Ads 468x60px

Saturday, March 31, 2012

ஊனத்தில் பழுதில்லை ...


எப்படிப் பிறந்தாலும் பழுதில்லை
அனாதையாய்ப் பிறந்தால்
மட்டும் அது பெரும்பாடு  !
அழகாய்க் கூடுகட்டி
ஆசையாய் முட்டையிட்டு
அன்பாய் அடைகாத்து
மகவைப் பார்த்து ஊட்டும் முன்
பெற்றவர் மரித்துப் போனால்
குஞ்சுகள் எறும்புக்கு இரையாகும்  !

மனிதனும் இப்படிதான்
அனாதையாய் அவதரித்தால்
அவர்  வாழ்வில் பயணமெல்லாம் ,
எதிராய் வீசுகின்ற
சுழல் காற்றாய் மாறி விடும் !
அன்பும் கிடைப்பதில்லை
பண்பும் தெரிவதில்லை
பாசமும் அறிவதில்லை !
அழகாய் பிறந்துவிட்டால்
பாதைகள் மாறிப்போகும் !
அறிவோடு பிறந்தாலும்
வாய்ப்புகள் ஓடிப்போகும் !
அறியாமல் வளருவதனால்
நன்மை தீமை எதுவென்று
அறியாமல் நடந்துவிட்டு
அழிவில் வீழ்ந்து அழிகின்றான் !
பாதையும் தெரிவதில்லை
பயணமும் சரியாயில்லை  !
கூன் குருடாய்ப் பிறந்தாலும்
தாய் தந்தை இருந்துவிட்டால்
தரணியில் வாழ்வதற்கு
ஏதோ வழி இருந்திருக்கும் .
அனாதையாய் அவதரித்தால்
வழியுமில்லை வாழ்வுமில்லை !
மனிதப் பிறவிகளில்
இவரே ஈனராக ?
மனங்களும் இப்படிதான்
எதையோ தேடி அலைகிறது
எண்ணத்தில் அனாதையாய் !

 
இன்னும் வாசிக்க... "ஊனத்தில் பழுதில்லை ..."

Friday, March 30, 2012

தொலைத்ததைத் தேடுகிறோம் ....

கோடி கோடியாய்ச் சேர்த்தாலும் , மாடி மாடியாய்க் கட்டினாலும்  , பதவி பதவியாய் வந்தாலும் .  உண்ண உணவு , குடியிருக்க குடியிருப்பு , உறங்க உறைவிடம் இதைத் தவிர மனிதன் தேடுவதெல்லாம் நிம்மதியே .
          பொன்மீது அமர்ந்திருந்து , பணத்தின் மேல் துயில் கொண்டு பறி கொடுத்த நிம்மதியைத் தேடியோடும் வாழ்க்கையிது .  உறவுகளின் ஆரம்பம் பெற்றவரின் பாசத்தில் . கருவாகி , உருவாகி  உதிரம் உண்டு வளர்ந்து காற்றின் உறவாகும்  வரை வாழ்வில் சுமையில்லை!
       தொப்புள் கொடியுறவை ஏற்று புதுவாழ்க்கை,  ஆனாலும் முத்தாடி , தாலாட்டி , சீராட்டி , பாலூட்டி வளர்ப்பதற்கும்,  "தாய்"!  உண்டாயா ? உறங்கினாயா ? கற்றாயா ? கேட்டாயா ? பார்த்தாயா ? என்று, கேள்வி கேட்டு பாதை மாறிப் போகாமல் பயணம் தொடர்ந்து செல்ல அறிவூட்டும் தந்தை!
     
என் பேரன் , என் பேத்தி எனக் கொஞ்சி,  ஊர்க் கதை , உறவின் முறை கூறித் தந்து , மாய்ந்து போன கலாச்சாரம் , மடிந்தொழிந்த சரித்திரங்கள்
பாட்டி வடை  சுட்ட கதை ,நரி வந்து ஏய்த முறை ,முயல் ஆமை இடம் தோற்றுப் போன பாடம் ,குரங்கு குருவிக்  கூட்டைப் பொறாமையால் பிரித்தெரிதல் !

தும்மினால் 'குரு மிளகு  ' ,  வயிறு பொருமினால் ,'கசகசா' , தொண்டை  செருமினால் 'வெற்றிலை ' , உடற் சூடு என்றால் 'வெந்தயம்' கண்பேறு சுற்றிப் போடல் , தீண்டேன்றால்  படிகாரம் , காலை எழுந்து பல்துலக்கி , பானைத் தண்ணீர்  குடிக்க வேண்டும் . பெண் மஞ்சள் பூசி நின்று கட்டாயம் குளிக்க வேண்டும் .  கோவில் வழிபாட்டில் புதைந்து கிடக்கும் சத்தியங்கள் , கை நெல் குத்தி எடுத்து  கொடுக்கும் சத்து சாதங்கள் !  பூப்பெய்து பெண் மலந்தால் அதற்க்கொரு சீராட்டு , மாமன் உறவின் மகத்துவங்கள் , குடும்பம் நடத்தப் பாடங்கள் , சமையல் செய்யப்  பயிற்சிகள் , குடும்பம் கூடி வாழ அரவணைக்கும் தந்திரங்கள் . அன்பு மந்திரங்கள் !

      கிழவன் இருந்த வரை வீடே  வெளிச்சமாய்,  காலையில் காடு சென்று கொண்டுவந்த காய் , கனிகள் !.  கிழவி வாழும் வரை ஆயிரம் பேர் வந்தாலும் மலர்ந்த முகத்தோடு பரிமாறிய பக்குவங்கள்,  இப்படி சொல்லி மாய்ந்த பெற்றோரே  , இப்போது பிள்ளைகளை விட்டு விலகி நின்று வேடிக்கை பார்க்கும்  காலம் இது . தாயிழந்த குஞ்சுகள் போல் நாம் .

        கிராமங்கள் நகரமாக , மனங்கள் நரகமாக , உறவுகள் பொய்யாக , உளுத்துப் போன காலங்கள் . நோய்கள் பெருகியிங்கே, உண்மை விடை பெற்று,  தீமைகள் விளைச்சல்களாய் .  நாளை எதை உண்போம் , மாத்திரையா ? காற்றையா ? புரியவில்லை .
அழகான குடிசையிலே,  அன்பான இதயங்களோடு,  பண்பான வாழ்வு வாழ்ந்து , இயற்கையை அனுபவித்து , காடு , மேடு , ஓடியாடி , துள்ளித் திரிந்த கிழ உறவுகளை இப்போது மனம்தேட ...
       அவர்களும் நாகரீக மோகம் தேடிப்போக . கூடு சிதைந்திங்கே,  குஞ்சுகள் ஏக்கத்தோடு!  விரட்டியதும் நாம்தான் , தேடுவதும் நாமேதான் . இழந்தது கிடைத்திடுமா ?
பெற்ற பிள்ளைகளின் வாழ்வொன்றே இலட்சியம் என்று வாழ்ந்த மக்களின் மனம்   கூட்டுக் குடும்பத்தில் லயித்திருந்தது .  பேரப்பிள்ளைகளின் அன்பில் உலகை மறந்து சகிப்புத் தன்மையோடும்  , விட்டுக்கொடுத்தும் வாழ்ந்த முதியோர்களைத் தேடும் காலமிது .
        வம்பெதற்கு என பிறந்த பிள்ளைகளையும்     விட்டு தனித்து நிற்கின்ற நிலை  வளர்த்ததுதான்  நாகரீகமா ?
     தனிக்குடித்தனம் என்ற பெயரில் .  சிறகு முளைத்த பறவைகளை கூடு விட்டு விரட்டுவது ஏனோ ? 
இத்தனை காலம் அடிமையாய் வாழ்ந்து விட்டோம் இனி அது தேவையில்லை என்று அடிமை விலங்கொடித்து முதியோர்கள் சிந்தித்ததின் விளைச்சல் இது தானோ ?  கூட்டுக் குடும்பங்களும் இல்லை . கூட்டுறவும் இல்லை . 

இன்னும் வாசிக்க... "தொலைத்ததைத் தேடுகிறோம் ...."

Wednesday, March 28, 2012

உதாரணங்களாய் ...

      
        துளித்துளியாய் மண்விழுந்து
        ஒற்றுமையாய் எழுந்தோடி,
        பூவுலகம் காத்துநிற்கும்,
        ஆர்ப்பரிக்கும் காட்டாற்றின்,
        ஒற்றுமையும்-பாடம்தான்!

        மலைமேல் குடியமர்ந்து,
        மெதுவாய் பயணம்செய்து,
        கூடியாடும் நேரத்தில்,
        மழையைப் பொழிகின்ற,
        கார்முகிலும் -பாடமதான்!

        விதையாய் மண்ணில் புதைந்து,
        செடியாகி,மரமாகி,காற்றுமாகி,
        உயிர் காற்று மட்டுமின்றி,
        கனிவளமும் ,நிழலும தருகின்ற,
        தியாகமும் உதாரணம்தான்!

        கூட்டம்,கூட்டமாயிணைந்து'
        நாடுவிட்டு,நாடு பறந்துவந்து,
        கூடிவாழும் பறவையினங்கள்,
        சொல்கின்ற வாழ்க்கைப்பாடம்,
        போதிப்பதும் பாச,நேசம்தான்!

        கோடான கோடிகளாய-வானில்,
        சேர்ந்துலவும்  விண்மீன்கள்,
        இரவி்ல்வந்து ஒளிவீசும்,
        இனிய காட்சி வாழ்வுக்கு,
        வழிகாட்டும் அரிய பாடந்தான்!

        தலைவனே இல்லாதிருந்தும்,
        தனக்கென நற்பாதை வகுத்து,
        தேன் சேர்கும் தேனீயும்,
        சாரையாக அணிவகுக்கும்,
        எறும்பினமும் வழிகாட்டிகள்தான்!

        மொழியாய்ப் பிறந்துவந்து,
        வார்த்தையாய் வடிவெடுத்து,
        கவிதையாய் உருவெடுக்கும்,
        கவியின் எண்ணத்தில்-வாழும்,
        உணர்வுகளும்,புதுபாதைதான்!

        அனைத்தையும் ஆள்கின்ற,
        ஆறறிவு பெற்றமனிதன்,
        ஆசையுடன் கைகோர்த்து,
        அழிவைப் பற்றிக்கொண்டு,
        ஒற்றுமையை வேர் அறுக்கலாமா?
        பாடம்தான் படைப்பெல்லாம்,
        படித்து சீரடைவோமா!-இல்லை,
        நாட்டையும்,வீட்டையும்,
        சுடுகாடாய் மாற்றி-மடிவோமா?

இன்னும் வாசிக்க... "உதாரணங்களாய் ..."

Monday, March 26, 2012

தொடர்ந்திடுவோம் பயணமதை


பசியென்ற ருசிமட்டும்
 படைப்பில் இல்லையெனில்
 இயக்கங்கள் நின்றிருக்கும்
 இரையெடுத்த மலைப்பாம்புபோல்.

 தாய் இறக்கி விட்டபின்
 மண்ணில் மாயும்வரை
 நிலையில்லா ஓட்டங்கள்
 இன்பமும்  துன்பமும்
 பார்வையின் வெளிப்பாடே !

 உள்ளார்க்கு  எல்லாமே
 எந்நாளும்  அரங்கேறும்
 இல்லார்க்கு உறவுகளும்
புள்ளியாய் தூரத்தில்!

 வழியெல்லாம் சிந்தியவிதை
 களம்சென்று சேர்வதில்லை
 ஒளியாய் உலாவிவரும்
 நிலவில் ஒளியில்லை!
 பணம்  படுத்தும்பாடு கண்டேன்
 அதுபடும் பாடும் கண்டேன்
 குணம்கொண்ட மனிதர்கள்
 பணமின்றி வாடுகின்றார்!

 மரித்த பூவே மாலையாகும்
 மனிதமனம் நினைப்பதில்லை
 மணம்வீசும் நேரம்வரை
 புவிதனில் ஆராட்டு!

 நல்நோக்கத்தை மனமணிந்து
 ஆக்கத்தை உழைப்பாக்கி
 அன்போடு சீராட்டின்-நாளை
 அகிலமே வணங்கி நிற்கும்!

 கனவுநாம் காண்கின்றோம்
 காலம்தான் கூறவேண்டும்
 உண்மைதனைத் தாழ்பணிந்து
 நல்லதை எழுதுகிறேன்!

 "நாம்" விடைபெற்றுப் போனாலும்
 "நம்" கவிதைகள் உண்மைவாழ
 போராடும்; என்ற நம்பிக்கையில்
 தொடர்ந்திடுவோம் பயணமதை!
இன்னும் வாசிக்க... "தொடர்ந்திடுவோம் பயணமதை"

Saturday, March 24, 2012

எழுதுகோலின் கதை !


எண்ணிய தெழுதுகிறேன்
 எனக்கென எழுதவில்லை
 எல்லோரும் இதிலுண்டு!
ஆறு ஓடினாலும் தாகம் தீர்திடவே
 அள்ளிப் பருகிடுவார்.
 அறிவென்ற ஊற்றுக்கண்
சுரப்பதை அறியாமல்
 எள்ளி நகைக்கின்றார்
 பைத்தியம் என்றிடுவார்!
 ஆணாய் இருந்துவிட்டால்
 எவளுக்கு எழுதுகின்றாய்
 பெண் எழுதும் திறன்கொண்டால்
 எவனைப் பாடுகிறாய்.
 எழுத்தாளர் குடும்பத்தில்,
 எத்தனை வேதனைகள்.
 எழுத மனம் வைத்தே
 எழுத்தும் இவர் கணக்கில்,
 பொதுவுடைமை காண்பதில்லை!
 அவரவர் மனம்போலே,
 ஆயிரம் சந்தேகம்.
 பண்பாடும்  மொழிவாழ்வும்,
 காக்கும் கைகளுக்கு,
 விலங்கிடும் உறவாலே,
 மனம் பட்ட மரமாக,
 எழுதும் எழுத்துக்கள்,
 அவர்துயர் துடைத்துவிடும்!
 காவியம் படைப்பதற்கும்,
 சரித்திரம் சொல்வதற்கும்,
 அவர்துயர் துடைப்பதற்கும்,
 அசிக்கங்கள் அழிப்பதற்கும்,
 பொமுதுகள் போவதற்கும்,
 நாமெழுத வேண்டும்!
 நமக்கொரு இதயமுணடு,
 நினைக்க நாதியில்லை.
 மேடையில் புகழ்வார்கள்,
 ஜாடையாய் வீதியிலே,
அரைவட்டு  சொல்வார்கள்.
 எழுதுகோல் பிடிப்பவர்கள்,
 ஈனப்பிறவிகளா? கேட்கின்றேன்!
 சிரிக்கவும் முடியவில்லை,
 அழவும் வழியில்லை,
 எண்ணமே பாலையாக,
 கனவுகள் வாழ்க்கையாக,
 எத்தனைநாள் ஓடுவது,
 என்னநாம் செய்குவதோ?

யாருக்காய் எழுதுவது,
 உலகுக்கா  ஊருக்கா,
 உறவுக்கா, உண்மைக்கா,
 அன்புக்கா, பண்புக்கா,
 இயற்கைக்கா, காலத்துக்கா,
 காதலுக்கா, பிரிவுக்கா,
 பிறப்புக்கா; இறப்புக்கா!
 யாருக்காய் எழுதாமலிருப்பது?
 எழுத்தாளனென்ன?
 சுமையா! சுமைதாங்கியா?
இன்னும் வாசிக்க... "எழுதுகோலின் கதை !"

Friday, March 23, 2012

வசந்த வாழ்வு வாழ்வதற்கு

சொர்க்கத்தில் நிச்சயித்த
திருமணமும் சோகத்தீயில்
மாய்ந்தழியும் நிலை ஏனோ ?
வசந்தமாயத் தொடங்கிய
காதல் கல்யாணங்களும்,
நீதிமன்றத்தில் நிற்பதும் ஏனோ ?

புரிதல் இல்லாத உறவுகள்,
நிறைவில்லா மனங்கள்
பூசலாய் முடிவுரைகள்!
வியாபாரத்தில் போட்டி,
வீடுகளில் அதற்குமேலாய்
தொடரும் சண்டைகளால்,
முடிவுகள் முன்னுரையில்!
நகமும் சதையுமென,
கண்ணின் இமைகளாய்,
உயிரோடுஉயிராக
வாழ்ந்த உறவுகளே ,
பிரியும் நிலை ஏனோ ?
ஆணும் , பெண்ணும்
சமமென்று வாழும்நிலை
மலர்ந்த பின்னும்தீராத சண்டைகள்
ஓயாத ஒழுக்கு போல
சமத்துவத்தின் பாதை இங்கே
சாக்கடையாய் போகுமெனில்
வருங்கால சந்ததிகள்
தடம் புரளுமே ..
வழிகாட்டும் உறவுகளே
தடம் மாறிக் கண்ணீரில்
சம உரிமைப் போராட்டமாய்
இல்லமெங்கும் யுத்தங்கள்
இன்றைய சமூக மாற்றம்
பொறாமையின் விளைநிலமாய்
அடிமை விலங்கொடியும நேரம் ,
எதிராய் எழும்பிநின்று,
தலைவிரித்தாடும்,’ஆதிக்கவெறி’
இல்லமெனும் சரணாலயத்தில்
அன்பு செடி பட்டுப்போய், 
அடிமை சாசனம் எழுதிவிட,
இரண்டு ஜோடிப்பறவைகளும்,
போட்டி போட்டு மடிகின்ற,
புயல்வாழ்வு தேவைதானா?
போட்டா போட்டியென,
விட்டுக் கொடுக்க
மனமில்லாதவர்கள்
விட்டுப் பிரிய சம்மதப்பட்டு
பட்டமரமாய் போகலாமா?


வாழும் காலம் கொஞ்சம்தான்
இடையில் ஏன் பிரிவினைகள்! 
வசந்த வாழ்வு வாழ்வதற்கு
விட்டுக் கொடுத்தால் தவறில்லை!

இன்னும் வாசிக்க... "வசந்த வாழ்வு வாழ்வதற்கு"

Tuesday, March 20, 2012

பிரிவினைகள் வேண்டாமே!

ஆண்டவனாய் இருந்தாலும்,
தியாகம் செய்தாக வேண்டும்,
அழுகையில் முடியாவிட்டால்,
இதயத்தில் இடமில்லை!

காட்டுக்குப் போன ராமர்,
அக்கினி வென்ற சீதை,
அம்பெய்யும் அர்ஜுனன்,
சேலைவழங்கும் கண்ணன்,
சிலுவைமர இயேசுபிரான்,

கல்லடிப்பட்ட நபிகள்,
மதுரை எரித்த கண்ணகி'
அனைவரும் நாயக,நாயாகிகள்!
அவதாரங்கள் என்றுரைத்து,
பிழைப்பவர்கள் வழிகாட்டி!

கடவுள் இல்லை உரைத்தவரும்,
தவறாய் சொல்லி மாய்ந்ததினால்
மக்கள் தடுமாற்றத்தில்,
உண்மை பொய் வடிவத்தில்!
படைத்தவன் ஒருவனுண்டு,
உருவம் நாமறியோம்,
அப்பா நம் முன்னவராய்,
அம்மா நம் உயிர் தாயாய்,
அப்படியே பின்னால் போனால்,
ஐனனங்களின் கருவிடம்!
கடைசிபுள்ளி படைத்தவனே,
ஆரம்பமும் முடிவும் அவனிடமே!
படைதவைகளைப் படைத்தோரே,
வணங்கிவிட்டுப் போகட்டும்,
இறைவன் என்ற பெயரில்,
பிரிவினைகள் வேண்டாமே!

அவரவர் கொள்கையிலே,
அமைதியாய் நடந்துபோனால்,
நானிலத்தில் பேதமில்லை,
அன்பான தேன்கூட்டை,
மதத்தின் பெயரால் கலைக்காதீர்!
இன்னும் வாசிக்க... "பிரிவினைகள் வேண்டாமே!"

Saturday, March 17, 2012

தோற்கும் முன் விழித்திடு


அதிகாலைத் தெருமுனையில்
வேர்த்து நிற்கும் இயந்திரங்கள்
அள்ளிச் செல்லக் காத்திருக்கும்
சாரை , சாரையாய் வாகனங்கள்
நாய்பிடிக்க பிணம் பொறுக்க
நகராட்சி அனுப்புகின்ற
கறுப்பு நிற ஊர்தி போல் !
 உண்டு உறங்காமல்
உறவைப் பேணாமல்
வாழ்வைத் தேடியிவர்
வாழ்வு தொலைக்கின்ற
ஓட்டம் எதற்க்காக ?

ஜாண் வயிறு நிரப்பவா ?
பெற்றவரைக் காக்கவா ?
பெண்ணைக் கரை சேர்க்கவா ?
குழந்தை கல்வி பயிலவா ?
இல்லறம் செழிக்கவா ?
ஊரார் உயர்வெனப் பேசவா ?

காரணம் எதுவாய் ஆனாலும்
வாச வாழ்வு என்றெண்ணி
வாழ்வு தொலைத்தல் சரியில்லை
இருப்பதில் வாழப் படித்திருந்தால்
இயந்திர வாழ்வு தேவையில்லை
இனிய கூட்டில் குஞ்சுகளும்
தனியாய்த் தவிக்கும் அவலம் ஏன்?


கருணையில்லா இதயங்கள்
பெயர் விளங்கக் கட்டிவைத்த
வானுயர மாளிகையில்
இவரென்றும் அடிமைகளாய் !
ஹை டெக்  வியாபாரத்தின்
கனவுலக சஞ்சாரங்கள்
குளிர்பதன அறைகளிலே
மரித்துப் போன பாசங்கள் !

பகலவன் ஒளி கண்டறியா
இருள் உலக உறவுகள்
பாஸ்ட்புட் பெயராலே
தேடிவரும் புற்று நோய்கள்
பிராய்லர் கோழி போல்
உதிர்ந்து விழும் விண்மீன்கள்
தான் மரித்து மீன்பிடித்து
தரணி ஆளல் தேவையா ?

கூடையில் பணத்தை அள்ளி
பாசத்தை விலைக்கு வாங்க
நினைத்தால் தோல்விவரும்
உறவுகள் படி கடக்கும்
அன்பின்றி வாழ்க்கையிலே
நிம்மதி மலர்வதில்லை
பணம் தந்த நிம்மதி காண்
பறந்தோடும் ஓர் நாளில் !
 நாகரீகம் பெயராலே
அநாகரீகம் விளைகிறது
தோற்கும் முன் விழித்திடு !

குடும்பமென்ற கூடுவிட்டு
அன்பு விடை பெறுங்காலம்
வருமுன்னே நீ எழுந்தால்
உனக்கென வாழ்ந்திருக்க
உறவுகள் நிலைத்திருக்கும் !

 நாடி நரம்பு செயலிழந்து
விழுகின்ற நேரமதில்
நெஞ்சோடு சேர்த்தணைத்து
ஆறுதல் சொல்ல உறவு வேண்டும்
கணவனோ ?  மனைவியோ ?
குழந்தையோ , குடும்பமோ ?
யாராயினும் பழுதில்லை
தூக்கிப் போட ஆளின்றி
தெரிநாயாய் வீழுமுன்
உறவுகளைப் பலப்படுத்து
உயிர் கொல்லும் ஓட்டத்தால்
எந்நாளும் பயனில்லை ! 

 
இன்னும் வாசிக்க... "தோற்கும் முன் விழித்திடு"

Friday, March 16, 2012

லட்சியமில்லா வாழ்வில்


கல்வியில் அலட்சியம்
அறிவின்றி .....
பெற்றோர் மீது அலட்சியம்
உறவிழந்து ....
உறவுகள் மீது அலட்சியம்
தனிமையில் ...
காதல் மீது அலட்சியம்
தோல்வியில் ...
மொழி மீது அலட்சியம்
பொருளிழந்து ..
வேலையில்  அலட்சியம்
முதல் இழந்து ..
பார்வையில் அலட்சியம்
காட்சியிழந்து ...
எதிர்கால அலட்சியம்
வாழ்வு கேள்வியாய் ..

சுற்றுப்புழ   சூழல் அலட்சியம்
வீடே புழுதியாக ..
மனித நேய அலட்சியம்
மனங்கள் பாலையாக ...
சுகாதார அலட்சியம்
நாமே நோயாளியாக ..
சம்சார அலட்சியம்
உறவுகளில் விரிசலாக ...
மழலைகள் அலட்சியம்
 வாழ்வு வெற்றுக் கூடாக ..
சாலை விதிகளில் அலட்சியம்
விதி முடியும் விபத்தாக ..
கண்களின் அலட்சியம்
குருடாக ...
லட்சியமில்லா வாழ்வில்
எல்லாமே அலட்சியமாய் ....!

 
இன்னும் வாசிக்க... "லட்சியமில்லா வாழ்வில்"

Wednesday, March 14, 2012

திருமணச் சந்தையிலே

இருளும் ஒளியுமிங்கே
இசைப் பாடி பயணம் செய்ய
இணையும் துணையும் மட்டும்
இரக்கமற்ற இழிமனமாய் !

அன்புக்கும் விலை வைக்கும்
அற்ப மன மானிடர்கள்
அறிவுசார் ஜீவியென்ற
அவதார வேடங்களில் !

மழலைச் செல்வம் இல்லையென
மடிப்பிச்சை எடுத்துப் பெற்ற
மங்கை குல மாதரினில்
சிவபபொன்றும், கருப்பொன்றும் !

கலையரசி , தமிழரசி
குடும்பத்துக் கண்மணிகள்
மழலையாய் தவழ்ந்து
மங்கையாய் மலரும் வரை
இரண்டும் இருகண்கள்  !

பூப்பெய்தி புதுமலராய்
மலர்ந்த நேரம்முதல்
புன்னகைத் தமிழ் வாழ்வில்
பொய்யாய்ச் சிரிக்கிறது
பிறப்பால் அவள்
கறுப்பாய்ப் போனதால்  !

பெற்றோர் பேதலிக்க
பெருஞ்சுமை அவளாக
மாமன் மகன் உறவு கூட
தண்ணீரில் எழுதியதாய் !

பெண்பார்க்க வந்தவரும்
கண்பார்த்துச் சென்று விட்டு
தமிழரசி எமக்கு வேண்டாம்
கலையரசி உண்டோ சொல்
என்றுரைத்து எறிந்த ஈட்டி
தந்த வடு ஆயிரம்  !

உலக அழகி கிளியோப்பட்ட்ரா
கறுப்பினப் பெண்
உரைத்து தேற்றுகின்ற
பெற்றோர் மனப்பாட்டு
கண்ணில் நீர் நிறைய
அன்னை மடி சாய்கின்ற
அவள் மன வேதனைக்கு
ஆறுதல் யார் சொல்ல  !

மூத்தவள் இருக்க இளையவளை
கொடுப்பதெப்படி ?
காத்திருந்து காலம் போக
கடைசியில் தமிழ் சொன்னால்
எனக்கு வேண்டாம் திருமணம்
தங்கைக்கு பாருங்களேன்
தந்தையோ தவிப்போடு
தமிழுக்கு கூனோ , குருடோ
தேடி புறப்பட்டார்  !

ரோசாப்பூ நிறமென்றால்
இலவசமாய்க் கொண்டிடுவர்
கொஞ்சம் குறைவானால்
பொன்பேசும் உறவுகளை
கறுப்பு என்றானால் சந்தையிலே
பெண் ஊசி காது ஒட்டகமாய்
மனிதா மாறமாட்டாயா ?

மகராசிக் கையென்று
கைநீட்டம் வாங்கியதும்
எதிர்ப்பில் வந்தால்
எல்லாம் நடக்கும்
சொல்லிச் சொல்லி மாயந்தவரும்
எங்கே தேடுகிறேன்
எல்லாமே பொய்தானோ ?

இறைவனுக்கு அபிஷேகம்
பொங்கல் படையலிட்டு
காணிக்கை லஞ்சமென
கொடுக்கின்ற கனவான்கள்
செய்த பாவமெல்லாம்
தீருமென்ற நம்பிக்கை

இரக்கமில்லா அரக்கர் கூட்டம்
தாய் என்றும் சேய் என்றும்
பாடி கொலல் பெரும்பாவம்
சாயத்தில் என்ன வாழ்கிறது
இதய பாசத்தைப் பகிருங்களேன்  !

      
இன்னும் வாசிக்க... "திருமணச் சந்தையிலே"

Saturday, March 10, 2012

அழகு தமிழ் இதுதானா?

  பொய்யக்  கிய்யச்  சொல்லி
   கடன   கிடன வாங்கி,
   கஞ்சி  கிஞ்சிக்  காச்சி,
   பால  கீலக் கொடுத்து,
   படிச்சு கிடிச்சுக் கொடுத்தும்,
   பாழாய் போன வாரிசுகள்!

   கண்ணு  கிண்ணுப்  பட்டு,
   தண்ணி கிண்ணிப்  போட்டு,
   தப்பு கிப்பு  செய்து,
   தல்லு  கில்லு  வாங்கி,
   சென்று  கின்று  அடித்து,
   திசைமாறும் வாழ்வு ஏனோ?

   வாசல் கீசல்  மாறி ஏறி,
   பிச்சை  கிச்சை  எடுத்து,
   வம்பு  கிம்பு  செய்து,
   வழி  கிழி  புரண்டு,
   வஞ்சம்  கிஞ்சம்  செய்து,
   வாழ்வை தானே எரிப்பதேனோ?

   சரக்கு  கிரக்கு விற்று,
   காசு  கீசு  சேர்த்து,
   காலம்  கீலம்  பார்த்துக்,
  கல்யாணம்  கில்யாணம் செய்து,
   பிள்ள கிள்ளப் பெத்து,
   வாழ மறுப்பதும் ஏனோ?

   சொல்லிக் கில்லிக் கொடுத்து,
   கொஞ்சிக் கிஞ்சிப் பேசி,
   கட்டிக்  கிட்டி  அணைத்து,
   கதையக்  கிதையச்  சொல்லி,
   பாட்டக்  கீட்டப்  பாட,
   துணை கிணை இன்றி,
   தனிமரமாய் வீழ்வதுமேன்?

   கட்டக்  கிட்ட வெந்திட,
   பட்ட  கிட்ட  ஓதியனுப்ப,
   பானை கீனை சுமந்திட,
   கடல்  கிடல்  அஸ்திகரைக்க,
   உறவு  கிறவு  இல்லையெனில்,
   பிறப்பே பாவம் ஆகிடுமே?

   பட்டு   கிட்டு  சாயுமுன்,
   மரணம் கிரணம்  அழைக்குமுன்,
   மாலை  கீலை  போடு முன்,
   செல்லு  கில்லு அரிக்குமுன்,
   மண்ணு  கிண்ணு  தின்னுமுன்,
   புரிதல் வாழ்வாகும்!

    தமிழ்  வார்தைகளின்,
   அர்த்தம்  கிர்த்தம்  அறிந்தவரகள்,
   அன்பு  கின்பு  கொண்டிதனின்,
   அர்த்தம்  கிர்த்தம்  சொல்லுங்கள்,
   அழகுதமிழ் இதுதானா?
   தமிழா!தமிழ் பேச மாட்டாயா?
இன்னும் வாசிக்க... "அழகு தமிழ் இதுதானா?"

Wednesday, March 7, 2012

புதுவாழ்வு மலர்ந்திடவே வாழ்த்துகிறேன்.


மகளிர்காய் ஒருதினத்தை
ஒதுக்கிவிட்டோம் கருணையோடு
மங்கையரும் கொணடாடி
மகிழும் நிலைகண்டேன்
மலராய் மலர்ந்திங்கு
காயாய்,கனியாய்,
விதையாய் வீழ்ந்தாலும்,
மரணம்வரை அடிமைகளாய்
மாய்க்கும் சட்டம் மாறவில்லை!
கதியில்லை என்பதனால்
காயப்படுத்தும் நிலைவேண்டாம்
கரைசேர விட்டுவிட்டால்
அதுவேதான் மகளிர்குசமநீதி! 
கற்றவரும்,மற்றவரும்
கதைசொல்லித் திரிபவரும்
கண்பார்த்தல் நன்றென்பேன்
கனவுகள் பலிக்கட்டும்.
எல்லாநாளும் ஆணுக்கு
அதிலொருநாள் பெண்ணுக்கு
எட்டி உதைக்கும் பசுவுக்கு
ஒருநாள் மட்டும் ‘பொங்கல்போல்!
ஆணைமட்டும் சொல்வதனால்
பயனில்லை கண்டேன்
ஆண்டவன் படைப்பில்கூட
இவர் ஈனப் பிறவிகளே!
ஆலயம் இவரென்போம்
அர்ச்சனைகள் செய்திடுவோம்
ஆடுகளை நேர்வதுபோல்
நேர்ந்து வெட்டுகிறோம்.
பெண்ணென்ற பேதமைகள்
ஒழியும் நாள் மலரவேண்டும்
பெருமைகளில் இவர் பங்கை
நேர்மையாய் வழங்க வேண்டும்.
பெறுவதற்கு பெண்னென்ற
அவலம் மாறவேண்டும்,
பெற்றவளும் பெண்ணென்ற
உணர்வு வாழவேண்டும்.
வாழ்வைப்பட்டமரமாக்கி
வாழ்த்துரைத்து பயனில்லை,
வார்த்தையால் கொல்கின்ற,
மனப்பான்மை சரியில்லை.
வாசமணம் வீசுகின்ற,
புதுவாழ்வு மலர்ந்திடவே,
வாழ்த்துகிறேன்,கோர்த்தெடுத்த
கவிதை மாலைசூடி!!
இன்னும் வாசிக்க... "புதுவாழ்வு மலர்ந்திடவே வாழ்த்துகிறேன்."

Tuesday, March 6, 2012

ஒன்றுபட்டு எழுந்திடுவோம்

ஈழத் தமிழர்களின்
வீர முழக்கங்களை
எழுத்தாய் எழுதிப்
பாட்டாய் ஒலித்து விட்டு ,
சுயமெனும் திரைக்குள்
உங்கள் முகங்களையும்
திணிப்பதும்,மறைப்பதும் ஏனோ .....?
ஐந்தறிவுள்ள ஜீவனும் ,
தம் இனம்காக்கப்
போராடும்போதினில்,
தமிழினம் தாக்கப்படுவது
தெரிந்தும், உணர்சிகளை
உறங்கவிட்டு உறக்கத்தில்
இருப்பதும் ஏனோ ....?
இமயம் சென்று வென்று,
கல்லெடுத்த தமிழன்,
உலகமாவீரனை எதிர்த்தமிழன்,
முறம்கொண்டு புலியை,
விரட்டியடித்த தமிழ்த்தாய்,
தமிழா முன்னோரின் வீரம்,
முந்தானையில் மடிந்ததோ?
தமிழ் மண்ணில்
விரக்தி மட்டுமே
விதைக்கப்படுகிறது .
புதைக்கப்பட்ட
தமிழினங்களுக்காய்
வாழ,வழிகாட்ட,வாழவைக்க,
எவருமில்லைப் புவியில்.
அன்புமட்டும் ஆள்வதற்கு
ஆசையில்லா தலைவன் தேவை,
இனியவிடியல் மலர்வதற்கு
 ஈழம் அமைதி காண்பதற்கு
உதிரபந்தம் வாழ்வதற்கு
ஊமைகனவு ஜெயிப்பதற்கு...
எண்ணத்தில் தாய்மையோடு
தமிழர் கை கோர்க்க வேண்டும்
 அக்கினிப்போர் முடிவதற்கு
அம்மாவாசை அகல்வதற்கு
விடியல் பூ மலர்வதற்கு
தமிழினம் வாழ்வதற்கு
தமிழன் தரணி ஆள்வதற்கு
ஒன்றுபட்டு எழுந்திடுவோம்
சரித்திரம் நாமாவோம்!
தமிழ்வாழ,தமிழினம் வளர,
வேற்றுமைக் களைந்திடுவோம்
 ஓரணியாய்த் திரண்டெழுவோம்”.
இன்னும் வாசிக்க... "ஒன்றுபட்டு எழுந்திடுவோம்"

Friday, March 2, 2012

முத்தத்தின் ஈரம்

எண்ணக்குவியல்களுக்கிடையே
கனவுப் போர்வை விலக்கி
காதோரம் உன்
சிணுங்கல்கள் உரச ...
முகம் கழுவி
கண்ணாடியில் உன் முகம்
தேடித் தேடி
தோற்றுப் போனேன் ...
கனவல்லவே
நிஜம் உணர்த்தியது
வழியனுப்ப வந்தவளை
கதவிடுக்கில்
வளைக்கரம் பிடித்திழுத்து
நீ தந்து போன முத்தத்தின் ஈரம் ....!
இன்னும் வாசிக்க... "முத்தத்தின் ஈரம்"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி