Ads 468x60px

Featured Posts

Thursday, January 28, 2016

பேரிடி முழக்கம் சேருமோ உன்னை?


விழியது நோக்க வழியின்றி வாடி
     விடையதைத் தேடி விதியென நோகும்
நிழற்குடை இல்லா நீண்டிடும் பயணம்
      நினைவெனும் தீயதும் தீண்டிட வேகும்
வழித்தடம் எல்லாம் வலியது மோத
         மறைவிடம் நோக்கி மனமதும் போகும்
பழகிட இனித்து பரவசம் தந்த
      பைந்தமிழ்த் துணையும் பதுங்கிட நோயும்!

நோயது தீர்க்கும் நூலகம் நீயும்
      நுரையெனத் தங்கி மறைவதும் ஏனோ?
சாயமும் பூசி சகித்திட நாளும்
      தாளமும் போடும் வேடமி தானோ?
காயமும் மாறி கனவென ஆக
     காலைமுன் பனியாய் கரைந்திடும் கண்கள்
பேயெனப் பெய்யும் பெருமழை முன்னே
      பேரிடி முழக்கம் சேருமோ உன்னை?
இன்னும் வாசிக்க... " பேரிடி முழக்கம் சேருமோ உன்னை?"

Friday, October 30, 2015

மீட்டும் மகிழ்வதனைத் தேக்க! கவிதை உருகொண்டு கனவைத் தினமுண்டு
       காதல் உணர்வோங்கிக் கொல்ல!
தவிப்பை நீகண்டும் தாளம் புதிதென்று
     தாவித் தன்னுள்ளே  செல்ல!

வரவைத் தினம்தேடி வாடும்இளநெஞ்சை
    வதைக்கும் உன்மௌனம் கண்டு!
மரபில் புதையுண்டு மலரும் பூச்செண்டில்
    மையல் கொண்டாட்ட முண்டு!

மின்னல் கீற்றாகி மீண்டும் எனைத்தாக்கி
    மீட்டும் மகிழ்வதனைத் தேக்க!
சின்னக் குழந்தையெனச் சீற்றம் தனைமறந்து
     சிரித்தே மகிழ்தாடி நோக்க!

இனிக்கும் நினைவேந்தி இயல்பின் கரம்பற்றி
     என்னை இழுத்தோடி நாளும்!
தனிமைச் சுகமென்ற தாகம் தனைத்தீர்க்கச்
      சாலை தினந்தேடி நீளும்!

தொடரும் பயணத்தில் துரத்தித் தோளமர்ந்தே
     சூட்டும் வேதனைகள் கோடி!
உடும்பாய் எனைப்பற்றி உன்னைச் சரணடைய
   உந்தும் உணர்வலைகள் தேடி!   
இன்னும் வாசிக்க... " மீட்டும் மகிழ்வதனைத் தேக்க!"

Friday, October 23, 2015

பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ!


கனவினிலே வந்தவனும் உலவுகின்ற மென்மை
    களவதனைக் கற்றேதான் கொலுவிருக்கும் பெண்மை!
தனைமறந்தே தளிர்க்கொடியாள் தள்ளாடும் போதும்
     சந்தமுடன் சேதிசொல்ல வந்துவிடும் தூதும்!
கணைதொடுத்தே காத்திருக்கும் காதலதின் வேகம்
    கண்ணசைவில் கதைபலவும் பேசுகின்ற மோகம்!
 இணையாகி உலவிடவே துடித்திருக்கும் நெஞ்சும்!
     இன்னமென்ன செய்திடுவான் என்றேங்கிக் கொஞ்சும்!


பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ எண்ணிப்
    புத்தாடை தான்பூண்டு குதித்தாடும் கன்னி!
பாக்களிலே பழரசத்தைப் பருகிடவே மொண்டு
    பகலிரவில் தமிழுடனே உலவுகின்ற வண்டு!
 நோக்குமவன் பார்வையினை மௌனமுடன் கண்டு
    நோயதுவும் தான்சுமந்து மயங்கும்பூச் செண்டும்
சீக்கிரமே வந்திடுமோ வசந்தமதும் கண்ணா?
    சேர்ந்திருக்கும் நன்நாளும் கண்டிடுவாய் மன்னா!
இன்னும் வாசிக்க... " பூக்களுமே தனக்கெனவே பூத்ததுவோ!"

Thursday, October 22, 2015

கண்ணே கனியமுதே வாடி!


கண்ணே கனியமுதே வாடி-உன்னைக்
காணவந்தேன் ஓடி -அந்த
கண்ணாடி வளையலை நானும்
போட்டுவிடத் தாண்டி. (ஆண்)

கல்யாணத் தேதியுந்தான் சொல்லி
கள்ளத்தனம் செய்வீரோ கிள்ளி
கண்ணாடி வளவியுந்தான் சொல்லும்
காண்போரைத் துணைக்கழைத்துக்கொள்ளும்.(பெண்)

கதிரவனும் வலுவிழந்த நேரம்
அந்த வாசப்படி ஓரம் _ வந்து
வாஞ்சையோடு வஞ்சியுனை
வரித்துக் கொள்ள நிற்பேன்.(ஆண்)

கருக்கலிலே வந்து நின்னா என்ன?
காவலுக்கும் ஆளிருக்கே உள்ள
கண்ணால சேதி சொல்லி மெல்ல
பின்னால தள்ளி நில்லேன் நான் வல்ல.(பெண்)

தேனைப் போல மானைப் போல
என்று சொல்ல மாட்டேன்
உன் கண்ணைக் கூட கயல்விழியாள்
என்றே எண்ண மாட்டேன்.(ஆண்)

அப்போ
தேனே மானே கொஞ்சத்தெரியாத மச்சான்
எனைத் தேம்பி யழவைச்சதே மிச்சம்.(பெண்)

இல்லை இல்லை கோச்சுக்காதாம்மா
அப்படி எல்லாம் நான் சொல்வேனா
உன் முன்னாடி அதுங்க எல்லாம்
தூசு தானே போம்மா.(ஆண்)

அங்க இங்க தொட்டுப் பேச வேணா
அடுக்களையில் கைகலப்பும் வேணா
ஆச வார்த்த பேசத்தெரியள ஆமா
அதுக்கு ஏனோ இங்க வந்தீக மாமா.(பெண்)

உன்னழகுக் கிங்கு ஏதும்
ஈடு இல்லை யேம்மா.
உன்னைப் போல ஒருவரை நான்
கண்டதில்லை யேம்மா.(ஆண்)

கேலிப் பேச்சு இங்க வேணா மாமா
கிண்டலுந்தான் செய்வதும் தான் ஏனோ?(பெண்)

ஆச தீரப் பேசவேண்டும்
அருகினிலே வாம்மா
உன்னை எண்ணி ஏங்குவதை
காண்பதில்லை ஏம்மா? (ஆண்)

ஆணாக எழுதியிருப்பது பதிவர் இனியா பெண்ணாக எழுதியிருப்பது தென்றல்.
இன்னும் வாசிக்க... "கண்ணே கனியமுதே வாடி!"

Tuesday, October 20, 2015

ஜோடிக்கிளிகள்!


வெள்ளரிக்கா தோட்டத்துல
வேலியில்ல காவலுக்கும்
வெரசாத்தான் வாருமய்யா
விடியும் வரை பேசிடுவோம்.

மஞ்சள் மணக்குதடி
மரிக்கொழுந்து வாசக்காரி
வெள்ள மனத்தவளே
விரைந்தோடி வாரேன் புள்ள.

கத்தரிக்கா தோட்டத்துல
கணக்கெடுக்க ஆளுமில்ல
கண்ணழகா வாருமய்யா.
கதை கதையா பேசிடுவோம்.

முத்துப்பல் பேச்சுக்காரி
மூக்கு நீண்ட சின்னதாயி
அச்சு வெல்லமா இனிக்கும்
அத்த மக ரத்தினமே 
அணைச்சுக்க வாரேன் புள்ள.

அறுவடைக்கும் நாளிருக்கு
அதுக்குள்ள ஒளிஞ்சிருப்போம்
ஆசையோட வாருமய்யா
அரைநாழி பேசிடுவோம்.

ஒய்யாரக் கொண்டக்காரி
ஒடிசான தேகக்காரி
ஓடித்தான் வாரேன் நானும்
ஒரு முத்தம் தாயேன் புள்ள.

அடிக்கரும்பு இனிப்பாட்டம்
அழகாக பேசும் மச்சான்
அடுத்தெங்கே போயிடுவோம்
அதையும் அங்கே சொல்லுமய்யா.

காடுகர தோப்பெங்கும்
கைகோர்த்து போவோம்புள்ள
கண்ணசைவில் நூறு கதை
கலந்து பேசி வாழ்வோம் புள்ள.


 சென்ற பதிவில் மதுரைத்தமிழன் கேட்டபடி இந்தப்பதிவை பெண் எழுதுவதாக நானும் ஆண் எழுதுவதாக இளமதியும் எழுதியிருக்கிறோம். தோழி இனியாவைத் தொடர்பு கொள்ள இயலவில்லை. தொடர்பு கொண்டதும் அடுத்து இந்தமாதிரிப் பகிர்வுத் தொடரும்.. இளமதிக்கும் மதுரைத்தமிழனுக்கும் எனது நன்றி.
இன்னும் வாசிக்க... "ஜோடிக்கிளிகள்!"
 

முதல் விருது

முதல் விருது
நன்றி மதுமதி

சகோதரர் தனசேகரன் கொடுத்த தங்கப் பேனா

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
செய்தாலி, ராதாராணி

இரண்டாம் விருது

இரண்டாம் விருது
நன்றி தோழர் விச்சு

தங்கை எஸ்தர் சபி அன்போடு கொடுத்தது

அன்பின் பகிர்வு

அன்பின் பகிர்வு
சகோதரி எஸ்தர் சபி