்களம் கண்ட
வீரர்கள் திரும்பி வந்து
வெற்றிஎக்களிப்பில்  வில்லுக்கு மணி சூடி
பாடியாடும் கலையை
சொல்லை போர்க்களமாக்கி
இசையோடு பாடுகின்ற
வில்லுப் பாட்டில் கதை கேட்டால்
இராமாயணமும் நமதாகும் ...!
          இன்னும் எத்தனையோ அழிந்து வரும் தமிழ்க் கலைகள்.  அவை நம் எண்ணத்திலாவது வாழ அடுத்த பதிவில் தொடருவோமே  ...

இன்னும் வாசிக்க... "அழியா கிராமியக் கலைகள்-2"

Saturday, April 14, 2012

அழியா கிராமியக் கலைகள்


கரகாட்டம் ...
தலைமேல் செம்பு சூடி 
கை கொண்டு ஏந்தாமல் 
உடலை வில்லாய் வளைத்து 
ஆடுகின்ற கரகாட்டம் 
ஆரம்ப நாட்களில் 
ஆண்களின் ஆட்டக்கரகமாய் 
துளிர்விட்டு பின்னாளில் 
மங்கையரின் ஆட்டமாகி 
இது வரை அழிவின்றி 
வாழுகின்ற தமிழ்க்கலையாய்...

மயிலாட்டம் ...
மயில் போன்ற முகமூடி 
இடுப்பினிலே தோகைகள்
வான்பார்த்து சிலிர்த்தெழுந்து 
தோகை மயிலாடுதல் போல்
உச்சி முதல் பாதம் வரை 
இரைதேடி ஓடுதல் போல் 
அசைக்கின்ற பொழுதினிலே 
அழகுமயில் நேரினிலே 
ஆடுதல் போல் கம்பீரம் ...

காவடி ஆட்டம் ...
அரைவட்ட வில்லாக வளைத்தெடுத்து 
நடுவிலொரு கம்புகட்டி 
காவடியை அலங்கரித்து 
கவிபாடி ஆடுகின்ற 
காவடி ஆட்டமதை
முருகனின் ஆட்டமென்ற 
முன்னுரையோடு ஆடிடுவர் 
ஆனாலும் 
வழிபாட்டு ஆட்டம் தனி 
கலை ஆட்டம் ஆறு பாகம் ...

பொய்க்காலாட்டம் ...
கொக்கலி ஆட்டமென்ற 
உயரக்கால் ஆட்டத்தில் 
பொய் கால்களைப் பூட்டி 
கொக்கின் கால் போல் 
நீண்ட கட்டையோடு 
ஆறடி உயரம் வரை 
ஆகாயத்தில் நின்றாடும் 
ஆட்டமிது தமிழன் கலை ...

தெருக்கூத்து ....
திருக்கூத்து என்ற கலை 
காலத்தின் பிடியில் சிக்கி 
தெருக்கூத்தாய் நிற்கிறது 
கலைஞ்ரின் வாழ்வாதாரம் போல் 
ஆடல் நாயகன் சிவபெருமான் 
தில்லையில் ஆடியத்   தெருக்கூத்து 
பார்த்தாடியதால் பரவசமாய் 
பாரதக் கூத்தென்ற கதை 
சொல்லும் திரு - தெருக்கூத்து ...
        
   இன்னும் எத்தனையோ அழிந்து வரும் தமிழ்க் கலைகள்.  அவை நம் எண்ணத்திலாவது வாழ அடுத்த பதிவில் தொடருவோமே  ...
இன்னும் வாசிக்க... "அழியா கிராமியக் கலைகள்"

Thursday, April 12, 2012

கண்மணியே ....

அன்பாய் உச்சிமோர்ந்து 
அழகே ஆருயிரே எனக்கொஞ்சிய 
அம்மாவின் இதயத்தை 
பறித்தெடுத்த மாபாவி !
அப்பா வேடத்தில் சில 
அரக்கர்கள் தோன்றிஇங்கே
அணைக்கின்றார் தீபங்களை 
அழியவேண்டும் இவரெல்லாம் !
கண்ணே கனியமுதே 
கட்டிக்கரும்பே கண்மணியே 
கலிகாலத்தில் நீ ஏன் பிறந்தாய் 
உருகொடுத்தவனே உனை
தீயினால் சுட்டானே 
என் தேகம் ஏறயுதடி 
உனை அறியா என் இதயம் 
வலிக்கிறது ஐயோ 
கொடுமையிது பசுந்தளிரைப் 
பறித்தானே படுபாவி !
சண்டாளன்  வைத்த நெருப்பில் 
செல்வமே நீ வளர்ந்த 
கருவறையே தவறான இடமாய் 
தெரிகிறதே தாங்கவில்லை !
நீ எனக்கு உறவில்லை ஆனாலும் 
நீ என் குழந்தையானாய் 
நினைவே கதறுமாபபோல்
நீச்சனவன் செய்துவிட்டான் 
படைத்தவனே நீ இருந்தால் 
பாதகனை கொன்று விடு 
உயிரை எடுதல்ல 
கைகால்கள் முடமாக்கி 
வீதியில் எறிந்துவிடு
ஒருவாய்க் கூழுக்கும் 
அவன் அலைந்து சாக வேண்டும் 
ஊர் உலகம் எல்லாமும் 
காறி அவன் மேல் உமிழவேண்டும் !
எந்தத் தாய் ஆனாலும் 
இந்த செய்தி பொறுப்பாளா ?
பெற்ற தாய் இனி உலகில் 
நடைபிணமே எந்நாளும் !
விசாரணைத் தேவையில்லை 
கை கால்கள் வெட்டி எறிந்து
கண்களை குருடாக்கி 
ஆண்மையை  பறித்தெடுத்து 
அலையவிட வேண்டும் !
நீதி மன்றம் இவன்வழக்கை 
விசாரிக்க மறுக்க வேண்டும் 
வழக்கறிஞ்ர்  ஒன்று கூடி 
இவனுகெதிராய் நிற்கவேண்டும் 
பணத்தை இவனுணவாய் 
உண்டு வாழ உத்தரவிட்டு 
இவனைப் பாடமாய் அரங்கில் 
நிறுத்தி வைக்க வேண்டும் !
அன்பே உன் மரணத்தால் 
உருகுலைந்து போனோமடா 
பிஞ்சு முகத்தைப் பார்க்கையிலே 
வெம்பி மனம் மருகுதடா 
உன் சமூதாய விடுதலைக்கு 
ஆரம்பமெழுதிப் போனாயோ ?
மகாத்மா ஆனாயோ 
கலங்கரை விளக்கம் நீ கண்ணே 
கண்ணீரால் அஞ்சலி செய்து 
கதறுகிறேன் நானும் கூட 
வேண்டாம் இந்தக்கொடுமை 
தாய்மையை தீயிலிட்டு 
கொளுத்தாதீர் சுனாமிபோல் 
அழிவெழுதும் மானிடமே 
இவள்   போல் மனதில் 
எத்தனையோ சுனாமிகள் 
இவரையெல்லாம் இரக்கமின்றி 
களை எடுத்தல் நீதிஎன்பேன் 
புண்ணிய பூமி என்பதெல்லாம் 
பொய்யாய் திரை விரிகிறது 
விம்மியழும் இதயத்தோடு 
எழுதுகிறேன் ஓர் தாயாய் !

 
    
 
இன்னும் வாசிக்க... "கண்மணியே ...."

Wednesday, April 11, 2012

களையறுக்கப் போனவன்...


காலைவெயில் காயுமுன்னே,
களைபறிக்கும் எண்ணத்தோடு,
கற்பாறை  கடந்து நடந்து,
களைபறிக்க முயன்றபோது,
கடகடவென்ற பரிகாச சிரிப்பொலி,
கமபீரமாய் செழித்த களை
நண்பாஎன்றழைத்தது   !

நீகூடப் பேசுவாயோ?
அதிசயமாய் அதைப்பார்த்தான்!
நான் மனசாட்சி இல்லாத மனிதரிடம்
பொதுவாய்ப்  பேசுவதில்லை,
பேசினாலும் அவன் நீதிசெய்வதில்லை.
கேட்கின்ற கேள்விக்கு பதிலை,
நியாயமாய் உரைத்துவிட்டு,
எனனை என்ன வேண்டுமென்றாலும்,
செய்துகொள்ளும் என்றியம்பி,
கேள்விகளைக் கேட்டது!

உன் தந்தையும் தாயுமுனைப்,
பாவத்தில் ஈன்றது பொய்யா?
படைத்தவனே சாபமிட்டு உமை,
விரட்டி விட்டதுதான் கதையா?
ஆசையினால் தம்பியைக் கொன்று,
காவலாளியோ கேட்டது முறையா?
கண்ணனே கர்ணனை ஏய்த்து,
அழித்ததுதான் தர்மமா?
எவ்வழி நீ வளர்ந்தாய்?
உண்மையா!பொய்யா!!எதுஉன்பாதை?

ஒழுங்காய்க் கற்றாயா?
கற்றவழியில் நடந்தாயா?
நட்புக்காய் வாழ்ந்தாயா?
காட்டிக்கொடுத்து மகிழ்ந்தாயே?
அன்பாய் சொல்லக்  கேட்டாயா?
ஆசைவழி துறந்தாயா?
பருவமாற்றத்தில் உருவம்மாறியதா?
உணர்வெல்லாம் தீயாக,
தீமைகள் நாடியதா?
கண்ணை அதன்வழியில்,
பறந்தோட விட்டாயா?
கெட்டதை மட்டும் தேடும்,
கேள்வியை மறைத்தாயா?
இதயம் தேடிஅலைந்த,
இன்பங்கள் தேடலையா?

கண்ணால் விபச்சாரம்,?
நாவால் அபச்சாரம்?
பணமென்ற பேய்களின்,
பாட்டுக்கு நீ அடிமையாக?
இயற்கையை அழிக்கவில்லையா?
மரங்களை வெட்டவில்லையா?
மனங்களை சாய்க்கவில்லையா?
மானத்தை  விற்கவில்லையா?
அநீதிக்கு விலைகொடுத்து,
நீதியை கொல்லவில்லையா?

வாழ்வே பொய்யுரையாய்!
பயணமே சுயநலமாய்!
இருளாய் வாழ்ந்துவிட்டு,
என்னைத் தீமையென்கிறாய்?
உனக்கென்ன அருகதை,
எனைஅழிக்க உண்டோசொல்?
இருந்தால் பிடுங்கிஎறி,
மடிவேன் மகிழ்வுடனே!

களையறுக்கப் போனவன்,
அரிவாளை  வீசி எறிந்துவிட்டு,
கற்சிலையாய் திரும்பி நடந்தான்
குற்றவாளி தான் உணர்ந்து !
இன்னும் வாசிக்க... "களையறுக்கப் போனவன்..."

Monday, April 9, 2012

வாழவைத்து வாழ்தல் வேண்டும் !


இயற்கையாய்..........
கோழி முட்டையிட ஆறுமாதங்கள்
நாய் குட்டிபோட-மூன்று மாதங்கள்
பசு கன்றுபோட மனிதர்போல்
பத்துமாதங்கள்-இதுஇயற்கை!
வாழைத் தார் குலைக்க
பெண்மை தாய்மை அடைய
முட்டைகள் பொரித்துடைய
இறக்கைகள் முளைத்து பறக்க
இயற்கை நிர்ணயித்த
காலத்தைமாற்றுகின்ற
சுயநலத்தின் வெளிப்பாடு

பலவந்தமாய் மாறியதோ?
இருப்பதை இணைத்தெடுத்து
பறப்பதையும் உருவாக்கி
பகையையும் அதில்பூட்டி
நாம்பெற்ற வெற்றியென்ன?
நோயினறி வேறில்லை
பிரிவுகளும் தொடர்கதையாய்!

எண்ணிநாம் தூவுகின்ற
விஷங்களே நமைஅழிக்கும்
விபரீதம் உணரவில்லை.
இனவிருத்தி பெயராலே
ஒட்டினம் என்றுரைத்து
விரிவாக்கம் செய்வதெல்லாம்
வினையன்றி வேறில்லை!
கணநேர சிந்தனையி்ல்
தோன்றிமறையும் கனவல்ல
எதிர்காலம் நமதில்லை
அதைஅழித்தால் சுனாமிதான்
அதற்குமேல் அழிவெல்லாம்
ஆகாயமார்க்கம் வரும்!
தேவையென்ற பாத்திரம்
நிறைவதுமட்டும் இலக்கானால்
இழப்பொன்றே நாடிவரும்
இனமு்ம் நமக்கில்லை
மனதிலும் மாண்பில்லை
பலவந்தமாய் உரிமைகளை
சுயநலமாப் பறிக்கின்றோம்!
சிற்றின்பம்,பேரின்பம்
திசைமாறிய பறவைகளாய்!
காட்டாற்று நீரினிலே
உருண்டு,புரண்டோடி
உருமாறும் கூழாங்கல்
மணலாய் வடிவெடுத்தால்
அதையும் திருடிடுவோம்
நீர் ஆதாரம் அழித்திடுவோம்!

படைப்புகள் அத்தனையும்
நமதென்று வேதம் செயவோம்
நாமெதையும் ஈயமாட்டோம்
தீமைமட்டும் விதைத்திடுவோம்!
சுயநலம் மட்டுமே-நம்

வாழவைத்து வாழ்தல் வேண்டும்,
வாசமான வாழ்விதுவே!
இயற்கையோடு போட்டியிட்டு
இருப்பதெல்லாம் நாம்அழித்தால்
காலம் காத்திருந்து ,நமை
அழிக்கும் காலம்வரும்!
பலவந்தமாப் பறித்தெடுக்கும்
மனநிலை மாறவேண்டும்.
இயற்கை மரணமானால்
நீயுமில்லை,நானுமில்லை!
இன்னும் வாசிக்க... "வாழவைத்து வாழ்தல் வேண்டும் !"

Saturday, April 7, 2012

ஜனனம் தொடங்கி மரணம் வரை ....அதிகாரம் உள்ளவன் அதட்டியும் ...
ஆணவம் பிடித்தவன் மிரட்டியும் ...
இதயமில்லாதவன் பறித்தும்
ஈனமானவன் இழித்தும்
உணர்வற்றவன் ஏய்த்தும்
ஊக்கமானவன் அடித்தும்
எமனானவன் அழித்தும்
ஏடானவன் பொய்யுரைத்தும்
ஐயம்கொண்டவர் மாய்த்தும்
ஒடுங்கியவன்   எதிர்த்தும்
ஓங்கிநிற்பவர் ஒடுக்கியும்
ஔரங்கசீப் போன்றவர் மிரட்டியும் ....
அஃறிணை என்பவர் பேசியும்
பதவியில் இருப்பவன் பயந்தும் ...
வெறி பிடித்தவன்
செயல் ஜாலத்திலும் ...
சுயநலமிக்கவன்
சுரண்டுவதிலும் ...

சுக போக வாழ்விற்காய்
இயற்கையை காயப்படுத்தியும் .
மனச்சுரண்டல்
பணச்சுரண்டல்
பதவிச்சுரண்டல்
வியாபாரச்சுரண்டல்
கல்விச்சுரண்டல்
மருத்துவச் சுரண்டல்
ஜனனத்தில் சுரண்டல்
மரணத்திலும் சுரண்டல்
அடுத்தவரை சுரண்டும் நாம்
நம்மை அடுத்தவர்
சுரண்டுவதறியாமல்
உலகை, ஊரை
உறவை ,இனிமையை
பசுமையை, பண்பை ,அன்பை
வாழ்கையை சுரண்டும தீமையாய்!
இன்னும் வாசிக்க... "ஜனனம் தொடங்கி மரணம் வரை ...."

Thursday, April 5, 2012

கனவு இல்லம் ...


வாஸ்த்தெல்லாம் சரிபார்த்து,
சாமிக்கு  பூஜைவைத்து பூஜித்து,
செய்வினைக்கு  மந்திரமோதி,
அவன்  கட்டிய அழகான மாளிகை,
அவன்  பெயர் சொல்லும்படி,
ஊரிலே பெரிதாக ஆனந்தவிலாஸ்,
கிரகப்பிரவேச நாள் குறித்து,
பத்திரிகைப் பார்த்தெடுத்து,
பங்காளி, பகையாளி அனைவரையும்,
அழைக்க முடிவெடுத்து,
ஓலைகள் அனுப்பிவிட்டேன்,
பால்பொங்கும் புதன்கிழமை!

பின்நோக்கிப் பார்த்தால்
இருபதுவருடக் கதையிது
மனைவாங்க வேண்டுமென்ற
மனஆசைத் தீயெரிய
கொடுத்த கடனுக்காய் நண்பன்,
வட்டிசெலுத்த முடியாமல்,
நின்றநிலை சாதகமாக்கி,
வாங்கிய பூமியிது அவனுக்கு
விதிசெய்த சதி-எனக்கு?
வீட்டைச்சுற்றி பார்கின்றேன்,
சுவரெல்லாம் கிரானைட்கல்,
தரைக்கு வெள்ளைமார்பிள்,
ஜன்னல்,கதவெல்லாம் ஈட்டி,
தேக்குமரத்தாலே !
அடுப்பறை,குளியலறை,
விருந்தினர்காய் தனியறை,
அவன் கண்ட கனவெலலாம்,
மாளிகை வடிவத்தில்!
சுற்றிப்பார்த்து மனம்மகிழ்ந்து,
அறை  அறையாய்த் தாழிட்டு
முன்அறையில் மாட்டிவைத்த,
இறைவனை வணங்கிவிட்டு,
இன்று "நான்"மட்டும் இனிமேல்,
எனைத்தேடி உறவெல்லாம்,
ஓடிவரும் என்றெண்ணி,
முன்வாதில் பூட்டுகையில்,
நெஞ்சில் ஏதோ உருள்வதைப்போல்!
விரல் நுனியில் இருந்து,
மெதுவாய் மேல்நகர்ந்து,
வலியொன்று பயணிக்க,
அடிவயிற்றில் மற்றொன்று,
இதயம்நோக்கி நகர்ந்துவர,
அவனுக்கு புரிந்தது-காலன்,
வாதில் படியிலென்று!
எல்லாம் "நான்" கட்டினேன்,
எனக்காகக் கட்டவில்லையோ?
மெதுவாய்ப் படியமர்ந்து,
காப்பாற்ற யாராவது வருவாரா?
தெருநோக்கிப் பார்த்தான்,
வேர்வைத்துளி முத்தாட,
காட்சி-கறுப்பு வெள்ளையாக,
"நான்"எனதென்று கட்டியது,
 நினைவுச்சின்னமா! கல்லறையா?
மெதுவாய்ச் சாய்ந்தான்!
தூரத்தில் "பூமி"கொடுத்த,
நண்பன் முகம்..நிழலாய்!
இன்னும் வாசிக்க... "கனவு இல்லம் ..."

Wednesday, April 4, 2012

முடிவில் எதுவும் நமதில்லை !

நூலுக்கும் ஊசிக்கும்
இடைப்பட்ட உறவென்ன ?
இணைப்பது அதன் வேலை
பிரிப்பது காலம் தான் !

ஆடைக்கும் மனிதனுக்கும்
ஆயிரம் பந்தங்கள்
மானம் காத்தபின்னர்
தூக்கி எறியும் உள்ளங்கள் !

மயானத்தைக் காத்து நிற்கும்
வெட்டியானின் கண்ணெல்லாம்
இன்று யார் போவார்
என்பதிலேயே லயித்திருக்கும் !

வட்டி வாங்கும் வஞ்சகன்
கொடுத்த பணம் இரட்டிப்பாய்
மாறும் நாள் எதுவென்று
கணக்கிட்டு அமர்ந்திருப்பான் !

மாதமெல்லாம்   உழைக்கின்ற ஊழியனின் மனமெல்லாம்
வாங்கிய கடனை அடைப்பதற்கு
சம்பள நாளை யாசிக்கும் !

தனியாய் வீட்டில் அமர்ந்திருந்து
உலகம் அறியா தாய்க்குலங்கள்
கணவன் வரும் நேரமெண்ணி
கனவுடன் காத்திருக்கும் !

முத்து விளையா சிப்பிஎல்லாம்
வானைப் பார்த்து வாய்மலர்ந்து
மழைத் துளி விழும் நாளை
கவலையோடு தேடி நிற்கும் !

பசியால் வாடும் சிங்கங்கள்
மான்கள் தண்ணீர் பருகவரும்
காலம் அறிந்து பதுங்கி நின்று
அடித்துக் கொல்ல வழிதேடும் !

பட்டுப் போன காதல் மனம்
 விட்டுப் போன உறவுகளின்
தொட்டுப் போன நடப்புகளை
எண்ணி எண்ணி அழுதிருக்கும் !

நினைத்தது  கிடைத்தவர் வெற்றிஎன்பர்
இழந்தது எல்லாம் தோள்விஎன்பார்
உனது எனது ஓட்டத்தில்
முடிவில் எதுவும் நமதில்லை !      
 
இன்னும் வாசிக்க... "முடிவில் எதுவும் நமதில்லை !"

Monday, April 2, 2012

உலகுக்காய் வாழாமல் ...


மனிதனை மனிதன் உண்ண
மனக்கணக்கு போட்டெதற்கு
மயக்கத்தில் வாழ்வதினால்
மலர்மணம் அழிக்கின்றோம் !
எது விடியல் எது வாழ்க்கை
விட்டுக்கொடுக்க மனமிருந்தால்
பட்ட உறவும் பசுந்தளிராய்
மீண்டும் வளரும் மாட்சியுறும்!
எதை நாம் படைத்தோம்
எல்லாமே இருப்பதுதான்
கோர்க்கின்ற வேலையாளாய்
எதைஎதையோ  செய்கின்றோம் !
முத்தைக் கோர்க்க நூல்
கவிதை பாட வார்த்தை
காதல் செய்ய இதயம்
கண்டு பிடிப்பு பொய்யுரையே !

ஒருவயிற்றில் பிறந்தவரே
ஒருங்கிணைந்து ஓடாவிட்டால்
அறியாத புரியாத உறவெங்கே
சேர்ந்து வாழும் புரியவில்லை !
மனத்தால் இணைந்து வாழும்
வாழ்விருந்தால் போற்றுங்கள்
இணைந்தாலும் பிரிந்தாலும்
ஒன்றை ஒன்று வாழவைக்கும் !
வெற்றி வெற்றி வெற்றியென
முழக்க ஒலி கேட்கிறது
வென்றது யார் எனப் பார்த்தால்
அண்ணன் தோற்றதற்கு
தம்பியின் கொக்கரிப்பு !
விழுந்ததும் ஒரே இரத்தம்
எழுந்ததும் அதே உதிரம்
உறவு தோற்றதனை, அவர்
உள்ளம் அறியாமல்
பாராட்டும் சீராட்டும்
பாடை வரை -அதன் பிறகு ?
வாழும் வாழ்வைத் தொலைத்து விட்டு
வசந்தமென சூளுரைத்தால்
வாடி விழும் நாளில்
வாய்க்கரிசி கிடைத்திடுமா ?
எண்ணல் நன்றென்பேன் !

அன்பை மட்டும் போற்றிப்பாடி
ஆலயத்தில் ஒன்றாய்க்கூடி
இறைவனையும் வென்றிடுவோம்
இதுவே உண்மை உறவாகும் .
உணர்ந்தவர் நட்பில் களங்கமில்லை
உலகுக்காய் வாழாமல் உயிர்
அன்புக்காய் வாழ்ந்திடுவோம் !
   
இன்னும் வாசிக்க... "உலகுக்காய் வாழாமல் ..."
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி